From Wikipedia, the free encyclopedia
திருநங்கை என அழைக்கப்படும் மாற்றுப்பலினத்தவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக் கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது கூவாகம் கிராமம் இங்கு திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தவிர விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் பெண்ணைவலம் கிராமத்தில் வைகாசி மாதம் நடக்கும் ,கண்டாச்சிபுரம் வட்டம் ஒட்டம்பட்டு மற்றும் அருணாபுரம் ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார் குப்பம், மடுகரை, சிதம்பரம் அருகில் கொத்தடை, தேவனாம்பட்டினம் மற்றும் வானூர் வட்டம் தைலாபுரம் பகுதிகளிலும் கூத்தாண்டவர் கோயில்கள் இருக்கின்றன. இருப்பினும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோயில்தான் மிகவும் புகழ்பெற்றது.
"ஐயாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு"[1]
—கோபி ஷங்கர்,ஸ்ருஷ்டி மதுரை
மகாபாரதப் பெருங்காதையில் அர்ச்சுனனால் கவரப்பட்டு குழந்தை வரம் பெற்ற வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க "எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்" என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாக இருப்பவர்கள் அர்ஜுனன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.
அர்ஜீனனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாகக் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.
சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் பூசாரியின் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருக்கின்றனர். பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அழுகளம் கொண்டு செல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடப்பதால் கூவாகம் சுற்று வட்ட கிராம மக்கள் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர்.[2]
சித்திரை மாதம் பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து திருநங்கைகள் விழுப்புரம் வந்து விடுகின்றனர். இந்நிகழ்வு இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வரும் திருநங்கைளை ஒன்றினைக்கும் விழாவாக அமைகிறது. திருநங்கைகள் சந்திக்கவும், அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் கலைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.