From Wikipedia, the free encyclopedia
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும்[சான்று தேவை], இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். இக்கலையை நாட்டிய சாஸ்திரம், பரத முனிவர் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்துதல் என்பவை எல்லாம் பரத நாட்டியத்தை சமசுகிருதமயமாக்க நடந்த ஏற்பாடுகள் என்ற கருத்து உள்ளது.[1] அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது[சான்று தேவை]. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது[சான்று தேவை]. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[2] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
பரதநாட்டியம் ஆடும் பெண்கள் | |
வகை | இந்திய பாரம்பரிய நடனம் |
---|---|
கண்டுபிடிப்பாளர் | பரத முனிவர் |
தோற்றம் | தமிழ்நாடு, இந்தியா |
பரதநாட்டியம் | |
---|---|
உருப்படிகள் | |
நடனத்தின் இலட்சணங்கள் | நடனத்தின் உட்பிரிவுகள் |
உருப்படிகள் | |
அலாரிப்பு | சதீசுவரம் |
சப்தம் | வர்ணம் |
பதம் | தில்லானா |
விருத்தம் | மங்களம் |
நடனத்தின் இலட்சணங்கள் | |
பாவம் | |
இராகம் | தாளம் |
நடனத்தின் உட்பிரிவுகள் | |
நாட்டியம் | |
நிருத்தம் | நிருத்தியம் |
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராசர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாசியா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'சதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்,வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் இலட்சுமணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
1932 ஆம் ஆண்டில், ஈ. கிருஷ்ண ஐயர் மற்றும் ருக்மிணி தேவி அருண்டேல் ஆகியோர், சதிராட்டம், பரத்தையர் ஆட்டம் அல்லது தேவாராட்டம் என்றும் அழைக்கப்பட்டு வந்த நடனத்திற்கு, "பரதநாட்டியம்" என்று புதிய பெயரை சூட்ட சென்னை மியூசிக் அகதெமியின் ஒரு கூட்டத்தில் முன்மொழிந்தனர். அதன் வழியாக இந்த நடன வடிவத்திற்கு மரியாதை ஏற்படவேண்டும் என்றனர்.[3] முக்கியமாக பந்தநல்லூர் நடன பாணியை இப்பெயரில் மாற்றியமைப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பரதம் என்ற சொல் ஒரு கற்பனையான சொற்றொடராகவும் பார்க்கப்படுகிறது.[4] ப என்பது பாவம் (உணர்வுகள், உணர்ச்சிகள்), ர இராகம் (மெல்லிசை, இசைக் குறிப்புகளுக்கான வடிவமைப்புப் பணி), தம் என்பது தாளம் என்தைக் குறிக்கிறது.[4][5][6] "நாட்டியம்" என்பது "நடனம்" என்பதற்கான சமசுகிருத சொல்லாகும். இதன்படி பரதநாட்டியம் என்ற கூட்டுச் சொல்லானது பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை இணக்கமாக வெளிப்படுத்தும் நடனத்தைக் குறிக்கிறது.
பரதநாட்டியத்தின் கோட்பாட்டளவான அடித்தளங்கள் முதலில் தமிழில் கூத்த நூலில் காணப்படுகின்றன, பின்னர் நிகழ்த்துக் கலைகளின் பண்டைய இந்து நூலான நாட்டிய சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றன.[8][9][10]
பரதநாட்டியத்தைப் பற்றிய நேரடியான வரலாற்றுக் குறிப்புகள் தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு[11]) மற்றும் மணிமேகலை (சு. 6ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றில் காணப்படுகின்றன.[8][4] பழங்கால நூலான சிலப்பதிகாரம், மாதவி என்ற நடன மாதின் கதையை உள்ளடக்கியது; 113 முதல் 159 வரையிலான செய்யுள்களில் மாதவியின் அரங்கேற்றக் காதை எனப்படும் பகுதியில் நடனப் பயிற்சி முறை விவரிக்கப்படுகிறது.[11] காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள், கிபி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், பரதநாட்டியம் கிபி முதல் ஆயிரம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நன்கு வளர்ந்த ஒரு கலை வடிவத்தைக் காட்டுகிறது.[8][4][12]
சிதம்பரம் நடராசர் கோயிலின் தெற்கு வாயிலில் (≈12 ஆம் நூற்றாண்டு) நாட்டிய சாஸ்திரத்தில் கரணங்கள் என்று விவரிக்கப்படும் பரதநாட்டியத்தின் 108 தாண்டவங்கள் கல்லில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.[14][15]
சைவக் கோயில்களில் உள்ள பல பழமையான சிவன் சிற்பங்கள் பரதநாட்டிய நடனக் காட்சிகளைப் போலவே உள்ளன. எடுத்துக்காட்டாக, பாதாமி குடைவரைக் கோவில்களின் முதலாம் குகை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[16] இக்குகையில் தாண்டவ நடனம் ஆடும் சிவனை நடராசாரராக சித்தரிக்கிறது.[17][18][19] 5 அடி (1.5 மீ) உயரமுள்ள இந்த சிற்பத்தில் 18 கைகள் உள்ளன, இது வடிவியல் முறையில் அமைக்கப்பட்ட நடன நிலைகளைக் காட்டுகிறது.[19] சிவனின் கரங்கள் பரதநாட்டியத்தில் காணப்படும்[8][20] முத்திரைகளைக்[21] காட்டுகிறன.
சில காலனித்துவ இந்தியவியலாளர்கள் மற்றும் நவீன எழுத்தாளர்கள் பரதநாட்டியம் பண்டைய தேவதாசி பண்பாட்டின் வழித்தோன்றல் என்று வாதிடுகின்றனர். இது கிமு 300 மற்றும் கிபி 300 க்கு இடையில் தோற்றம் பெற்றதாக கூறினர்.[22] நவீன அறிஞர்கள் இந்தக் கோட்பாட்டுக்கு ஆதரவாக நேரடி நூல் சான்றோ அல்லது தொல்பொருள் சான்றுகளோ இல்லாததால் கேள்வி எழுப்பியுள்ளனர்.[23][24] வரலாற்று காலச் சிற்பங்கள் மற்றும் நூல்கள் நடன மாதுக்களை விவரிக்கின்றன, முன்னிறுத்துகின்றன. அதே போல் அவர்களுக்காக தளிச்சேரி எனப்படும் கோவில் குடியிருப்புகள் அமைக்கபட்டன. ஆனால் அவர்கள் அவர்களை வேசிகள் மற்றும் விபச்சாரிகள் என்று ஆரம்ப காலனித்துவ இந்தியவியலாளர்களால் கூறப்படவில்லை.[22] தவேஷ் சோனேஜியின் கூற்றுப்படி, ஆய்வுகளை திறணாய்வு செய்கையில், அரசவையணங்கு நடனம் என்பது நவீன சகாப்தத்தின் ஒரு நிகழ்வு என்று கூறுகிறது. இது தமிழ்நாட்டின் நாயக்கர் காலத்தின் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது என்கிறார்.[22] ஜேம்ஸ் லோக்டெஃபெல்டின் கூற்றுப்படி, பரதநாட்டியம் 19 ஆம் நூற்றாண்டு வரை இந்துக் கோயில்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டிலிலுந்தே கோயில்களுக்கு வெளியே மேடைகளில் நிகழ்த்தப்பட்டது.[4] மேலும், தஞ்சையின் மராத்திய ஆட்சியாளர்கள் பரதநாட்டியத்திற்கு ஆதரவளித்தனர்.[25]
18 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகையின் தொடர்ச்சியாக, 19 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில், பல பாரம்பரிய இந்திய நடன வடிவங்கள் ஏளனப்படுத்தபட்டு, ஊக்கமிக்கச் செய்யபட்டன. மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலைகளை வீழ்ச்சியடையவைத்தன.[26] கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினரும், பிரித்தானிய அதிகாரிகளும் வட இந்தியாவின் "ஆடல் கணிகையர்" (கதக்) மற்றும் தென்னிந்தியாவின் "தேவதாசிகள்" (பரதநாட்டியம்) ஆகியோரை "விலைமகளிர், இழிவான பாலின்ப உணர்வூட்டுபவர்கள்" என இழித்துரைத்தனர். மேலும் கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினர் 1892 இல் "நடன எதிர்ப்பு இயக்கம்" தொடங்கி இந்த நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினர்.[27][28][29], நடன எதிர்ப்பு பிரிவினர் இந்த நடன வடிவத்தை விபச்சாரத்திற்கான ஒரு வழி என்று குற்றம் சாட்டினர்.[23][24]
1910 ஆம் ஆண்டில், பிரித்தானியப் பேரரசின் மெட்ராஸ் ராஜதானி கோயில் நடனத்தையும், அதனுடனான இந்துக் கோயில்களில் பரதநாட்டிய பாரம்பரியத்தையும் முற்றிலும் தடை செய்தது.[30]
1910 ஆம் ஆண்டு தடைக்கு பலமான எதிர்ப்பு தோன்றியது.[30] சமூக சீர்திருத்தத்தம் என்ற சாக்குப்போக்கின் கீழ் வரலாற்று சிறப்புமிக்க, செழுமையான நடன பாரம்பரியம் பாதிக்கப்படுவதாக தமிழ் மக்கள் கவலைப்பட்டனர்.[30][31]
பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:
ஆகியவையாகும்.
அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை
என்பனவாகும்.
பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,
"கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர".[32]
எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிக அபிநயத்தில் அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.
தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும். சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.
புசங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.
உபாங்கம் என்பது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவாகும்.
உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும். எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.
பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும். பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர். முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்
என்பவையாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.