மனிதர்கள் பேசிக் கொள்வதை உரையாடல் என்கிறோம். From Wikipedia, the free encyclopedia
உரையாடல் (conversation) என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் (உரை) கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் என்பது குமுகாயத்தில் ஒரு இன்றியமையாத திறனாகக் கருதப் படுகின்றது. ஒரு மொழியைக் கற்கும் போது, அதில் உரையாடல் செய்வது எவ்வாறு என்பதையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.
உரையாடல் பகுப்பாய்வு என்பது சமூகவியலில் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகும். இதில், மனிதர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொள்கின்றனர், அந்த அளவளாவுதல் அமைப்பு, அமைப்பாண்மை ஆகியன எவ்வாறு உள்ளன என்பன பற்றி விரிவாக அலசப் படுகின்றது.
உரையாடல் என்றால் என்ன என்று தெளிவான விளக்கங்கள் எதுவுமில்லை. உரையாடலில் குறைந்தது இரண்டு பேர் பேசிக் கொள்வார்கள் என்று மட்டும் கூறலாம்.[1] ஆனால், எது உரையாடல் இல்லை என்று கூற முடியும். வணக்கம் சொல்லிக் கொள்வது, மேல் நிலையில் உள்ளவர்கள் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்த்து இடும் கட்டளைகள் ஆகியன உரையாடல்கள் ஆகா.[2] மிகக் குறுகிய தலைப்புகளைப் பற்றிப் பேசுவதும் உரையாடல் ஆகாது.[3] தார்ன்பரி என்பவர் உரையாடலைப் பற்றி, "உரையாடல் என்பது மனிதர்கள் செய்கின்ற ஒரு பேச்சுத் தொழில் (வினை). தங்களுக்குள் ஒரு உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ள இந்த வினையைச் செய்கின்றனர். இது முறை சாரா, செவ்வொழுங்கான வினை.[4] உரையாடலின் போது, உரையாடுபவர்கள் எந்த சட்ட முறைகளையும் பயன் படுத்துவதில்லை. பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒப்பான வாய்ப்பு கிடைக்கிறது" என்று கூறுகிறார்.
உரையாடல் எந்த சட்ட முறைகளையும் பின் பற்றுவதில்லை என்று சொன்ன போதிலும், நடத்தை நெறி கருதி, அங்கங்கே உள்ள பண்பாட்டு முறைகளைப் பின் பற்றியே ஆக வேண்டி இருக்கும். உரையாடல் ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதால், அது தொடர்பான சட்ட முறைகள் இன்றியமையாதவையாக ஆகின்றன. இந்த சட்ட முறைகளை மீறும் போது, உரையாடல் தொடர முடியாமற் போகும். சட்ட முறைகளை மீறாமல் இருக்கும் வரை, உரையாடல் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கலாம். ஒரு சில நேரங்களில், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள, உரையாடலே உகமமான பரிமாற்றக் கருவியாகும். ஆனால், உரையாடலில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பேசுவது அனைத்தும் நினைவில் இருந்து மறைந்து கொண்டே போய்விடும்; அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பார்ப்பது கடினம். இது போன்ற தேவைகள் எதேனும் இருப்பின், எழுத்து வழி உரையாடல் செய்வது நல்லது. கருத்துப் பரிமாற்றம் விரைவாக நடக்க வேண்டுமாயின், பேச்சு வழி உரையாடல் செய்வது சரியாக இருக்கும்.
உரையாடலைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.
கதைத்தல் என்பது உரையாடலில் ஒரு பகுதி ஆகும். கதைத்தலின்போது, முரண்பாடுகள் ஏதேனும் தோன்றுமாயின், உடனே பேசப்படும் கருப்பொருள் மாறுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு கதைத்தலில் கடவுள் நம்பிக்கை என்பது கருப்பொருளாக இருந்தால், ஒருவர் தான் கூறுவதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது இல்லை.[5] அப்படிச் செய்தால் அது கதைத்தல் ஆகாது.
கருப்பொருளை வைத்துக் கதைத்தலைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
கதைத்தலில் ஒருவர் தம்முடைய சொந்த கருத்தைக் கருப்பொருளாக முன் வைப்பார். இதனால், அவருக்கு அந்தப் பொருளைப் பற்றிப் புரிதலும் தெளிவும் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது.
இது போன்ற கருப்பொருட்கள் கதைத்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வலிமை பெற்றது.
இது மற்றவர்களைப் பற்றி (குறிப்பாக கதைத்தலில் பங்கு கொள்ள வர இயலாதவர்களைப் பற்றி) பேசுவதைக் குறிக்கும். அவர்களைப் பற்றிய குறை நிறைகளை அவர்கள் இல்லாது போது உரையாடுவது, வெட்டிப் பேச்சு (‘’கிசு கிசு’’) போன்றவை இதில் அடங்கும்.
இதில் ஒருவர் தன்னுடைய நிறை குறைகளைக் கருப்பொருளாக வைத்துக் கதைத்தலைத் தொடங்குவார். மற்றவர்கள் கவனம் தன் மீது திரும்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும், இதைச் செய்யலாம்.
கதைத்தல் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல கருப்பொருட்களைக் கொண்டதாக இருக்கின்றது. அதனால், ஒரு கதைத்தல் எந்த பிரிவைச் சார்ந்ததென்று கூற முடியாது.
உரையாடலில் பல கூறுகள் உள்ளன.
பொதுவாகவே, பெண்கள் அதிகம் பேசுபவர்கள் என்ற எண்ணம் பலருக்கு இருக்கின்றது. ஆனால், மத்தாயசு என்பவரின் ஆய்வின் படி, உரையாடலில் (அமெரிக்காவில்) ஆண்களும் பெண்களும் ஒரே அளவான சொற்களையே பயன் படுத்துகின்றனர் என்று தெரிகின்றது.[6] அதாவது, இரு பாலரிலும், ஒவ்வொருவரும் நாளென்றுக்கு சராசரி 16,000 சொற்கள் பயன் படுத்துகின்றனர்.
அயலவருடன் (strangers) பேசும்போது ஒருவர் தம் சொந்த விசயங்களை (confidential matter) மற்றவர்களிடத்தில் பெரும்பாலும் கூறுவதில்லை. ஆனால், ஒரு பேருந்து, தொடர் வண்டி, வானூர்தி போன்றவற்றில் செல்லும்போது பக்கத்தில் இருப்பவரிடம், ஒரு சில நேரங்களில், நம் சொந்த விசயங்கள் பலவற்றைப் பரிமாறிக் கொள்கிறோம். ஒரு முறை, ஒருவர், தன் அருகில் அமர்ந்திருந்த மன நல மருத்துவரிடம், தமக்கு ஏதேனும் பயன் கிடைக்குமென ஒரு உரையாடலைத் தொடங்கி, தன் சொந்த விசயங்கள் பலவற்றை அவரிடம் கூறி இருக்கிறார்.[7]
குமுகாயவியல் துறையில், சார்லசு தெர்பர் என்னும் ஆய்வாளர் தம் நூலில், (The Pursuit of Attention: Power and Ego in Everyday Life) தான்-முதல் உரையாடல் பற்றி முன்வைக்கும் கருத்துகள்: தான்-முதல் என்பது தன்னைத்தானே விரும்பி எதிலும் தன்னை முன் வைப்பது. இது போன்ற இயல்புகள் அமெரிக்காவில் மிகுதியாகவும் காணப்பட காரணம், அங்கே ஒருவருக்கு மற்றவர்களிடத்தில் இருந்து கிடைக்கும் துணை, ஆதரவு ஆகியன குறைவு என்று தெர்பர் கருதுகிறார். எனவே, ஒவ்வொருவரும் மற்றவர்கள் எதிரே தான் எவ்வளவு சிறந்தவன் என்று வலிந்து காட்டிக்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு உரையாடலாக இருந்தால், அதன் கருப் பொருளைத் தன் பக்கம் இழுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க, தான்-முதல் உரையாடல் என்பதை ஒரு கருவியாகப் பலர் பயன் படுத்துகின்றனர் என்பது தெர்பரின் கருத்து. இது நண்பர்கள் நடுவிலும், குடும்பங்களிலும் நடப்பதைக் காணலாம் என்கிறார் தெர்பர்.
செயற்கை அறிவுத்திறன் என்பது கணிப்பொறிகளை, செயற்கை முறையில், மனிதர்களைப் போல எவ்வாறு அறிவுத் திறன் உள்ளவையாக ஆக்குவது என்பதைப் பற்றி ஆராயும் ஒரு பொறியியல் பிரிவு ஆகும். ஒரு கணிப்பொறி ஒரு மனிதருடன் மற்றொரு மனிதரைப் போலவே உரையாடும் திறன் இருக்குமானால், அந்தக் கணிப்பொறி மனிதனுக்கு இணையான அறிவு உள்ளதாகக் கருதப்படும். இங்கு, அறிவுத் திறனை அளப்பதற்கு உரையாடல் திறனே ஒரு அளவுகோலாக மொழியப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
ஒருவர் தன்னோடு உரையாடிக் கொள்வது ஒரு சில நேரங்களில் நன்மையைத் தரும். இதனால், ஒருவர் தன் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளைக் காண்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள துயரம் தரும் ‘’மயான’’ அமைதியையும் கலைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது.
உரையாடல்கள் ஊடகங்களில் மிகப் பேரளவில் இன்று நடை பெறுகின்றன. உரையாடல்களின் உட்கருத்துக்கள், உரையாடுவதற்கான நேரம், ஆகியன ஏற்கனவே குறிப்பிடப் பட்டு, பிறகு உரையாடல்கள் நிகழ்த்தப் படுகின்றன. புதிய தலை முறை, விஜய் டி.வி. , ஆகிய தொலைக் காட்சி அலை வரிசைகள் பல உரையாடல்களை நடத்தி வருகின்றன.
உரையாடலைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதப் பட்ட ஒரு சில நூல்கள் கீழே தரப் பட்டுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.