பக்கவாதம்
From Wikipedia, the free encyclopedia
பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.
பக்கவாதம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நரம்பியல், neurosurgery |
ஐ.சி.டி.-10 | I61.-I64. |
ஐ.சி.டி.-9 | 434.91 |
ம.இ.மெ.ம | 601367 |
நோய்களின் தரவுத்தளம் | 2247 |
மெரிசின்பிளசு | 000726 |
ஈமெடிசின் | neuro/9 emerg/558 emerg/557 pmr/187 |
பேசியண்ட் ஐ.இ | பக்கவாதம் |
ம.பா.த | D020521 |
பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில் இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.