வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பந்தர்பன் மாவட்டம் (Bandarban District) (வங்காள மொழி: বান্দরবান) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] தென்கிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பந்தர்பன் நகரம் ஆகும். இம்மாவட்டம் 18 ஏப்ரல் 1981-இல் துவக்கப்பட்டது. மலைதொடர்களைக் கொண்ட இம்மாவாட்டம் சிறந்த மலைவாழ் சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது.[2]பந்தர்பன் மாவட்டம், வங்காளதேச தலைநகரான டாக்காவிருந்து தொலைதூரத்தில் உள்ளதும், மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்டதும், உயரமான மூன்று மலைகளும் கொண்டதும் ஆகும்..
தென்கிழக்கு வங்காளதேசத்தின் சிட்டகாசிட்டகாங் கோட்டத்தில் உள்ள பந்தர்பன் மாவட்டத்தின் வடக்கில் ரங்கமதி மாவட்டமும், தெற்கில் மியான்மர் நாட்டின் அரக்கான் மலைகளும் மற்றும் நப் ஆறும், கிழக்கில் ரங்கமதி மாவட்டமும், இந்தியாவும், மேற்கில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டம் மற்றும்சி சிட்டகாங் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.
4479.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பந்தர்பன், ரவாகஞ்சாரி, நய்கர்சார், அலிகடாம், ருமா, தஞ்சி மற்றும் லாமா என ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் பந்தர்பன் மற்றும் லாமா என இரண்டு நகராட்சி மன்றங்களையும், 96 கிராம ஒன்றியக் குழுக்களையும், வருவாய் கிராமங்களையும், 1554 கிராமங்களையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 4600 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0361 ஆகும். இம்மாவட்டம் ஒரு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டுள்ளது. [3]
பந்தர்பன் மாவட்டத்தின் கோடைகால அதிகபட்ச வெப்பம் 34.6 செல்சியஸ் ஆகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 13˚ செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 3031 மில்லி மீட்டர் ஆகும்.
இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. மலைப்பாங்கான பந்தர்பன் மாவட்டத்தில் மதமுகாரி ஆறு, ரங்கியாங் ஆறு, பாக் காளி ஆறு, சங்கு முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இம்மாவட்டத்தில் இஞ்சி, மஞ்சள், பருத்தி, அன்னாசி, ஆரஞ்ச், பலா, புகையிலை, எலுமிச்சை, எள், வாதுமைக் கொட்டை, காய்கறிகள் முதலியன பயிரிடப்படுகிறது.
4479.01 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 3,88,335 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,03,350 ஆகவும், பெண்கள் 1,84,985 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.64% ஆக உள்ளது. பாலின விகிதம் 110 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 830 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 35.9% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
பந்தர்பன் மாவட்டத்தில் வங்காளி மக்களுடன் பதினைந்திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் முராங், பாவ்ம், கியாங், திரிபுரி, மிசோ, குமி, சக், சக்மா மற்றும் ரியாங், ஊசுய், பாங்கோ இன மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.
1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பந்தர்பன் மாவட்டத்தில் இசுலாமியர்கள் 47.62%, பௌத்தர்கள் 38%, கிறிந்த்தவர்கள் 7.27% , இந்துக்கள் 3.52% மற்றும் பிறர் 3.59% ஆக இருந்தனர். [5] இம்மாவட்டத்தில் 2070 மசூதிகளும், 644 பௌத்த விகாரங் களும், 256 இந்துக் கோயில்களும், இரண்டு கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.