From Wikipedia, the free encyclopedia
ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843) பிரித்தானிய குடியேற்றக்கால நிருவாகியும், கல்விமானும், வரலாற்றாளரும் ஆவார். இலங்கைக் குடிமை சேவையின் உறுப்பினராக இருந்த இவர், அரச அதிபர், உதவி குடியேற்ற செயலாளர், பொருளாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர். இவரே பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தின் ஓலைச்சுவடிகளை 1937இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.[1] இவரின் இச்செயலின் நினைவாகவே கொழும்பு வேத்தியர் கல்லூரியில் டேனர் பரிசு எனும் கௌரவப் பரிசு வழங்கப்படுகிறது. ஜேம்ஸ் பிரின்ஸ்செப், காப்டன் எட்வர்ட் சிமித் ஆகியோருடன் சேர்ந்து அசோகரின் தூண்களின் கல்வெட்டுகளை மீண்டும் வெளிக்கொணர்ந்தார்.
ஜோர்ஜ் டர்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1799 மார்ச் 11 இல் பிறந்தார். இவரது தந்தை ஜோர்ஜ் டர்னர் (மூத்தவர்) பிரித்தானிய அரசியல்வாதி வின்டர்டன் கோமகன் எட்வர்ட் கார்த்-டர்னரின் மகன் ஆவார். ஜோர்ஜ் டர்னர் மூத்தவர் இந்தியாவுக்கு வந்து பிரித்தானியரின் வங்காள பூர்வீகக் காலாட்படையில் இணைந்தார். 1783 இல் 73-வது படைப்பிரிவுடன் இலங்கை வந்தார். 1795 இல், யாழ்ப்பாணக் கோட்டையின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1797 இல் மன்னார்க் கோட்டையின் தளபதியானார். இவர் எமிலி டி போசெட் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1799 இல், மன்னார் முத்துக்குளிப்பில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆளுநரால் நிறுவப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கட்டளைத் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முத்துக்குளிப்பு "மொத்த மற்றும் கணக்கிட முடியாத மோசடி" என்று கண்டறியப்பட்டதை அடுத்து, ஜோர்ஜ் டர்னர் (மூத்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிகத்தில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியடைய முடியாமல், மீண்டும் 1807 இல் யாழ்ப்பாணம் திரும்பினார். வன்னியில் வருவாய் முகவராகப் பணியாற்றினார், பின்னர் 1813 இல் யாழ்ப்பாண உதவி ஆட்சியர், குற்றவியல் நீதவான் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டார். இவர் 1813 ஏப்ரலில் இறந்தார்.[2]
இவருடைய ஆறு பிள்ளைகளில் மூத்தவர் ஜோர்ஜ் டர்னர் (இளை). ஏனையோர் எட்வர்ட் ஆர்ச்சர், ஆன் எமிலி, பிரான்செசு, எலிசபெத், ஜேன் ஆகியோராவர். 1811 இல் இங்கிலாந்து சென்று சேர் தோமசு மெயிட்லண்டின் ஆதரவில் கல்வியைத் தொடர்ந்தார்.
படிப்பை முடிந்து 1820 இலங்கை திரும்பிய இவர், இறைவரி ஆணையரின் உதவியாளராகவும், பின்னர் முதன்மைச் செயலரின் உதவியாளராகவும் பணியாற்றினார். 1822 இல் களுத்துறை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1825 இல் சப்ரகமுவா மாகாண அரச செயலாளராக நியமிக்கப்பட்டார். 1828 இல் கண்டியில் இறைவரி ஆணையராக நியமனம் பெற்றார். 1833 இல் மத்திய மாகாணத்தின் முதலாவது அரச முகவராக நியமனம் பெற்றார். 1841 இல், கொழும்பில் குடியேற்றப் பகுதி செயலாளரின் உதவியாளராகவும், பின்னர் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். சுகவீனம் காரணமாக அரசுப் பணியில் இருந்து இளைப்பாறி, 1841 செப்டம்பர் 21 இல் இலங்கையில் இருந்து பம்பாய் சென்று அங்கிருந்து இங்கிலாந்து திரும்பினார். 1843 ஏப்ரல் 10 இல் இவர் இத்தாலியில் நேப்பிள்சு நகரில் தனது 44-வது அகவையில் காலமானார்.
இவர் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ரோயல் ஆசியக் கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவரது இறப்பை அடுத்து, அவரது நினைவாக நிதி திரட்டப்பட்டு கண்டி புனித பவுல் தேவாலயத்தில் ஒரு நினைவுக் கல் நாட்டப்பட்டது. மீதமான நிதியின் மூலம் கொழும்பு றோயல் கல்லூரியில் டேனர் பரிசு எனும் கௌரவப் பரிசு வழங்கப்படுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.