கடமான்
From Wikipedia, the free encyclopedia
கடமான் (ஒலிப்புⓘ) (Sambar – Rusa unicolor) (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். எல்லாத் திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்குப் பரவலாக எல்லா மக்களிடையேயும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக்கப்படுகின்றன. மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது கடமான் ஆகும். ஆங்கிலத்தில் கடமான் வகைகளை ‘எல்க்’ (Elk) என அழைப்பர். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முட்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ்[2], புளோரிடா மாநிலங்களிலும்[3], ஆஸ்திரேலியா[4], நியுசிலாந்து[5], தென் ஆப்பிரிக்காவிலும்[6] காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்[7]" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்திப் பெயரான "சாம்பர்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள். இம்மான் ஒடிசாவின் மாநில விலங்காகும்.
கடமான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Artiodactyla |
துணைவரிசை: | Ruminantia |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Cervinae |
பேரினம்: | |
இனம்: | C. unicolor |
இருசொற் பெயரீடு | |
Cervus unicolor (Kerr, 1792) | |
வேறு பெயர்கள் | |
|