நான்முகன் From Wikipedia, the free encyclopedia
பிரம்மன் அல்லது பிரம்மா (சமஸ்கிருதம்: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகாதி முனிவர்கள் என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது.[1]
பிரம்மா | |
---|---|
அன்னவாகனத்தில் பிரம்மன் | |
தமிழ் எழுத்து முறை | பிரம்மன், நான்முகன், வேதவன் |
இடம் | பிரம்ம லோகம் |
துணை | சரஸ்வதி, காயத்திரி |
இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.
நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.
கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் இந்த நான்கு யுகங்களும் கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் (43,20,000) மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது பிரம்மாவிற்கு பேராயுள் இந்த பேராயுள் நூறு சென்றால் பிரம்மாவிற்கு ஆயுள் முடியும்.
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
விஷ்ணுவுக்கும், பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனும் லிங்கோத்பவர் என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவானது அதன் பயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
சில கதைகளில் முடிகாணாத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக, சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் பிரம்மஹத்தி தோசம் பற்றியதால், பிட்சாடனார் என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
பிரம்மா தன்னைப்போலவே ஒரு மகனைப் படைக்கவிரும்பியதாகவும், அவருக்கு பிறந்தமகன் தனக்குப் பெயரிட வேண்டுமென அழுததாகவும், அதனால் பிரம்மா ருத்திரன் என்று பெயரிட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ருத்திரன் அழுகை நிற்காததால், பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என அஷ்ட பெயர்களை ருத்திரனுக்கு சூட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன.
மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணம் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதையை கூறுகிறது. அதில் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்று கழுதை முக வடிவில் இருந்தாக கூறப்பட்டுள்ளது. அந்த தலையானது தேவர்கள் மற்றும் அரக்கர்கள் போரில் அரக்கர்களுக்கு உதவி செய்வதாக கூறியதைக் கண்டு தேவர்கள் திருமாலிடம் அத்தலையை நீக்க வேண்டினர். ஆனால் திருமாலோ, அத்தலையானது பூலோகத்திலோ அல்லது வேறெங்கோ விழுந்தால் விபரீதம் நேரிடும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார்.[2]
ஒரு சமயம் கிருஷ்ணர் கன்றுகளை மேய்துக்கொண்டு தமது நண்பர்களுடன் (கோபலர்கள்) யமுனை நதி கரையில் உணவருந்தி கொண்டிருந்தார். பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை சோதிப்பதற்காக அவருடைய கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். கன்றுகளை காணாது கோபாலர்கள் தேடிய பொழுது கிருஷ்ணர் தாம் தேடிவருவதாகப் புறப்பட்டார். அந்த சமயம் பிரம்மா அவருடைய நண்பர்களையும் திருடிப்போய் விட்டார். இதையறிந்த கிருஷ்ணர் தாமே கன்றுகளாகவும், இடை சிறுவர்களாகவும் மாறி சிறிது காலம் கோகுலத்தில் இருந்து வந்தார். இதையறிந்த பிரம்மா கிருஷ்ணருடைய சக்தியை அறிந்து கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டு கோபாலர் களையும் கன்றுகளையும் திருப்பிக் கொடுத்தார்.
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பிரம்மா கயிலை வரும்பொழுது, முருகனை வணங்க தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து யார் என வினவெழுப்பிய பொழுது, தான் பிரணவ மந்திரத்தினை கூறி படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைச்செய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து பிரம்மாவிற்கு படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தல வரலாறு கூறுகிறது.
அத்திரி முனிவரின் மனைவியான அனுசுயா கற்புக்கரசியாக திகழ்ந்தாள். அவளுடைய கற்பினைப் பற்றி மும்மூர்த்திகளிடமும் நாரதம் முப்பெரும்தேவியரைவிடவும் உயர்ந்தவள் என்று கூறினார். அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் அவளை சோதிக்க துறவிகள் வேடத்தில் அனுசுயா குடிலுக்கு வந்தனர். துறவிகளை வரவேற்ற அனுசுயா, அவர்களுக்கு உணவினை தந்தாள். அதனை ஏற்காத மூன்றுதுறவிகளும், ஆடையில்லாமல் பெண்தருகின்ற உணவினையே ஏற்பதாக கூறினர்.
இதனைக் கேட்டு அனுசுயா திகைத்தாள். தன்னுடைய கற்புநெறியின் காரணமாக வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை அறிந்தாள். அவர்களை குழந்தைகளாக்கி தான் தாயாக உணவமுதம் படைத்திட்டாள். முப்பெரும் தேவியர்கள் அனுசுயாவினை வணங்கி தங்களுடைய கணவன்களை திருப்பிதருமாறு கேட்டனர். மும்மூர்த்திகளுக்கும் பழைய உருவம் கொடுத்த அனுசுயாவிற்கும், அவளது கணவர் அத்திரி முனிக்கும் மூவரும் ஒருவராக இணைந்து காட்சியளித்தனர். இந்த மூர்த்தி தாணுமாலயன் எனப்படுகிறார்.
பிரம்ம புராணத்தின் படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி, பூமியையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் ஆகியவற்றை பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர், சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாக கூறுவர்.
மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். தேவலோகத்தில் ஆயிரம் அழகிகள் இருந்தும், நிகும்பன் என்ற அரக்க மன்னனின் மகன்களான சுந்தன், உபசுந்தன் ஆகியோரைக் கொல்ல, திலோத்தமை என்ற அழகியை பிரம்மா படைத்தார். அதனால் திலோத்தமையை அடைய முயன்று இருவரும் இறந்தார்கள்.
இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது.
இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. இந்த அஸ்திரத்தினை பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாஸ்திரம் எய்துவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்காலக்கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக கருதப்பெறுகிறது.
மகாபுராணங்களான பதினெட்டு புராணங்களில் பிரம்மாவினை புகழ்ந்துரைப்பவை ராஜசிக புராணம் எனப்படுகின்றன.
இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
கடவுள் அல்லது பிரம்மம் குறித்த நிலைப்பாட்டை புத்தர் காலத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னாட்களில் புத்தரின் அவதாரங்களாக சில இந்துக் கடவுளர்கள் தேவதைகளாக வழிபட்டனர். அத்தேவர்களில் பிரம்மாவும் ஒருவர். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த கோயில்களில் பிரம்மாவிற்கு தனிச் சன்னதிகள் அமைத்து வழிபடுகிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.