சிட்ரிக் அமில சுழற்சி
From Wikipedia, the free encyclopedia
சிட்ரிக் அமில சுழற்சி (Citric acid cycle) என்பது காற்று வாழ் உயிரினங்கள் பயன்படுத்திக் கொள்ளும் தொடர்ச்சியான பல வேதிவினைகளின் சுழற்சித் தொகுப்பாகும். இச்சுழற்சி டிரைகார்பாக்சிலிக் அமிலச் சுழற்சி அல்லது கிரெப் சுழற்சி [1][2] என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. காற்று வாழ் உயிரினங்கள் தங்களிடம் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை அசிட்டைல் இணைநொதி மூலம் ஆக்சிசனேற்றம் செய்து செலவழிக்கின்றன. மேற்கூறப்பட்டுள்ள ஆற்றலானது கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதம்|புரதங்களை]] கார்பனீராக்சைடு மற்றும் அடினோசின் டிரைபாசுப்பேட்டு வடிவில் வேதி ஆற்றலாக மாற்றப்பட்டு காற்று வாழ் உயிரினங்களின் உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இச்சுழற்சியானது கூடுதலாக சில அமினோ அமிலங்கள் தயாரிப்பதற்கும், நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு போன்ற ஒடுக்கும் முகவர்களை தயாரிக்கவும் உதவும் முன்னோடிச் செயல்முறையாக இச்சுழற்சி பயன்படுகிறது. எண்ணற்ற உயிர் வேதியியல் செயல்முறைகளுக்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. சிட்ரிக் அமில சுழற்சியானது செல்லுலார் வளர்சிதை மாற்றத்தின் ஆரம்பகால வழிமுறைகளில் ஒன்றாகும் எனவும், அது உயிரற்றவைகளிலுருந்து இயல்பாகத் தோன்றியிருக்கலாம் எனவும் பல உயிர்வேதியியல் பாதைகளுக்கான இதன் மைய முக்கியத்துவம் பரிந்துரைக்கிறது [3][4].
சிட்ரிக் அமில சுழற்சி என்ற வளர்சிதைமாற்ற பாதையின் பெயர் சிட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்டதாகும். சிட்ரிக் அமிலம் என்பது டிரைகார்பாக்சிலிக் அமிலத்தின் ஒரு வகையாகும். சிட்ரிக் அமிலம் பெரும்பாலும் உயிரியல் pH இல் மேலாதிக்கம் செய்கின்ற அயனியாக்க வடிவமான சிட்ரேட்டு என்று அழைக்கப்படுகிறது. முதலில் இச்சிட்ரேட்டு பயன்படுத்தப்பட்டு மீண்டும் பல்வேறு வினைகள் மூலமாக மறு உற்பத்தியாகி சுழற்சியை நிறைவு செய்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியானது அசிட்டேட்டை அசிட்டைல் இணை நொதி மற்றும் தண்ணீர் வடிவில் பயன்படுத்திக் கொள்கிறது. NAD+ அயனியை NADH ஆக ஒடுக்கமடையச் செய்து கார்பனீராக்சைடை உற்பத்தி செய்கிறது. கார்பனீராக்சைடு இங்கு ஒரு கழிவு உடன்விளைபொருளாகும். சிட்ரிக் அமில சுழற்சியில் விளையும் NADH ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினை பாதைக்கு ஊட்டமளிக்கிறது. நெருக்கமான இணைப்பைக் கொண்ட இவ்விரு பாதைகளின் நிகர விளைவு என்னவெனில் சத்துகள் யாவும் ஆக்சிசனேற்றமடைந்து ஏடிபி என்ற பயன்படத்தக்க வேதி ஆற்றலாக உருவாகிறது என்பது மட்டுமேயாகும்.
யுகேரியோட்டு செல்களில் இந்த சிட்ரிக் அமில சுழற்சியானது மைட்டோகாண்டரியாவின் சிறுமணிகளில் தோன்றுகிறது. மைட்டோகாண்டரியாக்கள் இல்லாத பாக்டிரியா போன்ற புரோகேரியோட்டிக் செல்களில் சிட்ரிக் அமில சுழற்சி வினைகள் சைட்டோசோலில் புரோட்டான் மாறிலியுடன் நடைபெறுகிறது. ஏடிபி உற்பத்தியானது மைட்ரோகாண்டரியாவின் உட்புற சவ்வுக்குள் நிகழ்வதற்குப் பதிலாக வெளிப்புறத்தில் நிகழ்வதற்கு இச்சுழற்சி உதவுகிறது.