From Wikipedia, the free encyclopedia
பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். கலீலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர்.[17] 1920ஆம் ஆண்டு ஆர்லோவ் சேப்ளே மற்றும் ஏபெர் கர்டிசு ஆகிய இரு வானியலாளர்கள் இடையே நடந்த பெருவிவாதத்தைத் தொடர்ந்து[18] எட்வின் ஹபிள் என்பவரின் நோக்கீடுகள் பால் வழி என்பது அண்டத்தில் உள்ள பல பேரடைகளில் ஒன்றே என்று காண்பித்தது..
பரனல் வான்காணகத்திற்கு மேல் இரவு வானில் தென்படும் பால் வழியின் மையப் பகுதி (தொலைநோக்கிக்காக சீரோளி ஒரு வழிகாட்டி விண்மீனை உருவாக்குகிறது). | |
நோக்கீட்டுத் தரவுகள் | |
---|---|
வகை | Sb, Sbc, or SB(rs)bc[1][2] (பட்டைச் சுருள் பேரடை ) |
விட்டம் | 150–200 kly (46–61 kpc) |
மென் உடுக்கண் வட்டின் தடிப்பு | ≈2 kly (0.6 kpc)[3][4] |
விண்மீன்களின் எண்ணிக்கை | 100–400 பில்லியன் [(1–4)×1011][5] |
பொருண்மை | 0.8–1.5×1012 [6][7][8][9] |
வளைவுந்தம் | ≈1×1067 J s[10] |
பால் வழி மையத்தில் இருந்து கதிரவனின் தொலைவு | 26.4 ± 1.0 kly (8.09 ± 0.31 kpc)[11][12][13] |
கதிரவனின் பால்வெளி சுழற்சிக் காலம் | 240 Myr[14] |
சுருள் முறை சுழற்சிக் காலம் | 220–360 Myr[15] |
பட்டை முறை சுழற்சிக் காலம் | 100–120 Myr[15] |
அண்ட நுண்ணலைப் பின்னணி ஓய்வு சட்டகம் சார்ந்த சார்பு வேகம் | 631 ± 20 km/s[16] |
கதிரவனின் இருப்பில் விடுபடு திசைவேகம் | 550 km/s[9] |
கதிரவனின் இருப்பில் இருட்பொருள் அடர்த்தி | 0.0088 pc-3 அல்லது 0.35 GeV cm-3[9] |
See also: விண்மீன் பேரடை |
பால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும்.[19][20] இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[20][21][22][23][24][25] மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.[26][27] கதிரவ மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்துள்ள விண்மீன்கள் ஒரு வீக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீக்கத்தில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டைகள் கதிர்வீச்சடைகின்றன. பால்வெளி மையத்தில் தனுசு எ* என்று அழைக்கப்படும் செறிந்த கதிர்வீச்சுள்ள மூலம் அமைந்துள்ளது; அது 4.100 (± 0.034) மில்லியனுக்கும் அதிகமான கதிரவ பொருண்மையைக் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விண்மீன்களும் வளிமங்களும் பால்வெளி மைய சுற்றுப்பாதையில் இருந்து பரந்த தொலைவில் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்லரின் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழிப் பொருண்மையின் பெரும்பகுதி மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லை என்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருள் என்று குறிப்பிடப்படுகிறது.[28] கதிரவனின் இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.[14] புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் அண்டத்தின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவானதாகும் என்று புலப்படுகிறது.[29][29]
பல்வேறு துணைப் பேரடைகளைக் கொண்டுள்ள நம் பால்வழி, பேரடை உட் குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உட்குழு கன்னி விண்மீன் மீகொத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த மீகொத்தும் இலணியாக்கியா விண்மீன் மீக்கொத்தின் ஓர் உறுப்பு ஆகும்.[30][31]
பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். இது கிரேக்க மொழிச் சொல்லான γαλαξίας κύκλος (galaxías kýklos, பொருள்: பால் வட்டம்) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். பால் வழியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது.[சான்று தேவை]
பால் வழி, இரவு வானில் 30 பாகைகள் அகலக் கோண வட்டவில்லாக மங்கலான வெண் ஒளிர்பட்டையாகத் தெரிகிறது.[32] முழு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும் தனித்தனி விண்மீன்களும் பால் வழியின் பகுதியே எனினும்,[33][34] இந்த ஒளிர் பட்டை, பிரித்தறிய முடியாத பேரடைகளாலும் பால்வெளித் தள திசையில் இருக்கும் பிற பொருள்களாலும் உருவாவதாகும். ஒளிர்பட்டையில் உள்ள பெரும்பிளவு, கோல்சேக் ஒண்முகில் போன்ற இருளடர்ந்த பகுதிகள், தொலைவில் அமைந்த விண்மீன்களின் ஒளியை பால்வெளித் தூசு மறைக்கும் பகுதிகள் ஆகும். வான்பரப்பில் பால்வழியால் மறைக்கப்படும் மண்டலம் தவிர்ப்பு மண்டலம் எனப்படுகிறது.
பால்வழி, ஒப்பீட்டளவில் குறைந்த மேற்பரப்பு ஒளிர்வைக் கொண்டுள்ளது. ஒளி மாசு அல்லது நிலவொளி போன்ற பின்னணி ஒளி மூலம் அதன் தோற்றத்தை பெரிதும் குறைக்க முடியும். பால்வழி தெரிய வேண்டும் என்றால் ஒரு சதுர ஆர்க்நொடிக்கு சுமார் 20.2 அளவில் வானம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட அளவு +5.1 அல்லது அதற்கு மேல் இருந்தால் பால்வழி தென்படும். மேலும் அது +6.1 இல் இருந்தால் விரிவான விவரங்களைக் காண்பிக்கும். எனவே வேகமான நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளிலிருந்து பால்வழியைப் பார்ப்பது கடினமாகிறது, ஆனால் நிலவு அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது கிராமப்புற பகுதிகளில் இருந்து பார்க்கும் போது நன்றாக புலப்படுகிறது. "செயற்கை இரவு வானில் பிரகாசத்தின் புதிய உலக அட்லாஸ்" என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்று, புவியில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், ஒளி மாசுபாடு காரணமாக பால் வழியை தங்கள் வீடுகளில் இருந்து பார்க்க இயலாது என்று காட்டுகிறது.
புவியில் இருந்து பார்க்கும் போது, புலப்படும் பால் வழியின் பால்வெளி சமபரப்பு பகுதியானது 30 விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கிய வானத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தனுசின் திசையில் அமைந்துள்ள பால்வெளி மையத்தில், பால்வழி அதிக ஒளிர்வுடன் இருக்கும். தனுசிலிருந்து ஒரு மங்கலான வெண் ஒளிர் பட்டை ஆரிகாவில் உள்ள பால்வெளி எதிர்மையத்தைச் சுற்றி செல்வது போல் தோற்றமளிக்கும். அந்த ஒளிர்பட்டை, பின்னர் வானத்தைச் சுற்றியுள்ள மற்ற வழிகளில் தொடர்ந்து மீண்டும் தனுசுக்கு வந்தடைகிறது. இவ்வாறு அது வானத்தை தோராயமாக இரு சமமான அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது.
பால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
பால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே கதிரவ மண்டலம் இருக்கிறது.
நிறம் | கை(கள்) |
---|---|
மயில் நீலம் | பெர்சியசு சுருள்கை |
ஊதா | நார்மா மற்றும் வெளிச்சுருள்கை |
பச்சை | கேடயம்-சென்டாரசு சுருள்கை |
வெளிர்சிவப்பு | கரினா-தனுசு சுருள்கை |
இரண்டு துரும்புச் சுருள்கைகள் | |
செம்மஞ்சள் | ஓரியன் கை (கதிரவ மண்டலம் உள்ள பகுதி) |
ஓரியன் கை என்பது பால் வழிப் பேரடையில் காணப்படும் பல்வேறு கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் கதிரவனின் சுற்றுப்பாதை ஆகும். கதிரவன், பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.
பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது.
பால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (1012) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x1011) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, கதிரவனுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x107 கதிரவ விட்ட (4x1013 கிமீ அல்லது 4.2 ஒஆ) தொலைவில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x1011 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.
பால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அணுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.