From Wikipedia, the free encyclopedia
கிருத்திக் ரோஷன் (hi;[1] பிறப்பு 10 ஜனவரி 1974) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக இந்தி திரைப்படங்களில்நடித்துவருகிறார். இவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடன திறன்களுக்காக பெயர் பெற்றவர். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான இவர் ஆறு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார் அதில் நான்கு சிறந்த நடிகருக்கான விருது அடங்கும். 2012 முதல், இவர் தனது வருமானம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் பலமுறை ஃபோர்ப்ஸ் இந்தியாஸ் செலிபிரிட்டி 100 இல் இடம்பெற்றார்.
கிருத்திக் ரோஷன் | |
---|---|
2016 இல் கிருத்திக் ரோஷன் | |
பிறப்பு | 10 சனவரி 1974 மும்பை, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிடன்ஹாம் கல்லூரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது |
வாழ்க்கைத் துணை | சுசானே கான் (தி. 2000; ம.மு. 2014) |
பிள்ளைகள் | 2 |
ரோஷன் அடிக்கடி தன் தந்தை ராகேஷ் ரோஷனுடன் இணைந்து நடித்துள்ளார். 1980 களில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், பின்னர் தன் தந்தையின் நான்கு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். வணிகரீதியாக வெற்றிபெற்ற கஹோ நா... பியார் ஹை (2000) படத்தில் முதன்முதலில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதற்காக இவர் பல விருதுகளைப் பெற்றார். 2000 பயங்கரவாத நாடகப்படமான பிஸா மற்றும் மற்றும் 2001 குடும்ப நாடகமான கபி குஷி கபி கம்... ஆகிய படங்கள் இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. ஆனால் மோசமான வரவேற்பைப் பெற்ற படங்கள் பல தொடர்ந்து வந்தன.
2003 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதைத் திரைப்படமான கோய்...மில் கயா, இதற்காக ரோஷன் இரண்டு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். இது இவரது திரைப்பட வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக நடித்த கிரிஷ் (2006), க்ரிஷ் 3 (2013) போன்ற படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்தார்:. தூம் 2 (2006) படத்தில் திருடனாகவும், ஜோதா அக்பர் (2008) படத்தில் முகலாயர் பேரரசர் அக்பராகவும், குஜாரிஷில் (2010) முதுகுதண்டு பாதிக்கப்பட்டவராகவும் நடித்ததற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார். மேலும் இவர் நடித்த நகைச்சுவை-நாடகப்படமான ஜிந்தகி நா மிலேகி டோபரா (2011), பழிவாங்கும் நாடகப்படமான அக்னீபத் (2012), வாழ்க்கை வரலாறுக் கதையான சூப்பர் 30 (2019), மற்றும் சித்தார்த் ஆனந்த்இயக்கிய அதிரடி படங்களான பேங் பேங்! (2014), வார் (2019), பைட்டர் (2024) போன்றவை இவருக்கு வணிக வெற்றியை ஈட்டித் தந்தன.
ரோஷன் மேடையிலும் நடித்தார். மேலும் தொலைக்காட்சி உண்மைநிலை நிக்ச்சியான ஜஸ்ட் டான்ஸ் (2011) மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் ஒரு நடுவராக செயல்பட்டார். இவர் அந்த நேரத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நட்சத்திரமாக ஆனார். இவர் பல மனிதாபிமான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். ரோஷனுக்கு சுசேன் கான் என்பருடன் திருமணமாகியது. பதினான்கு ஆண்டுகள் இந்த திருமண உறவு நீடித்தது. இந்த இணையருக்கு இரண்டு சுசேன் கான், அவருடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரோஷன் 1974 ஜனவரி 10 அன்று பம்பாயில் இந்தி திரையுலகில் முக்கியத்துவம் பெற்ற ரோஷன் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவர் பஞ்சாபி மற்றும் வங்காள வம்சாவளியைச் சேர்ந்தவர். ரித்திக்கின் தந்தைவழி பாட்டி ஐரா ரோஷன் ஒரு வங்கத்தவராவார்.[3] இவரது தந்தை, திரைப்பட இயக்குநர் ராகேஷ் ரோஷன், இசை அமைப்பாளர் ரோஷன்லால் நாக்ரத்தின் மகன்; இவரது தாயார் பிங்கி, தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜெ. ஓம் பிரகாசின் மகளாவார். இவரது மாமா, ராஜேஷ், இசையமைப்பாளர் ஆவார்.[2] ரோஷனுக்கு சுனைனா என்ற அக்காள் உள்ளார், அவர் பம்பாய் ஸ்காட்டிஷ் பள்ளியில் படித்தவர். ரோஷன் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனக்கு சமயத்தை விட ஆன்மீகம் மேலானது என்று கருதுகிறார்.[4][5]
ரோஷன் குழந்தை பருவத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்; இவரது வலக்கையில் கூடுதல் கட்டை விரலுடன் பிறந்தார். இது இவரது சகாக்களில் சிலரை இவரைத் தவிர்க்க காரணமாயிற்று. இவர் ஆறு வயதிலிருந்தே திக்குவாயால் அவதியுற்றார்; அது இவருக்கு பள்ளியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது, மேலும் வாய்வழி சோதனைகளைத் தவிர்ப்பதற்காக இவர் காயம் மற்றும் நோயுற்றதைப் போல நடித்தார்.[7] இவருக்கு தினசரி பேச்சு சிகிச்சை உதவியாக இருந்தது.[7]
ரோஷனின் தாத்தாவான, பிரகாஷ் இவரது ஆறு வயதில் முதன்முதலில் ஆஷா (1980) என்ற படத்தில் திரையில் அறிமுகப்படுத்தினார்; அதில் இவர் ஜீதேந்திரா இயற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினார், அதற்காக பிரகாஷ் இவருக்கு ₹100 கொடுத்தார்.[8] ரோஷன் தன் தந்தையின் தயாரிப்பான ஆப் கே தீவானே (1980) உட்பட பல்வேறு குடும்ப்ப் படங்களில் அங்கீகரிக்கப்படாத தோற்றங்களில் தோன்றினார். பிரகாஷின் ஆஸ் பாஸ் (1981) படத்தில், இவர் "ஷேஹர் மைன் சர்ச்சா ஹை" பாடலில் தோன்றினார்.[9] இந்தக் காலகட்டத்தில் இவரின் 12 வயதில் படத்தில் முதன் முதலில் பேசும் பாத்திரத்தில் நடித்தார்; பிரகாஷின் பகவான் தாதா (1986) படத்தில் இவர் முதன்மைக் கதாபாத்திரத்தின் வளர்ப்பு மகனான கோவிந்தாவாக நடித்தார். ரோஷன் முழுநேர நடிகராக விரும்பினார். ஆனால் இவரது தந்தை முதலில் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறினார். இவரது 20 களின் முற்பகுதியில், இவருக்கு ஸ்கோலியோசிஸ் என்னும் நெளிமுதுகு என்னும் உடல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அது இவரை நடனமாடவோ அல்லது சண்டைக் காட்சியில் நடிக்கவோ அனுமதிக்காது. ஆரம்பத்தில் அதனால் அவதியுற்றார். இறுதியில் எப்படியும் நடிகராக முடிவெடுத்தார். இவரது நோய் குறித்து அறிந்த சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு, இவர் ஒரு மழையில் சிக்கினார், அப்போது கடற்கரையில் மெல்லோட்டத்தில் ஓடினார். அப்போது இவருக்கு எந்த வலியும் ஏற்படாததால், மேலும் நம்பிக்கை அடைந்து, எந்தவிதமான பாதகமான விளைவுகளும் இல்லாமல் தனது வேகத்தை அதிகரித்தார். ரோஷன் அந்த நாளையே "[அவரது] வாழ்க்கையின் திருப்புமுனையாக " பார்க்கிறார்."
ரோஷன் சைடன்ஹாம் கல்லூரியில் பயின்றார், அங்கு இவர் படிக்கும் போது நடனம், இசை விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டார். கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார்.[2] ரோஷன் தன் தந்தைக்கு குத்கர்ஸ் (1987), கிங் அங்கிள் (1993), கரண் அர்ஜுன் (1995), கொய்லா (1997) ஆகிய நான்கு படங்களில் துணை இயக்குநராக இருந்தார்.[2] இவர் தன் தந்தைக்கு துணை இயக்குநராக இருந்தபோது, கிஷோர் நமித் கபூரிடம் நடிப்பைப் பயின்றார்.[10][11]
சேகர் கபூரின் தாரா ரம் பம் பம் என்ற இரத்து செய்யப்பட்ட படத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகராக ரோஷன் முதலில் திரையில் அறிமுகமாக இருந்தார்.[12] அதற்கு பதிலாக, இவர் தன் தந்தையின் காதல் நாடகமான கஹோ நா... பியார் ஹை (2000) படத்தில் மற்றொரு அறிமுக நடிகையான அமீஷா படேலுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் ரோஷன் இரட்டை வேடங்களில் நடித்தார்.[13] படத்தில் நடிக்க தயாராக சல்மான் கானிடம் உடல் ரீதியாக பயிற்சிபெற்றார்.[14] தனது பேச்சாற்றலை மேம்படுத்த உழைத்தார், மேலும் நடிப்பு, பாடுதல், நடனம், வாள்வீச்சு, சவாரி ஆகியவற்றில் பாடம் படித்தார். ₹800 மில்லியன் (US$10 மில்லியன்) உலகளாவிய வருவாயுடன்,[15] கஹோ நா... பியார் ஹை 2000 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக ஆனது.[16] இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[17][18] இந்தப் படத்தில் நடித்ததற்காக, ரோஷன் பிலிம்பேர் விருதுகள், ஐஐஎப்ஏ விருதுகள், ஜீ சினி விருதுகளில் சிறந்த அறிமுக நடிகர் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்றார். அதே ஆண்டில் பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகர் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்ற முதல் நடிகரானார். இப்படம் பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகராக ரோஷனை நிலை நிறுத்தியது.[19]
20 திசம்பர் 2000 அன்று, ரோஷன் பெங்களூரில் நடந்த திருமண விழாவில் சுசானே கானை மணந்தார். ரோஷன் ஒரு இந்துவாகவும், கான் ஒரு முஸ்லிமாக என அவர்களிடையே சமய வேறுபாடு இருந்தபோதிலும்-ரோஷன் இரு நம்பிக்கைகளையும் சமமாக மதித்ததாக கூறினார்.[4] இந்த இணையருக்கு ஹிரேஹான் (2006 இல் பிறந்தார்) ஹிரிதான் (2008 இல் பிறந்தார்) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.[20] ரோஷனும் சுசானும் 2013 திசம்பரில் பிரிந்தனர், அவர்கள் 2014 நவம்பரில் மணமுறிவு செய்து கொண்டனர். இருவரும் இணக்கமாக பிரிந்ததாக தெரிவித்தனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.