From Wikipedia, the free encyclopedia
மை என்பது, பல்வேறு நிறமிகளை அல்லது சாயங்களைக் கொண்ட ஒரு திரவப் பொருள் ஆகும். இது ஒரு மேற்பரப்பில் படம், எழுத்து, வரியுருக்கள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. மையைப் பயன்படுத்தி பேனா, தூரிகை போன்றவற்றால் வரையவோ அல்லது எழுதவோ முடியும். தடிப்புக் கூடிய மைகள், அச்சுத் தொழிலில் பயன்படுகின்றன.
மை, கரைப்பான்கள், நிறமிகள், சாயங்கள், பிசின்கள், உராய்வுநீக்கிகள், பரப்பு பொருள்கள், துணிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்ட ஒரு கலவை ஆகும். மைக் கலவையில் உள்ள கூறுகள் அதன் பாயும் தன்மை, தடிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதுடன், அது காய்ந்தபின்னர் அதற்குரிய நிறம், மினுக்கம் போன்ற தோற்ற அம்சங்களையும் கொடுக்கின்றன.
சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் மை கண்டறியப்பட்டது. எழுத்துக்கள் தோன்றிய போது ஆரம்பத்தில் மனிதன் கற்கள் மீது எழுதினான் அல்லது செதுக்கினான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டன. நாளடைவில் மனிதன் களிமண்ணிலும் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.
சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் மை கண்டுபிடித்தார்.[1] கார்பன் நிறமி புகைக்கரி (பைன் மர துண்டுகளை எரித்து கிடைக்கப்பெற்றது), விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட பசை ஆகியவற்றுடன் விளக்கெண்ணெயையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.[2]
உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன், இந்தியா இங்க் (India Ink) என்ற பெயர் சூட்டினார்.[3] ஏனெனில் அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.[4]
கி.மு. ஆயிரத்தி இருநூறாம் நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றமும் இன்றி டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிறமிகளைக் கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களைக் கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் மை தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவானது.
இந்தியர்களை பொருத்தவரை சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர்[5][6] என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. தென் இந்தியாவில் பழங்காலத்தில் இருந்து கூர்மையான ஊசி கொண்டு எழுதும் பழக்கம் பொதுவான நடைமுறையாக இருந்தது. பண்டைய இந்தியாவில் புத்த மற்றும் சமண மத நூல்கள் மை கொண்டு எழுதப்பட்டன.[7]
சீனர்கள் கி.பி.105 முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, எண்ணெய், இரும்பு உப்புகள் போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர்.[8] இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான மை தயாரிப்பதில் சீனர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இந்த மை குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரப் பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்தத் தண்ணீருடன் திராட்சைச் சாறு சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று தனியாகத் தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தப்பட்டது. பின்பு மீண்டும் அதனுடன் திராட்சைச் சாறு மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது.[9]
கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்கத் தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை வல்லுனரான சென் கௌ (Shen Kuo; 1031 - 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார்.[10] அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.
இரும்பு உப்புகள் பசை, தண்ணீர், வால்நட் ஆயில் மற்றும் புகைக்கரி ஆகியவற்றைக் கொண்டு அச்சகங்களுக்குத் தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன மை தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் புகழடைந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக உலகம் முழுவதும் பரவியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.