From Wikipedia, the free encyclopedia
மனிதனில் பார்வைப் புலனுக்குரிய அங்கம் கண்ணாகும் (Human Eye). இது ஒளிக்கதிர்களைக் குவியச்செய்வதுடன் அவற்றை நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றிப் பார்வை நரம்பினூடாக மூளைய மேற்பட்டைக்கு அனுப்பும். அங்கு விம்பம் உணரப்படும். மனிதனில் இரு கண்கள் உள்ளன. எனினும் இரண்டு கண்களாலும் தோற்றுவிக்கப்படும் விம்பங்கள் மூளையில் ஒரு தனி விம்பமாக மாற்றப்படும். விழித்திரையில் காணப்படும் கூம்பு மற்றும் கோல் கலங்கள் விம்பத்தை நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றுகின்றன. இந்நரம்புப்புலன் கலங்களால் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட நிறங்களைக் கண்டறிய முடியும்.
மனிதக் கண் | |
---|---|
1. கண்ணாடியுடனீர் 2. ora serrata 3. பிசிர்த்தசை 4. ciliary zonules 5. Schlemm's canal 6. கண் மணி 7. நீர்மயவுடனீர் 8. விழிவெண்படலம் 9. கதிராளி 10. கண் வில்லையின் மேற்பட்டை 11. கண் வில்லையின் கரு 12. ciliary process 13. conjunctiva 14. inferior oblique muscle 15. கீழ் நேர்த்தசை 16. நடு நேர்த்தசை 17. இரத்தக்குழாய்கள் 18. பார்வைத்தட்டு/குருட்டிடம் 19. வன்றாயி 20. மத்திய கண் நாடி 21. மத்திய கண் நாளம் 22. பார்வை நரம்பு 23. vorticose vein 24. bulbar sheath 25. macula 26. மையக்குழி 27. வன்கோது 28. தோலுரு 29. மேல் நேர்த்தசை 30. விழித்திரை | |
மனிதக் கண் முழுமையான ஒரு கோளம் அல்ல. இது விழிவெண்படலம் எனும் அதிகமாக வளைந்த பகுதியும் கோள வடிவான பிரதான பகுதியும் (ஸ்கெளரா) இணைந்த கட்டமைப்புடையது. விழிவெண்படலம் 8 mm ஆரையுடைய வட்டத்தின் துண்டம் போலத் தோற்றமளிக்கும். கண்ணைன் ஆறிலைந்து பகுதியை ஆக்கும் ஸ்கிளெரா பகுதி 12 mm ஆரையுடைய கோள வடிவானது. இரு பகுதிகளுக்குமிடையில் கண் வில்லை அமைந்துள்ளது. கண்ணினூடாகச் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் பகுதியான கதிராளி கண்ணுக்குரிய (கருவிழிக்குரிய) நிறத்தைக் கொடுக்கின்றது. கதிரொளிக்கு நடுவில் ஒளி வில்லையை அடையும் துவாரமாக கண்மணி உள்ளது. இது கண்ணில் கறுப்பு நிறமாகத் தோற்றமளிக்கும்.
வளர்ந்த மனிதரிடையில் கண்ணின் பருமன் 1–2 mm அளவிலேயே வேறுபடும். நெட்டாங்கான நீளம் கிடையான நீளத்தை விட சிறிதளவு குறைவானது. பிறக்கும் போது மனிதக் கண்ணின் நெட்டாங்கு நீளம் 16-17mm ஆகக் காணப்படும். பின்னர் கண் வேகமாக வளர்ச்சியடைந்து, மூன்று வயதில் 22.5-23mm நீளத்தை எட்டும். 13 வயதில் கண் முழுமையாக வளர்ச்சியடைந்து விடும். சாதாரண மனிதக் கண் நெட்டாங்காக 24mm நீளத்தோடு காணப்படும். மனிதக் கண்ணின் கனவளவு கிட்டத்தட்ட, சராசரியாக 6 cm3 ஆக இருப்பதுடன், இது சராசரியாக 7.5g திணிவுடன் காணப்படும்.
மனிதக்கண் மூன்று அடுக்குகளைக் கொண்டது. வன்கோது எனப்படும் முதலாம் வெளிப்புற அடுக்கு ஸ்கெளராவாலும் விழிவெண்படலத்தாலுமானது. நடுப்படை தோலுருவாலும் கதிராளியாலுமானது. உட்படை விழித்திரையாகும். இம்மூன்று படைகளுக்குள் நீர்மயவுடனீர், கண்ணாடியுடனீர், கண் வில்லை என்பன உள்ளன. வெளிப்புறத்தே இருக்கும் நீர்மயவுடனீரை, உட்புறமிருக்கும் கண்ணாடியுடனீரிலிருந்து கண் வில்லை பிரிக்கின்றது. நீர்மயவுடனீரும் கண்ணாடியுடனீரும் ஒளியைப் புகவிடும் தன்மையுடையன.
மனிதனின் கண் விழிகள் கறுப்பு, பழுப்பு, நீலம், பச்சை எனப் பல நிறங்களில் உண்டு. இந்த வண்ண விழிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும், ஒரே நபரின் இரு விழிகள் தமக்குள் வண்ணத்தால் வேறுபடுவதும் உண்டு. மனிதரின் தோல், முடியின் நிறத்துக்குக் காரணமாவது ‘மெலனின்’ என்ற நிறமி. அதேபோல, கருவிழிகளில் மெலனோசைட்டுகள் (Melanocytes) உற்பத்தி செய்யும் மெலனின் கண்ணின் நிறத்தைத் தீர்மானிக்கின்றன.
உலகில் கறுப்பு மற்றும் பழுப்பு நிறக் கண்களே அதிகம் காணப்படுகின்றன. மெலனின் செறிவாகக் காணப்படுவதே அவற்றுக்குக் காரணம். அடுத்தபடியாக பச்சைக் கண்களும், இதனையடுத்துக் குறைவான நிறமிகளுடன் நீல நிறக் கண்களும் இடம் பிடிக்கின்றன. நிறமிகளின் பற்றாக்குறையுடன் உள்ள சாம்பல் நிறக் கண்கள் அரிதானவை. இவை மட்டுமல்லாது பல நிறங்களின் சேர்க்கையாகக் காணப்படும் கண்களை ஹேஸல் கண்கள் (Hazel) என்கின்றனர். இவை பெரும்பாலும் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களின் சேர்க்கையாக காணப்படுகின்றன.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.