வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது கருப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் "வால்" எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாகக் கலந்திருக்கும். வால்வெள்ளியின் கருப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்ளியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

Thumb
கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பொலிவான வளிம், தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் வட்டணை அல்லது சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மீத்தேனும் நீரும் தூசியும் கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை.

வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ்ந்த நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பால் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டிலில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாகக் கருதப்படுகின்றன.[1] இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகள் அருகாமையில் உள்ள கடந்தகால, எதிர்கால, அல்லது கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாகக் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது.

சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர்ம, வளிம நிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு எடுத்துகாட்டு ஆல்லே வால்வெள்ளி ஆகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நோக்கலாம்/அவதானிக்கலாம்.

விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீத்தேன், சயனோஜன், கரியமில வளிமம், அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடுகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும்போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால்வெள்ளிகளின் மேற்பரப்பு படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விழும்..[2] குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன.[3][4] முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன.

2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன.[5] இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன.[6][7] ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நமக்குப் புலப்படுவதில்லை.[8] இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்று ஆய்ந்துவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்டா திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தான் முதன்முதலில் மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது.[9] நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் தெம்பெல் 1 வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது.

சொற்பிறப்பியல்

comet எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய cometa என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான comēta அல்லது comētēs என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும்.[10][11]

வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும்.[12]

புறநிலைப் பான்மைகள்

உட்கரு

Thumb
103P/ஆர்ட்லேவின் உட்கரு, பிளையே விண்கலம் எடுத்த படிமம். உட்கருவின் நீளம் 2 கிமீ ஆகும்.
Thumb
81P/வைல்டு வால்வெள்ளியின் ஒளிப்பக்க, இருள்பக்கத் தாரைகளும் கூர்ம்பொறுக்கும் உலர்வாக உள்ளன.

வால்வெள்ளியின் திண்ம அகடு உட்கரு எனப்படுகிறது. உட்கருவில் பாறையும் தூசும் பனிக்கட்டியும் கரிம ஈருயிரகி, கரிம ஓருயிரகி, மீத்தேன், அம்மோனியா போன்ற உறைவளிமங்களும் அமைகின்றன.[13] இவை பிரெடு [விப்புள்] படிமம் உருவாகிய பிறகு தூசிப் பனிப்பந்துகள் எனப்படுகின்றன.[14] உயர்தூசு உள்ளடங்கியவை "பனித் தூசுப் பந்துகள்" எனப்படுகின்றன.[15] 2014 இல் நடத்திய ஆய்வுகள் வழியாக வறுத்த பனிக்கட்டிபோல வால்வெள்ளிகள் அமைதல் அறியப்பட்டது. அதாவது இவற்றின் மேற்பரப்பு கரிமச் சேர்மங்களோடு அடர்பனிப் படிகங்களாலும் உள்பனிப்பகுதி மிகவும் குளிர்ச்சியாகவும் குறைந்த அடர்த்தியுடனும் அமைகின்றன என கூறுகின்றன.[16]

Thumb
போரெல்லி வால்வெள்ளியின் தாரைகள். ஆனால் மேற்பரப்பில் பனிக்கட்டி இல்லை.

உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாறையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். இவை ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களையும் கொண்டுள்ளன. இவற்றில் மெத்தனால், நீரகச் சயனைடு, பார்மால்டிகைடு, எத்தனால், ஈத்தேன் போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரகக் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும்.[17][18] 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.[19] புவியில் கண்டறிந்த விண்கற்களைப் பற்றிய நாசாவின் ஆய்வுகளில் இருந்து 2011 ஆகத்து மாதம் வெளியாகிய அறிக்கையில், மரபன் (டி. என். ஏ) முன்மரபன் (ஆர். என். ஏ) ஆகிவற்றின் உட்கூறுகளான அடினைனும் குவானைனும் சார்ந்த பிற கரிமச் சேர்மங்களும் குறுங்கோள்களிலும் விண்கற்களிலும் உருவாகியுள்ளன என முன்மொழியப்பட்டுள்ளது.[20][21]

வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும்[22] ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன;[22] நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான கரிமச் சேர்மங்களைக் கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது.[23]

30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன[24] என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும்.[25] 322பி/சோகோ வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது.[26] 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[27] Known comets have been estimated to have an average density of 0.6 g/cm3 (0.35 oz/cu in).[28] வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன.[29]

புவியண்மைச் சிறுகோள்களில் 6% சிறுகோள்கள் வளிம உமிழ்வு நின்றுவிட்ட காலாவதியான வால்வெள்ளிகளே எனக் கருதப்படுகின்றன,[30] இவற்றில் 14827 கிப்னோசு, 3552 தான் குவிக்சோட் ஆகிய சிறுகோள்களும் அடங்கும்.

உரோசெட்டா, பிளையே விண்கலங்களின் ஆய்வு முடிவுகள், 67பி/சூர்யமோவ்- கெராசிமென்கோ வால்வெள்ளியில் காந்தப்புலம் ஏதும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த வான்பொருள்களின் தொடக்கநிலை உருவாக்கத்தில் காந்தவிசைகள் பங்கேதும் ஆற்றவில்லை என்பது தெளிவாகிறது.[31][32]

மேலதிகத் தகவல்கள் பெயர், அளவுகள் (கிமீ) ...
சில வால்வெள்ளிகளின் இயல்புகள்
பெயர் அளவுகள்
(கிமீ)
அடர்த்தி
(கி/செமீ3)
பொருண்மை
(கிகி)[33]
Refs
ஆலே வால்வெள்ளி 15 × 8 × 8 0.6 3×1014 [34][35]
தெம்பெல் 1 7.6 × 4.9 0.62 7.9×1013 [28][36]
19பி/போரெலி 8 × 4 × 4 0.3 2.0×1013 [28]
81பி/வைல்டு 5.5 × 4.0 × 3.3 0.6 2.3×1013 [28][37]
67பி/சூர்யமோவ்–கெராசிமென்கோ 4.1 × 3.3 × 1.8 0.47 1.0×1013 [38][39]
மூடு

கருப்புறணி

Thumb
அபுள் விண்வெளி தொலைநோக்கி சூரிய அண்மைநிலைக்கு முன் எடுத்த ஐசோன் வால்வெள்ளியின் படிமம்.[40]

வால்கள்

தாரைகள்

வட்டணைப் பான்மைகள்

சிற்றலைவுநேர வால்வெள்ளி

நெட்டலைவுநேர வால்வெள்ளி

காட்சிக்களம்

காணொலிப்படங்கள்
நாசா வால்வெள்ளிகளின் பதக்கூறுகளைப் புவிக்குக் கொணர வால்வெள்ளி அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது.
என்கே வால்வெள்ளி தன் வாலை இழக்கிறது

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.