விக்கிப்பீடியா
யாவரும் திருத்தக்கூடியக் கலைக்களஞ்சியம் / From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியா (Wikipedia; /ˌwɪkɪˈpiːdiə/ (கேட்கⓘ) wik-ih-PEE-dee-ə அல்லது /ˌwɪkiˈpiːdiə/ (கேட்கⓘ) wik-ee-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 1,66,384 கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும், தொகுக்கப்படக் கூடுவன.[5] மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.[6][7] சூலை 2024 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதுமாகும்.[8][9][10][11] மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.[8][12]
வலைத்தள வகை | இணையக் கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | 333 பதிப்புகள் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற) |
உருவாக்கியவர் | ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர்[1] |
மகுட வாசகம் | எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம். |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
பயனர்கள் | 35,000,000 (அனைத்துப் பதிப்புக்களிலும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை)[2] |
உள்ளடக்க உரிமம் | கிரியேட்டிவ் காமன்ஸ் சுட்டல்/ஒன்றேபோல் பகிர் (Creative Commons Attribution/ Share-Alike) 3.0 மற்றும் GFDL இரட்டை உரிமம் |
வெளியீடு | (2001-01-15)சனவரி 15, 2001 |
அலெக்சா நிலை | 5 (உலகளவில், பிப்ரவரி 2019[update])[3] |
தற்போதைய நிலை | செயல்பாட்டு நிலையில்[4] |
உரலி | www.wikipedia.org |
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது.[13] சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை,[14] விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)[15] மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், டைம் சஞ்சிகை, உலகளவில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் விரைவான வளர்ச்சிக்கு, யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.[16] விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம், தலைப்புச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.[17][18][19]
விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,[20] தேவையற்ற தொகுப்புக்கள்[21][22] மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள், உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,[23] நேச்சர் இதழ் மூலம் 2005-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள அறிவியல் கட்டுரைகள், பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டிலும் தலைமையான தவறுகள் ஒரேயளவினதாய் இருந்தன.[24] இதற்குப் பதிலளிக்குமுகமாக, பிரிட்டானிக்கா, இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.[25] எனினும் இதனை மறுத்துரைத்த நேச்சர், தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், பிரிட்டானிக்காவின் தலைமையான மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.[26][27]
யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. "அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது; பக்கச் சார்பற்றது; நடுநிலைமையை வலியுறுத்துவது; இதன் நுட்பக் கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது.