From Wikipedia, the free encyclopedia
குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை (Treaty of Guadalupe Hidalgo) என்பது ஓர் அமைதி உடன்படிக்கையாகும். இது அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை நிறுத்தும் பொருட்டு 1848ல் உருவானது. மெக்சிக்கோ நகரம் வீழ்ந்ததாலும் மெக்சிக்கோ படைகள் அமெரிக்க படைகளிடம் தொடர் தோல்வி கண்டதாலும் மெக்சிக்கோ அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்கி இவ்வுடன்படிக்கை உருவானது [1]. இதன் படி அமெரிக்கா மெக்சிக்கோவுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுப்பதோடு, மெக்சிக்கோ அமெரிக்கக் குடிகளுக்கு தர வேண்டிய 3.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்க வேண்டும். மெக்சிக்கோ, டெக்சாசின் முழு உரிமையை அமெரிக்காவினுடையது என்பதை ஏற்றது. ரியோ கிராண்டே எல்லையாகக் குறிக்கப்பட்டது. உடன்படிக்கைப்படி தற்கால கலிபோர்னியா, நெவாடா, நியூ மெக்சிக்கோ, யூட்டா, அரிசோனா, கொலராடோவின் பெரும் பகுதிகள்; டெக்சாசு, கேன்சசு, வயோமிங், ஓக்லகோமா ஆகியவற்றின் பகுதிகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. இதற்கு இழப்பீடாக மெக்சிக்கோ $15 மில்லியனைப் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ள மெக்சிக்கர்கள் அங்கே இருந்தால் அவர்களுக்கு முழு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கும் இவ்வுடன்படிக்கை உறுதி கூறியது. அப்பகுதிகளில் இருந்த மக்களில் 90% அங்கே தங்கினர், 10% மட்டுமே மெக்சிக்கோவுக்கு சென்றனர். இந்த உடன்படிக்கையை விக் கட்சியினர் எதிர்த்த போதும் 38-14 என்ற வாக்கு அடிப்படையில் அமெரிக்க மேலவையில் நிறைவேறியது. விக் கட்சியினர் போரையும் புதிதாக நிலங்களை அமெரிக்காவுடன் இணைப்பதையும் எதிர்த்தனர். இவ்வுடன்படிக்கையில் உட்கூறு பத்தை மேலவை நீக்கிய பின்பே ஏற்றது. உட்கூறு 10 மெக்சிக்கோ நிலங்களுக்கு அளித்த மானியங்களை அமெரிக்கா மதித்து அதை செயல்படுத்த வேண்டும் என்பது ஆகும். [2] 1848ல் இருந்து தொல் அமெரிக்கர்களும் மெக்சிக்க அமெரிக்கர்களும் இவ்வுடன்படிக்கையை காட்டி சம உரிமைக்காக போராடினாலும் மற்ற அமெரிக்கர்களுக்கு கிடைத்த உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 1930 இல் தான் அவர்களுக்கு முழு அமெரிக்க உரிமை கிடைத்தது, உடன்படிக்கையின் உட்கூறு எட்டும் ஒன்பதும் அமெரிக்காவில் தங்கிவிட்ட மெக்சிக்கர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுத்த போதிலும் அமெரிக்க நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராகவே பல முறை தீர்ப்புக் கிடைத்தது.[3]
அமெரிக்கா சார்பாக நிக்கோலசு டிரிசுட் என்பவரையும் அவருக்கு உதவ போரில் ஈடுபட்ட தளபதி வின்பீல்ட் இசுகாட்டு என்பவரையும் அதிபர் ஜேம்சு போல்க் நியமித்தார். மெக்சிக்க தளபதி சாந்தா அனா உடனான இவர்கள் பேச்சுவார்த்தை இரு முறை தோல்வியில் முடிந்தது. இதனால் மெக்சிக்கோ இராணுவத்தை தோற்கடித்தால் தான் உடன்படிக்கைக்கு மெக்சிக்கர்கள் முன் வருவார்கள் என டிரிசுட்டு முடிவுசெய்தார். சீர்குழைந்த மெக்சிக்கோ அரசின் டான் பெர்டோ, டான் மிகுல் அட்ரிசுடைன், டான் கான்சாகா குவேவசு ஆகியோருடனான சிறப்பு ஆணையத்துடன் டிரிசுடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.[4] மெக்சிக்க குழுவுடன் வாசிங்டன், டி. சி. யில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அதிபர் ஜேம்சு போல்க் கருதியதால் டிரிசுட்டை பேச்சுவார்த்தை நடத்தாமல் திரும்பி வருமாறு அழைத்தார். அதிபரின் தகவல் டிரிசுட்டுக்கு போய் சேர 6 வாரம் ஆகியது. மெக்சிக்கோ குழுவிடம் இருந்து சில உறுதிகள் கிடைத்ததாலும் வாசிங்டனில் உள்ளவர்களுக்கு மெக்சிக்கோவின் உண்மை நிலை புரியாது என்று கருதியதாலும் அதிபரின் ஆணைக்கெதிராக டிரிசுட்டு மெக்சிக்கோ குழுவினருடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்படிக்கையை கண்டார். விரைவாக உடன்படக்கையை அதிபருக்கு கிடைக்குமாறு செய்தார் உடன்படிக்கை அதிபருக்கு முழுமனநிறைவை அளித்ததாலும் தேர்தல் நெருங்கியதாலும் அதிபர் அதை விரைவாக அமெரிக்க மேலவைக்கு அனுப்பினார். அங்கு அது உடன்படிக்கையின் பத்தாவது உட்கூறை நீக்கி 38-14 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேறியது.
இவ்வுடன்படிக்கையில் இருபத்திமூன்று உட்கூறுகள் இருந்தன. அமெரிக்க மேலவை உட்கூறு பத்தை நீக்கி இதற்கு ஒப்புதல் வழங்கியதால் இருபத்திஇரண்டு உட்கூறுகளே நடைமுறை படுத்தப்பட்டன. அமெரிக்காவால் செயல்படுத்த முடியாததால் உட்கூறு பதினொன்று கேட்சுடன் நிலவாங்கலின் போது நீக்கிக்கொள்ளப்பட்டது.
உட்கூறு ஐந்து அமெரிக்காவும் மெக்சிக்கோவுக்கும் ஆன எல்லையை விளக்கியது. ரியோ கிராண்டேவின் முகத்துவாரத்திவலிருந்து நியு மெக்சிக்கோவின் தென் எல்லையை அடையும் வரை ரியோ கிராண்டே எல்லையாகவும் நியுமெக்சிக்கோவின் தென் எல்லையிலிருந்து அதன் மேற்கு எல்லை வரை நியூ மெக்சிகோவின் தெற்கு எல்லையை பயன்படுத்துவது என்றும் நியூ மெக்சிகோவின் மேற்கு எல்லையில் உள்ள கிலா ஆற்றிலிருந்து அது கொலராடோ ஆற்றை அடைவது வரை கிலா ஆற்றை எல்லையாக கொள்வது எனவும் ஆல்ட்டா கலிபோர்னியாவையும் பாகா கலிபோர்னியாவையும் பிரித்து பசிபிக் பெருங்கடல் வரை செல்லவதற்கு, கிலா ஆறு கொலராடோ ஆற்றை அடையும் இடத்திலிருந்து கிடைகோடு வரைந்து பசிபிக் பெருங்கடல் வரை செல்வது என்றும் முடிவாகியது. நியூ மெக்சிக்கோவின் தெற்கு & மேற்கு எல்லையை 1847ல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பாளர் டிசுடர்னெல் வெளியிட்ட ஐக்கிய மெக்சிக்கோவின் வரைபடம் கொண்டு அறிந்து பிரித்தார்கள்.
உட்கூறு பதினொன்று அமெரிக்கா மெக்சிக்கோவை தொல் இந்தியர்களின் தாக்குதலில் இருந்து காப்பதோடு அவ்வாறு தாக்கி எடுத்து செல்லப்படும் எந்த பொருளையும் அமெரிக்கர்கள் வாங்குவதை தடை செய்தது. மெக்சிக்கோ அமெரிக்கா தொல் இந்தியர்களான அப்பாச்சி காமன்சி குழுக்கள் தன் மீது தாக்குதல் நடத்துவதை ஆதரித்து என ஐயம் கொண்டிருந்தது. இந்த உட்கூறு மூலம் மெக்சிக்கோவுக்கு அந்த சிக்கல் தீர்ந்தது.
உட்கூறு பதினொன்றை நடைமுறைபடுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில் அமெரிக்கா தன் படைகளை நிறுத்திய போதிலும் அமெரிக்க தொல்குடிகள் மெக்சிக்கோ பகுதியை தாக்குவதை நிறுத்தமுடியவில்லை, மெக்சிக்கோ அமெரிக்க தொல்குடிகளால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக 1848 முதல் 1853 வரையான காலகட்டத்தில் மட்டும் 366 முறை அமெரிக்காவிடம் முறையிட்டிருந்தது. கேட்சுடன் நிலவாங்கலின் போது உட்கூறு 11 ல் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.