Remove ads
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
எத்தனால் (Ethanol) என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று ஆகும். ஈசுட்டு என்ற நொதியைப் பயன்படுத்தி சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. பெட்ரோ வேதியியல் செயல்முறையிலும் எத்தனாலை தயாரிக்க இயலும். ஆல்ககால், எத்தில் ஆல்ககால், குடிக்கும் ஆல்ககால் என்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
எத்தனால்[1] | |||
வேறு பெயர்கள்
எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்; ஐதராக்சி ஈத்தேன்; குடிக்கும் ஆல்ககால்;எத்தில் நீரேற்று; தனி ஆல்ககால் | |||
இனங்காட்டிகள் | |||
64-17-5 | |||
ChemSpider | 682 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 702 | ||
வே.ந.வி.ப எண் | KQ6300000 | ||
| |||
பண்புகள் | |||
C2H6O | |||
வாய்ப்பாட்டு எடை | 46.07 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.789 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −114.3 °C (−173.7 °F; 158.8 K) | ||
கொதிநிலை | 78.4 °C (173.1 °F; 351.5 K) | ||
கரைந்து கலக்கக்கூடியது | |||
காடித்தன்மை எண் (pKa) | 15.9 | ||
பிசுக்குமை | 1.200 cP (20 °C) | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.69 D (வளிமம்) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | தீப்பற்றக்கூடியது (F) | ||
R-சொற்றொடர்கள் | R11 | ||
S-சொற்றொடர்கள் | (S2) S7 S16 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 13 °C (55.4 °F) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
தொடர்புடைய சேர்மங்கள் | மெத்தனால், புரொப்பனால் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தில் ஆல்ககாலின் வேதியியல் வாய்ப்பாடு C2H6O ஆகும். இவ்வாய்ப்பாட்டை CH3-CH2-OH அல்லது C2H5-OH என்றும் எழுதலாம். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இப்படி எழுதுவதால் மெத்தில் குழுவில் (CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சில் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எத்தனாலை சுருக்கக் குறியீடாக எத்OH என்றும் அழைக்கலாம்.
எத்தனால் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக்கும் பழமையான மற்றும் மிகவும் பொதுவான பொழுதுபோக்கு பானமாகும். போதுமான ஒரு அளவுக்கு மேல் உட்கொள்ளப்படும் போது போதை அதிகரித்து குடிவெறியும் நரம்பு தளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது[2][3]. பரவலாக, ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது எரிபொருளாகவும் இதர வேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் எத்தனால் பயன்படுகிறது.
பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் ஐயுபிஏசி முறையில் இதற்கு எத்தனால் என்று பெயரிட்டுள்ளது. ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட இரண்டு கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்க்கைல் குழுவுடன் OH என்ற வேதி வினைக்குழு இணைக்கப்பட்டுள்ள ஒரு சேர்மமாக இது கருதப்படுகிறது [1]. ’எத்’ என்ற முன்னொட்டும் ’ஆல்’ என்ற பின்னொட்டும் சேர்க்கப்பட்டு இச்சேர்மம் எத்தனால் எனப்படுகிறது.
1834 ஆம் ஆண்டு C2H5- என்ற குழுவுக்கு யசுடசு இலைபெக் சூட்டிய எத்தில் என்ற பெயரிலிருந்துதான் ’எத்’ என்ற முன்னொட்டும் எத்தில் ஆல்ககாலில் உள்ள எத்தில் என்ற சொல்லும் பெறப்பட்டன, C2H5-O-C2H5 சேர்மத்தின் செருமன் பெயரான Aether என்ற பெயரிலிருந்துதான் இவர் ’எத்தில்’ என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலத்தில் பொதுவாக ஈதர் என்றும் மிகக்குறிப்பிட்டு அழைப்பதென்றால் டையெத்தில் ஈதர் என்றும் இது அழைக்கப்படுகிறது[4]. எத்தில் என்பது (aithḗr, மேற் காற்று), (hyle, பொருள்) என்ற பண்டைய கிரேக்க சொற்களின் சுருக்கம் என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது.
1892 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் செனீவாவில் நடைபெற்ற இரசாயனப் பெயரிடல் பற்றிய சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எத்தனால் என்ற பெயர் உருவாக்கப்பட்டது [5]. இரசாயனப் பெயரிடலில் ஆல்ககால் என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக எத்தனால் என்ற பெயர் நிலைத்துவிட்டது. அரபி மொழியில் ஆண்டிமனி தனிமத்தின் தாதுவாக அறியப்படும் சொல்லின் பொருள் இடைக்கால லத்தீனில் நிலைபெற்றுவிட்டதாக ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி தெரிவிக்கிறது[6]. எத்தனாலுக்கு ஆல்ககால் என்ற பெயர் முதன்முதலில் 1753 இல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
எத்தனால் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. பொதுவாக பாக்டீரியாவை எதிர்க்கும் நோய் நுண்ணுயிர்தடையாக எத்தனால் கருதப்படுகிறது. நோயுண்டாக்கும் பாக்டிரியாக்களின் புரதத்தில் வீரியத்தைக் குறைக்கிறது. அவற்றின் கொழுப்பையும் கரைத்து விடுகிறது. பாக்டிரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகவும் பல வைரசுகளுக்கு எதிராகவும் எத்தனால் செயல்படுகிறது. எனினும், எத்தனால் பாக்டிரியா சுபோர்கள் எனப்படும் பாக்டீரிய வித்துக்களுக்கு எதிராக திறனற்றதாக உள்ளது [7] மெத்தனால் [8] மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்றவற்றால் உண்டாகும் நச்சுத்தன்மையை ஒழிக்கும் நச்சுமுறியாக எத்தனால் பயன்படுகிறது.
உயர் செறிவு எத்தனால் பெரும்பாலும் பல நீரில் கரையாத மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேர்மங்களை கரைக்க பயன்படுத்தப்படுகிறது. இருமல் மற்றும் குளிர் ஈரத்திற்கான வைத்தியத்திற்கும், வலி நிவாரண மருந்துகள் தயாரிப்பிலும், வாய் கொப்புளிக்கும் திரவங்கள் தயாரித்தலிலும் எத்தனால் 1 முதல் 25% செறிவு நிலையில் பயனாகிறது. ஆசுதுமா போன்ற சுவாசப்பாதை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்ககால் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் [9]. அசிட்டமினோஃபென், இரும்பு கூட்டுப்பொருட்கள், பியூரோசுமைடு, மானிட்டால், ஃபெனோபார்பிட்டால், டிரைமெத்தோபிரிம்/சல்பாமெத்தாக்சசோல், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 700 வகையான மருந்துகளில் எத்தனால் பங்கு கொண்டுள்ளது [10].
மத்திய நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை விளைவிக்கும் உளவியல் மருந்தாக எத்தனால் செயல்படுகிறது [11]. பொதுவாக ஓர் அலகு இரத்த அளவிலுள்ள எத்தனாலின் எடையை அறிவதன்மூலமாக உடலின் இரத்த ஆல்ககால் அளவிடப்படுகிறது. சிறிதளவு எத்தனாலை உட்கொள்வதால் மகிழுணர்வும் நெகிழ்வுணர்வும் ஏற்படலாம். உளரல், குழப்பம், கட்டுப்பாடின்மை முதலியன இதற்கான அறிகுறிகள் ஆகும். அளவுக்கு மீறி எத்தனாலை உட்கொள்வதால் பார்வை இழப்பு, உணர்விழத்தல், நினைவிழத்தல், மந்தபுத்தி, மயக்கமடைதல், மரணமடைதல் போன்ற தீங்குகள் ஏற்படலாம் [12]
எத்தனால் ஒரு பெரிய தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் எத்தனால் இயந்திர எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே எத்தனால் உற்பத்தி செய்யும் உலகநாடுகளில் பிரேசில் முதலிடம் பிடிக்கிறது [13]. பிரேசில் நாட்டில் விற்கப்படும் கெசோலின் எனப்படும் பெட்ரோலில் குறைந்தபட்சமாக 25 சதவீதமாவது எத்தனால் கலக்கப்படுகிறது. ஐதரசு எத்தனால் என்பது 95% எத்தனாலும் 5% தண்ணிரும் கலந்த கல்வையாகும். பிரேசில் நாட்டில் இவ்வெரிபொருள் புதியதாக விற்கப்படும் 90% பெட்ரோல் கார்களுக்கு எரிபொருளாக இடப்படுகிறது. பிரேசிலியன் எத்தனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனை தனிப்படுத்தி சேமிக்கிறது என்பதற்காகவும் இது அறியப்படுகிறது [14]. அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் இ10 (10% எத்தனால்) எரிபொருளைப்யும் சில சமயங்களில் இ85 (85% எத்தனால்) எரிபொருளையும் பயன்படுத்துகின்றன.
இராக்கெட்டு எரிபொருளாகவும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இலகுரக இராக்கெட் இயக்க பந்தய விமானங்களில் தற்போது எத்தனால் பயன்படுத்தப்படுகிறது [15]. கரும்பு கழிவில் இருந்து தயாரிக்கப்படும் தூய எத்தனால் வாகனங்களுக்குப் பயன்படுத்துவதை ஆத்திரேலியா நாட்டுச் சட்டம் 10% வரை மட்டுப்படுத்துகிறது. பழைய கார்கள் மற்றும் மெதுவாக எரியும் எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது அவற்றில் இயந்திர வால்வுகள் பொருத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என அச்சட்டம் வலியுறுத்துகிறது [16]. எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கார்பன் ஓராக்சைடு, நைட்ரசன் ஆக்சைடுகள், மற்றும் ஓசோன் மாசுக்கள் உருவாதல் தீங்குகள் குறைவதாக தொழிர்சாலைகள் ஆலோசனைக் குழு ஒன்று தெரிவிக்கிறது [17]. பல்வேறு இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இணைப்புகள் வெளியிடும் பைங்குடில் விளைவு வாயுக்கள் வெளியீடு குறைவதாக ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூய கேசோலின் பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் உயிரிஎரிபொருள் பயன்பாடு 8% மாசுக்களை குறைப்பதாகவும், எ85 எத்தனால் பயன்பாட்டால் 17% மாசுக்கள் குறைவதாகவும், மரக்கூழ் எத்தனால் பயன்பாட்டால் 64% மாசுக்கள் குறைவதாகவும் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன[18].
எத்தனால் எரிப்பு என்பது ஓர் உள்ளெரி இயந்திர எரிப்புவகையாகும். முழுமையடையாத பெட்ரோல் எரிப்பினால் வெளியிடப்படும் பார்மால்டிகைடு, அசிட்டால்டிகைடு போன்ற பொருட்கள் எத்தனால் எரிப்பில் கணிசமாக பெரிய அளவில் உற்பத்தியாகின்றன [19]. இதனால் அதிக்மான அளவில் ஒளிவேதியியல் வினைகளும் தரையளவு ஓசோன் அளவும் அதிகரிக்கின்றன [20]. இத்தரவுகள் யாவும் எரிபொருள் உமிழ்வுகள் குறித்த தூய எரிபொருள் அறிக்கையின் தரவுகளாகும் [21].
அமெரிக்காவில் எத்தனால் உற்பத்தியானது சோளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தரவுகளின்படி அமெரிக்காவில் 7.0 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இத்திட்டங்களும் நிறைவு பெற்றால் மேலும் 6.4 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. இதே நேரத்தில் அமெரிக்க நாடெங்கிலும் பெட்ரோல் வர்த்தகத்தை எத்தனால் இடப்பெயர்ச்சி செய்துவருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும் [22]. எத்தனால் தயாரிப்பதற்கு உதவும் மற்றொரு சாத்தியமான மூலமாக இனிப்புச் சோளம் கருதப்படுகிறது. மானாவாரி நிலங்களில் இனிப்புச் சோளத்தை சாகுபடி செய்யமுடியும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் [23] எரிபொருள், உணவு, மற்றும் விலங்குணவுக்காக, வறண்ட வெப்ப மண்டல சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையம் சோளம் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஆகும் அதே கால அளவில் சோளம் உற்பத்திக்கு மூன்றில் ஒரு பங்கு தண்ணிரே தேவைப்படுவதாக கூறப்படுகிறது. உலகின் முதலாவது இனிப்பு சோள எத்தனால் வடிமனை இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2007 இல் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியது [24].
தண்ணீருடன் எத்தனால் எளிதில் கலக்குமென்பதால் திரவ ஐதரோகார்பன்கள் போல நவீனக் குழாய்கள் அமைத்து கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலாக இருக்கிறது [25]. எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதால் கார்புரேட்டர் போன்ற சிறிய இயந்திரங்கள் பழுதடைந்து விடுவதை இயந்திரப் பொறியாளர்களால் காண முடிகிறது. எனவே எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதை தவிர்க்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [26].
பொதுவாக தொடக்கக் கால ஈருந்தி இராக்கெட்டுகளில் (நீர்ம உந்துபொருள்) எத்தனால் திரவ ஆக்சிசனுடன் சேர்க்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் விண்வெளியுகத்தை தொடங்கி வைத்த செருமனியின் வி2 இராக்கெட்டில் எத்தனால் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இராக்கெட்டின் எரிகோபுரத்தின் வெப்பத்தைக் குளிர்விப்பதற்காக எத்தனாலுடன் 25% தண்ணிர் சேர்க்கப்பட்டது[27][28]. வி2 இராக்கெட்டை வடிவமைத்த பொறியாளர்கள், இரண்டாம் உலகப்போருக்கு பின் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ரெட்சுடோன் இராக்கெட்டுகளில் எத்தனாலைப் பயன்படுத்த உதவி செய்தனர்[29]. நவீன எரிபொருட்கள் வளர்ந்த காரணத்தால் ஆல்ககால் எரிபொருட்களின் பயன்பாடு குறைந்து வருகிறது[28].
வணிகரீதியிலான எரிபொருள் கலங்கள் புதுப்பிக்கப்பட்ட இயற்கை எரிவாயு, ஐதரசன் அல்லது மெத்தனால் முதலான எரிபொருட்களால் இயங்குகின்றன. பரவலாகக் கிடைப்பதாலும், அதிக தூய்மை மற்றும் மலிவான விலை, குறைவான நச்சுத்தன்மை போன்ற காரணங்களால் இவற்றுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. நேரடி-எத்தனால் எரிபொருள் கலங்கள், தன்வெப்ப சீர்திருத்தும் அமைப்புகள் மற்றும் வெப்ப ஒருங்கிணைப்பு அமைப்புகள் உட்பட பல எரிபொருள் கலத் தத்துவங்கள் முயற்சிக்கப்படுகின்றன. எத்தனால் எரிபொருள் கலங்கள் தொடர்பான செயல்பாடுகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் எத்தனால் எரிபொருள் கலங்களை சந்தைப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளன [30]
அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது பில்லியன் கேலன்கள்.
பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்திட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள்.
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனாலையும் கலந்து விற்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது.[31]
அடுப்படிகளிலும் அலங்கார நெருப்பாகவும் எத்தனால் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது [32].
எத்தனால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டு மூலப்பொருளாகும். எத்தில் ஆலைடுகள், எத்தில் எசுத்தர்கள், டை எத்தில் ஈதர், அசிட்டிக் அமிலம், எத்தில் அமீன்கள் உள்ளிட்ட பல்வேறு கரிமச் சேர்மங்களுக்கு எத்தனால் ஒரு முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது.
எத்தனால் நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்டுள்ளது. மற்றும் ஒரு நல்ல பொது கரைப்பானாகவும் எத்தனால் செயல்படுகிறது. சாயங்கள், டிஞ்சர், அடையாளங் காட்டிகள், சொந்தநலன் காக்கும் பொருட்கள் போன்றவற்றில் எத்தனால் பயன்படுகிறது. கூட்டுச்சர்க்கரைகளை ஆல்ககால் முன்னிலையில் வீழ்படிவாக்கவும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றை தூய்மைப்படுத்தவும் எத்தனால் பயன்படுகிறது.
குறைவான உருகு நிலை (−114.14 ° செ) மற்றும் குறைவான நச்சுத்தன்மை காரணமாக எத்தனால் சில சமயங்களில் ஆய்வகங்களில் உலர் பனிக்கட்டியுடன் அல்லது குளிரூட்டிகளில் வெப்பத்தைக் குறைக்கப் பய்ன்படுத்தப்படுகிறது.
ஆல்ககால் மூளைக்குச் செல்லும்போது, அது நரம்புச் செல்களிலிருந்து அனுப்பப்படும் குறிப்பலைகளை தாமதப்படுத்துகிறது. இதனால் கட்டுப்பாடு, சிந்தனை மற்றும் இயக்கம் முதலிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன[33].
இரைப்பையில் உணவு இல்லாத நேரத்திலும் கூட மதுபானம் இரைப்பைச்சாறு உற்பத்தியை தூண்டுகிறது. இதன் விளைவாக பொதுவாக புரத மூலக்கூறுகளை செரிப்பதற்காக அமில சுரப்பு தூண்டப்படுகிறது. அதிக அமிலச்சுரப்பு வயிற்றின் உட்புறச் சுவர்களை அரிக்கிறது. வயிற்றின் உட்புறச்சுவர் பொதுவாக மென்சவ்வு அடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. வயிறு தானே செரித்தலுக்கு உட்படுவதை இச்செவ்வு தடுக்கிறது. வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சவ்வு பழுதடைந்திருக்கும். பொதுவாக வயிற்றுப்புண் நோய் எச்.பைலோரி என்ற பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டதாகும். இப்பாக்டீரியாவினால் சுரக்கப்படும் ஒருவகை நஞ்சு வயிற்றைப் பாதுகாக்கும் மென்சவ்வை பலமிழக்கச் செய்கிறது. எனவே வயிற்றுபுண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் அதிகப்படியான அமிலச்சுரப்பு ஏற்பட்டு பலவீனமான குடல் சுவரை மேலும் அழித்துவிடும் [34]. இதனால் அடிவயிற்றில் கடுமையான வலி, வயிறு வீக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகும். அடர் கருப்பு மலம் உட்புற இரத்தக் கசிவுக்கு அறிகுறியாகும் [35]. இத்தகைய சிக்கல் உள்ளவர்கள் தொடர்ச்சியாக மது அருந்துவதிலிருந்து விடுதலை பெறவேண்டும் [35]. மது உட்கொள்வதால் அமைப்பு அழற்சி சார்பு மாற்றங்கள் இரண்டு குடல் வழிகள் மூலம் ஏற்படுகிறது. (1)குடல் திசுக்களின் பகுதிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி லிப்போகூட்டுச்சர்க்கரை வெளியிடுவதை அதிகரித்தல், (2)குடல் சுவரிலுள்ள மென்சவ்வை பலவீனப்படுத்தி அதன்வழியாக லிப்போ கூட்டுச்சர்க்கரையை இரத்தச் சுழற்சி மண்டலத்திற்குள் அனுமதித்தல்
இக்கூட்டுச்சர்க்கரை வெளியீடு அதிகரிப்பினால் கல்லிரல் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன [36].
எத்தனால் அடங்கிய பானங்கள் அருந்துவதால் ஆசுதுமா போன்ற வரலாறு நோயாளிகளுக்கு தோல் வெடிப்புகள், நாசியழற்சி அதிகரித்தல், மூச்சுக்குழல் ஒடுக்கம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் உண்டாகும். மது அருந்திய ஒரு மணி நேரத்திற்குள் இத்தகைய பாதிப்புகளின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் [9].
மது அருந்துவதால் பிறவிக் குறைபாடுகள் [37], புற்றுநோய உண்டாகும் வாய்ப்புகள் "[38], இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பு[39] போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மூளையிலுள்ள கேட்டலேசு மற்றும் சைட்டோகுரோம் பி-4502இ1 போன்ற ஆக்சிசனேற்றும் நொதிகளால் உருவாக்கப்படும் அசிட்டால்டுகைடால் போதைக்கு அடிமையாக்கும் விளைவுகள் நிகழ்கின்றன [40]. ஆல்டிகைடுகள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாகக் கருதப்பட்டாலும் மூளையின் மத்தியப்பகுதியை செயலிழக்கச் செய்வதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன [41]. எத்தனாலின் போதைப் பண்புகள் அல்லது அடிமையாக்கும் பண்புகள் மீசோலிம்பிக் ரிவார்டு பாத்வே எனப்படும் இடையங்கப் பாதையிலுள்ள தோப்பாமைன் நியூரான்கள்கள் மூலம் கடத்தப்படுகின்றன. நடுமூளையின் அடிப்புற திசு உறையை முன்மூளையின் அடித்தளத்திலுள்ள நியூக்ளியசு அக்கும்பென்சுடன் இணைக்கும் பாதையே இடையங்கப்பாதை எனப்படுகிறது[42][43]. என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பிகளிலும், காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பிகளில் மாற்றுத்தூண்டு தடுப்பியாகச் செயல்படுவதுதான் எத்தனாலின் முதன்மையான விளைவுகளில் ஒன்றாகும்[44]. உயர் அளவுகளில் எடுத்துக் கொள்ளப்படும் எத்தனாலால் அதிக ஈனிமறைப்பு அயனி வழிகள் மற்றும் நியூரான்களில் உள்ள வோல்டேச்மறைப்பு அயனிவழிகளும் தடுக்கப்படுகின்றன. மிகக்கடுமையான அளவில் எத்தனால் உட்கொள்ளப்படும் நிகழ்வுகளில் இடையங்க நரம்பியற் சந்திப்புகளில் தோபாமைன் வெளியிடப்படுகிறது[42][43]. நாட்பட்ட தீவிரமான எத்தனால் விரும்பிகளுக்கு, செல்படியெடுத்தல் காரணிகளில் இதேவகையான தூண்டுதல் ஏற்பட்டு செல்களில் பாசுபோரைலேற்றம் நிகழ்ந்து நிரந்தர மது அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள் [43][45][46][47]. பல ஆண்டு கடுமையான குடிபோதையை திடீரென நிறுத்துவதும் உயிருக்கு ஆபத்தானதாக முடியும். பதட்டம் தன்னியக்க செயல் பிறழ்ச்சி, வலிப்பு மற்றும் சித்தப்பிரமை முதலிய பாதிப்புகள் ஏற்படலாம்.
பார்பிட்டியுரேட்டுகள், பென்சோடையசிப்பின்கள், ஓப்பியாயிட்டுகள் போன்ற மூளைத்திறன் குறைப்பு மருந்துகளுக்கு எத்தனால் எதிர்வினை புரிகிறது[48] மற்றொரு உளவியல் பொருளான கோகைதைலீன் தயாரிப்பதற்கும் எத்தனால் எதிர்வினை புரிகிறது [49] மத்திய நரம்புமண்டல சிகிச்சையில் பயன்படும் மெத்தில்பெனிடேட்டு என்ற மருந்தின் இருப்பை எத்தனால் உடலில் உயர்த்துகிறது [50]. கனாபிசு எனப்படும் கஞ்சாவுடன் சேர்த்து பயன்படுத்தும்போது எத்தனால், டெட்ரா ஐதரோகனபினாலை ஈர்த்து உடலில் அதன் அளவை அதிகரிக்கிறது [51].
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துசார் மருத்துவத்தில் பயன்படும் மெட்ரோனிடசோலுக்கும் ஆல்ககாலுக்கும் இடையிலான எதிர்வினைகள் முக்கியமாக கவனிக்கத்தக்கன ஆகும். பாக்டீரியா எதிர்ப்பு முகவரான மெட்ரோனிடசோல், பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் செல்லணு டி.என்.ஏக்களையும் அதன் செயல்பாடுகளையும் அழிக்கிறது [52]. பொதுவாக குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு மருந்தாக மெட்ரோனிடசோல் கொடுப்பது வழக்கம் ஆகும். வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஒன்று குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியா ஆகும். இதனால் பெருங்குடல் வீக்கமும் மரணமும் கூட சம்பவிக்கலாம.
மெட்ரோனிடசோல் மருந்தை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் ஆல்ககாலை பயன்படுத்துவதை கடுமையாகத் தவிர்க்க வேண்டும். மதுவும் மெட்ரோனிடசோலும் சேர்ந்து சிவந்துபோதல், தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று பிடிப்புகள் மற்றும் வியர்த்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன [53][54][54]. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் டைசல்ஃபிரம் போன்ற வினைகளாகக் கருதப்படுகின்றன.
மெட்ரோனிடசோல் பொதுவாக ஆல்ககாலை வளர்சிதைமாற்றமடையச் செய்யும் ஒரு நொதியைப் பிணைக்கிறது. இத்தகைய நொதி பிணைப்பு முறையால் ஆல்ககாலை வெளியேற்றும் கல்லீரலின் ஆற்றல் பாதிக்கப்படுகிறது [55].
காமா அமினோபியூட்டரிக் அமிலம் ஏற்பிகளுடன் பிணைந்து அவற்றின் விளைவுகளை அதிகரிப்பது எத்தனாலின் முதன்மையான பணியாகும்[56]. மேலும், எத்தனால் பின்வரும் மருத்தியக்க முறைகளை தனதாகக் கொண்டுள்ளது.[57].
•காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பி நேர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி[44] (primarily of δ subunit-containing receptors)
•என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி[44][58]
•இடையங்கப் பாதையில் தோபாமைன் வெளியீடு[41][44]
•மூளையிலுள்ள ஓப்பியாயிடு ஏற்பிகளில் நியூக்ளியசு அக்கும்பென் வெளியீடு
•α-அமினோ-3-ஐதராக்சி-5-மெத்தில்-4-ஐசோசாக்சோல்புரோப்பியோனிக் அமில ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி [58]
•கைனேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி [58]
•நிக்கோட்டின் அசிட்டோகோலின் ஏற்பி முன்னியக்கி
•5-எச்டி3 ஏற்பி முன்னியக்கி
•கிளைசீன் மீளேற்புத்தடுப்பி [59]
•அடினோசின் மீளேற்புத்தடுப்பி [60]
•எல்-வகை கால்சியம் வழித்தடுப்பி
•கி-புரதவழி பொட்டாசியம் திறப்பி
கல்லீரலில் ஆல்ககால் டீ ஐதரசனேசால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மனித உடலில் இருந்து எத்தனால் அகற்றப்படுவது குறைக்கப்படுகிறது. எனவே இரத்தத்திலிருந்து அடர் ஆல்ககாலை நீக்குவது சுழியவகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆல்ககால் உடலைவிட்டு மாறாத விகிதத்தில் வெளியேறுகிறது என்பதே இதன்பொருள் ஆகும்.
ஒரு பொருளுக்கான வேதிவினை படிநிலை விகிதம் மற்றொரு பொருளுக்கு பொதுவானதாக இருக்கலாம். இதனால் மெத்தனால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் வளர்சிதை மாற்றங்களில் இரத்த ஆல்ககால் அளவு வேதிவினை வீதத்தை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. மெத்தனாலைக் காட்டிலும் இதன் வளர்சிதை மாற்றப்பொருட்களான பார்மால்டிகைடும் பார்மிக் அமிலமும் நச்சுப்பொருட்களாகும். எனவே இத்தகைய நச்சுப்பொருட்களின் உற்பத்தியையும் அடர்த்தியையும் குறைக்க எத்தனால் உட்செலுத்தப்படுகிறது [61]. எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மையும் இதே முறையில் நீக்கப்படுகிறது.
தூய்மையான எத்தனால் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது [62]. நாட்பட்ட தொடர்ச்சியான பயன்பாட்டினால் கல்லீரல் பாதிக்கப்படும் [63]. வளிமண்டலத்தில் எத்தனாலின் செறிவு ஆயிரத்தில் ஒரு பங்கு என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் வெளிப்பாடு வரம்பெல்லை தெரிவிக்கிறது [63].
மனித உடலில் உள்ள எத்தனால் ஆல்ககால் டி ஐதரோசனேசால் அசிட்டால்டிகடாகவும் பின்னர் ஆல்டிகைடு டி ஐதரோசனேசால் அசிட்டைலாகவும் மாற்றப்படுகிறது. கார்போ ஐதரேட்டு கொழுப்பு இரண்டின் வளர்சிதை மாற்றத்திலும் இருதி விளைபொருளாக அசிட்டைல் இணை நொதியே விளைகிறது. இந்த அசிட்டலை உயிரிதொகுப்புக்கும் ஆற்றலுக்கும் பயன்படுத்தமுடியும். இதேபோல எத்தனாலும் தோராயமாக ஒரு கிராமுக்கு 7கிலோகலோரி ஆற்றலை வெளியிடுகிறது [64]. எனினும், முதல்படிநிலையில் உருவாகும் அசிட்டால்டிகைடு [65] எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கும் [66] புற்றுநோய் உருவாக்கத்திற்கும் இது காரணமாகிறது. தொடர்புடைய டி ஐதரோசனேசு வழியாக ஆல்ககால் வளர்சிதை மாற்றத்தின்போது நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு ஒடுக்கப்படுகிறது.
ஆல்ககால் செரிமானத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. எத்தில் ஆல்ககாலின் ஒரு பகுதி நிர்விலக்கியாகும். நீர்விலக்கி அல்லது கொழுப்பு விரும்பியான எத்தனால் வயிற்றுச்சுவரின் குறுக்கே பரவுகிறது. உண்மையில் ஆல்ககால் வயிற்றில் ஈர்க்கப்படும் பொருள்களில் அரிதானது ஆகும். பெரும்பாலான உணவுப் பொருட்கள் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஆல்ககால் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்பட்டபிறகு வயிற்றுப் பொருட்கள் வெளியிடுவதை தாமதப்படுத்துகிறது[67]. ஈர்க்கப்பட்டபின்னர் இது கல்லீரலை அடைந்து அங்கு வளர்சிதை மாற்றமடைகிறது.
கல்லீரல் மூலம் பதப்படுத்தப்படாத மது இதயத்திர்கு செல்கின்றது. ஓர் அலகு நேரத்தில் கல்லீரல் ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்ககாலை மட்டுமே பதப்படுத்தும் ஆகவே, ஒருவர் அதிகமாக மது குடிக்கும்போது அது இதயத்தை அடைகிறது. இதயத்தில், இதய சுருக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக, இதயம் குறைவான இரத்தைச் செலுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாக உடலின் இரத்த அழுத்தமும் குறைகிறது [33]. இதயத்திற்குள் செல்லும் இரத்தம் நுரையீரலுக்குள்ளும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. சுவாசத்தில் ஆல்ககாலின் சுவடுகள் தென்படுகின்றன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை இனம் கண்டு கொள்ள உதவும் மூச்சுப்பகுப்பி இதனைக் கண்டுபிடிக்கிறது.
நுரையீரலில் இருந்து இதயத்திற்குத் திரும்பும் இரத்தம் உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஆல்ககால் இரத்தத்திலுள்ள லிப்போபுரதங்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றது. இவை கொழுப்பைக் கொண்டு செல்கின்றன. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. மிதமான ஆல்ககால் பயன்பாடு மாரடைப்பைக் குறைக்கும் என்பது ஆல்ககாலின் உடல் நலவியல் பயனாகும் [68].
மற்றவர்களை விட அதிகமாக எத்தனால் நுகர்வு இருக்கும் சில தனிநபர்கள் கடுமையான அறிகுறிகளுக்கு சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுண்டு. அத்தகையவர்கள் சிலரிடம் நொதிகள் பாதிப்பின்றி மிகவும் வேகமாக எத்தனால் வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுவதுமுண்டு.
நிறமற்ற நீர்மமான எத்தனால் சற்று நெடியுடன் விரைவில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாக உள்ளது. புகையில்லாமல் நீல நிறத்துடன் எரியும் இதை சாதாரண வெளிச்சத்தில் எப்பொதும் காண முடியாது. ஐதராக்சில் குழுவின் அடிப்படையிலும், குறுகிய சங்கிலி அமைப்பின் அடிப்படையிலும் இதன் இயற்பியல் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஐதராக்சில் குழுவால் ஐதரசன் பிணைப்பில் பங்கேற்கமுடிகிறது. இதனால் இதே மூலக்கூறு எடையைக் கொண்ட முனைவுக் கரிம சேர்மமான புரோப்பேனைக் காட்டிலும் அதிகமான பாகுமையும், குறைவான ஆவியாகும் தன்மையும் பெற்றுள்ளது. தண்ணிரைவிட சற்று அதிமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது. எத்தனாலின் ஒளிவிலகல் எண் 1.36242. ( 18.35° செ வெப்பநிலையில் λ=589.3 நா.மீ ஆக உள்ளபோது) 4.3 × 10−4 பாசுகல் அழுத்தத்தில் எத்தனாலின் மும்மைப்புள்ளி 150 கெல்வின் ஆகும்.
எத்தனால் ஒரு பல்துறை கரைப்பான் ஆகும்., நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்ட இச்சேர்மம் அசிட்டிக் அமிலம், அசிட்டோன், பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோபார்ம், டை எத்தில் ஈதர், எத்திலீன் கிளைக்கால், கிளிசரால், நைட்ரோமீத்தேன், பிரிடின், தொலுயீன் உள்ளிட்ட பல கரிமக் கரைப்பான்களுடனும் கலக்கும் இயல்புடையது [69][70]. பென்டேன், எக்சேன் உள்ளிட்ட இலேசான அலிபாட்டிக் ஐதரோகார்பன்களுடனும், முக்குளோரோ ஈத்தேன், நாற்குளோரோ எத்திலீன் போன்ற அலிப்பாட்டிக் குளோரைடுகளுடனும் எத்தனால் கலக்கும் தன்மையுடையது ஆகும் [70].
எத்தனாலின் தண்ணீருடன் கலக்கும் இயல்பு நீண்ட சங்கிலி சேர்மங்களின் கலக்கும் இயல்புடன் மாறுபடுகிறது. ஐந்து கார்பனுக்கு மேற்பட்ட நீளமுடைய சேர்மங்களின் நீருடன் கலக்கும் இயல்பு கார்பனின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது [71] ஆல்க்கேன் முதல் அன்டெக்கேன் வரையுள்ள ஆல்க்கேன்களின் கலக்கும் பண்பு கட்டுப்படுத்தப்படுகிறது. பன்னிருடெக்கேன் மற்றும் உயர் ஆல்க்கேன்களின் கலவைகள் வெப்பநிலைக்கு ஏற்ப அவற்ரின் கலக்கும் இயல்பில் கலப்பு இடைவெளியை வெளிபடுத்துகின்றன[72]). மேலும் உயர் ஆல்க்கேன்களைப் பொறுத்தவரையில் வெப்பநிலையும் பெரிய கலக்கும் இடைவெளியைக் காட்டுகின்றன.
எத்தனால்-நீர்க் கலவையின் பருமன் அவற்றின் தனிப்பட்ட கூறுகளின் கூட்டுத்தொகையை விட குறைந்த அளவாக உள்ளது. சம அளவு எத்தனாலும் தண்ணீரும் சேர்க்கப்பட்டால் 1.92 பருமனளவு கொண்ட எத்தனால்-நீர்க் கலவை மட்டுமே கிடைக்கிறது[69][73]. வெப்ப உமிழ்வினையான இவ்வினை 298 கெல்வின் வெப்பநிலையில் 777யூ/மோல் வெப்பம் உமிழப்படுகிறது[74]. எத்தனால்-நீர்க் கலவையில் 89 மோல்% எத்தனாலும் 11 மோல்% நீரும் கலந்து கொதிநிலை மாறா கலவையாக உருவாகின்றன[75]. இதையே 95.6 சதவீத எத்தனால் நிறையளவு கலவை என்றும் குறிப்பிடலாம். சாதாரண அழுத்தத்தில் இக்கலவை 78 பாகை செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மேலும், இக்கொதிநிலை மாறா கலவையின் உட்கூறுகள் வெப்பநிலை-அழுத்தத்தை சார்ந்திருக்கின்றன. இவை 303 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழ் மறைந்தும் விடுகின்றன[76]. ஐதரசன் பிணைப்பு தூய எத்தனாலை தண்ணீர் உறிஞ்சி எத்தனாலாக மாற்றுகிறது. காற்றிலுள்ள நீரையும் எத்தனால் உறிஞ்சிக் கொள்கிறது. ஐதராக்சில் குழுவின் முனைவுத்தன்மை காரணமாக பல அயனிச் சேர்மங்களையும் எத்தனால் கரைத்துவிடுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகள், மக்னீசியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் புரோமைடு, மற்றும் சோடியம் புரோமைடு போன்ற சேர்மங்கள் எத்தனால் கரைக்கும் சில குறிப்பிட்ட சேர்மங்களாகும் [70]. சோடியம், பொட்டாசியம் குளோரைடுகள் எத்தனாலில் சிறிதளவு கரைகின்றன [70]. ஏனெனில் எத்தனால் மூலக்கூறின் முனைவற்ற முனை காரணமாக இது முனைவுத்தன்மையற்ற எண்ணெய் [77], சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்ற பொருட்களையும் கரைக்கிறது.
எடையளவில் 40% ஆல்ககால் கலந்த எத்தனால் – தண்ணீர் கரைசலை 26° செல்சியசு வெப்பநிலைக்கு மேலாகச் சூடுபடுத்தினால் ஒரு தீப்பற்றும் மூலத்தின் மீது இக்கரைசல் தீப்பற்றி எரிகிறது. இவ்வெப்பநிலை தீப்பற்றும் வெப்பநிலை எனப்படுகிறது[78]. தூய்மையான எத்தனாலின் தீப்பற்றும் வெப்பநிலை 16.60° செல்சியசு வெப்பநிலையாகும். இது சராசரி அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று குறைவு ஆகும்.
எத்தனாலின் எடையும் தீப்பற்றும் வெப்பநிலையும்[79] ! எடை %!! வெப்பநிலை |- | 10% || 49 °C (120 °F) |- | 20% || 36 °C (97 °F) |- | 30% || 29 °C (84 °F) |- | 40% || 26 °C (79 °F) |- | 50% || 24 °C (75 °F) |- | 60% || 22 °C (72 °F) |- | 70% || 21 °C (70 °F) |- | 80% || 20 °C (68 °F) |- | 90% || 17 °C (63 °F) |- | 96% || 17 °C (63 °F) |}:
ஈசுட்டு நொதியால் நிகழும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் உடன் விளைபொருளாக எத்தனால் தோன்றுகிறது. மிகக்கனிந்த பழங்களில் எத்தனால் காணப்படுகிறது [80]. பனை, தென்னை மரங்களிலிருந்து ஈசுட்டுகள் மூலம் தயாரிக்கப்படும் கள்ளு என்ற போதை பானத்திலும் மரச்சுண்டெலி போன்ற சிலவகை விலங்குகளிலும் எத்தனால் காணப்படுகிறது[81]. இயற்கையாகவே காற்றில்லா சூழலில் முளைக்கின்ற பல தாவரங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கின்றன[82]. விண்வெளியில் விண்மீன்களிடை மேகத்திலும் எத்தனால் பனிப்போர்வையுடன் காணப்படுகிறது[83].
எத்தி்லீனை நீரேற்றம் செய்யும் பெட்ரோ வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறையிலும். கரும்புச் சர்க்கரையுடன் ஈசுட்டு நொதியைச் சேர்த்து நொதித்தல் என்ற உயிரினச் செயல்முறையிலும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது [84]. ஊட்டு மூலப்பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டே ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்பு முறை சிறந்தது என கூறமுடியும். 1970 களில் அமெரிக்காவில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறை சிறந்ததாகவும், 1980 களில் சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினச் செயல்முறை சிறந்ததாகவும் கருதப்பட்டது [85].
தொழிற்சாலை ஊட்டு மூலப்பொருளான எத்தனால் அல்லது எத்தனால் கரைப்பான் அல்லது செயற்கை எத்தனால் என்றழைக்கப்படும் எத்தனால், பெட்ரோவேதியியல் ஊட்டு மூலப்பொருளான எத்திலீனை அமில வினையூக்கியின் முன்னிலையில் நீரேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது.
C2H4 + H2O → CH3CH2OH
பொதுவாக இவ்வகை வினைகளில் பாசுபாரிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றது [86] 1947 இல் செல் ஆயில் நிறுவனம் இம்முறையில் எத்தனாலை தயாரித்தது [87]. உயர் அழுத்தத்தில் 300° செல்சியசு நீராவி வெப்பத்தில் 1.0:0.6 நீராவி, எத்திலீன் விகிதத்தில் இவ்வினை மேற்கொள்ளப்படுகிறது[88][89]. அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவனம்[90] மற்றும் சில நிறுவனங்கள் இம்முறையைப் பயன்படுத்தின. தற்பொழுது லையோந்தெல்பேசல் நிறுவனம் மட்டும் இம்முறையில் எத்தனால் தயாரிக்கிறது. தற்காலத்தில் எத்திலீன் அடர் கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தப்பட்டு எத்தில் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது. பின்னர் இது நீராற்பகுப்பு முறையில் மறைமுகமாக நீரேற்றப்பட்டு எத்தனால் தயாரிக்கப்படுகிறது. கந்தக அமிலம் மீளுற்பத்தி செய்யப்படுகிறது[91].
C2H4 + H2SO4 → CH3CH2SO4H
CH3CH2SO4H + H2O CH3CH2OH + H2SO4
மதுபானங்களில் காணப்படும் எத்தனால் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சில வகை ஈசுட்டுகள் சர்க்கரையுடன் நொதித்தல் வினை புரிந்து எத்தனாலைக் கொடுக்கின்றன. கார்பனீராக்சைடு உடன் விளைபொருளாக உண்டாகிறது.
C6H12O6 → 2 CH3CH2OH + 2 CO2 C12H22O11 + H2O → 4 CH3CH2OH + 4 CO2
பொருத்தமான வெப்பநிலையில் ஈசுட்டுகள் நொதித்தல் வினையில் ஈடுபட்டு ஆல்ககாலைக் கொடுக்கின்றன. பொதுவாக 35–40 °செல்சியசு வெப்பநிலையில் இவ்வினை நிகழ்கிறது.
நொதித்தலுக்குத் தேவையான சர்க்கரை செல்லுலோசிலிருந்தும் கிடைக்கிறது. செல்லுலோசு தொழில்நுட்பத்தால் பல்வேறு விவசாயப்பொருட்கள் நொதித்தலுக்கான சர்க்கரை மூலங்களாக இனங்காணப்பட்டுள்ளன [92].
எத்தனாலின் அடர்த்தியைக் கண்டறிய இரண்டு வகையான முறைகள் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுகின்றன. 1. அகச்சிவப்பு எத்தனால் உணரி முறை. 2. நீரடர்த்திமானி
பல்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்படும் எத்தனால் நீருடன் கலந்த கலவையாகக் காணப்படுகிறது. எனவே எத்தனாலை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. வளிமண்டல அழுத்தத்தில் எத்தனால் தண்ணிர் கலந்த கலவையை பின்னக் காய்ச்சிவடித்தல் முறையில் தூய்மையாக்கலாம். பென்சீன், வளைய எக்சேன், எப்டேன் போன்ற வேதிப்பொருட்களின் உதவியால் எத்தனாலில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இவைதவிர வேறு பல முறைகளும் தூய்மையாக்கலுக்கு பயன்படுகின்றன.
தூய எத்தனால் மற்றும் மதுபானங்கள் உளவியல் மருந்துகள் என்ற வகையில் வரிவிதிக்கப்படுகின்றன. ஆனால், எத்தனால் நுகர்வு என்பதைத்தாண்டி பல பயன்களைக் கொண்டுள்ளது. இந்த பயன்பாடுகளைக் கருதி வரி சுமை குறைக்கப்பட்டால், குடிக்க தகுதியற்றதாக எத்தனால் தயாரிக்கப்படும் போக்கு குறையும். கசப்புச்சுவை வேதிப்பொருளான தெனாட்டோனியம் பென்சோயேட்டு, மெத்தனால், நாப்தா, பிரிடின் போன்ற கசப்பு முகவர்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆல்க்ககால் இயல்பு திரிந்த ஆல்ககால் எனப்படுகிறது [94][95].
தனி ஆல்ககால் அல்லது நீரற்ற ஆல்ககால் என்பது மிகக்குறைவான அளவு பகுதிப்பொருளாக தண்ணீர் கலந்திருக்கும் ஆல்ககாலைக் குறிக்கும். தண்ணிரின் அளவுக்கு ஏற்ப தரம் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. தண்ணீரை நீக்குவதற்காகச் சேர்க்கப்படும் பென்சீன் போன்ற பொருட்கள் இவ்வகை ஆல்ககாலுடன் சுவடளவுக்கு கலந்திருப்பதுண்டு [96]. மனிதப்பயன்பாட்டுக்கு இவ்வால்ககாலை பயன்படுத்தலாகாது. ஆனால் தொழிற்சாலைகளில் கரைப்பானாக, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. புற ஊதா – கட்புல அலைமாலை ஓளி அளவியலில் எத்தனால் கரைப்பானாகப் பயன்படுகிறது [97].
தூய்மையான எத்தனாலின் தரமதிப்பு அமெரிக்காவில் 200 புள்ளிகளும் , ஐக்கிய இராச்சியத்தில் 175 பாகை புள்ளிகளும் தர அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு அளவிடப்படுகின்றன [98]. 96% எத்தனாலும் 4% தண்ணிரும் சேர்ந்த கலவை வடித்துப் பிரித்த சிபிரிட் எனப்படுகிறது. நீரற்ற ஆல்ககாலுக்கு மாற்றாக பலதுறைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் [99].
முதல்நிலை ஆல்ககாலாக எத்தனால் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ள கார்பனுடன் குறைந்தபட்சம் இரண்டு ஐதரசன் அணுக்கள் இணைக்கப்பட்டிருக்கும். பல எத்தனால் வினைகள் ஐதராக்சில் குழுவில் நிகழ்கின்றன.
அமில வினையூக்கிகள் முன்னிலையில் எத்தனால் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரிந்து எத்தில் எசுத்தர்களையும் நீரையும் கொடுக்கிறது.
RCOOH + HOCH2CH3 → RCOOCH2CH3 + H2O
பெருமளவில் தொழில்முறையாக எசுத்தர்கள் இம்முறையில் தயாரிக்கப்பட்டு நீர் நீக்கப்படுகின்றன. எசுத்தர்கள் அமிலம் அல்லது காரம் முன்னிலையில் மீளவும் ஆல்ககாலாகவும் உப்பாகவும் மாறுகின்றன. இவ்வினை சோப்பாக்குதல் வினை எனப்படுகிறது. எத்தனால் கனிம அமிலங்களுடன் வினைபுரிந்தும் எசுத்தர்களை உருவாக்குகின்றன. எத்தனாலுடன் கந்தக மூவாக்சைடு சேர்த்து டை எத்தில் சல்பேட்டும், பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து மூவெத்தில் பாசுபேட்டும் தயாரிக்கப்படுகின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் டை எத்தில் சல்பேட்டு ஒரு எத்திலேற்றும் முகவராகப் பயன்படுகிறது. எத்தனாலுடன் சோடியம் நைட்ரைல் மற்றும் கந்தக அமிலம் சேர்த்து தயாரிக்கப்படும் எத்தில் நைட்ரைல் சிறுநீர்பெருக்கியாக பயனாகிறது.
வலிமையான ஈரமுறிஞ்சிகளில் எத்தனால் சிறிதலவு நீரை இழந்து டை எத்தில் ஈதராகவும் பிற உடன் விளைபொருள்களையும் கொடுக்கிறது. 160 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டால் முழுமையான நீர் நீக்கம் நிகழ்ந்து எத்திலீன் உருவாகிறது.
2 CH3CH2OH → CH3CH2OCH2CH3 + H2O (120 °செல்சியசு)
CH3CH2OH → H2C=CH2 + H2O (160 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல்)
முழுமையான எரிதலுக்கு எத்தனால் உட்பட்டால் கார்பனீராக்சைடும் தண்ணீரும் உருவாகின்றன. C2H5OH (l) + 3 O2 (g) → 2 CO2 (g) + 3 H2O (l); −ΔHc = 1371 கிலோயூல்/மோல்[100] = 29.8 கிலோயூல்/கிராம் = 327கிலோகலோரி/மோல் = 7.1கிலோகலோரி/கிராம்
C2H5OH (நீ) + 3 O2 (வாயு) → 2 CO2 (வாயு) + 3 H2O (நீராவி); −ΔHc = 1236 கிலோயூல்/மோல் = 26.8 கியூ/கி = 295.4 kகலோரி/மோல் = 6.41 கிலோகலோரி/கிராம்[101] தன்வெப்பம் = 2.44 கிலோயூல்/(கிலோகிராம்•கெல்வின்)
எத்தனால் ஒரு நடுநிலை மூலக்கூறு ஆகும். இக்கரைசலின் pH குறியீட்டு எண் 7 ஆகும். சோடியம் போன்ற கார உலோகத்துடன் வினைபுரியச் செய்து இதை ஓர் ஈத்தாக்சைடு (CH3CH2O−) அயனியாக மாற்ரி இணை காரமாக்கலாம்[71]
அல்லது மிகவலிமையான காரமான சோடியம் ஐதரைடுடன் வினைபுரியச் செய்யலாம்.
தண்ணீர் மற்றும் எத்தனாலின் அமிலத்தன்மை கிட்டத்தட்ட சமமாகும். இவற்றின் pKa மதிப்பு முறையே 15.7 மற்றும் 16 ஆகும். எனவே சோடியம் ஈத்தாக்சைடும், சோடியம் ஐதராக்சைடும் சமநிலையில் நெருக்கமாக ஒன்றுபட்டுள்ளன.
எத்தில் ஆலைடுகளைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக தொழிற்சாலைகளில் எத்தனால் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதற்கான வினைகளை விளக்கமுடியும். எத்தனால் ஐதரசன் ஆலைடுகளுடன் SN2 வினைபுரிந்து எத்தில் குளோரைடு, எத்தில் புரோமைடு போன்ற எத்தில் ஆலைடுகளை உருவாக்குகிறது.
துத்தநாகக் குளோரைடு போன்ற வினையூக்கிகள் இவ்வகை வினைகளுக்கு அவசியமாகிறது [91]. கந்தக அமில வினையூக்கி HBr சேர்மத்திற்கு தேவைப்படுகிறது [91]. எத்தனாலுடன் ஆலசனேற்றும் முகவர்களான பாசுபரசு முப்புரோமைடு அல்லது தயோனைல் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தியும் எத்தில் ஆலைடுகள் தயாரிக்கலாம் [71][91]
ஆலசன்களுடன் சேர்த்து காரத்தின் முன்னிலையில் சூடுபடுத்தினால் எத்தனால் அதனுடன் தொடர்புடைய ஆலோபார்ம்களைக் கொடுக்கிறது.(CHX3, இங்கு X = Cl, Br, I). இவ்வினை ஆலோபார்ம் வினை என்றழைக்கப்படுகிறது [102] குளோரினுடன் வினைபுரியும்போது இடைநிலை வேதிப்பொருளாக குளோரால் உண்டாகிறது. தண்ணிருடன் இது குளோரால் ஐதரைடாக உருவாகிறது .[103]
பயன்படுத்தப்படும் வினைப்பொருள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனால் அசிட்டால்டிகைடாகவும் பின்னர் அசிட்டிக் அமிலமாகவும் ஆக்சிசனேற்றம் அடைகிறது[91]. தொழிற்சாலைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத எத்தனால் ஆக்சிசனேற்றம் மனித உடலில் முக்கியத்துவம் பெறுகிறது.
நொதித்தல் முறையில் எத்தனால் உற்பத்தி பண்டைய காலத்திலேயே மனிதர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எத்தனால் நுகர்வும் போதைப் பழக்கமும் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்படுகின்றன. எத்தனால் மதுபானங்களை போதை பொருளாக வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் காணப்படும் 9,000 வயதான மட்பாண்டங்களின் உலர்ந்த எச்சங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன[104]. தொடக்கக்கால கிரேக்கர்களும் அரேபியர்களும் காய்ச்சிவடித்தல் முறையை அறிந்துள்ளனர். பின்மத்திய கால மருத்துவப்பள்ளியில் 12 ஆம் நூற்றாண்டில் ஆல்ககால் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது[105]. தனி ஆல்ககாலைக் குறித்த செய்திகள் இரேமண்டு லுல் தெரிவித்துள்ளார்[105]. 1796 இல் செருமன்-உருசிய வேதியியலாளர் நீரற்ற காரத்தை பகுதியாக தூய்மையாக்கப்பட்ட எத்தனாலுடன் சேர்த்து தாழ் வெப்பநிலையில் காய்ச்சி வடித்து தூய எத்தனாலை தயாரித்துள்ளார்[106]. பிரெஞ்சு வேதியியலர் அந்துவான் இலவாசியே எத்தனாலை கார்பன், ஆக்சிசன், ஐதரசன் தனிமங்களின் சேர்மம் என்று விவரித்தார். 1807 இல் நிக்கோலசு தியோடர் எத்தனாலின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை உறுதிப்படுத்தினார்[107][108]. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எத்தனாலின் அமைப்பு வாய்ப்பாடு உறுதிப்பட்டது[109].
மைக்கேல் பாரடேவால் 1825 இல் எத்தனால் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. நிலக்கரி வாயுவை கந்தக அமிலம் அதிக அளவில் ஈர்க்கிறது என்பதை இவர் தெரிவித்தார்[110] வினையில் விளைந்த கரைசலை இவர் பிரித்தானிய வேதியியலர், எத்தில் ஐதரசன் சல்பேட்டைக் கண்டறிந்த என்றி என்னெல்லிடம் கொடுத்தார்.[111] 1828 இல் எத்தில் ஐதரசன் சல்பேட்டு சிதைவடைதல் கண்டறியப்பட்டது[112][113] எத்திலீனில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை உறுதிப்படுத்தப்பட்டது.
1840 களில் விளக்கெரிக்க எத்தனால் பயன்படுத்தப்பட்டது[114]. வாகன எரிபொருளாக 1908 முதல் பயன்படத்தொடங்கியது[115].
எத்திலீனில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனால் தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டது[116]. நுகர்வு, நறுமணம், சுவை, வண்ணங்கள் மற்றும் மருந்துகள் உட்பட மனிதப் பயன்பாட்டிற்கு பரவலாக எத்தனால் பயன்படத்தொடங்கியது. . வேதியியலில் இது ஒரு கரைப்பான் மற்றும் மற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள் ஆகும். வெப்பம், ஒளி, எரிபொருள் போன்ற ஒரு நீண்ட வரலாறு எத்தனாலுக்கு உண்டு.
போக்குவரத்து விபத்துகள் ஆய்வில், மக்கள் 41% மதுவுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது[117]. பெருகிவரும் கார்விபத்துக்களுக்கும் ஓட்டுநரின் மதுப்பழக்கமே காரணமாக உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[118]. இரத்த ஆல்ககால் அளவு தொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன[119]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.