மக்களின் உரிமை From Wikipedia, the free encyclopedia
தேர்தல் (election) என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் "தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை" என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.[1] தேர்தல்கள் என்பவை 17ஆவது நூற்றாண்டு தொடங்கி தற்கால பிரதிநிதித்துவக் குடியாட்சிவரை வழக்கமான ஒரு செயல்பாடாக இருந்து வந்துள்ளன.[1] தேர்தல்களின் மூலம், பகுதி சார்ந்த மற்றும் உள்ளூர் அரசமைப்புகள், சட்டசபை, சில சமயங்களில் நிர்வாக அமைப்பு, நீதித் துறை ஆகியவற்றில் உள்ள பதவிகள் நிரப்பப்படுகின்றன. இந்த முறையானது பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் தொடங்கி, தன்னார்வலர் கூட்டமைப்பு மற்றும் கூட்டுரிமைக் குழு வரையில் பலவற்றிலும் பயன்படுகிறது.
தற்கால மக்களாட்சியில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பண்டைய ஏதென்ஸ் நகரின் குடியாட்சி நடைமுறைக்கு மாறானது. முறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது ஆகியவற்றை "தேர்தல் சீர்திருத்தம்" விவரிக்கிறது. தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் இதர புள்ளி விபரங்கள் (குறிப்பாக எதிர்கால முடிவுகளை கணிக்கும் ஒரு முறையாக) பற்றிய ஒரு ஆய்வு "தேர்தல் கணிப்பியல்" எனப்படுகிறது.
வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது என்பது "தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு முடிவெடுப்பது" என்று பொருள்படும். சில சமயங்களில் வாக்குச் சீட்டின் பிற வடிவங்களான, குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொதுமக்கள் நேரடியாக கருத்து தெரிவிக்கும் கருத்துக் கணிப்புகளும் (Referendum) தேர்தல் என்றே அழைக்கப்படுகின்றன.
மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே தேர்தல்கள் அமலுக்கு வந்துவிட்டிருந்தன. நடுக் காலகட்டத்தில் புனித ரோமானியப் பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது.[1] அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன "தேர்தல்" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், "பிரதிநிதித்துவ அரசு" என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.[1]
வாக்குரிமை பற்றிய கேள்விகள், குறிப்பாக சிறுபான்மைக் குழுக்களுக்கான வாக்குரிமை மீதானவை, தேர்தல்களின் வரலாற்றில் முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கலாசாரக் குழுக்களை ஆக்கிரமித்திருந்த ஆண்களே, வாக்காளர் தொகுதியையும் ஆக்கிரமித்தனர். இப்போதும் பல நாடுகளில் அந்த நிலைதான் தொடர்கிறது.[1] ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவற்றில் ஆரம்ப காலத் தேர்தல்களை நிலக்கிழார்]]கள் அல்லது ஆளும் வர்க்க ஆண்கள் போன்றோரே ஆக்கிரமித்திருந்தனர்.[1] இருப்பினும், 1920ஆம் ஆண்டு அளவில் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குடியாட்சிகள் அனைத்தும் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிவிட்டன. பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைப் பற்றியும் யோசிக்கத் துவங்கின.[1] ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், சில சமயங்களில் தேர்தல்களுக்கான நியாயமான அணுகலைத் தடுக்க அரசியல் ரீதியான தடுப்புச் சுவர்கள் எழும்பலாயின.[1]
அரசியல், அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என பல சூழல்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பல நாடுகளில் அரசு நிர்வாகத்திற்காக நடத்தப்படுகின்றன. பலவித நிறுவனங்களிலும் அமைப்புகளிலும்கூட தேர்தல்கள் பதவிகளுக்காக நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தொழில் நிறுவனங்களில் இயக்குநர் குழுமம் அமைப்பதற்காக அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கிடையே தேர்தல் நடத்தப்படுகிறது.[2] பல இடங்களில் அரசாங்கத்துக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் அடிப்படைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்தான் போட்டியிடுகிறார்கள்.[3] அரசாங்கத் தேர்தல்களுக்குள்ள செயல்முறைகளையும் விதிகளையும் ஒத்ததாகவே தொழில் நிறுவனங்களில் நடக்கும் தேர்தல்களுக்கும் அமைந்திருக்கின்றன.[4]
எந்த அரசுப் பதவிகளுக்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு பிரதிநிதித்துவ குடியாட்சியில், சில பதவிகள், குறிப்பாக, ஓரளவு தகுதி அல்லது விசேடத் திறமை தேவையாக இருப்பவை, தேர்தல் மூலம் நிரப்பப்படுவதில்லை. உதாரணமாக நீதிபதிகள் அவர்களது பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாது நியமிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த வழக்கத்திற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன: அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பண்டைய ஏதென்ஸ் நகரில் இராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சில நிலைமைகளில், உதாரணமாக சோவியத் ஒன்றியம், கொண்டிருந்ததைப் போல, குடிமக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் இடையில் எலெக்டார் என்னும் ஒரு அடுக்கு இருக்கக் கூடும். இருப்பினும், பெரும்பாலான பிரதிநிதித்துவ குடியாட்சிகளில், இவ்வாறான மறைமுகம் பாராம்பரிய முறைமை என்பதற்கு மேலானதாக இல்லை. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் சட்டசபையால் அல்லது அவரது கட்சியால், நாட்டின் தலைவர் என்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் .
பெரும்பான்மையான குடியாட்சி அரசியல் அமைப்புகளில், பொது நிர்வாகம் அல்லது புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன.
சில பொதுவான தேர்தல் வகைகள்:
பொதுவாக்கெடுப்பு என்னும் கருத்துக்கணிப்பும் குடியாட்சிக்கான ஒரு கருவிதான். இதில் வாக்காளர்கள் தங்கள் முன் வைக்கப்படும் ஒரு கருத்து அல்லது சட்டம் அல்லது கொள்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்கிறார்கள். பொதுவான கொள்கைகள் அல்லது குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்காக அல்ல. கருத்துக் கணிப்புகளை வாக்குப் பெட்டியுடன் இணைக்கலாம் அல்லது தனியாக நடத்தலாம் மற்றும் அவை, அரசியல் சட்ட அமைப்பைப் பொறுத்து, கட்டுப்படுத்தும் தன்மை உடையனவாகவோ அல்லது ஆலோசனை அளிக்கும் இயல்புடையதாகவோ இருக்கலாம். பொதுவாக்கெடுப்புகள் பொதுவாக சட்டசபை மூலமாக அரசாங்கத்தால் நிகழ்த்தப்படுகின்றன. இருப்பினும், குடியாட்சியில், குடிமக்களே நேரடியாக பொதுவாக்கெடுப்பு கோரி மனுத் தாக்கல் செய்யலாம். இது தொடங்குரிமை என்றழைக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து போன்ற நேரடிக் குடியாட்சிகளில் பொது வாக்கெடுப்புகள் பரவலானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன. ஆயினும், அடிப்படையான சுவிஸ் அமைப்பு இன்னமும் பிரதிநிதிகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. குடியாட்சியின் நேரடி முறைகள் பலவற்றில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
இது கருத்துக் கணிப்புகள் என்பதற்கு மிகவும் நெருக்கமாகத் தொடர்புற்றிருக்கிறது மற்றும் ஒருமித்த முறையில் முடிவெடுத்தல் என்னும் வடிவெடுக்கிறது. பண்டைய கிரேக்க அமைப்பை நினைவுறுத்தும் வகையில், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி யார் வேண்டுமானாலும், அதில் ஒருமித்த கருத்து உண்டாகும்வரை, வாதிக்கலாம். ஒருமித்த கருத்து என்னும் தேவையானது, வாதங்கள் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் நீளலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள்தாம் வாதத்தில் கலந்து கொண்டு, வாக்களிப்பார்கள். இந்த அமைப்பில் வயது வரம்புக்கு அவசியமில்லை. காரணம் குழந்தைகளுக்கு இது விரைவில் சலித்து விடும். ஆனால், இந்த அமைப்பு ஒரு சிறிய அளவில் மட்டுமே செயல்படக்கூடியது.
தேர்தல்களில் மையமான ஒரு விஷயம் யார் வாக்களிக்கலாம் என்பதே. வாக்காளர்கள் என்போர் பொதுவாக அனைத்து மக்கள் தொகையையும் உள்ளடக்கியிருப்பதில்லை. அனைத்து நாடுகளிலும் வாக்களிப்பதற்கு ஒரு குறைந்தபட்ச வயதைத் தேவையாகக் கொண்டுள்ளன.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், வேறு பல குழுமத்து மக்களும் வாக்களிப்பதிலிருந்து விலக்கியிருக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, பண்டைய ஏதன்சு குடியாட்சி பெண்களுக்கும், வெளி நாட்டவருக்கும் அல்லது அடிமைகளுக்கும் வாக்குரிமை அளிக்கவில்லை. தொடக்கத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியல் சட்டம் வாக்குரிமை பற்றிய முடிவை மாநிலங்களின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டது. பொதுவாகப் பணக்கார ஆண் வெள்ளையர்களே வாக்குரிமை பெற்றிருந்தனர். இவ்வாறு விலக்கப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வழங்குவதற்கான முயற்சிகளை தேர்தல் சரித்திரத்தின் பெரும்பகுதி விளக்குகிறது.
பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம், பல நாடுகளில் அவர்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது. சுதந்திரமாக வாக்குரிமை அளிக்கும் உரிமை பெறுவது என்பது அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் ஒரு பெரும் இலக்காக இருந்தது. சில நாடுகளைப் பொறுத்தவரை விலக்கப்பட்ட மற்ற குழுக்களுக்கும் (கொடிய குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவர்கள், சில சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்கள் போன்றவர்கள்) வாக்குரிமையைப் பரவலாக்குவது என்பது வாக்குரிமை கோரி வாதாடுபவர்களின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்து வருகிறது.
வாக்குரிமை என்பது ஒரு நாட்டின் குடிமக்களுக்கும் மட்டுமே. இது மேலும் வரையறுக்கப்படலாம். உதாரணமாக குவைத் நாட்டில் 1920ஆம் வருடத்திலிருந்து குடிமக்களாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் ஆகியோர் மட்டுமே வாக்குரிமை கொண்டுள்ளனர். அந்த நாட்டில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், ஒரு நகராட்சியில் வசிப்பவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருந்தால், அந்த நகராட்சிக் தேர்தல்களில் வாக்களிக்கலாம். அவ்வாறு அங்கு வசிப்பவரின் தாய்நாடு என்ன என அறிவது தேவைப்படுவதில்லை.
சில நாடுகளில் வாக்களிப்பது என்பது சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கத் தகுதியுள்ள ஒரு வாக்காளர், வாக்களிக்கவில்லை என்றால், அவருக்கு சிறு அபராதம் போன்ற தண்டனை விதிக்கப்படலாம்.[5]
அரசியல் பதவிக்கு முன்மொழியப்படுவதற்கு பிரதிநிதித்துவக் குடியாட்சி ஒரு நடைமுறையைத் தேவையாக்குகிறது. பல நேரங்களில், முறையான அரசியல் கட்சிகளில், தேர்தலுக்கு முந்தைய ஒரு செயல்முறை வழியாகப் பதவிக்கு முன்மொழிதல் என்பது நடைபெறுகிறது.[6]
முன்மொழிதலைப் பொறுத்தவரை, பாகுபாடு கொண்ட அமைப்புகள் அவ்வாறான பாகுபாடு இல்லாத அமைப்புகளிலிருந்து மாறுபடுகின்றன. பாகுபாடற்ற குடியாட்சியின் ஒரு வகையான நேரடி குடியாட்சியில் தகுதியுள்ள எந்த நபரையும் முன்மொழியலாம். சில பாகுபாடற்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில், முன்மொழிதல்கள் (அல்லது பிரசாரங்கள், தேர்தல் அறிக்கை போன்றவை) நடைபெறுவதே இல்லை. வாக்களிக்க வேண்டிய நேரத்தில், அனைத்து வாக்காளர்களும், அந்த அதிகார எல்லைக்குப் பொருந்துவதாக, சில விதி விலக்குகளைத் தவிர்த்து, குறைந்தபட்ச வயதுத் தகுதி போன்றவை மூலமாக யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், அவ்வாறானவற்றில், தகுதியுள்ள அனைத்து நபர்களையும் வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், அது சாத்தியமல்ல. இருப்பினும், புவியியல் ரீதியாக பெரும் அளவு கொண்டவற்றில் இத்தகைய அமைப்புகள் மறைமுகத் தேர்தல்களை ஈடுபடுத்துகின்றன. இதனால், தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவர்களைப் பற்றிய பரிச்சயம் வாக்காளர்களுக்கு (அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையில்) இருப்பதானது இந்த நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
பாகுபாடு கொண்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில், சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள்தான் முன்மொழியப்பட முடியும், அல்லது, தகுதியுள்ள ஒரு நபரை ஒரு மனுவின் மூலம் முன்மொழியலாம். இதன் விளைவாக வாக்குச் சீட்டில் அவர் பெயர் பட்டியலிப்படும்.
தேர்தல் அமைப்பு முறைகள் என்பவை விரிவான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் மூலமாக வாக்கு என்பதானது, எந்த தனிப்பட்ட நபர்கள் அல்லது அரசியல் கட்சிகள், அதிகாரம் கொண்ட பதவிகளை வகிக்க வேண்டும் என்னும் தீர்மானமாக மாற்றப்படுகிறது.
இதன் முதல் படி, வாக்குகளை என்ணுவதாகும். இதற்காகப் பலவகையான வாக்கு எண்ணிக்கை முறைமைகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவுகள் பெறப்படுகின்றன. பெரும்பான்மையான அமைப்புகளை விகிதாசாரம் அல்லது பெரும்பான்மை ஆகிய பிரிவுகளில் இடலாம். இதில் முதலாவதாகச் சொல்லப்பட்ட முறையில் கட்சி-வாரியான விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கூடுதல் உறுப்பினர் அமைப்பு ஆகியவை அடங்கும். இரண்டாவதாகச் சொல்லப்பட்டதில், முதலில் வெற்றிக் கொடியைத் தொட்டவர் மற்றும் அறுதிப் பெரும்பான்மை ஆகியவை அடங்கும். பல நாடுகளிலும் தேர்தல் சீர்த்திருத்த இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இவை அங்கீகரிக்கும் வாக்கு, இடமாற்றப்படக் கூடிய தனிவாக்கு மற்றும் விருப்பத்தேர்வின் அடிப்படையிலானது அல்லது ஒரு வேட்பாளர் பல சுற்றுக்களில் மற்ற வேட்பாளர்களை சுழற்சி முறையில் ஒவ்வொருவராகத் தோற்கடிப்பது ஆகியவையாகும். இவை, முக்கியமான மற்றும் பெரும் அளவிலான தேர்தல்களில் பாராம்பரியத் தேர்தல் முறையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில நாடுகளிலும் சிறிய அளவிலான தேர்தல்களில் கடைப்பிடிக்கப்படுவது பிரபலமாகி வருகிறது.
ஒரு குடியாட்சி அமைப்பின் அடிக்கற்களாக இருப்பவை அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவை. வாக்குப்பதிவு செய்வதும், அந்த வாக்குச் சீட்டின் உள்ளடக்கமும் இதற்கு விதி விலக்குகள். இரகசிய வாக்கெடுப்பு என்பது ஏறத்தாழ ஒரு நவீன உருவாக்கம்தான். ஆனால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு தற்போது, இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அச்சுறுத்துதலுக்கான விளைவை இது குறைப்பதுதான்.
குடியாட்சியின் அடிப்படை இயல்பு, அதன் வழியாகத் தேர்வாகும் அதிகாரிகள் மக்களுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதேயாகும். தமது பதவியில் நீடித்திருக்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாக்குரிமை மூலமான உரிமை பெறுவதற்கு அவர்கள் மக்களிடம் மீண்டும் செல்ல வேண்டும். இந்தக் காரணத்தினால், பெரும்பான்மையான குடியாட்சி அரசியலமைப்புகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்தல்களை நடத்துவதாக அமைத்துள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களிலும், ஒவ்வொரு மூன்று மற்றும் ஆறு வருடங்களில் தேர்தல் நடைபெறுகிறது, இதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பிரதிநிதிகளின் இல்லம் என்பது விதிவிலக்காகும். இதற்கான தேர்தல் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் நடைபெறுகிறது. கால அட்டவணை இடுதல் என்பதில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் ஏழு வருடங்களுக்கு ஒருமுறையும் பின்லாந்தின் குடியரசுத் தலைவர் ஆறு வருடங்களுக்கு ஒருமுறையும், பிரான்சின் குடியரசுத் தலைவர் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையும், ரஷ்யக் குடியரசுத் தலைவர் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்தல் தேதிகளை முன்பே தீர்மானித்து உறுதி செய்வது அவற்றின் நியாயத்தன்மை மற்றும் முன்னறிவிக்கப்படக் கூடிய தன்மை ஆகிய சாதகங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இவற்றால் பிரசார காலம் நீண்டு விடலாம். மேலும், (நாடாளுமன்ற அமைப்பு) சட்டசபையைக் கலைப்பது, என்பது அவ்வாறான கலைப்பு இயலாத காலகட்டத்தில் (உதாரணமாக ஒரு போர் மூளும் காலத்தில்) நேர்கையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. மற்ற அரசுகள் (உதா: ஐக்கிய இராச்சியம்) பதவியில் நீடிப்பதற்கு அதிகபட்சக் காலம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குள் எப்போது தேர்தலை நடத்துவது என்பதை நிர்வாகம் தீர்மானிக்கும். நடைமுறையில் அரசாங்கம் ஏறத்தாழ அதன் முழுக் காலத்திற்கும் அதிகாரத்தில் இருக்கும் என்பது இதன் பொருளாகும். இதனால், அது தனக்கு மிகவும் சாதகமான ஒரு கால கட்டத்தில் தேர்தலை நடத்தத் தெரிவு செய்யலாம் (அதாவது விசேஷமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் இயற்றப்படுதல் போன்றவை ஏதும் நடைபெறாதவரையில்). இந்தக் கணக்கீடு, அதன் செயல்பாடு பற்றிய கருத்துக் கணிப்பு மற்றும் அதன் பெரும்பான்மை அளவு போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது.
தேர்தல்களை அறிவிக்கையில், அரசியல்வாதிகளும் அவரது ஆதரவாளர்களும், ஒருவருக்கொருவரான போட்டியில், வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று அவர்களது ஓட்டுக்களைக் கோருவது பரப்புரை எனப்படுகிறது. ஒரு பரப்புரையில் ஆதரவாளர்கள் முறைமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படலாம், அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று, பரப்புரை விளம்பரம் வழியாக பயன்படுத்தப்படுவதனால் பொதுவான ஒரு ஆதரவைக் கொண்டிருக்கலாம். அரசியல் கணிப்பு வழியாகத் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்பது அரசியல் அறிவியலாளர்களிடையே பொதுவாக உள்ளது.
2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்தான் அதிகபட்சப் பரப்புரைச் செலவினம் (7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). அதனைத் தொடர்ந்து இந்தியப் பொதுத் தேர்தல், 2014தான் அதிகபட்ச செலவினம் (5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)கொண்டதாகும்..[7]
சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ள பல நாடுகளில், சர்வதேச தர அளவுகோலின்படி தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் ஏன் நடப்பதில்லை என்பதற்கு அந்தச் சமயத்தில் உள்ள அரசாங்கத்தின் இடையூறே மிகவும் பொதுவான காரணமாகும். சர்வாதிகாரிகள், பரவலான கருத்து அவர்களை அகற்றுவதற்குச் சார்பாக இருப்பினும், தாமே பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிர்வாகத்தை (காவல்துறை, ராணுவச் சட்டம், தணிக்கை முறை, தேர்தலில் உடல் வலிமைப் பிரயோகம் போன்றவை) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். சட்டசபையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மை அல்லது மிருகப் பெரும்பான்மையான சக்தியைப் பயன்படுத்தி (குற்றவியல் சட்டங்களை இயற்றுவது, தகுதி மற்றும் மாவட்ட எல்லை போன்றவற்றை மறுவரையறுப்பது ஆகியவற்றை உள்ளிட்ட தேர்தல் இயங்குமுறையை வரையறுப்பது), அச்சபையின் அதிகாரம் ஒரு தேர்தலின் மூலமாக மாற்றுக் கட்சியினருக்குச் சென்று விடாதபடி தடுக்கலாம்.
அரசாங்கம் சாராத அமைப்புகளும் தேர்தலில் தலையிடலாம். இவை உடல் ரீதியான வலிமை, வாய்மொழி அச்சுறுத்தல் அல்லது மோசடி ஆகியவற்றில் ஈடுபடலாம். இவற்றால் வாக்களிப்பதிலோ வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுவதிலோ முறைகேடுகள் விளையலாம்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் பாராம்பரியத்தைக் கொண்டுள்ள பல நாடுகளில், தேர்தல் மோசடிகளைக் கண்காணிப்பது மற்றும் குறைப்பது என்பது தொடர்ச்சியான ஒரு பெரும் பணியாக உள்ளது.
ஒரு தேர்தல் "சுதந்திரமான மற்றும் நியாயமான" முறையில் நடப்பதற்குப் பல கட்டங்களில் பிரச்சினைகள் உருவாகின்றன:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.