புரோமானாட் டெசு ஆங்கிலேசு (Promenade des Anglais; உச்சரிப்பு:பிரோமானாடெசா(ங்)கிலே; நிகார்டு: Camin dei Anglés; பொருள்: ஆங்கிலேயர்களின் நடைத்தடம்) பிரான்சின் நீஸ் நகரில் நடுநிலக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற நடைத்தடம் ஆகும். இது மேற்கில் வானூர்தி நிலையத்திலிருந்து கிழக்கே குவாய் டெசு எடாட்சு-யுனிசு (ஐக்கிய அமெரிக்க துறை) வரை கிட்டத்தட்ட 7 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.[1]
வரலாறு
18வது நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், ஆங்கிலேயர்கள் குளிர்காலத்தை கழிக்க நீசு வந்தனர். இங்குள்ள கடற்கரையின் அகலப்பரந்த காட்சி அவர்களைக் கவர்ந்தது. 1820இல் கடுமையான குளிர்காலத்தால் பாதிக்கப்பட்டு வடக்கிலிருந்து நீசுக்கு வந்தடைந்த பெரும் திரளான பிச்சைக்காரர்களுக்கு வேலை தரும் விதமாகவும் தங்களுக்குப் பயனாகும் விதமாகவும் ஆங்கிலேயர்கள் கடலோரமாக ஓர் நடைமேடையை கட்டும் திட்டமொன்றைத் தீட்டினர். இதற்கு பாதிரியார் லெவிசு வே செலவழித்தார்.[2]
இந்த அழகான கடற்கரையோர நடைபாதையை கண்டு வியந்த நீசு நகர நிர்வாகம் இதனை மேலும் விரிவுபடுத்தியது. இந்த உலாத்தடம் முதலில் உள்ளக மொழியான நிசார்டில் கேமின் டெசு ஆங்கிலேசு எனப்பட்டது. தூரின் உடன்பாட்டிற்குப் பிறகு 1860இல் நீசைக் கைப்பற்றிய பிரான்சு இதற்கு லா பிரோமானாட் டெசு ஆங்கிலேசு என மறுபெயரிட்டது.
2016 பாஸ்டில் நாள் தாக்குதல்
சூலை 14, 2016 அன்று உலாப்பாதையில் பாஸ்டில் நாள் வாணவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்திருந்த கூட்டத்தின் மீது சுமையுந்தை வேண்டுமென்றே செலுத்தி குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர்.[3]
தற்காலத்தில்
உள்ளூர்வாசிகள் இதனை புரோமானாடு என்றோ, சுருங்க, லா புரோம் என்றோ அழைக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில், மிதிவண்டிகளும், குழந்தையமர் வண்டிகளும், குடும்பம் முழுவதும் இங்கு உலாவுவதைக் காணலாம். சறுக்குப் பலகைகளில் செல்வோருக்கும் இது மிகவும் விருப்பமான இடமாக உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நீசு கார்னிவல், பூக்களின் சண்டை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தவிர நடுநிலக் கடலோரத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கவும் எதிரேயுள்ள நீலவண்ண ஏஞ்செல்சு விரிகுடாக் கடலை (la Baie des Anges) கண்டு களிக்கவும் இங்குள்ள நீலநிற நாற்காலிகளும் (chaises bleues) நீச்சல் மாற்றுடை அறைகளும் (கபானா) சிறப்பான வசதிகளைத் தருகின்றன.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.