Remove ads
From Wikipedia, the free encyclopedia
கர்தினால் (Cardinal) என்னும் பெயர் கத்தோலிக்க திருச்சபையில் உயர்நிலையிலுள்ள ஒரு வகை அதிகாரிகளைக் குறிக்கிறது. கர்தினால் பதவியிலுள்ளவர் பொதுவாக ஆயர் பட்டம் பெற்றவராக இருப்பார். எல்லாக் கர்தினால்களையும் உள்ளடக்கிய குழுமம் "கர்தினால் குழு" (College of Cardinals) என்று அழைக்கப்படுகிறது. கர்தினால்களைத் திருச்சபையின் இளவரசர்கள் என்று கூறுவதும் உண்டு.[1]
"கர்தினால்" என்னும் சொல் இலத்தீன் மொழியில் "cardo, cardinis (gen.)" என்னும் சொல்லிலிருந்து பிறப்பதாகும். அச்சொல் "அச்சாணி" என்னும் பொருளுடைத்தது. திருச்சபையில் அச்சாணி போன்று மைய இடம் வகிப்பவர்கள் என்னும் பொருளில் "கர்தினால்" என்னும் பட்டம் சிலருக்கு வழங்கப்படுகிறது.
குறைந்த அளவு, குருத்துவ நிலையில் உள்ள மற்றும் கோட்பாடு, ஒழுக்கநெறி, பக்தி மற்றும் செயல் விவேகம் ஆகியவற்றில் உண்மையில் சிறந்து விளங்கும் ஆண்களை திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தால் கர்தினால்களாக உயர்த்தலாம். இவ்வாறு உயர்த்தபடும் நபர், ஏற்கனவே ஆயராக இல்லயெனில், ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறவேண்டும். இருப்பினும் திருத்தந்தையிடம் இவ்விதிக்கு விலக்கு பெறலாம்.
கர்தினால்கள் திருத்தந்தையின் ஆணையால் உருவாக்கப்படுகின்றனர்; இவ்வாணை கர்தினால்கள் குழாம் முன்னிலையில் திருத்தந்தையின் ஆலோசனைக்குழு கூடும் போது வெளியிடப்படும்; இவ்வெளியீடு செய்யப்பட்ட கணத்திலிருந்து சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் அவர்கள் பெறுகின்றனர்.
இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூடும் திருத்தந்தைத் தேர்தல் அவையில் பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.
கர்தினால் குழு மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அவை முறையே
குருக்கள் அல்லது திருத்தொண்டர்கள் அணியின் ஒவ்வொரு கர்தினாலுக்கும் உரோமைத் தலைமைக்குருவால் ஓர் உரிமைத்தகுதி அல்லது உரோமை நகரின் திருத்தொண்டர்களின் ஒரு வட்டத் தொகுதி வழங்கப்படுகிறது.
கி.பி. 1059இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உரோமையின் முக்கிய குருக்களிடமும், உரோமையின் ஏழு புறநகர் ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டுள்ள ஆயர்களிடமும் இருந்தது. இவ்வழக்கத்தாலேயே இன்று வரையும் கர்தினாலாக உயர்த்தப்படுபவர் உரோமையின் புறநகர் ஆலயத்தின் அல்லது உரோமையிலுள்ள மற்றோர் ஆலயத்தின் உரிமைத்தகுதி வழங்கப்பட்டும். கர்தினால்கள், இவ்வாலயங்களின் பொறுப்பேற்றபின், ஆலயங்களின் நலனைத் தங்கள் ஆலோசனையாலும் ஆதரவாலும் மேம்படுத்த வேண்டும்; ஆயினும், அவற்றின் மீது அவர்களுக்கு எவ்வித ஆட்சி உரிமையும் இல்லை; அவற்றின் சொத்துக்கள் நிர்வாகம், ஒழுங்குமுறை அல்லது ஆலயங்கள் பணி ஆகியவற்றில் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலையிட முடியாது.[2]
கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைச்சபை மறைமுதுவர்கள் தங்களுடைய மறைமுதுவர் ஆட்சிப்பீடத்தை உரிமைத் தகுதியாய்க் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்படாது.
கர்தினால்கள் ஒண்சிவப்பு வண்ண (scarlet) உடைகளை அணியும் தகுதி பெறுகின்றனர். இவ்வண்ணம் தங்களின் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதைக்குறிக்கும்.[3][4]
இவர்கள் கர்தினாலாக்கப்படும் போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புரத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புரத்தில் திருத்தந்தையரின் ஆட்சி முத்திரையும் பொறிக்கபட்டிருக்கும்.
கர்தினால்களின் பதவிக் கேடயத்தின் மேல்பகுதியில் சிவப்பு நிற விரிதொப்பியும், தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.
உரோமை நகருக்கும் தங்கள் சொந்த மறைமாவட்டத்திற்கும் வெளியே தங்கியுள்ள கர்தினால்கள் தாங்கள் தங்கியிருக்கும் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆகவே ஒரு கர்தினாலுக்கு எதிரான வழக்குகள் திருத்தந்தையினால் மட்டுமே விசாரிக்கப்பட முடியும். ஆயினும் இது இவர்கள் தங்கியிருக்கும் நாடுகளின் அரசியல் சட்டங்களுக்கு பொறுந்தாது. இவர்கள் அந்நாட்டின் அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டவர்களே. திருத்தந்தையினால் அனுமதிக்கப்பட்டால் அன்றி திருச்சபையின் உச்ச நீதிமன்றத்திற்கும் (Roman Rota) கூட இவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உரிமை இல்லை. இவ்வகை வழக்குகளை விசாரிக்க பொதுவாக திருத்தந்தை உரோமைச் செயலக தலைவர்களைக்கொண்ட ஒரு குழுவினை அமைத்து விசாரிப்பார். இக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் திருத்தந்தை தீர்ப்பு வழங்குவார்.
திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகும் வேளையில் சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், திருச்சபையின் அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். ஆயினும் இக்காலத்தில் கர்தினால் குழு சிறப்புத் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருக்கும். தனிப்பட்ட கர்தினால்கள்களுக்கு, கடைசித் திருத்தந்தையால் கொடுக்கப்பட்டிருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தையின் தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை அவர்களால் நிரைவேற்ற முடியாது.
கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது திருத்தந்தைக்குக் குழுவாக உதவி புரிகின்றனர்; பெரும்பான்மையான கர்தினால்களுக்கு மேலதிக பணிகளும் உண்டு. மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.
ஒரு சில மிகச்சிறப்பு நிகழ்வுகளில் தம் பிரதிநிதியாகச் செயல்படத் தமது சிறப்புத் தூதராக இருக்கும் பணி திருத்தந்தையால் ஒரு கர்தினாலிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாறே மேய்ப்புப் பணி சார்ந்த குறிப்பிட்ட ஓர் அலுவலைத் தமது சிறப்புத் தூதுவராக நிறைவேற்ற அவர் ஒரு கர்தினாலைப் பணிக்கலாம்; அத்தகைய கர்தினால்கள் தங்களிடம ஒப்படைக்கப்பட்ட அந்தக் காரியங்களில் மட்டுமே சட்ட உரிமை பெற்றுள்ளனர்.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் 2012ஆம் ஆண்டு பெப்ருவரி 18ஆம் நாளன்று, வத்திக்கானில் அமைந்துள்ள புனித பேதுரு பெருங்கோவிலில் 22 புதிய கர்தினால்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு கர்தினால் பதவியின் அடையாளங்களாகிய சிவப்பு தொப்பியும், மோதிரமும் அளித்தார்[5].
புதிய கர்தினால்களுள் ஒருவர் இந்தியாவின் ஜார்ஜ் ஆலஞ்சேரி ஆவார். மேலும், ஹாங்காங் பேராயர் ஜான் டாங்க், நியூயார்க் பேராயர் திமத்தி டோலன் ஆகியோரும் உள்ளடங்குவர்.
பிப்ரவரி 2013இன் படி மொத்தம் 209 கர்தினால்கள் உள்ளனர். இவர்களுள் 118 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால் அவர்கள் மட்டுமே புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளனர். எஞ்சிய 91 கர்தினால்மார்களும் 80 வயது தாண்டியவர்களாக உள்ளதால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், தாம் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை ஐந்து தடவைகளாக மொத்தம் 90 கர்தினால்களை நியமித்துள்ளார்.[6]
மேற்குறிப்பிட்ட கர்தினால்கள் மொத்தம் 66 நாடுகளைச் சேர்ந்தவர்கள். கண்டங்கள் வாரியாக கீழ்வருமாறு கர்தினால்களின் எண்ணிக்கை உள்ளது[7]:
கண்டம் | கர்தினால்களின் எண்ணிக்கை |
---|---|
ஐரோப்பா | 115 |
தென் அமெரிக்கா | 22 |
வட அமெரிக்கா | 30 |
ஆசியா | 18 |
ஆப்பிரிக்கா | 20 |
ஓசியானியா | 4 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.