From Wikipedia, the free encyclopedia
9 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் இராச்சியம் தோன்றுவதற்கு முன்னர் லடாக் பற்றிய தகவல்கள் குறைவு. துவக்கக்கால திபெத்தியப் பேரரசின் சரிவுக்குப் பிறகு பேரரசின் ஆளுகைக்குள் இருந்த எல்லைப் பகுதிகளானது சுதந்திர நாடுகளாக மாறின. அதன் பின்னர், கி.பி 950 இல் லடாக் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு முன்னர் லடாக் அரசியில் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக கருதப்பட ஏதுமில்லை. இதன் ஆட்சியாளரிகளில் பெரும்பாலோர் திபெத்திய அரச குடும்பத்தின் கிளைகளிலிருந்து வந்தவர்கள் ஆவர். [1] [2]
லடாக்கின் துவக்கக்கால மக்களாக அநேகமாக தார்டிக் மக்களாக இருக்கலாம் எனப்படுகிறது. பழங்கால கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு தார்டிக் மக்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். மத்திய ஆசியாவில் தங்க அகழ்வில் ஈடுபட்ட மக்களைப் பற்றி எரோடோட்டசு குறிப்பிடும்போது தார்டிக் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பொ.ச. முதலாம் நூற்றாண்டில், டார்ட்ஸ் பகுதி (லடாக்கியில் ப்ரோக்பா) தங்க அகழ்வில் சிறந்த பகுதியாக மூத்த பிளினி கூறுகிறார். இந்த செய்திகளானது லடாக் மற்றும் பல்திஸ்தானில் நீரோட்டங்களில் தங்க சேகரிப்பு குறித்த தெளிவற்ற செய்தியை அளிப்பதாக ஹெர்மன் குறிப்பிடுகிறார்.
அரசியல் வரலாற்றின் முதல் சான்றாதாரமாக காணப்படுவது கரோஷ்டி எழுத்துமுறையில் உள்ள "உவிமா காவ்திசா" என்ற கல்வெட்டு ஆகும். இது சிந்துவின் கா-லா-ஆர்.டி.எஸ் (கலட்ஸே) பாலத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது முதல் நூற்றாண்டில் லடாக் குசான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. லடாக்கில் மேலும் சில சிறிய பிராமி மற்றும் கரோஷ்டி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனப் பயணி சுவான்சாங், கிபி 634, சுலுடுவோ (கலூட்டா, குலு ) விலிருந்து லுயோஹுலுவோ ( லாஹெளல் ) செல்லும் பயணத்தை விவரித்து, பின்னர் கூறுகையில், "இங்கிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் சாலை, ஆயிரத்து எண்ணூறு அல்லது ஆயிரத்து தொல்லாயிரம் லிக்கு ஆபத்தான பாதைகள் மற்றும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குகளைக் கடந்து சென்றால் லாஹெளல் நாட்டிற்கு சென்றடையலாம். மேலும் சிரமங்கள் மற்றும் தடைகள் நிறைந்த, குளிர்ந்த காற்று, பனிப்பொழிவுகளில் செல்லும் ஒரு பாதையில் இரண்டாயிரம் லிக்கு மேல் வடக்கே சென்றால், மார்சா நாட்டை அடையலாம் (இது சான்போஹே என்றும் அழைக்கப்படுகிறது). " [3] மொலொசுவோ அல்லது மார்-சா பேரரசு என்பது லடாக்கின் பொதுவான பெயரான மார்ச்-யூலுடன் ஒத்ததாக தெரிகிறது. இவரின் குறிப்புகளில் சான்-போ-ஹோ எல்லைகளாக குறிக்கப்படும் மற்ற இடங்களான, மோ-லோ-சோ, சுவர்நகோத்ரா அல்லது சுவர்ணபூமி (தங்க நிலம்) இது பெண்கள் இராச்சியத்துடன் ( ஸ்த்ரிராஜ்யா ) ஒத்திருக்கிறது . டூசியின் கூற்றுப்படி, ஜாங்ஜங் இராச்சியம் அல்லது குறைந்தபட்சம் அதன் தெற்கு மாவட்டங்கள் 7 ஆம் நூற்றாண்டு இந்திய மக்களால் இந்த பெயரால் அறியப்பட்டது. 634/5 ஆம் ஆண்டில் ஜாங்ஜங் திபெத்திய மேலாட்சியை முதன்முறையாக ஏற்றுக்கொண்டது. 653 இல் ஒரு திபெத்திய ஆணையாளர் ( mnan ) அங்கு நியமிக்கப்பட்டார். வழக்கமான நிர்வாகம் 662 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, 677 இல் கிளர்ச்சி வெடித்து தோல்வியுற்றதுது.
எட்டாம் நூற்றாண்டில் கிழக்கிலிருந்து உருவான திபெத்திய விரிவாக்கத்திற்கும், மத்திய ஆசியாவிலிருந்து உருவான சீன ஆதிக்க முயற்சிக்கும் இடையேயான பிரச்சினையில் லடாக் சிக்கிக்கொண்டது. லடாக் மீதான ஆளும் உரிமை சீனா மற்றும் திபெத்தின் கைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தது. 719 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 724 இல் நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டது. 737 ஆம் ஆண்டில், திபெத்தியர்கள் சீன உதவியைக் கேட்ட ப்ரூ-ஸா ( கில்கித் ) மன்னருக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். இறுதியில் திபெத்துக்கு கப்பம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொரிய துறவி, ஹைச்சோ (704-787) ( பின்யின் :Hui Chao), கடல் வழியாக இந்தியாவை அடைந்து 727 இல் மத்திய ஆசியா வழியாக சீனாவுக்கு திரும்பினார். [4] காஷ்மீரின் வடகிழக்கில் அமைந்துள்ள மூன்று ராஜ்யங்களை அவர் குறிப்பிட்டார்.
இவரின் கூற்றுகள் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நவீன லடாக் பகுதி திபெத்திய அதிகாரத்தின் கீழ் இருந்தது என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் திபெத்தியரல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ரிஸ்வி சுட்டிக்காட்டுகிறார்.
747 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவிற்கும் காஷ்மீருக்கும் இடையிலான நேரடி பரிவர்த்தனைகளை மீண்டும் திறந்துவிட முயன்ற சீன தளபதி காவ் சியான்ஜியின் போர்த் தொடர்களால் லடாக்கில் திபெத்தின் பிடிமானம் தளர்ந்தது. தலாஸ் நதிப்பகுதியில் (751) கார்லக்ஸ் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக படை நடவடிக்கைகளில் காவ் தோல்வியடைந்த பின்னர், லடாக்கில் சீன செல்வாக்கு விரைவாகக் குறைந்து திபெத்திய செல்வாக்கு மீண்டும் தொடங்கியது.
842 இல் திபெத்திய முடியாட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், லடாக்கில் திபெத்திய அதிகாரம் விரைவில் மறைந்து போனது.
842 இல் திபெத்தியப் பேரரசு உடைந்த பின்னர், பண்டைய திபெத்திய அரச பிரதிநிதியாக லடாக்கில் இருந்த நைமா-கோன் முதல் லடாக் வம்சத்தை நிறுவினார். நைமா-கோனின் இராச்சியத்தின் மையமாக இன்றைய லடாக்கின் கிழக்குப் பகுதியைக் கொண்டிருந்தது. இக்காலமானது லடாக் திபெத்தியமயமாக்கலுக்கு உட்பட்ட காலகட்டமாகும். இறுதியில் லடாக் கலப்பு மக்கள் வசிக்கும் ஒரு நாடாக மாறியது. இதில் ஆளும் வர்கமாக திபெத்தியர்கள் இருந்தனர். இந்த வம்சம் வட-மேற்கு இந்தியாவிலிருந்து, குறிப்பாக காஷ்மீரிலிருந்து பெற்ற மத கருத்தாக்கங்களான "இரண்டாம் பௌத்த மத பரவலுக்கு" தலைமையேற்றது. லடாக்கின் ஆரம்ப கால மன்னரான, எல்.டி-த்பால்-ஹ்கோர்-பிட்சன் (சி. 870 -900), போன் பௌத்த சமயத்தை வளர்ப்பதாக உறுதி ஏற்றார். லடாக் மற்றும் அப்பர் மனாஹ்ரிஸ் மடாலயம் உட்பட எட்டு பழமையான மடங்களை அமைப்பதற்கு காரணமாக இருந்தார். மதத்தைப் பரப்புவதற்காக ஹம்பம் வசனங்களை பெருமளவில் உருவாக்குவதை அவர் ஊக்குவித்தார். [5] இருப்பினும், நைமா-கோனின் வம்சத்தின் ஆரம்பகால மன்னர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இந்த வம்சத்தின் ஐந்தாவது மன்னரும் குலு, முஸ்டாங் , பால்திஸ்தானின் சில பகுதிகளை வென்றவருக்கு லாச்சென் உத்பாலா என்ற சமஸ்கிருத பெயர் உள்ளது. [6]
13 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் இசுலாமியர் படையெடுப்பின் காரணமாக, மத விவகாரங்களில் திபெத்தின் வழிகாட்டுதலை நாடிச்சென்று ஏற்றுக்கொள்வது என்று லடாக் முடிவெடுத்தது.
மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளின் போர் வெற்றிகளையும் ஊடுருவல்களையும் எதிர்கொண்டதால் சில நூற்றாண்டுகளுக்கு, லடாக்கியர்களின் ஒரு பகுதியை இஸ்லாமிற்கு மதம் மாறச் செய்ய வழியமைத்தது. [7] [8] இச்சயத்தில் லடாக் இரண்டாக பிளவுற்று, கீழ் லடாக்கானது பாஸ்கோவைச் தக்பபூம் மற்றும் டெமிஸ்காம் ஆகியோரால் ஆளப்பட்டது. மேலும் மேல் லடாக்கானது லே மற்றும் ஷேயிலிருந்து அரசர் தக்பும்தேவால் ஆளப்பட்டது. பகன் அரசர் லடாக்கை மீண்டும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தியதோடு இன்றும் கூட இருந்துவரும் நாம்ஜியால் வம்சத்தை உருவாக்கினார். அரசர் தாஷி நம்கியால் (1555-1575) பெரும்பாலான மத்திய ஆசிய படையெடுப்புகளை முறியடித்தார். மேலும் நம்கியால் சிகரத்தின் உச்சியில் ஒரு கோட்டையகத்தைக் கட்டினார். மேலும் இந்தப் பேரரசை தற்காலிகமாக நேபாளம் வரை நீட்டித்தார். [8]
ஜாமியாங் நம்கியாலின் ஆட்சியின் போது, பால்டிஸ்தானின் சில முஸ்லீம் ஆட்சியாளர்களை ஜாமியாங் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக பால்டி ஆட்சியாளர் அலி ஷெர் கான் அஞ்சன் பால்டிஸ்தானை ஆக்கிரமித்தார். கான் படையெடுப்பின் போது கோம்பா என்னும் பல பௌத்தப் பள்ளிகள் சேதமடைந்தன. இன்றும், இந்த காலத்திற்கும் முந்தைய சில கோம்பாக்கள் உள்ளன. கானின் போர்த் தொடர்களின் வெற்றியானது அவரது எதிரிகளின் மனதை மாற்றியது. சில கணிப்புகளின்படி, ஜம்யாங் தன் எதிகளுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார். மேலும் அலி ஷெர்கானுக்கு தன் மகளை திருமணம் செய்வித்தார். மேலும் ஜம்யாங்கும் ஒரு முஸ்லீம் இளவரசியை மணந்தார். 'சிங்க அரசர் என்று அழைக்கப்படும் செங்கே நம்கியால் (1616-1642) ஜாமியாங் மற்றும் கியாலின் மகனாவார். [9] [8] [10] [11] [12] [13] [14] [15] இவர் லடாக்கின் பழம் பெருமையை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக பல கோம்பாக்கள் மற்றும் புண்ணியத்தலங்களை மீளக்கட்டமைக்கும் பணிகளை மேற்கொண்டார். இதில் பிரபலமானது ஹெமிஸ் ஆகும். இவர் அரச தலைமையகத்தை ஷே அரண்மனையிலிருந்து லே அரண்மனைக்கு மாற்றினார். மேலும் தன் அரசை ஜான்ஸ்கர் மற்றும் ஸ்பிட்டிவரை விரிவுபடுத்தினார். ஆனால் ஏற்கனவே காஷ்மீர் மற்றும் பால்டிஸ்தானை ஆக்கிரமித்திருந்த முகலாயர்களால் தோற்கடிக்கப்பட்டார். அவரது மகன் டெல்டன் நம்கியால் (1642-1694) முகலாய பேரரசர் அவுரங்கசீப்பை லேவில் ஒரு பள்ளிவாசலைக் கட்டி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. [7] [8]
பல முஸ்லீம் சமய பரப்புநர்கள் இந்தக் காலகட்டத்தில் லடாக்கில் இஸ்லாத்தை பரப்பி, பல லடாக்கி மக்களை மதமாற்றம் செய்தனர். பல பால்டி முஸ்லிம்கள் ஜியாங்கை கியாலுக்கு திருமணம் செய்த பின்னர் லேவில் குடியேறினர். வர்த்தகம் மற்றும் பிற நோக்கங்களுக்காக முஸ்லிம்களும் இப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர். [16] [17]
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் சீக்கிய ஆட்சி நிறுவப்பட்டது. இருப்பினும், ஜம்முவின் டோக்ரா பகுதி அதன் ராசபுத்திர ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது, அவர்களில் மிகச் சிறந்தவர் மகாராஜா குலாப் சிங், இவரின் தளபதியான சோராவர் சிங் 1834 இல் லடாக் மீது படையெடுத்தார். அரசர் செஸ்பால் நம்கியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஸ்டோக்கிற்கு நாடுகடத்தப்பட்டார். லடாக் டோக்ரா மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்து 1846 இல் ஜம்மு-காஷ்மீர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. சீன-சீக்கியப் போரின்போது (1841–42), கிங் பேரரசு லடாக் மீது படையெடுத்தது, ஆனால் சீன-திபெத்திய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது.
லடாக்கை திபெத்தின் ஒரு பகுதியாக திபெத்திய கம்யூனிஸ்ட் தலைவரான ஃபுண்ட்சோக் வாங்கல் என்பவரால் உரிமை கொண்டாடப்பட்டது. [18]
1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது லடாக் பகுதியானது ஜம்மு-காஷ்மீர் நாட்டின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் இருந்து நிர்வகிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் லடாக் மீது படையெடுத்து லேவில் இருந்து 30 கி.மீ. வரை ஊடுருவி கார்கில் மற்றும் ஜான்ஸ்கரை ஆக்கிரமித்தனர். [8] அவர்களை வெளியேற்ற இந்தியப் படைகள் வானூர்திகள் மூலம் அனுப்பப்பட்டன, மேலும் கூர்க்காக்களின் ஒரு படையணியானது தெற்கிலிருந்து கால்நடையாக லேவுக்கு சென்று திராஸ், கார்கில் மற்றும் லேயை பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியது. 1965, 1971, 1999 ஆம் ஆண்டுகளில் மீண்டும் சண்டைகள் ஏற்பட்டன.
1949 ஆம் ஆண்டில், சீனா நுப்ராவுக்கும் சிங்கியாங்கிற்கும் இடையிலான எல்லையை மூடி, இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவிற்கான 1000 ஆண்டுகள் பழமையான வணிகப் பாதையைத் தடுத்தது. 1950 ஆம் ஆண்டில், சீனா திபெத்தை ஆக்கிரமித்தது, தலாய் லாமா உட்பட ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 1962 ஆம் ஆண்டில், சீனா அக்சாய் சின்னை ஆக்கிரமித்தது, உடனடியாக சிங்கியாங் மற்றும் திபெத்தை இணைக்கும் சாலைகளையும், கரகோரம் நெடுஞ்சாலையையும் பாக்கிஸ்தானுடன் கூட்டாக அமைத்தது. இந்த காலகட்டத்தில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை இந்தியா அமைத்தது. இதன்மூலமாக ஸ்ரீநகர் முதல் லே வரையிலான பயண நேரத்தை 16 நாட்களில் இருந்து இரண்டு நாட்களாக குறைத்தது. அதேசமயம், சீன நாடு லடாக்-திபெத் எல்லையை மூடியது. இதனால் 700 ஆண்டுகால லடாக்-திபெத் உறவு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. [8]
1960 களின் துவக்கத்தில் இருந்து திபெத்திலிருந்து லடாக்கில் குடியேறியவர்களின் எண்ணிக்கை (சாங்க்பா நாடோடிகள் உட்பட) அதிகரித்தது. அவர்களின் தாயகமானது சீனர்களால் ஆக்கிரமிப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இன்று, லேவில் திபெத்திலிருந்து வந்த அகதிகள் சுமார் 3,500 பேர் உள்ளனர். அவர்களிடம் கடவுச்சீட்டு இல்லை, சுங்க ஆவணங்கள் மட்டுமே உள்ளன. லடாக்கில் உள்ள சில திபெத்திய அகதிகள் திபெத்திய / இந்திய இரட்டை குடியுரிமையை கோருகின்றனர், இருப்பினும் அவர்களின் இந்திய குடியுரிமை அதிகாரப்பூர்வமற்றது. பிரிவினை காலத்திலிருந்து லடாக் ஸ்ரீநகரை மையமாக கொண்ட மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவதால், லடாக்கை புது தில்லியிலியின் நேரடி கட்டுப்பாட்டில் ஒன்றியப் பகுதியாக ஆக்கி ஆள வேண்டும் என்று கோரி லடாக்கிகள் அதிருப்தியில் உள்ளனர். காரணம் லடாக்மீது காஷ்மீர் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அக்கறையின்றி இருப்பது, முஸ்லீம் சார்பு, மாநில அரசாங்கத்தின் ஊழல் ஆகியவையே தங்கள் கோரிக்கைகளுக்கு காரணங்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1989 ஆம் ஆண்டில், பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வன்முறை கலவரங்கள் ஏற்பட்டன. அக்டோபர் 1993 இல், இந்திய அரசாங்கமும் மாநில அரசும் தன்னாட்சி மலை கவுன்சிலின் நிலையை லடாக்குக்கு வழங்க ஒப்புக் கொண்டன. 1995 இல், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
ஆகஸ்டு 2019-இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 கீழ் லடாக் பிரதேசதம் துணைநிலை ஆளுநரின் கீழ் 31 அக்டோபர் 2019 முதல் தனி ஒன்றியப் பகுதியானது இதன் முதல் துணைநிலை ஆளுநராக ஆர். கே. மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.[19]
Seamless Wikipedia browsing. On steroids.