ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. உண்மை எனச் சொல்லப்படும் ஒரு விடயம், ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம், அல்லது ஒரு முடிவு போன்றவற்றின் மீது நிச்சயமின்மை, நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையை இது குறிக்கிறது. ஒரு கருத்தமைவு அல்லது உண்மைநிலை எனக் கருத்தப்படும் ஒன்றை ஐயம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனால், குறித்த செயற்பாடோ, விடயமோ பிழையாக அல்லது குற்றமாக அல்லது பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் காரணமாகக் குறித்த விடயத்தை அல்லது செயற்பாட்டைத் தாமதமாக்கும் நிலை அல்லது முற்றாகவே மறுத்தொதுக்கும் நிலை ஏற்படுகிறது. "ஐயம்" என்பதற்கான வரைவிலக்கணங்கள் சில, மனம் இரண்டு முரண்பட்ட கருத்துக்களிடையே தத்தளித்துக் கொண்டு எந்தவொரு பக்கத்துக்கும் செல்ல முடியாத ஒரு நிலையைக் குறித்துக் காட்டுகின்றன.[1] ஐயம் என்னும் கருத்துரு பல தோற்றப்பாடுகளை உள்ளடக்குவதாக அமைகின்றது. ஐயம் என்பதை, ஒரு விடயத்தின் நம்பகத்தன்மை குறித்துத் திட்டமிட்ட கேள்வி எழுப்புதலாகவும், ஒரு உணர்வு சார்ந்த, முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையாகவும் கொள்ள முடியும்.
சமூகத்தின் மீதான தாக்கம்
ஐயம், செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்போ அல்லது ஏதாவது கருமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்போ தாமதிப்பதற்கு ஊக்குவிக்கிறது. ஐயம், நம்பிக்கையின்மைக்கும், எற்றுக்கொள்ளாமல் விடும் தன்மைக்கும் இட்டுச் செல்வதால் அது முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல், ஒழுக்கம், சட்டம் போன்றவை, தனிப்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுப்பதில் ஐயத்துக்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. இதனால், சான்றுகளைக் கவனமாக ஆராய்வதற்காக விரிவான எதிர்வாத வழிமுறைகளை அவை கையாளுகின்றன. சமூக மட்டத்தில் ஐயம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. இது இன்னொருவர் அல்லது குழுவினர் மீது குற்றஞ்சாட்டும் இயல்பு கொண்டது. அறிவொளிக் காலத்தில் இருந்து மேற்கத்திய சமூகங்களில், மரபுக்கும், அதிகாரத்துக்கும் எதிராக இவ்வகையான நிலைப்பாடு வளர்ந்து வந்துள்ளது.
உளவியல்
ஐயத்துக்கான மூலம் தன்முனைப்பு வளர்ச்சியடைகின்ற பிள்ளைப்பருவக் காலத்தில் உள்ளதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பிள்ளைப்பருவ அனுபவங்கள் அவர்களுடைய மனத்தில் ஒருவருடைய வல்லமை குறித்தும், அடையாளம் குறித்தும்கூட ஐயங்களை உருவாக்கக்கூடும். ஐயத்துக்கான காரணிகளை எதிர்கொள்ளுவதற்காக அறிதிறன் சார்ந்தனவும், ஆன்மீகம் சார்ந்தனவுமான பல்வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன. நடத்தைசார் மருத்துவ முறையில், ஒருவர் ஐயத்துக்கான உண்மையான அடிப்படைகள் உள்ளனவா எனத் தன் மனதையே கேட்டுக்கொள்ளும் சோக்கிரட்டிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. புத்த மதம் இதற்கு மாறுபாடான கருத்தை முன்வைக்கிறது. இது கூடிய மறைபொருளான அணுகுமுறை. ஒருவரால் உணரப்படுகின்ற அவருடைய இறந்தகாலம், எதிர்காலம் என்பவற்றுடன் பிணைந்துள்ள எதிர்மறையான ஒன்றே ஐயம் என்று புத்த சமயம் கூறுகிறது. தனிப்பட்டவர்கள் தமது வரலாற்றிலிருந்து விடுபடுவதே ஐயத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி என்பது பௌத்தத்தின் கருத்து. தியானத்தின் மூலம் இதை அடையமுடியும் என்கிறது அது.
இறையியல்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஒருவர் முடிவு செய்ய முடியாது என்று கூறும் அறியொணாவியம் அல்லது அறியொணாவாதத்திற்கு, இறைவன் இருக்கிறாரா என்ற ஐயமே அடைப்படையாக இருக்கிறது. இது போலவே பிற ஐயவாதக் கருத்துக்களான பைரோவிய ஐயவாதம் போன்றவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது ஐயமே. பைரோவிய ஐயவாதம், இந்த விடயத்தில் சாதகமான முடிவு எடுக்காமல் எதிர்மறையான நிலையிலேயே நிற்கிறது. இறைவனின் இருப்பின் மீது ஐயம் இருப்பது ஏதாவதொரு மதத்தைக் கைக்கொள்வதற்கு வழிவகுப்பதும் உண்டு. பசுக்காலின் பிணையம் எனப்படும் கொள்கை இதற்கு எடுத்துக்காட்டு. இக்கொள்கைப்படி, கடவுள் இருந்தால், அவரை நம்புவதன் மூலம் அதற்காகச் சொல்லப்படும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கிறது. இல்லை என்றால், நம்புவதன் மூலம் இழப்பது அதிகம் இல்லை. எனவே ஐயப்பாடு இருந்தாலும் நம்புவதால் நட்டம் இல்லை என்பதே இக் கொள்கையின் கருத்து. சில இறையியல் கொள்கைகளின் மீதான ஐயம் அந்த இறையியல் பிரிவின் முழு நம்பிக்கைகளையுமே கேள்விக்கு உள்ளாக்குவது உண்டு. அதே வேளை, அப்பிரிவின் சில கொள்கைகளில் மட்டும் ஐயப்பாடு இருக்கும் போது முரண்பாடுகள் ஏற்பட்டுப் புதிய பிரிவுகளும் தோன்றுவதைக் காணலாம். பாப்பாண்டவரின் அதிகாரத்துக்கு எதிராகப் புரட்டசுத்தாந்த மதம் உருவானதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
ஐயம், ஆழமான நம்பிக்கைக்கு வழிகாட்டுவது என்பது அப்போசுத்தலர் தாமசின் கதையின் மையக் கருத்து. எல்லா அறிவியல்களைனதும், அதுபோல இறையியலினதும் தொடக்கப் புள்ளியும், முக்கியமான கொள்கையும் வழிமுறைப்பட்ட ஐயம் மட்டுமன்றி நேர் ஐயமும் ஆகும் என்பது சார்ச் ஏர்மெசு (Georg Hermes) என்பவரது கருத்து. ஒருவர் நியாயமான அடிப்படைகளில் உண்மை என்று உணர்பவற்றை மட்டுமே நம்பமுடியும் என்றும், அத்தோடு திருப்திப்படக்கூடிய நியாயங்களுக்கான அடிப்படைகளைக் காணும்வரை தொடர்ச்சியாக ஐயப்படுவதற்குரிய துணிச்சல் ஒருவருக்கு இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்..[2]
சரென் கியேர்க்கார்ட் (Søren Kierkegaard) போன்ற கிறித்தவ இருப்பியல்வாதிகள், ஒருவர் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பதற்கு அவர் கடவுள் குறித்த அவரது நம்பிக்கைமீது ஐயமும் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர். சான்றுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனையில், ஐயப்படுவது அறிவுசாந்த ஒரு பகுதி என்பதும், அவ்வாறு இல்லாவிடில் நம்பிக்கைக்கு உண்மையான பொருள் இருக்காது என்பதும் அவர்களுடைய கருத்து.[3][4]
ஆனாலும், பல சமயங்களைப் பொறுத்தவரை ஐயத்துக்கு இடம் இல்லாத கடவுள் நம்பிக்கை அடிப்படையானது.
சட்டம்
எதிர்வாத நீதி முறைமையின் கீழ், பெரும்பாலான குற்றவியல் வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நியாயமான ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட வேண்டும். "மெய்ப்பிக்கும் பொறுப்பு" எனப்படும் கொள்கையின் படி இப்பொறுப்பு வாதி தரப்பினரைச் சாரும். அதாவது, நியாயமான ஆள் ஒருவரின் மனத்தில் எதிர்வாதி குற்றம் செய்தார் என்பதில் எவ்வித ஐயமும் தோன்றாத வகையில் அரசு தரப்பு சான்றுகளை முன்வைக்கவேண்டும். எழுப்பப்படும் ஐயம் நியாயமான ஆள் ஒருவரின் நம்பிக்கையில் தாக்கத்தை விளைவிக்கும்படி இருந்தால், நீதிச் சபையினர் நியாயமான ஐயத்துக்கு அப்பால் திருப்தியடைய மாட்டார்கள். பொதுவாக, குறிப்பிட்ட அதிகார எலைக்கு உட்பட்ட சட்டங்கள் "நியாயமான", "ஐயம்" ஆகிய சொற்களின் சொற்பொருள்களுக்குத் துல்லியமான வரைவிலக்கணம் தருகின்றன.
குறிப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.