இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
பண்டத்தரிப்பு (Pandatherippu) என்பது இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இது வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. பண்டத்தரிப்பு என்கிற இடக்குறிப்பு பெயர் அதனையண்டிய சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் (வலிமேற்குபிரதேசசெயலக ஆளுகைக்குட்பட்ட கிராமம்), காலையடி, பிரான்பற்று (பிராம்பத்தை) ஆகிய சிற்றூர்களை குறிப்பிடும் இடப்பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. பண்டத்தரிப்பு யா/146 (J/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் மக்கள்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஊர் ஆகும்.
பண்டத்தரிப்பு
Pandatharippu | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°46′23″N 79°58′03″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ பிரிவு | வலிகாமம் தென்மேற்கு |
1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது
"பண்டத்தரிப்பு" என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.[1][2] ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர்.[3] பால்தேஸ் பாதிரியார் எழுதிய A Description of the East-India Coasts of Malabar and Coromandel என்ற நூலில் உள்ள ஓவிய மாதிரிகளில் ஒல்லாந்த தேவாலயம், வணிககூடம், வணிகர்கள், வணிக கூடத்தில் தரித்த நிலையிலுள்ள யானைகள் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பண்டத்தரிப்பு அக்காலத்தில் ஒரு பிரதானமான வணிகமையம் ஆக இருந்தமை தெளிவாகிறது. வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் அடிப்படையில் இடப்பெயருக்கான காரணமாக கூறுகின்றனார்.
1616-இல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பின் தமது நிர்வாக வசதிக்காக யாழ்ப்பாணப் பகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனர். அவற்றில், வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் பண்டத்தரிப்பும் ஒன்றாகும். பண்டத்தரிப்பு கோயிற்பற்று என்பது பிரான்பற்று, வடலியடைப்பு, சில்லாலை, மாதகல், பெரியவிளான், சிறுவிளான், மாரீசங்கூடல், இளவாலை, பனிப்புலம் ஆகிய பல கிராமங்களைக் கொண்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே மேற்கூறப்பட்ட கிராமங்கள் தனித்துவமான கிராமங்களான இருந்தாலும் இடப்பெயருக்கான அடையாளமாக அக்கிராம பெயர்களுடன் பண்டத்தரிப்பு என்கிற பெயர் தற்போதும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது .
1820-இல் பண்டத்தரிப்பு பகுதியில் மதப்பரப்புக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மரு. ஜோன் இசுக்கடர் (John Scudder) தெற்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்கத்தேய மருந்தகத்தினை இங்கு அமைத்தார். அத்துடன் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடியதாக 1823 இல் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியும் அமைக்கப்பட்டது.
பண்டத்தரிப்பில் தமிழரே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் கத்தோலிக்க, இந்து சமயத்தவர்கள் சராசரியாக 50:50 என வாழ்கிறார்கள். புரட்டத்தாந்து, பெந்தக்கோசுட் சபைகளினை பின்பற்றுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள்.
இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். பனைசார் பதனீர்த் தொழில், நல்லெண்ணை உற்பத்தி, மரவேலைப்பாடுகள் தேர்ச் சிற்ப உருவாக்கம் போன்ற கைத்தொழில்களும் இங்கே காணப்படுகின்றன.
பண்டத்தரிப்பு கிராமம் அன்றுதொட்டு இன்று வரை அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகவே விளங்கி வந்துள்ளது இக்கிராமத்திலிருந்து பலர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியின் அதிபராக இலங்கையின் புகழ்பூத்த தமிழ் கம்யூனிசவாதி தோழர் கார்த்திகேசன் செயற்பட்டதும் அவர் இங்கே பணியாற்றிய காலங்களில் இக்கிராமத்தில் கம்யூனிச சித்தாந்த அரசியலில் கணிசமாக ஈடுபட்டிருந்தார் மறுபுறம் அன்றைய தமிழரசுக்கட்சி ,தமிழர் விடுதலைக்கூட்டனி சார் அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கபட்டு இருந்தன. 2018இன் பின்னரான உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின்படி பண்டத்தரிப்பிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு வென்ற திரு அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவர் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற அரசியல் பிரதிநிதியாக 2023வரை கடமையாற்றியுள்ளார். ஏலவே பண்டத்தரிப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 2011-2015 வரையும் இவர் உள்ளாட்சி பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.