From Wikipedia, the free encyclopedia
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் (ITC Grand Chola Hotel), சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். இது சென்னை கிண்டியில், ஸ்பிக் கட்டிடத்திற்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. இதே வரிசையில் தான் அசோக் லேலாண்டின் டவரும் உள்ளது. இந்த கட்டிடம் சிங்கப்பூரினை அடிப்படையாகக் கொண்ட எஸ் ஆர் எஸ் எஸ் (SRSS) கட்டிடக்கலை வல்லுநர்களால் கட்டப்பட்டது. இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ள இடம் 1,600,000 சதுர அடிக்கு மேல் உள்ளது. நாட்டின் தனித்து நிற்கக்கூடிய மிகப்பெரிய ஹோட்டல் இதுவாகும்.[3] இதில் செய்யப்பட்டுள்ள முதலீடு இந்திய மதிப்பின்படி ரூபாய் 12,000 மில்லியன் ஆகும்.
ITC Grand Chola | |
---|---|
ஐடிசி கிரான்ட் சோழா | |
விடுதி சங்கிலி | ITC Welcomgroup Hotels, Palaces and Resorts |
பொதுவான தகவல்கள் | |
இடம் | சென்னை, இந்தியா |
முகவரி | 63, Anna Salai, கிண்டி சென்னை, தமிழ்நாடு 600 032 |
திறப்பு | 15 September 2012 |
உரிமையாளர் | ITC Hotels |
மேலாண்மை | ITC Welcomgroup |
உயரம் | 49 m (161 அடி)[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 15 |
தளப்பரப்பு | 1,624,000-சதுர-அடி (150,900 m2)[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | SRSS Architects (சிங்கப்பூர்) |
மேம்பாட்டாளர் | Larsen & Toubro |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 600 |
தொகுப்புகளின் எண்ணிக்கை | 14 |
உணவகங்களின் எண்ணிக்கை | 10 |
தரிப்பிடம் | 800 cars |
வலைதளம் | |
itchotels.in/ITCGrandChola |
ஐடிசி தனது முதல் ஹோட்டல் பிரிவினை சென்னையில் சோழா செரட்டன் மூலம் தொடங்கியது. ஐடிசி ஹோட்டல்களின் குழு அண்ணா சாலையிலுள்ள கம்பா கோலா கேம்பஸின் எட்டு ஏக்கர் நிலத்தினை 2000 ஆம் ஆண்டு ரூபாய் 800 மில்லியனுக்கு வாங்கியது. இதன் நிர்வாக இயக்குநரான வொய். சி. தேவேஷ்வர், இந்த ஹோட்டல் கட்டுவதற்கான ஆரம்ப செலவுகள் ரூபாய் 8,000 மில்லியன் முதல் 10,000 மில்லியன் வரை என திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இதன் திறப்புவிழா செப்டம்பர் 15, 2012 ல் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் முன்னிலையில் நடைபெற்றது.[4]
ஐடிசி கிரான்ட் ஹோட்டல் சென்னை ஏர்போர்ட்டுக்கு அருகிலுள்ள கிண்டியில் உள்ளது. இதன் மிக அருகில் கிண்டி ரேஸ் பகுதி, சென்னை பாம்பு பூங்கா மற்றும் கிண்டி தேசியப் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐஐடி சென்னை)யும் இதன் அருகில் அமைந்துள்ளன.[5]
இந்த ஹோட்டல் தென்னிந்திய கோவிலின் கட்டிடக்கலையினை ஒத்ததுபோல கட்டப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய கோவில்களில் உள்ளதைப்போல் இந்த ஹோட்டலில் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. அந்த நுழைவு வாயில்களுக்கு வல்லவன், செம்பியன், கிள்ளி மற்றும் சோழன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் 43 ஒற்றை படுக்கையறைகளும், 33 இரட்டை படுக்கையறைகளும் மற்றும் இரட்டை படுக்கை வசதிகள் கொண்ட அபார்ட்மென்டுகளும் உள்ளன. இவை தவிர உயர்ந்த தூண்கள், கடினமான படிக்கட்டுகள் என கோவிலைப் போன்றே வடிவமைத்துள்ளனர்.[6]
தஞ்சை பிரகதீஸ்வரர்[6] கோவிலைப் போன்ற கையில் செதுக்கப்பட்ட கலைச்சிற்பங்கள் இங்குள்ள 462 தூண்களில் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.[6] ஒரு மில்லியன் சதுரஅடிக்கும் மேற்பட்ட மார்பிள் கற்கள் 57 வகைகளில் இந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[7] இதற்காக இத்தாலியில் உள்ள ஒரு மார்பிள் குவாரியினை வாங்கி அதிலிருந்து ஹோட்டலுக்குத் தேவையான பல டன் மார்பிள் கற்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. இந்த ஹோட்டலின் ஒரு அறையின் அளவு சராசரியாக, 625 சதுர அடி ஆகும்.[8] மேலும் இதிலுள்ள கலைச் சிற்ப வேலைகளுக்காக மாமல்லபுரத்திலிருந்து 4,000 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். ஹோட்டலுக்கான அனைத்து வேலைகளையும் முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது.
இந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் 10 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் செய்யப்பட்டது. 40 சதவீதத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கட்டிடத்தினைச் சுற்றியுள்ள 800 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் தயாரிக்கப்பட்டவை. இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான மரப்பொருட்கள் ’ஃபாரெஸ்ட் ஸ்டெவார்ட்ஷிப் கவுன்சிலின்’ (Forest Stewardship Council-FSC) சான்றிதழ் பெற்ற காடுகளில் இருந்தே பெறப்பட்டுள்ளன.[6]
ஹோட்டல் சுமார் 1,600,000 சதுர அடியில் 600 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதர இடவசதிக்காக 75,000 சதுர அடியையும், மாநாடு மற்றும் கண்காட்சி போன்றவற்றிற்காக 100,000 சதுர அடியையும் கொண்டுள்ளது, இதில் 26,540 சதுர அடி (தூண்களைத் தவிர்த்து) கொண்ட ராஜேந்திர மண்டபத்தின் முக்கியப் பகுதியும் அடங்கும். இந்த ராஜேந்திர மண்டபத்தில் 5,000 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் தங்க இயலும். ராஜேந்திர மண்டபத்தின் மொத்த அளவு 55,000 சதுர அடியாகும்.[7] எட்டு ஏக்கர் கொண்ட நிலத்தில் ஹோட்டல் மட்டும் 1.5 மில்லியன் சதுர அடிகளைக் கொண்டுள்ளது. ஹோட்டலில் 522 அறைகள் மற்றும் 78 சேவை கட்டிடங்களையும் சேர்த்து மொத்தம் 600 அறைகள் உள்ளன. ஆரம்பத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்குத் தேவையான இடத்தினை மாடியின் மேல்தளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டிட அனுமதியளிக்க சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அக்டோபர் 2011 ல் மறுத்து விட்டது.[9] இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பிப்ரவரி 2013 ல், இந்த ஹோட்டலுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு (GRIHA) ஆற்றல் ஆய்வு நிறுவனம் (TERI) மற்றும் நடுவண் அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறையால் (MNRE) வழங்கப்பட்டது. இது தேசிய அளவிலான உயரிய மதிப்பீடு ஆகும். இதனை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்[10].
இந்தியாவில் நிலைத்த வாழுமிடத்திற்கான மேம்பாடு மற்றும் ஆய்வு கழகத்திடமிருந்து (ADaRSH) முதன் முறையாக ஐந்து நட்சத்திர மதிப்பீடு இந்த ஹோட்டலுக்கு வழங்கப்பட்டது. இதன் இடத்தேர்வு மற்றும் திட்டமிடல், வளங்கள், பிரிவுகள், கட்டிட செயல்பாடு மற்றும் கண்காணிப்பு, இதர வசதிகள் என 34 வகைகளில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது[10]. டைம்ஸ் ஃபுட் கைடின் விருதுகளை இந்த ஹோட்டலின் இரு உணவகங்கள் பெற்றுள்ளன. அவை: பேஷவ்ரி (சிறந்த வட இந்திய உணவகம்) மற்றும் ஒட்டிமோ-குசிணா இத்தாலியானா (சிறந்த இத்தாலியன் உணவகம்). மேலும் ’வாஷ்ரூம்ஸ் அன்ட் பியான்ட்’ இதழால் ’கிரீனஸ்ட் வாஷ்ரூம்’ என்ற பட்டமும் இந்த ஹோட்டலுக்கு வழங்கப்பட்டுள்ளது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.