From Wikipedia, the free encyclopedia
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) [1] பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் [2] புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும்.
சாக்கிரட்டீசு | |
---|---|
பிறப்பு | கி.மு 470/469 (தோராயமாக) ஏதென்சு |
இறப்பு | பிப்ரவரி 15, கி.மு. 399 ஏதென்சு |
இறப்பிற்கான காரணம் | நஞ்சால் கொல்லப்பட்டார். |
காலம் | பண்டைய மெய்ப்பொருளியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | பண்டைய கிரேக்கம் |
முக்கிய ஆர்வங்கள் | அறிவாய்வியல், நன்னெறி |
சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன.
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் [3] அல்லது சாக்ரடீசு வினா [4][5] எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன.[6] செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.[7] இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன.[8][9]
சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது [10][11].
சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ´ஏதென்சில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார்.
சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீசிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீசிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீசின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீசை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார். பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார்.
இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது. சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.
எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலகட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.
220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.
“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின.
சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.