கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி
இந்தியாவின் வரலாற்ற்க் கோவிலள் From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் வரலாற்ற்க் கோவிலள் From Wikipedia, the free encyclopedia
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி (Khajuraho Group of Monuments) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் ஜான்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள இந்து மற்றும் சைனக் கோயில்களின் குழுமமாகும். இவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாகும். [1] [2] இந்தக் கோவில்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலை பாணி குறியீடுகளுக்கும், அவற்றின் பாலியல் சிற்பங்களுக்கும் பிரபலமானது. [3]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
அமைவிடம் | சத்தர்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
உசாத்துணை | 240 |
பதிவு | 1986 (10-ஆம் அமர்வு) |
ஆள்கூறுகள் | 24°51′16″N 79°55′17″E |
பெரும்பாலான கஜுராஹோ கோவில்கள் பொ.ச.885க்கும் 1050க்கும் இடையில் சந்தேல வம்சத்தால் கட்டப்பட்டது.[4] [5] கஜுராஹோ கோவில் தளத்தில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 85 கோவில்கள் இருந்ததாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில், ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 25 கோவில்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. [2] எஞ்சியிருக்கும் கோயில்களில், கந்தாரிய மகாதேவர் கோயில் சிக்கலான விவரணங்கள், அடையாளங்கள், பண்டைய இந்திய கலையின் வெளிப்பாடுகளுடன் கூடிய ஏராளமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [6]
இந்த நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டபோது, அந்த இடத்திலுள்ள சிறுவர்கள் பெரியர்வர்களாக ஆகும் வரை (ஆண்மை அடையும் வரை) பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து வந்தனர். மேலும் இந்த சிற்பங்கள் 'குடும்பத்தலைவராக' உலக பங்கு பற்றி அறிய அவர்களுக்கு உதவியது. [7] [8] கஜுராஹோ குழுமக் கோவில்கள் ஒன்றாகக் கட்டப்பட்டன. ஆனால் இந்து, சைனம் ஆகிய இரண்டு மதங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இது பிராந்தியத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சைனர்களிடையே பல்வேறு மதக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கும் மரியாதை செய்வதற்கும் ஒரு பாரம்பரியத்தை பரிந்துரைக்கிறது. [9]
கஜுராஹோ நினைவுச்சின்னங்கள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், புது தில்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்கள் (385 மைல்) தொலைவில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. கோவில்கள் கஜுராஹோ என்றும் அழைக்கப்படும் ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. [10]
கஜுராஹோவிற்கு கஜுராஹோ வானூர்தி நிலையம் மூலம் சேவை செய்யப்படுகிறது. தில்லி, ஆக்ரா, வாரணாசி மற்றும் மும்பைக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.[11] இந்தத் தளம் இந்திய ரயில்வே சேவையால் இணைக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையம் நினைவுச்சின்னங்களின் நுழைவாயிலிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நினைவுச்சின்னங்கள் கிழக்கு-மேற்கு தேசிய நெடுஞ்சாலை 75 இலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலும், சத்தர்பூர் நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. இது தேசிய நெடுஞ்சாலை 86 மூலம் மாநில தலைநகரான போபாலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பந்த் தேவர் கோவில் கஜுராஹோ நினைவுச் சின்னங்களின் பாணியில் கட்டப்பட்டது. மேலும் இது பெரும்பாலும் 'சிறிய கஜுராஹோ' என்று குறிப்பிடப்படுகிறது.
கஜுராஹோ நினைவுச்சின்னங்கள் சந்தேல வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. அவர்களின் அதிகாரத்தின் எழுச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட உடனடியாக கட்டிட செயல்பாடு தொடங்கியது. அவர்களின் இராச்சியம் முழுவதும் பின்னர் புந்தேல்கண்ட் என்று அறியப்பட்டது. [12] பெரும்பாலான கோயில்கள் இந்து மன்னர்களான யசோவர்மன் மற்றும் தங்கனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. யசோவர்மனின் பாரம்பரியம் இலக்குமணன் கோவிலில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விசுவநாதர் கோவில் தங்கனின் ஆட்சியை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. [13] :22வித்யாதரனின் ஆட்சியில் கட்டப்பட்ட கந்தாரிய மகாதேவர் கோயில் மிகப்பெரிய மற்றும் தற்போது எஞ்சியிருக்கும் மிகவும் பிரபலமான கோவிலாகும். [14] தற்போது எஞ்சியிருக்கும் பல கோயில்கள் பொ.ச. 970-க்கும் 1030-க்கு இடையில் முழுமையடைந்ததாக கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் கோவில்கள் அடுத்த தசாப்தங்களில் முடிக்கப்பட்டன. [9]
கஜுராஹோ கோவில்கள், சந்தேல வம்சத்தின் தலைநகரான மகோபாவின் இடைக்கால நகரத்திலிருந்து [15] சுமார் 35 மைல் தொலைவில் கலிஞ்சர் பகுதியில், கட்டப்பட்டது. பண்டைய மற்றும் இடைக்கால இலக்கியங்களில், இவர்களின் இராச்சியம் ஜிஜோதி, ஜெஜாஹோதி, சிஹ்-சி-டு மற்றும் ஜெஜகபுக்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. [16]
கஜுராஹோவைப் பற்றிய முதல் ஆவணப்படுத்தப்பட்ட குறிப்பு 641-ஆம் ஆண்டில் சீன யாத்ரீகரான சுவான்சாங் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. அவர் பல செயலற்ற புத்த மடாலயங்களையும் பல இந்துக் கோவில்களையும் பூசை செய்யும் பிராமணர்களை தான் சந்தித்ததை விவரித்தார். [17] கசினியின் மகுமூதுவின் கலிஞ்சர் மீதான தாக்குதலில் அவருடன் சென்ற பாரசீக வரலாற்றாசிரியரான அல்-பிருனி பொ.ச.1022-இல், கஜுராஹோவைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் கஜுராஹோவை ஜஜஹுதியின் தலைநகராகக் குறிப்பிடுகிறார். [18] தாக்குதல் தோல்வியுற்றது. மேலும் இந்து மன்னர் கசினி மகுமூது தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மீட்புத் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்.[16] கஜுராஹோ கோவில்கள் 12 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருந்தன. இது 13 -ஆம் நூற்றாண்டில் மாறியது. குத்புத்தீன் ஐபக்கின் தலைமையில் தில்லி சுல்தானகத்தின் இராணுவம் சந்தேல அரசை தாக்கி கைப்பற்றியது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, மொராக்கோ பயணியான இப்னு பதூதா, 1335 முதல் 1342 வரை இந்தியாவில் தங்கியிருந்ததைப் பற்றிய தனது நினைவுக் குறிப்புகளில், கஜுராஹோ கோவில்களுக்குச் சென்றதைக் குறிப்பிட்டு, அவற்றை "கஜர்ரா" [19] [20] என்று அழைக்கிறார்.
கஜுராஹோ கோவில்கள் இருக்கும் மத்திய இந்தியப் பகுதி, 13-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு முஸ்லிம் வம்சங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில், சில கோவில்கள் அவமதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவை புறக்கணிக்கப்பட்டன.[9][12] உதாரணமாக, பொ.ச. 1495 -இல், சிக்கந்தர் லோடியின் கோவில் அழிவுப் போரில் கஜுராஹோவும் அடங்கும்.[21] கஜுராஹோவின் தொலைதூரமும் தனிமையும் இந்து மற்றும் சைனக் கோயில்களை முஸ்லிம்களால் தொடர்ந்து அழிக்கப்படாமல் பாதுகாத்தது. [22][23] பல நூற்றாண்டுகளாக, தாவரங்களும், காடுகளும் கோவில்களில் அதிகமாக வளர்ந்தன.
1830 களில், உள்ளூர் இந்துக்கள் ஒரு பிரித்தானிய நில அளவையாளரான டி. எஸ் பர்ட்டை கோவில்களுக்கு அழைத்துச் செனறனர். இதனால் இவை உலகளாவிய பார்வையாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. [24] அலெக்சாண்டர் கன்னிங்காம், கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, கோவில்கள் யோகிகளால் இரகசியமாகப் பயன்பாட்டில் இருப்பதாகவும், சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படும் சிவராத்திரியின் போது ஆயிரக்கணக்கான இந்துக்கள் புனித யாத்திரைக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார். 1852 ஆம் ஆண்டில், ஆங்கில நில அளவையாளரான எப். சி மைசே என்பவர் கஜுராஹோ கோவில்களின் ஆரம்பகால வரைபடங்களைத் தயாரித்தார். [25]
சைனக் கோவில்கள் கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன.[26] சௌசத் யோகினி கோவிலில் 64 யோகினிகள் உள்ளன. அதே சமயம் கட்டாய் கோவிலின் தூண்களில் மணிகள் செதுக்கப்பட்டுள்ளன.
கஜுராஹோ கோவில்கள் பல்வேறு கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றில் 10% கோயில்களுக்கு வெளியேயும் உள்ளேயும் பாலியல் அல்லது சிற்றின்ப கலைப் படைப்புகளைக் கொண்டுள்ளன . இரண்டு அடுக்கு சுவர்களைக் கொண்ட சில கோவில்களில் உள்சுவரின் வெளிப்புறத்தில் சிறிய பாலியல் சிற்பங்களின் வேலைப்பாடுகள் உள்ளன. சில அறிஞர்கள் இவை தாந்திரீக பாலியல் நடைமுறைகள் என்று பரிந்துரைக்கின்றனர். [27] மற்ற அறிஞர்கள் சிற்றின்பக் கலைகள் காமத்தை மனித வாழ்க்கையின் இன்றியமையாத மற்றும் சரியான பகுதியாகக் கருதும் இந்து பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அதன் குறியீட்டு அல்லது வெளிப்படையான காட்சி இந்துக் கோவில்களில் பொதுவானது என்றும் கூறுகின்றனர். [6] ஜேம்ஸ் மெக்கனாச்சி, தனது காமசூத்திர வரலாற்றில், பாலியல் கருப்பொருள் கொண்ட கஜுராஹோ சிற்பங்களை "பாலியல் கலையின் உச்சம்" என்று விவரிக்கிறார்:
கோவில்களில் பல ஆயிரம் சிலைகளும் கலைப்படைப்புகளும் உள்ளன. கந்தாரிய மகாதேவர் கோவிலில் மட்டும் 870க்கும் மேற்பட்ட சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்ளையும் பல்வேறு பாலியல் தோற்றங்களையும் கொண்டுள்ளது. ஒரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், கஜுராஹோவில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பழைய கட்டமைப்புகள் கோவில்களாக இருப்பதால், சிற்பங்கள் தெய்வங்களுக்கிடையேயான பாலினத்தை சித்தரிக்கின்றன; [28] இருப்பினும், காமக் கலைகள் வெவ்வேறு மனிதர்களின் பலவிதமான பாலியல் வெளிப்பாடுகளைக் குறிக்கின்றன. [29] பெரும்பாலான கலைகள் அன்றாட வாழ்க்கை, புராணக் கதைகள் மற்றும் இந்து பாரம்பரியத்தில் முக்கியமான பல்வேறு மதச்சார்பற்ற மற்றும் ஆன்மீக விழுமியங்களின் அடையாளக் காட்சி போன்ற பல்வேறு அம்சங்களை சித்தரிக்கின்றன. [2] எடுத்துக்காட்டாக, இடைக்காலத்தில் பெண்கள் ஒப்பனையிடுவதையும், இசைக்கலைஞர்கள் இசையை உருவாக்குவதையும், குயவர்கள், விவசாயிகள் மற்றும் பிற மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இருந்ததையும் சித்தரிப்புகள் காட்டுகின்றன. [30] இந்தக் காட்சிகள் இந்துக் கோயில்களில் இருப்பது போல் வெளிப் படலங்களில் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.