Remove ads
From Wikipedia, the free encyclopedia
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவருடைய தாக்கம் மிகமிக குறிப்பிடத்தக்கது. இவர் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.[1]
முதலாம் நெப்போலியன் Napoléon I | |||||
---|---|---|---|---|---|
பிரான்சின் பேரரசன் இத்தாலியின் மன்னன் சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன் ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் | |||||
நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது | |||||
ஆட்சி | மார்ச் 20, 1804–ஏப்ரல் 6, 1814 மார்ச் 1, 1815–ஜூன் 22, 1815 | ||||
முடிசூட்டு விழா | டிசம்பர் 2, 1804 | ||||
முன்னிருந்தவர் | பிரெஞ்சு கொன்சுலேட் முன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793) | ||||
பின்வந்தவர் | நடப்பின் படி பதினெட்டாம் லூயி De Jure நெப்போலியன் II | ||||
அரசி | ஜோசெஃபின் டெ பியூஹார்னை மரீ லூயி | ||||
வாரிசு(கள்) | நெப்போலியன் II | ||||
| |||||
மரபு | பொனபார்ட் | ||||
தந்தை | கார்லோ பொனபார்ட் | ||||
தாய் | லெற்றீசியா ரமோலினோ | ||||
அடக்கம் | பாரிஸ் |
கோர்சிக்காவில் பிறந்த இவர், பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றார். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவர் முன்னணிக்கு வந்தார். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானார். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தார்.[2] தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவர் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தார். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தார்.
1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியன் அவர்களால் மீளமுடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினார். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவர் இறுதித் தோல்வியைச் சந்தித்தார். இதன் பின்னர் அவரது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவர் இரண்டாமானவர். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.[3] இவருக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டார்.[4] கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தசுக்கன் மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.[5][6][7][8] இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் லிகூரியாவில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.[9] 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..[10] இந்த ஆய்வுகளின்படி, ஆப்லோகுரூப் வகை E1b1c1 கிமு 1200 ஆம் ஆண்டளவில் வட ஆப்பிரிக்காவில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.[11]
இவரது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.[12] நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, பவுலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.[13] நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றார்.[14]
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்வி கற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.[15] 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தார். மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தார்.[16] அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் நெப்போலியன்க ற்றுக்கொள்ளவேயில்லை.[17] இதனால் தன்னுடன் படித்த மாணவர்களது கேலிக்கு உள்ளானார். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது; ஓவியம் வரைவதிலும் சிறந்தவர்.
1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தார்.[16][note 1] 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தார். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினார்.
"தேசம் அழிந்துகொண்டிருக்கும்போது நான் பிறந்தேன்! நமது கடற்கரைகளில், இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள், நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது!"[19]
நெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டார். அப்போது அரசவாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தார். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினார். அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் "கப்டன்" தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.[20]
நெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பாவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பாவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் நெப்போலியனும் ஒரு படைத்தலைவராகப் பங்கேற்க இருந்தார். பாவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினார்.
1793 ஆம் ஆண்டு சூலையில், "பூக்கெயரில் இரவுச் சாப்பாடு" என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டார். இது புரட்சித் தலைவரான மக்சிமிலியன் ராபெசுபியரே என்பவரின் தம்பியான அகசுத்தீன் ராபெசுபியரேயின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், தூலோன் முற்றுகையின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன.
குடியரசுப் படையினரின் சுடுகலன்கள் நகரின் துறைமுகம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதிகள் கொண்டது. அவற்றின் மூலம் பிரித்தானியக் கப்பல்களைத் துறைமுகத்தில் இருந்து விரட்ட வழி சமைக்கக் கூடியதுமான குன்று ஒன்றை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் திட்டம் தீட்டினார். இத் தாக்குதல் மூலம் நகரம் கைப்பற்றப்பட்டது, எனினும் , நெப்போலியனின் தொடையில் காயம் ஏற்பட்டது. 24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தார். இவரது திறமையைக் கண்ட "பொதுமக்கள் பாதுகாப்புக் குழு" இவரை பிரான்சின் இத்தாலியப் படைகளின் கனரக ஆயுதப் படைகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்தது.
இப் பதவி உறுதி செய்யப்படும்வரை, மார்சேய்க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. முதலாம் கூட்டணிக்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சார்டினிய இராச்சியத்தைத் தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தார்.
ஜோஸபின் என்று நெப்போலியனுக்கு ஒரு காதலி இருந்தாள். பின்னாளில் மனைவியுமானாள். இவள் மீது நெப்போலியன் அதீத காதல் கொண்டவனாக இருந்தார். தனது ஒவ்வொரு போாின்போதும் வெற்றியின்போதும் ஜோஸபின் தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவளுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் மிகப் புகழ்பெற்றவை. ஆனால், அவளோ நெப்போலியன் தன் மீது கொண்டிருந்த காதல் அளவிற்கு நெப்போலியன் மீது காதல் இல்லாதவளாக இருந்தாள். இவள் ஏற்கனவே ஒருவருக்கு காதலியாக இருந்தவள். நெப்போலியனை மணந்த பின்னும் வேறு ஒருவனுடன் தொடா்பில் இருந்தாள். இவளால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானார், நெப்போலியன். இவளின் மீது தீராத காதல் கொண்டிருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் மனத்தெளிவு பெற்றார். அவளது துரோகச் செயல்களை மன்னித்தார்.
நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும், அவரின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவர் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. சில புகைப்படங்களில், காற்சட்டைக்குள் கையை நுழைத்து வைத்திருப்பதைப் போன்றிருக்கும். இதற்கு காரணம், அவருக்கு படர் தாமரை இருந்ததாகவும், அதனால் ஏற்ப்பட்ட அரிப்பை தணிக்க சொறிவதற்காக, அவ்வாறு செய்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால், இதெல்லாம் வடிகட்டிய முட்டாள்களின் நம்பிக்கை. தவிர, நெப்போலியனைப் பற்றியோ, அவரின் குண நலன்கள் பற்றியோ, அவரின் உடல் நலன் பற்றியோ, இறப்பு பற்றியோ, எவ்வித நம்பகமான தகவல்களும் இல்லை. அவரைப்பற்றிக் கூறப்படும் வரலாறுகளும் கூட, 70% புனையப்பட்ட பொய்மை தாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.