இந்தியாவின், தமிழகத்தில், மதுரை நகரில் உள்ள, 'உலகப் பிரசித்திப் பெற்ற சிவாலயம்' From Wikipedia, the free encyclopedia
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 9.919444°N 78.119444°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவாலவாய்[1], சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் |
பெயர்: | மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
ஆங்கிலம்: | Madurai Meenakshi Sundareswarar Temple |
அமைவிடம் | |
ஊர்: | மதுரை |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேசுவரர் (சோமசுந்தரர், சோமேசுவரர், சோமநாதர், சோமலிங்கர், சொக்கலிங்கநாதர், சொக்கநாதர், சொக்கேசர், ஆலவாய்நாதர் அல்லது ஆலவாய் அண்ணல், சாத்தப்பர்) |
தாயார்: | மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, கற்பகவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரி, சுந்தரேசுவரி, சுந்தரவல்லி, சொக்கி, சொக்கநாயகி, சோமவல்லி, பாண்டிப்பிராட்டி (மலைத்துவசபுத்திரி), மதுராபுரித் தலைவி (மதுராராணி), மாணிக்கவல்லி, மும்முலைத்திருவழுதி மகள்) |
தல விருட்சம்: | கடம்ப மரம் |
தீர்த்தம்: | பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி |
ஆகமம்: | காரண ஆகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரைத் திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 27 |
வரலாறு | |
தொன்மை: | 2000 முதல் 3000 வருடங்கள் |
வலைதளம்: | http://www.maduraimeenakshi.org |
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான 4-ஆவது தலமாகத் திருவாலவாய் உள்ளது.[2] இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.[2] அதனால், சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினைச் 'சிவன் முக்திபுரம்' என்றும் அழைக்கின்றனர்.[2] இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.[2] இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர்.[2] இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால், இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. இராமர், இலட்சுமணன், வருணன், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.[2]
விருத்திராசூரனைக் கொன்றமையால், இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்க, கடம்பவனத்தில் இருந்த இந்தச் சிவலிங்கத்தைப் பூசித்துத் தனது தோசத்தைப் போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், சிவபெருமான் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில், அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர் எனவும் அழைக்கின்றனர். இவரை வழிபட்டு, இந்திரன் தன்னுடைய பாவத்தினைத் தீர்த்துக் கொண்டான். அதனால், சுயம்பு லிங்கத்திற்குக் கோயில் எழுப்பினான். மூலவர் விமானம், 'இந்திர விமானம்' என்று அழைக்கப்படுகிறது.[2]
இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார்.[3] இவரது விக்கிரகம், பச்சை மரகத கல்லால் ஆனது.[3] அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.[2] இந்தக் கருவறை விமானத்தைத் தேவேந்திரன் அமைத்தான். மீன் போன்ற கண்களைப் பெற்றவர் என்பதால், மீனாட்சி என்று பெயர்பெற்றார். மீன், தன்னுடைய முட்டைகளைத் தனது பார்வையாலேயே தன்மயமாக்குவது போல, மீனாட்சி அம்மன், தனது பக்தர்களை, அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறவள்.[3] மீனாட்சியம்மன் திருக்கோலத்தில், கிளியும் இடம்பெற்றுள்ளது.[2] பக்தர்களின் கோரிக்கையை, அம்பிகைக்கு நினைவூட்ட, திரும்பத் திரும்ப, கிளி சொல்லிக் கொண்டிருப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்திரன் சாப விமோசனத்திற்காக, இத்தலத்தினைத் தேடி வந்தபோது, கிளிகளே, சிவவழிபாட்டிற்கு உதவி செய்தன.[2]
இவருக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன.[3] மீனாட்சியை, அங்கயற்கண்ணி எனத் தமிழில் அழைக்கின்றனர். இவரைத் 'தடாதகைப் பிராட்டி' என்றும் அழைப்பதுண்டு. இவர், மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மீனாட்சியம்மனை, அலங்காரம் செய்த பிறகே, பக்தர்கள் பார்க்க முடியும்.[3] இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூசைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிசேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூசை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுகிறது.[2]
மீனாட்சி அம்மன் (மூலவர் இறைவி), சுந்தரேசுவரர் (மூலவர் இறைவன்), முக்குறுணி விநாயகர், இரட்டை விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, சரசுவதி, துர்க்கை, காசி விசுவநாதர், லிங்கோத்பவர், சகஸ்ரலிங்கம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகர், சண்டிகேசுவரர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேசுவரர், சித்தர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், உஷா பிரதியுஷா சமேத சூரியனார், விபூதி விநாயகர், 63 நாயன்மார்கள், சப்தரிஷி மாதாக்கள், பைரவர், மதுரை வீரன், நவக்கிரகங்கள், சங்கப் புலவர்கள், மனைவியர் சமேத மன்னர் திருமலை நாயக்கர் ஆகியவை இக்கோயிலின் முக்கிய சன்னதிகள் ஆகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில், கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுள் இராச கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டு பிற்கால பாண்டியர்களாலும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டினாலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டில் மன்னர் விசுவநாத நாயக்கராலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் மன்னர் முத்துவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், கி.பி. 1570-ல் கட்டப் பெற்று, கி.பி. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு, அழகிய நுணுக்கங்களைக் கொண்டும், தனித்தனிச் சிறப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன.
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக, எட்டு சக்தி (அஷ்ட சக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் திருமேனிகளுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் கதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில், சக்தியின் எட்டு வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
கம்பத்தடி மண்டபம், முதலில் நாயக்க மன்னர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரால் (கி.பி.1564–1572) கட்டப்பட்டு, பின்னர் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் முழுமையாக திருத்தி புதிதாக 1870களில் தற்போதைய மண்டபம் கட்டப்பெற்றது[4]. கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள், சிவனின் 25 வடிவங்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள மீனாட்சி திருக்கல்யாணச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். இதன் நடுவே உள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது. இது விசயநகர காலப் பணியாகும்.
அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், இத்தலத்தின் இறைவி மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில், அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில், கருவறையில், இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.
ஆயிரங்கால் மண்டபம், இக்கோயிலில், சுவாமி சன்னதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இம்மண்டபம், கோயிலில் உள்ள பிற மண்டபங்களை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டபம், கிருட்டிண வீரப்ப நாயக்கரது திருப்பணியாகும்.[5][6]
மிகச் சிறப்பு பெற்ற இம்மண்டபம், சாலிவாகன ஆண்டு, கி.பி.1494ஆம் ஆண்டில் மதுரையை அரசாண்ட, வீரப்ப நாயக்கர் காலத்தில், அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும், ஒரே வரிசையில் அமைந்திருக்கும் காட்சி வியப்பானது. 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சன்னதி அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும், அழகாக செதுக்கப்பட்டு, 73 × 76 சதுரமீட்டர் (நீள, அகலம்) உள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில், இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத் தூண்கள், தியான சித்திரங்கள் என, பல்வேறு சிறப்புப் அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய, நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் என்று வசூலிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக சுவாமி சந்நதிக்கு செல்லும் வழியில், ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இம்மண்டபம் 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இம்மண்டபம் பூசைப் பொருட்கள், மரம், உலோகம் மற்றும் நெகிழி பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்டது. இம்மண்டபத்தின் நடுவில், சுவாமியை நோக்கியவாறு நந்தி சிலை உள்ளது.
2 பிப்ரவரி 2018 (வெள்ளிக்கிழமை) அன்று இரவில் கோயில் கதவுகள் பூட்டியப் பின்னர், மண்டபத்தில் இருந்த ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெருந் தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 40 கடைகள் முற்றிலும் தீயில் அழிந்ததுடன், தீயின் கடும் வெப்பத்தின் காரணமாக, வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையும், கருங்கல் தூண்களும் பலத்த சேதமுற்று இடிந்து விழுந்தது.[7] [8] தற்போது இம்மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[9]
கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில், கல்லில் இசை வெளியிடும் 5 இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தாமரை மொட்டைப் போல் கற்பனை செய்து கொண்டால், அதைச் சுற்றியுள்ள தெருக்களைத் தாமரை இதழ்கள் ஆகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும், சுற்று வீதிகளுக்கு ஆடி வீதிகள் என்று பெயர். கோயிலுக்கு வெளியில், முதல் சுற்று, சித்திரை வீதிகள்; சித்திரை வீதிகளுக்கு அடுத்த வெளி சுற்று, ஆவணி வீதிகள்; அதற்கு அடுத்த வெளி சுற்று, மாசி வீதிகள்; அதற்கு அடுத்து இறுதி சுற்று, வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக, கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி, தெற்கு ஆடி வீதி). இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில், குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள், அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில் தான் நடைபெறும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்குவிசயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்நாட்டில், பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழாவாகக் கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒருமுறை, விருத்திராசூரன், விசுவரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால், இந்திரனை பிரம்மகத்தி தோசம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட, தன் குருவை நாடி, உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம், பூலோகம் சென்று பல்வேறு சிவத்தலங்களில் வழிபட்டால், ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி, இந்திரன், காசி முதலிய பல தலங்களில் வழிபட்டு, தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில், கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன், தன்னைப் பற்றியிருந்த தோசம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய, அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான், திருஆலவாய் சோமசுந்தரராக அவனுக்குக் காட்சி கொடுத்தார். இந்திரன், சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து, தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு, இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம், ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில், 'என்னை இங்கு வந்து வழிபடுக' என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும், சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ரா பௌர்ணமி, மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதே சித்ரா பௌர்ணமி நாளில், மதுரை வைகை ஆற்றில், 'கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு', காலை சுமார் ஏழு மணிக்கு முன், மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து, சுமார் ஒரு இலட்சம் மக்கள் இதைக் காண இங்கு கூடுகின்றனர்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா தேவேந்திர பூசையுடன் நிறைவு பெறுகிறது.[10]
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.
ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேசுவரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சலாட, கோயிலின் ஓதுவார்கள், மாணிக்கவாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஆடி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாட்சிக்கு மட்டுமே நடைபெறும்.
ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூலஉற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேசுவரரும் வீதி உலா வருவார்கள். கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம், வளையல் விற்ற திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நட்சத்திரத்தன்று சுந்தரேசுவரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாட்சி அலங்கரிக்கப்படுகிறார்.
ஐப்பசி மாதப் பிரதமையிலிருந்து (அமாவாசை நாளிற்கு அடுத்த நாள்) (சட்டி) (அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள்) வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடியிருந்து கோலாட்டமாட, உற்சவம் நடக்கிறது.
கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம்.கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேசுவரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.
மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு நடுநிசி முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராசர் சந்நதியில் மாணிக்கவாசகர் முன்பாக கோயிலின் ஆத்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் புறப்பாடு மட்டுமே நடைபெறும். பதினோராம் நாள் இரிடபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட வண்டியூர் தெப்பக் குளத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.
மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது.
பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும், இங்கு தினசரி பூசைகள் செய்யப்படுவதுடன், சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும், சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன,
திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியவர்களின் பாடல் பெற்ற பழம்பதி. இத்தலத்தின் சிறப்புக்கள் மாணிக்கவாசகர் தம் திருவாசகத்துள் புகழந்தோதியுள்ளார்.
குமரகுருபரர் இத்தலத்துப் பெருமாட்டி மீனாட்சியம்மை மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் முழுமையாக ஆய்வு செய்தனர். கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 450 கல்வெட்டுக்களில் 78 முழுமையாக இருந்தது. அதில் 77 முழு தமிழிலும், 1 முழு சமசுகிருதத்திலும், தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட 1 வரி கல்வெட்டும் இருந்தது. இது தவிர, 23 துண்டு கல்வெட்டுக்களும், 351 சிறிய சிறிய துண்டு கல்வெட்டுக்களும் உள்ளது.
கல்வெட்டு ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான குறிப்பு, அம்மன் பெயர் மீனாட்சி என்ற பெயர் எங்குமே இல்லை என்பது தான். 1752ம் ஆண்டு வரை மீனாட்சி என்ற பெயரே அம்மனுக்கு கிடையாது. 1710ல் தான் சொக்கநாதர் என்ற பெயரே சுவாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை சுவாமியை, "மாடக்குளக்கீழ் மதுரோதய வளநாட்டு மதுரையில் திரு ஆலவாய் உடைய நாயனார் திருக்கோயில்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மனை, "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" என்றே குறிப்பிட்டுள்ளனர். 1898ம் ஆண்டின் கல்வெட்டில் தான் மீனாட்சி - சுந்தரேசுவரர் என்ற பெயர் காணப்படுகிறது.[11]
2022ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளாகிய விசயதசமி நாளான 05-10-2022 அன்று, 108 பெண்கள் கலந்து கொண்ட 108 வீணைக் கச்சேரி, மீனாட்சி அம்மன் சன்னதியில் நடைபெற்றது.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.