From Wikipedia, the free encyclopedia
தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் தீவின் வரலாற்றுப் பெயராகும். கிரேக்கப் புவியியலாளரான மெகஸ்தெனஸ் என்பவர் கிட்டத்தட்ட கி.மு. 290 இல் ஐரோப்பியர்களுக்கு இது குறித்து முதன் முதலில் தெரியப்படுத்தினார். பின்னர் இது தொலெமியின் நூலில் ஆசியாக் கண்டத்துக்குத் தெற்கில் இருப்பதாகக் காட்டப்பட்ட ஒரு பெரிய தீவைக் குறிக்கப் பாவிக்கப்பட்டது.[1] இப் பெயர் 1602 இல் எழுதப்பட்ட தொம்மாசோ கம்பனெல்லாவின் சிவிட்டாஸ் சோலிஸ் (Tommaso Campanellas Civitas Solis) என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பெயரால் தொலமியின் நிலப்படத்தில் குறிக்கப்படும் தீவு எது என்பது நீண்ட காலமாகத் தெளிவில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தப்ரபேன் என அடையாளம் காணப்பட்ட இடங்களுள் பின்வருவன அடங்கும்:
தப்ரபேன், லூயிஸ் டி கமோஸ் (1524–1580) என்பவர் எழுதிய ஒஸ் லூசியாடாஸ் என்னும் போர்த்துக்கேய இதிகாசக் கவிதையின் முதற் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தப்ரபேனை அடையாளம் காண்பதில், தொலமியின் நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ள அதன் அளவு ஒரு முக்கியமான பிரச்சினை. தப்ரபேன் மிகவும் பெரிதாகக் காட்டப்பட்டிருந்த அதே வேளை, இந்தியா அதன் உண்மையான அளவை விடவும் மிகவும் சிறிதாகக் காட்டப்பட்டிருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட பிரெஞ்சுப் புவியியலாளரான கொசீன் (Gosseinn) என்பவர், இந்தியாவின் தக்காணப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரித்து தப்ரபேனுடன் சேர்த்துக் காட்டியதாலேயே தப்ரபேன் இவ்வளவு பெரிதாகியது என்னும் கருத்தை அவர் முன்வைத்தார். பெரிய சிந்தனையாளனாக விளங்கிய இம்மானுவேல் கான்ட், தப்ரபேன் என்பது மடகாசுக்கர் தீவைக் குறிப்பதாகக் கூறினார். ஜியோவன்னி டொமினிக் கசினி என்பார், தப்ரபேனை இன்றைய மாலைதீவுகள் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு தீவாகக் காட்ட முற்பட்டார். இது அலைகளின் தாக்கம் காரணமாகக் கடலுள் மூழ்கி விட்டதாக அவர் கூறினார்.
இலங்கையின் மேற்குக் கரையில் இருந்த குதிரைமலை என்னும் பழங்காலத் துறைமுகம், அப்பகுதியின் மண்ணின் செப்பு நிறம் காரணமாகத் தம்பபண்ணி எனும் பெயரால் அழைக்கப்பட்டது என்பது மகாவம்சத்தின் விளக்கம். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஊடாகச் செல்லும் தாமிரபரிணி (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) ஆறு கடலில் கலக்கும் இடத்துக்கு எதிரே இருப்பதால் அப்பகுதியில் இருந்து குடியேறிய மக்கள் இதற்குத் தாமிரபரிணி எனப் பெயர் இட்டிருக்கலாம் என்றும் தாமிரபரிணியின் பாளி மொழி வடிவமே தம்பபண்ணி என்னும் பெயர் என்பதும் இன்னொரு கருத்து.[2] தப்ரபேன் என்பது, தாம்ரபர்ணி என்பதன் கிரேக்க மொழிப்படுத்தலாக இருக்கக்கூடும். அதேவேளை, தொலமியின் தப்ரபேனின் நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள பல இடப்பெயர்களையும் இலங்கையின் இடப்பெயர்களுடன் இலகுவாக அடையாளம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக அனுரோக்ராமு, நாகதிபி, முன்டோட்டு போன்றவை பழங்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இலங்கையின், அனுராதபுரம், நாகதீபம், மாதோட்டம் போன்ற இடங்களுடன் பொருந்தி வருகின்றன. தவிர, இலங்கை மிகப் பழைய காலம் தொட்டே கிரேக்கர்களுக்குப் பழக்கமானது. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே கிரேக்க வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் தொடர்பு கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.
இந்தக் கருத்து 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டது. இத்தாலியப் பயணியான நிக்கோலோ டி கொன்டி என்பவரே முதலில் தப்ரபேனும் இலங்கையும் வேறு வேறானவை என்ற கருத்தை முன்வைத்தார். தப்ரபேனை இவர் சுமாத்ராவுடன் அடையாளம் கண்டார். இதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் ஆர்வம் கொண்ட பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாயினர்.[3]
கிரேக்கர்களின் தப்ரபேன் பற்றிய விபரிப்புகள் பெருமளவுக்கு சுமாத்திராவுக்கும் பொருந்தக்கூடியவை. தொலமியின் தப்ரபேனுக்கு யானைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியோடு தொடர்பு கூறப்படுகிறது. இதுவும் இலங்கையைப் போலவே சுமாத்திராவுக்கும் பொருத்தமாக அமைகின்றது.[4] 1580ல் செபாசுட்டியன் முன்சுட்டர் (Sebastian Munster) என்னும் நிலப்பட வரைவாளர் வரைந்த தப்ரபேனின் நிலப்படம், தப்ரபேனை சுமாத்திராவுடன் அடையாளம் காண்கிறது. இந்நிலப்படம் Sumatra Ein Grosser Insel’(சுமாத்ரா, ஒரு பெரிய தீவு) என்னும் செருமன் மொழித் தலைப்புடன் கூடியது.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.