தொண்டை நாடு (Tondai Nadu) அல்லது தொண்டை மண்டலம் (Tondaimandalam) என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு, அதற்கு ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது. தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது.
எல்லைகள்
வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணைஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள் ஆகும்.
இது இன்றைய தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை, ஆந்திரமாநிலத்தின் நெல்லூர், சித்தூர், (திருப்பதி) மாவட்டங்களின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
வரலாறு
தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு 'திரையன்' என்னும் மன்னனும், தொண்டை நாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 'இளந்திரையன்' என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும், வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]
பிற்காலச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு அதை ஜயங்கொண்ட சோழமண்டலம் என்ற பெயரைக் கொண்டு அழைக்கலாயினர். மேலும் தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களாகவும், 79 நாடுகளாகவும் வகுக்கப்பட்டன. துவக்கக் காலத்தில் கோட்டம் என்று அழைக்கப்பட்ட நிர்வாகப் பகுதியானது பிற்காலத்தில் வளநாடு என அழைக்கப்பட்டது. தொண்டை நாட்டில் இருந்த கோட்டங்கள் பின்வறுமாறு; ஆமூர் கோட்டம், இளங்காடு கோட்டம், ஈக்காடு கோட்டம், ஈத்தூர் கோட்டம், ஊற்றுக்காடு கோட்டம், எயில் கோட்டம், கடிகை கோட்டம், காலியூர் கோட்டம், களத்தூர் கோட்டம், குன்றப்பத்திரம் கோட்டம், சிறுகரை கோட்டம், செங்காடு கோட்டம், செந்திருக்கை கோட்டம், செம்பூர் கோட்டம், தாமல் கோட்டம், படுவூர் கோட்டம், பல்குன்றம் கோட்டம், புழல் கோட்டம், புலியூர் கோட்டம், பேயூர் கோட்டம், மணையில் கோட்டம், வெண்குன்றம் கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலூர்க் கோட்டம் ஆகியனவாகும்.
மேற்கோள்கள்
இதனையும் காண்க
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.