From Wikipedia, the free encyclopedia
போக்குவரத்து (Transport or transportation) என்ற சொல் மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்வதைக் குறிக்கின்றது. காற்று, ரயில், சாலை, தண்ணீர், கம்பி, குழாய் மற்றும் விண்வெளி உள்ளிட்டவை போக்குவரத்து முறைகளாகும். பொதுவாக இத்துறை உள்ளகக் கட்டமைப்பு, வாகனங்கள், இயக்கம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையில் வர்த்தகம் நடைபெறவும், நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாகும்.
சாலைகள் இருப்புப் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், கால்வாய், குழாய் அமைப்புகள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், படகுத் துறைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், உள்ளிட்டவை உள்ளகக் கட்டமைப்புப் பிரிவில் உள்ளடங்குகின்றன. மோட்டார் வாகனங்கள், சைக்கிள்கள், பேருந்துகள், தொடர் வண்டிகள், லாரிகள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், விண்வெளி ஊர்திகள் உள்ளிட்டவை போக்குவரத்து வலையமைப்பில் இயங்குகின்ற வாகனங்கள் என்ற பிரிவில் அடங்குகின்றன. மேலும், போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, பொதுவாகக் குடிசார் பொறியியலாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்களுடைய பணியாகும். வாகனங்களின் உருவாக்கம், இயந்திரப் பொறியியலினுள் அடங்கும்.
வாகனங்களை இயக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிதியளித்தல், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உட்பட்டவை இயக்கம் என்ற பிரிவுக்குள் வருகின்றன. போக்குவரவு என்ற நோக்கத்திற்காக அமைக்கப்படும் நடைமுறைகள். போக்குவரத்து துறையில், உள்கட்டமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் உரிமைகள் நாடு மற்றும் முறைமைகளைப் பொறுத்து, பொதுத் துறை அல்லது தனியார் துறை என்ற அமைப்புகள் தோன்றுகின்றன. இயக்க பொறுப்புகள் செயற்பாட்டு ஆய்வாளர்களையும், முறைமைப் பொறியாளர்களையும் சார்ந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பொதுத் துறையாகக் கருதப்படுகிறது. திட்டமிட்ட சேவைகள், அல்லது தனியர்களால் இவை இயக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்து கொள்கலன்களில் கவனம் செலுத்துகிறது, எனினும் பெரும் அளவிலான மொத்த போக்குவரத்திற்கு தனிப்போக்குவரத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் உலகமயமாதலுக்கும் போக்குவரத்து என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. பங்கைக் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான போக்குவரத்து வகைகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அதிக அளவு நிலத்தைப் பயன்படுத்துகின்றன. அரசாங்கங்கள் பெரிதும் மானியங்களை வழங்கி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நகர்ப்புற விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சீரிய போக்குவரத்து திட்டமிடல் அவசியமாகிறது.
வாகனம், உள்கட்டமைப்பு மற்றும் இயக்கத்தின் குறிப்பிட்ட வகையைப் பயன்படுத்துவதற்கான ஒரு தீர்வாக போக்குவரத்து முறை உள்ளது. ஒரு நபர் அல்லது சரக்கு போக்குவரத்தின் திட்டத்தில் ஒரு முறை அல்லது பல முறைகள் இருக்கலாம், ஒரே வகையான போக்குவரத்து முறைமையுடன் அல்லது பல்வகை முறைமையுடன் கூடிய திட்டமாக அது இருக்கலாம். ஒவ்வொரு முறைமைக்கும் அதற்கான சொந்த அனுகூலங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. மேலும், செலவு, திறமை மற்றும் பாதை ஆகியவற்றின் அடிப்படையில் இம்முறைமக்கள் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
மனித சக்தி மூலமான போக்குவரத்து நிலையான போக்குவரத்து வகையாகும். மனிதனது தசையின் சக்தி மூலம் மனிதர்களையோ அல்லது உற்பத்திப் பொருட்களையோ ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறையாகும். நடத்தல், ஓடுதல் மற்றும் நீந்துதல் போன்ற செயல்களின் ஒரு வடிவமாகவே இது கருதப்படுகிறது. புதிய தொழினுட்பமானது அறிமுகப்படுத்திய இயந்திரங்கள் பெருகிய பின்னரும் மனித சக்தி வழிமுறைப் போக்குவரத்து முறை மேலும் அதிகரித்து, மனித சக்திப் போக்குவரத்து பிரபலமானதாகவே நிலைத்திருக்கிறது. ஏனெனில் இவ்வழி முறையால் பணச்சேமிப்பும் அல்லது சிக்கனமும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்துடன் பொழுதுபோக்காகவும், சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தாததுமான, உடலுக்கு நல்ல உடற்பயிற்சியைக் கொடுப்பதாகவும் காணப்படுகின்றது. வளர்ச்சி குறைந்த பிரதேசங்களிலும் மற்றும் அணுக முடியாத பிரதேசங்களிலும் மனித சக்திப் போக்குவரத்து முறையே பெரும் பயன் விளைவிக்கின்றது. இருப்பினும், மனித வலுவைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த உட்கட்டமைப்பும் போக்குவரத்து விதிகளும் அவசியமாக உள்ளன.
விலங்கினங்களின் உடல்சக்தியை உந்தும் வலுவாகப் பயன்படுத்தி போக்குவரத்து வண்டிகளைச் செலுத்துதல் விலங்கு-வலுப் போக்குவரத்து ஆகும். விலங்கு வலுப்போக்குவரத்தில் பல்வேறு விலங்குகள் பண்டைதொட்டுப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன.
ஒரு நிலை இறக்கை விமானம், பொதுவாக வானூர்தி என்று அழைக்கப்படும் விமானத்தை விடக் கனமான ஒரு விமானம் ஆகும், இங்கு இறக்கைகளுடன் தொடர்புடைய காற்று விமானத்தை உயர்த்தப் பயன்படுகிறது. சுழல் இறக்கை விமானத்திலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது, சுழல் இறக்கை விமானத்தில் காற்றுடன் தொடர்புடைய மேற்பரப்பு விமானத்தை உயர்த்துவதற்காக இயங்குகிறது. சிலவகை சுழல் விமானங்களில் நிலை இறக்கை மற்றும் சுழல் இறக்கை என்ற இரண்டு விதமான இறக்கைகளும் பயன்படுகின்றன. நிலை இறக்கை விமானங்கள் சிறிய பயிற்சி விமானங்கள் முதலாக பெரிய இரணுவ சுமையேற்றி விமானங்கள் வரையில் பயனாகின்றன.
இறக்கைகளுக்கு மேலாக காற்று இயக்கமும், இறங்கும் பகுதியும் விமானப் போக்குவரத்திற்கு தேவையான இரண்டு காரணிகள் ஆகும். பராமரிப்பு, மீளமைத்தல், எரிபொருள் நிரப்புதல், சரக்கு மற்றும் பயணிளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றிற்காக பெரும்பாலான விமானங்களுக்கு உள்கட்டமைப்புடன் கூடிய ஒரு விமான நிலையமும் தேவைப்படுகிறது. விமானங்கள் பறப்பதற்கும், கீழிறங்குவதற்கும் ஏராளமான நிலம் மற்றும் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. சிலவகை விமானங்கள் பனிக்கட்டி மற்றும் அமைதியான நீரில் இருந்து உயரவும் இறங்கவும் திறன் கொண்டவையாக உள்ளன.
இராக்கெட்டுகளுக்கு அடுத்ததாக விமானங்களே மிக வேகமான போக்குவரத்து முறை ஆகும். வர்த்தக விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு 955 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. ஒற்றை இறக்கை விமானங்கள் 555 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகின்றன. பொதுவாக விமானங்கள், மக்களையும் சரக்குகளையும் நீண்ட தூரங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்கின்றன. ஆனால் அதிக செலவும் ஆற்றலும் பயன்படுத்தப்படுகிறது. குறுகிய தூரம் அல்லது அணுக முடியாத இடங்களில் சுழலிறக்கை விமானங்கள் பயன்படுகின்றன[1]. ஏப்ரல் 28, 2009 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தி கார்டியன் கட்டுரை, 500,000 பேர் எந்த நேரத்திலும் விமானங்களில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது"[2].
இரயில் பாதை என்று அழைக்கப்படும் இரண்டு இணை எஃகு தண்டவாளங்களின் தொகுப்பு மீது ஒரு இரயில் நகர்ந்து செல்வதனால் இரயில் போக்குவரத்து இயங்குகிறது. நிலையான இடைவெளிக்காக தண்டவாளங்கள், மரங்கள், கற்கூழ் அல்லது எஃகு ஆகியவற்றின் மீது செங்குத்தாக இணைக்கப்படுகின்றன. தண்டவாளங்கள் மற்றும் செங்குத்துத் தூண்கள் ஆகியவையும் கற்கூழால் ஆன ஒர் அடித்தளத்தின் மீது பொருத்தி வைக்கப்படுகின்றன. மாற்று முறைகள் மோனோ இரயில் மற்றும் மக்லெவ் போன்றவை மாற்று வழிமுறைகளாகும். ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகள் சேர்ந்து இரயில் வாகனம் உருவாகிறது. பயணிகள் அல்லது சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தொடர்ச்சியான பெட்டிகள், மின்னாற்றல் மூலம் இயங்கும் ஒரு வாகனத்தால் அனைத்து பெட்டிகளும் இழுக்கப்படுகின்றன. நீராவி, டீசல் அல்லது தண்டவாளத்தின் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளால் மின்சாரம் வழங்கப்பட்டு தொடர் வண்டி இயக்கப்படுகிறது. மாற்றாக, சில அல்லது அனைத்து பெட்டிகளும் மின்னிணைப்பால் இணைக்கப்பட்டு பல அலகுகளாகவும் இயக்கப்படுகின்றன. மேலும், குதிரைகள், கேபிள்கள், புவி ஈர்ப்பு சக்தி, வாயுக்கள் மற்றும் வாயு விசையாழிகளாலும் கூட இரயில்கள் இயக்கப்படுவதுண்டு. சாலையில் செல்லும் இரப்பர் சக்கர வாகனங்களைக் காட்டிலும் இரயில்கள் குறைவான உராய்வைக் கொண்டு நகர்கின்றன.
நகரங்களை இணைக்கும் தொலைதூர இரயில் சேவை அமைப்புகள் நகரங்களை இணைக்கின்றன[3]. அதிநவீன இரயில்கள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள பாதைகளில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் பயணிக்கின்றன. பிராந்திய மற்றும் பயணிகள் ரயில்கள் புறநகர்பகுதியையும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளையும் நகரங்களுடன் இணைக்கின்றன.
அதே நேரத்தில் நகர்ப்புற போக்குவரத்துக்காக அதிக திறன் கொண்ட டிராம் மற்றும் விரைவு வண்டிகள் பெரும்பாலும் நகரின் பொது போக்குவரத்துக்கான முதுகெலும்பாக உள்ளன. சரக்கு ரயில்கள் பாரம்பரியமாக பெட்டிகளைப் பயன்படுத்துகின்றன, இவற்றுக்காக கைகளால் ஏற்றுதல் மற்றும் சரக்குகளை இறக்குதல் ஆகிய செயல்கள் தேவைப்படுகின்றன. 1960 களில் இருந்து கொள்கலன் ரயில்கள் சரக்குகளை ஏற்றிச் செல்வதில் ஆதிக்கம் செலுத்துகின்றான. அதே நேரத்தில் பெரிய அளவிலான சரக்குகளை இடம்பெயர்த்துச் செல்ல இதற்காகவே இரயில்கள் அர்ப்பணிப்பு செய்யப்பட்டு அதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
சாலை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களுக்கு இடையில் அமைந்து ஒரு அடையாளத்தைக் காட்டக்கூடிய வழியாகும் [4]. பாதை அல்லது சாலை என்பவை பொதுவாக மென்மையானவையாக பண்படுத்தப்பட்டு எளிதாக அல்லது சுலபமான பயணத்தை ஒருவருக்கு அனுமதிக்கத் தயாராக உள்ளன [5]; தேவைப்படாவிட்டாலும், வரலாற்று ரீதியாக பல சாலைகள் எந்தவொரு முறையான கட்டுமான அல்லது பராமரிப்புமின்றி எளிதில் அடையாளம் காணக்கூடிய பாதைகளாக இருந்தன [6].நகர்ப்புறங்களில், சாலைகள் நகரம் அல்லது கிராமம் வழியாக செல்கின்றன. அவை நகர்ப்புறத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் பாதை போன்ற இரட்டை செயல்பாடுகளை வழங்குகின்றன [7].
சக்கரங்களால் இயங்கும் உந்தூர்திகள் மிகவும் பொதுவான சாலை வாகனங்களாக பயணிகளை சுமப்பவையாக உள்ளன. பேருந்துகள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றவை இவ்வகை வாகனங்களாகும். 2010 ஆம் ஆண்டு வரை, உலகமெங்கும் 1.015 பில்லியன் வாகனங்கள் இருந்தன என்று கணக்கிடப்பட்டது. பயணிகளுக்கு சாலை போக்குவரத்து மிகவும் சுதந்திரமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கும், ஒரு வரிசையிலிருந்து மறு வரிசைக்கும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை சாலைப்போக்குவரத்து அளிக்கிறது. இருப்பிடம், திசை, வேகம் மற்றும் பயண நேரங்களின் மாற்றம் முதலான நெகிழ்வுகளை மற்ற போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து வாயிலாக மட்டுமே வீட்டுக்கு வீடு நிறுத்திச் செல்லும் சேவையை அளிக்க இயலும்.
மோட்டார் வாகனங்கள் குறைந்த அளவிலான திறன் கொண்ட வாகனங்களாக இருந்தாலும், அதிக ஆற்றலும் பரப்பளவும் இவற்றுக்கும் தேவையாகும். நகரங்களில் இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு இவையே முக்கிய ஆதாரங்களாகும். குறைந்த செலவில் அதிக நிகிழ்வுத்தன்மை கொண்ட சொகுசான பயணத்தை பேருந்துகள் அனுமதிக்கின்றன [8]. சரக்குகளை கொண்டு செல்வதில் ஆரம்பம் மற்றும் இறுதி நிலைகள் பெரும்பாலும் சரக்குந்துகளிலேய நிறைவடைகின்றன.
கடல், ஏரி, கால்வாய் அல்லது நதி போன்ற நீர்வழிகளில் நீரூர்திகள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதே நீர்வழிப் போக்குவரத்து எனப்படும். பரிசல், படகு, கப்பல், பாய்மரப்படகு போன்றவை நீரூர்திகளாகும். இவைகள் இயக்கப்படுவதற்கு மிதப்பாற்றல் அவசியமாகிறது. கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தோற்றம் முதலானவை நீர்வழிப் போக்குவரத்தில் மேலோங்கி நிற்கும் அம்சங்களாகும்.
19 ஆம் நூற்றாண்டில், முதலாவது நீராவி கப்பல்கள் வளர்ச்சியடைந்தன. கப்பலை நகர்த்துவதற்கு உதவும் துடுப்பு சக்கரத்தை அல்லது உந்தியை ஓட்டுவதற்கு ஒரு நீராவி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு இவை உருவாக்கப்பட்டன. நீராவி ஒரு கொதிகலனில் மரம் அல்லது நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இந்நீராவி வெளியெரி இயந்திரத்தின் மூலம் அளிக்கப்பட்டது. இப்போது பெரும்பாலான கப்பல்களில் உள்ளெரி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பங்கர் பெட்ரோலியம் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சில கப்பல்கள் நீராவியைத் தயாரிக்க அணு சக்தியைப் பயன்படுத்துகின்றன. பொழுதுபோக்கு அல்லது கல்விச் செயல்திறன் படகுகள் இன்னும் காற்று சக்தியை பயன்படுத்துகிறது, சில சிறிய கைவினைப் படகுகளில் உள்ளெரி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பயணம் மெதுவாக இருப்பினும், நவீன கடல் போக்குவரத்து என்பது பெரிய அளவிலான பொருட்களைச் சுமந்து செல்வதற்கான மிகவும் திறமையான ஒரு போக்குவரத்து முறையாகும். வர்த்தக கப்பல்கள், கிட்டத்தட்ட 35,000 எண்ணிக்கையில், 2007 ஆம் ஆண்டில் மட்டும் 7.4 பில்லியன் டன் சரக்குகளை சுமந்துள்ளன[9]. கடற்போக்குவரத்திற்கான செலவு விமான போக்குவரத்தை விட சிக்கனமாக உள்ளது. குறுகிய கடல் போக்குவரத்தும் பாய்மரப் பயணமும் கடலோரப்பகுதிகளில் பயன்பாட்டிலுள்ளன[10] short sea shipping and ferries remain viable in coastal areas.[11][12].
குழாய்வழிப் போக்குவரத்து ஒரு குழாயினூடாக பொருட்களை அனுப்புகிறது. பொதுவாக திரவம் மற்றும் வாயுக்கள் இம்முறையில் அனுப்பப்படுகின்றன, ஆனால் வாயு குழாய்களில் அமுக்கப்பட்ட காற்றைப் பயன்படுத்தும் காற்றியக்கக் குழாய்கள் மூலம் திடப்பொருட்களும் அனுப்பப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிக்க திரவங்கள், வாயுக்கள் எதுவாக இருப்பினும் இம்முறையில் அனுப்பப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குழம்பு, நீர் மற்றும் பியர் ஆகியவை குறுகிய தூரங்கள் போக்குவரத்திற்கான அமைப்புகளால் செலுத்தப்படுகின்றன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை நீண்ட அமைப்புகள் மூலம் செலுத்தப்படுகின்றன.
கம்பிவழிப் போக்குவரத்து என்பது பரந்த முறையில் பயன்பாட்டில் உள்ளது, இங்கு உள்ளக மின்சக்திக்கு பதிலாக கம்பிகளால் வாகனங்கள் இழுக்கப்படுகின்றன. பொதுவாக செங்குத்தான சாய்வுத் தொலைவுகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக வான்வழி வாகனங்கள், மின்தூக்கிகள், வான்தூக்கிகள், நகரும் படிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றுள் சில ஓடும் பட்டைகளைப் பயன்படுத்துபவை எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
விண்வெளிப் பறத்தல் மூலம் புவியின் வளிமண்டலத்திலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் செல்ல விண்வெளி ஊர்திகள் பயன்படுகின்றன. இதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கும் அறிவியல் சோதனைகளை நடத்துவதற்கும் என அரிதாகவே விண்வெளிப் பறத்தல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மனிதன் சந்திரனில் இறங்கியுள்ளான் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களுக்கும் ஆய்வுக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
துணை சுற்றுப்பாதை விண்வெளிப்பறத்தல் முறையில் பூமிக்குள் ஒரு இடத்திலிருந்து பூமிக்குள்ளேயே உள்ள ஒரு தொலைதூர இடத்திற்கு செல்வது மிக வேகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. புவியின் தாழ் சுற்றுப்பாதைப் பகுதியில் விரைவான போக்குவரத்தை அடைய முடியும் என்கிறார்கள்.
பல்வேறு இடங்களின் உற்பத்தியையும், உற்பத்தி நுகர்வையும் ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து என்பது ஒரு முக்கிய தேவையாக உள்ளது. வரலாறு முழுவதும் போக்குவரத்து விரிவடைந்து வந்துள்ளது. சிறந்த போக்குவரத்து அதிக வர்த்தகத்தையும் மக்கள் பரவலையும் அனுமதிக்கிறது. பொருளாதார வளர்ச்சியானது எப்போதும் போக்குவரத்து வளர்ச்சி அதிகரிப்பதைச் சார்ந்துள்ளது. மேலும் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் ஆற்றல் இழப்பும் பெரிய சிக்கலை உருவாக்குகிறது.
நவீன நகரங்களும் சமூகங்களும் திட்டமிடப்பட்டு செயல்படுவதால், வீடு மற்றும் வேலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு வழக்கமாக உருவாக்கப்படுகிறது, பணியிடங்களை நோக்கி, படிக்கும் இடங்களை நோக்கி, ஓய்விடங்களை நோக்கி அல்லது தற்காலிகமாக மற்ற தினசரி நடவடிக்கைகளை நோக்கி மக்கள் இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சுற்றுலா பயணம், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
புதிய உள்கட்டமைப்பு தொடர்பான அதிக பயன்பாடுகளையும் குறைந்த தாக்கங்களையும் போக்குவரத்துத் திட்டமிடல் அனுமதிக்கிறது. திட்டமிடுபவர்கள் போக்குவரத்து முன்கணிப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி, எதிர்காலப் போக்குவரத்து முறைகள் கணிக்க முடியும். விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாகக் கருதி போக்குவரத்தைத் திட்டமிட போக்குவரத்து உரிமையாளர்களை செயற்பாட்டு நிலையில் ஏற்பாட்டியல் அனுமதிக்கிறது. ஒழுங்குமுறைக் கொள்கையை உருவாக்குவதில் ஓர் அங்கமாக விளங்கும் போக்குவரத்துப் பொருளாதாரம் மூலமாகவும் போக்குவரத்துத் துறை ஆராயப்பட்டது. பயணத்தலைமுறை, பயண விநியோகம், பயணத் தேர்வு, பயணப்பாதை நியமபிப்பு போன்ற அம்சங்களை குடிமுறைப் பொறியியலின் துணைப்பிரிவான போக்குவரத்துப் பொறியியல் கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து பொறியியல் மூலமே செயற்பாட்டு நிலையும் கையாளப்பட வேண்டும்.
போக்குவரத்து முறைமை தேர்வும், அதிகரிக்கும் திறனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதால், போக்குவரத்து பெரும்பாலும் சர்ச்சைக்குரியாக பொருளாகவே பார்க்கப்படுகிறது. வாகன போக்குவரத்து பொதுமக்களை துயருக்கு ஆளாக்குவதையும் காணலாம், தனி நபருக்காக நெகிழும் வசதிவாய்ப்புகள், அனைவருக்குமான இயற்கை மற்றும் நகர்ப்புற சூழலை மோசமடையச் செய்கின்றன. வளர்ச்சி அடர்த்தி, பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சிறந்த இடவசதி பயன்பாட்டை அனுமதிக்கின்ற போக்குவரத்து முறையைப் பொறுத்தே வளர்ச்சியின் அடர்த்தி அமைகிறது.
அதிகமான உள்கட்டமைப்பும், மிக அதிகமான வாகன உற்பத்தியை அதிகப்படுத்துவதும் பல நகரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலையும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகின்றன. பாரம்பரிய நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கும் இந்நிலை சமீபத்து ஆண்டுகளில் மட்டுமே பல இடங்களில் உள்ளது.
போக்குவரத்திற்காகவே ஆற்றல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகின் பெட்ரோலிய வளத்தில் பெரும்பகுதி இதற்காகவே எரிக்கப்படுகிறது. இதனால் நைட்ரசு ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் உமிழப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது [13]. மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவாக உள்ள போக்குவரத்துத் துறையின் பங்கு இதில் அதிகமாகும் [14]. இதிலும் குறிப்பாக துணை அலகான சாலைப் போக்குவரத்து மிகமிக அதிகமான மாசை உருவாக்குகிறது [15]. வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைச் சட்டங்கள் மூலம் தனிப்பட்ட வாகனங்களின் வாயு உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளன [13]. இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் அதிகரித்தபடியுள்ளது. சாலைப் போக்குவரத்தில் வெளிப்படும் கார்பன் அளவைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன [16][17]. எரிசக்தியின் பயன்பாடும், உமிழ்வுகளும் பெரும்பாலும் போக்குவரத்து முறைகளிடையே வேறுபடுகின்றன. எனவே, மின்மயமாக்கல் மற்றும் ஆற்றல் செயல்திறன் மேம்பாடு போன்ற மாற்றங்களை சுற்றுச்சூழல்வாதிகள் பரிந்துரைக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற விரிவாக்கம் போன்ற இதர தாக்கங்கள் போக்குவரத்து வளர்ச்சியால் விளைகின்றன. இயற்கை வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்கள் குறைகின்றன. பூமியின் காற்றுத் தரம், அமில மழை, புகை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் கணிசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவில் போக்குவரத்து உமிழ்வுகளை குறைத்தால் மட்டுமே நேர்மறையான விளைவுகளை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் [18].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.