நைல்
உலகிலேயே மிகப்பெரிய ஆறு மற்றும் உலகின் முதல் நாகரிகம் தோன்றிய இடம் From Wikipedia, the free encyclopedia
உலகிலேயே மிகப்பெரிய ஆறு மற்றும் உலகின் முதல் நாகரிகம் தோன்றிய இடம் From Wikipedia, the free encyclopedia
நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[5].
நைல் | |
ஆறு | |
அசுவான் நகரத்தில் பாயும் நைல் | |
நாடுகள் | எத்தியோப்பியா, சூடான், எகிப்து, உகண்டா, கொங்கோ, கென்யா, தன்சானியா, ருவாண்டா, புருண்டி, தெற்கு சூடான், எரித்திரியா |
---|---|
பகுதி | வடகிழக்கு ஆப்பிரிக்கா |
நகரங்கள் | கெய்ரோ, கர்த்தூம் |
Primary source | வெள்ளை நைல் |
- அமைவிடம் | பெரிய ஏரிப் பகுதி, ருவாண்டா |
- உயர்வு | 2,700 மீ (8,858 அடி) |
- ஆள்கூறு | 02°16′56″S 029°19′53″E |
Secondary source | நீல நைல் |
- location | தனா ஏரி, எத்தியோப்பியா |
- ஆள்கூறு | 12°02′09″N 037°15′53″E |
Source confluence | கர்த்தூம் அருகில் |
கழிமுகம் | |
- அமைவிடம் | மத்தியதரைக் கடல் |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 30°10′N 031°06′E [1] |
நீளம் | 6,650 கிமீ (4,132 மைல்) |
அகலம் | 2.8 கிமீ (2 மைல்) |
வடிநிலம் | 34,00,000 கிமீ² (13,12,747 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
நைல் நதியின் நீறேற்றப்பகுதி
| |
[2] | |
நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.
சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.
பண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது யிஃபி அல்லது இடுரு என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான நைல் என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் நகல் (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது[6].
நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலகட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.
நைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும்.
வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.
இதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது[7].
நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[8].
இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.
நீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது.
அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது.
வெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.
நைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.
நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.
நைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது.
மேலும் உயரும் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியதரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும்.
நைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது[9].
பெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின[10].
மே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது[11]. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன[12]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது[13].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.