தாய்லாந்தின் பண்பாடு (Thailand's Culture), இந்திய, சீன, கம்போடிய மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டுத் தாக்கத்தினைப் பெருமளவுக் கொண்டுள்ளது[1]. தாய்லாந்து மக்களின் பண்பாட்டில் முதன்மையாக ஆன்ம வாதம், இந்தியாவின் பண்பாடு, பௌத்தச் சமயம் ஆகியவற்றின் செல்வாக்கு அதிகளவில் காணப்படுகிறது.

Thumb
பழங்கதை மரபுச்சார்பான கின்னரர் சிலை, பாங்காக்

வாழ்முறை

சமயங்கள்

Thumb
புத்தமதப் புகுமுக நிலையாளர்கள் (Śrāmaṇera) ஊதுபத்தி பெற்றுகொள்ளும் காட்சி

தாய்லாந்தில் தோராயமாக 94%-95% மக்கள் தேரவாத பௌத்தம் பிரிவினைச் சார்ந்தவர்களாக உள்ளார்கள். முகமதியர்கள் (5-6%), கிருத்துவர்கள் (1%), மகாயான பௌத்தப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், பிற சமயத்தவர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர்[2]. தேரவாத பௌத்தம் அரசு ஆதரவுப் பெற்றச் சமயமாகும். எனவே, புத்தபிக்குகள் பல்வேறு அரசுச் சலுகைகளைப் (உதாரணம்: இலவசப் போக்குவரத்து) பெறுகிறார்கள்.

தாய்லாந்தில் புத்த சமயம் ஆன்மா, முன்னோர்களின் ஆவிகள் போன்ற பல்வேறு மரபுவழி நம்பிக்கைகளினால் தாக்கமடைந்துள்ளதால் புத்தமத அண்டவியலில் இத்தகுக் கருத்துகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தாய்லாந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியில் மரத்தாலான சிற்றுருவ வீடுகளை, "ஆவி வீடுகள்" என்னும் பெயரில் வைத்திருக்கிறார்கள். இங்கு அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்த ஆவிகள் வசிப்பதாக நம்புகிறார்கள். இந்த ஆவிகளுக்கு உணவு, பானங்களைப் படையலிடுகிறார்கள். இதன் மூலம் ஆவிகளை மகிழ்வுபடுத்துவதாக நம்புகிறார்கள். இல்லையெனில், இந்த ஆவிகள் வீடுகளுக்குள் புகுந்து, வாழ்வதால் நாசம் விளைவித்துவிடுவதாக நம்புகிறார்கள். இத்தகு ஆவி வீடுகள் தாய்லாந்துத் தெருக்கள், பொது இடங்களிலும் காணப்படுகின்றன. இங்குப் பொதுமக்கள் காணிக்கைச் செலுத்தி வழிபடுகிறார்கள்[3].

தேரவாத பௌத்தத்திற்கு முன்பு இந்து சமயமும், மகாயான பௌத்த மதமும் தாய்லாந்தில் இருந்தன. இந்த இரு சமயங்களின் தாக்கமும் நாட்டுப்புறக் கலைகளில் இன்றும் இருப்பதைக் காணலாம். தாய்லாந்து மக்களின் நாட்டுப்புறச் சமய நம்பிக்கைகளில் கோவில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தாய்லாந்தின் படிமவியலில் சில சமயங்களில் போதிசத்துவர்களின் ஒரு வடிவம் இணைக்கப்பட்டிருப்பதிலிருந்து மகாயான புத்தமதத்தின் தாக்கம் உள்ளதையும் அறியலாம்[3][4].

திருமணம்

Thumb
தாய்லாந்தின் பாரம்பரியத் திருமணம்

தாய்லாந்து முறைப் புத்த திருமணச் சடங்குகள் பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பூசைச் செய்து வழிபாடுச் செய்தல், புத்தர் உருவத்திற்கும், புத்த பிக்குகளுக்கும் உணவு, பொருட்களை வைத்துப் படையலிடுதல் போன்ற புத்த சமயம் சார்ந்தவை ஒரு பிரிவாகவும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய, திருமணத் தம்பதியினரின் குடும்பத்தை மையமாகக் கொண்ட, புத்த சமயம் சாராத மற்றொரு பிரிவாகவும் உள்ளன.

பழைய காலத்தில், புத்தபிக்குகள் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். ஈமச் சடங்குகளில் புத்தபிக்குகள் இருப்பது அவசியமாக இருந்ததால் திருமணத்தில் அவர்கள் இருப்பது ஒரு கெட்டச் சகுனமாகக் கருதப்பட்டது. திருமணம் நிகழும் முன்போ அல்லது நடைபெற்ற பின்போ மணமக்கள் புத்த விகாரைகளுக்குச் சென்று ஆசிர்வாதம் பெறுவது, திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிப்பது போன்றவற்றில் புத்தபிக்குகளின் பங்கு இருந்தது. புத்தசமயம் சாராத திருமணச் சடங்குகள் விகாரைகளுக்கு வெளியில், வேறொரு நாளில் நடைபெற்றன. ஆனால், தற்பொழுது இத்தகுத் தடைகள் பெருமளவுத் தளர்த்தப்பட்டுள்ளன. புத்தமதம் சாராத சடங்குகள் நடக்கும் நாளில் மணமக்கள் விகாரைகளுக்குத் செல்வது, புத்த விகாரைகளிலேயே திருமணம் நடைபெறுவது போன்றவை சாதாரணமாக நிகழ்கின்றன. புத்தமதம் சார்ந்த சடங்குகளின்போது மணமக்கள் புத்தரின் உருவத்தை வணங்கி, புத்த மந்திரங்களை ஓதி, விளக்கு, ஊதுபத்தி ஏற்றி வழிபடுதல் வழக்கமாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.