அரசு அமைப்பு From Wikipedia, the free encyclopedia
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) அல்லது (UPSC), இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும்.[1] இவ்வமைப்பு மத்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.இந்திய அரசியலமைப்பு பகுதி XIV -மத்திய மட்டும் மாநிலங்களின் கீழான சேவைகள் - விதிகள் 315 முதல் 323வரை)மத்திய அளவில் மற்றும் மாநில அளவில் தேர்வாணையங்களை நிறுவது குறித்து விளம்புகிறது.[2][3]மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் செயல்படுகிறது.
சுருக்கம் | யூபிஎஸ்சி |
---|---|
உருவாக்கம் | அக்டோபர் 1, 1926 |
வகை | அரசு |
தலைமையகம் |
|
சேவை பகுதி | இந்தியா |
தலைவர் | பிரதீப் குமார் ஜோஷி |
செயலர் | ஆசிம் குரானா இ.ஆ.ப |
வலைத்தளம் | யூபிஎஸ்சி இணையதளம் |
உயர்நிலை அரசுப்பணிச்சேவைகளில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற இந்திய அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கிணங்க 1926ஆம் ஆண்டு அப்போதைய பிரித்தானிய இந்திய அரசு முதல் தேர்வாணையத்தை அக்டோபர் முதல் நாளன்று நியமித்தது.இவ்வாணையத்தின் செயற்பாடுகள் பரிந்துரைகள் என்ற நிலையிலேயே இருந்தமையால் இந்திய அரசியலாருக்கு இது திருப்தி அளிக்கவில்லை. ஆகவே பிரித்தானிய அரசு கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை (Federal Public Service Commission) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைத்தது.இச்சட்டம் மாநிலங்களிலும் மாநில அளவில் தேர்வாணையங்கள் அமைத்திட வழி செய்தது. விடுதலைக்குப் பிறகு, அரசுப்பணிகளுக்கு பாரபட்சமற்ற முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் பணியாளர்களின் உரிமைகளைக் காத்திடவும் தன்னாட்சி நிலைபெற்ற காப்பான அமைப்பொன்றின் தேவையைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்புப் பேரவை கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உருவானது.
மாநிலத்தின் ஆளுநர் வேண்டினால், குடியரசுத் தலைவரின் ஒப்புமையுடன்,மாநிலப் பணியாளர்களுக்கானத் தேடலையும் மேற்கொள்ளலாம். அவ்வாறு மணிப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு செயலாற்றி வருகிறது.
இந்திய அரசியலமைப்பின் 315ஆம் ஷரத்தின் கீழ் யூபிஎஸ்சி தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.இவர்களின் பணிவிதிகள் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (உறுப்பினர்கள்)ஒழுங்குமுறை சட்டம்,1969 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.
தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.50 விழுக்காடு உறுப்பினர்கள் குறைந்தது பத்தாண்டுகளாவது அரசுப்பணியாற்றிய பணியிலுள்ள அல்லது ஓய்வுபெற்ற அரசுப்பணியாளர்களாவர்.
ஒவ்வொரு உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் அல்லது 65 அகவை வரை (இரண்டில் எது முதல் நிகழ்வோ அதுவரை) பதவியில் இருக்கலாம்.
குடியரசுத்தலைவருக்கு எந்நேரமும் தம் பணிவிலகல் விண்ணப்பத்தை அளிக்கலாம். தவிர, உறுப்பினரின் துர்நடத்தை (அத்தகைய நடத்தை விசாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்), நொடிப்பு நிலை எய்தல், பணி தொடர்பில்லாத வெளிவேலைகளை பணம் பெற்றுக்கொண்டு செய்தல் அல்லது அவரது உடல மற்றும் மனநிலை குறித்த குடியரசுத்தலைவரின் மதிப்பீட்டில் இலாயக்கற்றவர் போன்ற காரணங்களினால் குடியரசுத்தலைவர் அவரை பணிநீக்கம் செய்யலாம்.
மே 2010 அன்று தேர்வாணையத் தலைவராக குவாலியர் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழக இயக்குனராக இருந்த பேராசிரியர் டி.பி.அகர்வால் உள்ளார். பத்து பிற உறுப்பினர்கள் உள்ளனர்.
தேர்வாணையத்திற்கு உதவிட ஓர் செயலர் மற்றும் இரு கூடுதல் செயலர்கள் தலைமையில் பல இணை செயலர்கள்,துணை செயலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அடங்கிய செயலகம் செயல்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.