அத்தர்கள் அல்லது ”எசுத்தர்கள்” (Esters) என்பவை ஓர் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும். இவற்றில் குறைந்தபட்சம் ஓர் ஐதராக்சில் குழு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு ஆல்காக்சி குழு –O– இடம்பெற வேண்டும். அமிலங்கள் கரிம அமிலம் அல்லது கனிம அமிலம் இவற்றில் ஏதாவது ஒன்று இருக்கலாம்[1]. பொதுவாக எசுத்தர்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் ஆல்ககால்களில் இருந்து தருவிக்கப்படுகின்றன. கிளிசராலின் கொழுப்பு அமில எசுத்தர்களான கிளிசரைடுகள் உயிரியலில் மிக முக்கியமான எசுத்தர்களாகும் . ஏனெனில் இவை லிப்பிடுகளின் முக்கிய வகைகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. விலங்கு கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய்களின் பெரு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. குறைந்த மூலக்கூறு எடையுள்ள எசுத்தர்கள் பொதுவாக வாசனை திரவியங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அத்தியாவசிய எண்ணெய்களிலும் இன ஈர்ப்பு இயக்கு நீர்களிலும் காணப்படுகின்றன. டி.என்.ஏ. மூலக்கூறுகளின் முதுகெலும்பாக பாசுப்போயெசுத்தர்கள் உருவாகின்றன. நைட்ரோகிளிசரின் போன்ற நைட்ரேட்டு எசுத்தர்கள் அவற்றின் பண்புகளால் அறியப்படுகின்றன. பாலியெசுத்தர்கள் நெகிழிகளாக அறியப்படுகின்றன. இவற்றில் ஒருமங்கள் எசுத்தர் பங்கீடுகளால் இணைக்கப்படுகின்றன.

Thumb
எசுத்தருக்கு ஓர் எடுத்துக்காடாக கார்பாக்சைலிக் காடி (carboxylic acid) எசுத்தர். இப் படத்தில் R, R' ஆகியவை ஆல்க்கைல் (alkyl) அல்லது அரைல் (aryl) குழுவைக் குறிக்கும்
Thumb
பாசுபாரிக் காடி எசுத்தர்

பெயரிடுதல்

பெயர்க்காரணம்

எசுத்தர் என்ற சொல் 1848 ஆம் ஆண்டு செருமானிய வேதியியலரான லியோபோல்டு கெமிலின் என்பவரால் உருவாக்கப்பட்டது[2]. அனேகமாக அசிட்டிக் எசுத்தர் என்ற சொற்களின் சுருக்கமாக இது இருக்கலாம்.

தமிழில் அத்தர் என்பதற்கு மூலச்சொல்லான அத்து என்றால் ”சேர்த்தல்”, ”பொருத்தல்”, “ஏற்க வைத்தல்” என பொருள் தருகிறது..

ஐயூபிஏசி முறை பெயரிடல்

பெற்றோர் ஆல்ககால், மற்றும் பெற்றோர் அமிலத்தின் பெயரில் இருந்து எசுத்தரின் பெயர் தருவிக்கப்படுகிறது. இந்த அமிலம் கரிம அமிலமோ அல்லது கனிம அமிலமோ எதுவேண்டுமானாலும் இருக்கலாம். எளிய கார்பாக்சிலிக் அமிலங்க்களில் இருந்து தருவிக்கப்படும் எசுத்தர்கள் பொதுவாக அவற்றின் பாரம்பரிய முறைப்படியான பெயர்களைப் பெறுகின்றன. பார்மேட்டு, அசிட்டேட்டு, புரோப்பியோனேட்டு, பியூட்டைரேட்டு என்பன அத்தகைய மரபுப் பெயர்களாகும். இவை ஐயூபிஏசி பெயரிடும் முறைக்கு எதிராக இருக்கின்றன. மெத்தனோயேட்டு, எத்தனோயேட்டு, புரோப்பனோயேட்டு, பியூட்டனோயேட்டு என்பன அவற்றுக்கு இணையாகக் கருதப்படும் ஐயூபிஏசி முறை பெயர்களாகும். மிகவும் சிக்கலான கார்பாக்சிலிக் அமிலங்களில் இருந்து தயாரிக்கப்படும் எசுத்தர்கள் குறிப்பாக ஐயூபிஏசி முறையிலேயே பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இம்முறையில் பெயரிடும் போது தொடர்புடைய அமிலத்தின் பெயருடன் விகுதியாக ஓயேட்டு சேர்க்கப்படுகிறது. உதாரணமாக எக்சைல் ஆக்டானோயேட்டு என்ற எசுத்தரைக் குறிப்பிடலாம். இதனுடைய மரபார்ந்த பெயரான எக்சைல் கேப்ரைலேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு CH3(CH2)6CO2(CH2)5CH3. ஆகும்.

எசுத்தர்களின் மூலக்கூற்று வாய்ப்பாடு வழக்கமாக RCO2R என்ற வடிவத்தில் எழுதப்படுகிறது. இங்கு இடம்பெற்றுள்ள R மற்றும் R′ என்பவை கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஆல்ககால்களில் உள்ள ஐதரோகார்பன்களின் பகுதிகளாகும். உதாரணமாக பியூட்டனால் மற்றும் அசிட்டிக் அமிலத்திலிருந்து பியூட்டைல் அசிட்டேட்டு என்ற எசுத்தர் CH3CO2C4H9 என்று எழுதப்படுகிறது. BuOAc மற்றும் CH3COOC4H9 என்ற மாற்று வழிகளாலும் இதை எழுதுவர். பியூட்டைல் அசிட்டேட்டு ஐயூபிஏசி முறையில் பியூட்டைல் எத்தனோயேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அசிட்டிக் அமிலம் ஐயூபிஏசி முறையில் எத்தனாயிக் அமிலம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வளைய எசுத்தர்கள் அல்லது சைக்ளிக் எசுத்தர்கள் லாக்டோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையும் கரிம அல்லது கனிம அமிலங்கள் எதிலிருந்தேனும் தருவிக்கப்படலாம். காமா வலேரோலாக்டோன் கரிம லாக்டோனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆர்த்தோ எசுத்தர்கள் பொதுவாக வகைப்படுத்தப்படாத எசுத்தர் வகையாகும். இவ்வகை எசுத்தர்களின் பொது வாய்ப்பாடு RC(OR′)3 ஆகும். டிரையெத்திலார்த்தோபார்மேட்டு (HC(OC2H5)3) ஆர்த்தோபார்மிக் அமிலம் மற்றும் எத்தனாலில் இருந்து பெயரளவில் தருவிக்கப்படுகிறது.

கனிமவேதியியல் எசுத்தர்கள்

எசுத்தர்களை கனிம அமிலங்கள் மற்றும் ஆல்ககால்களிலிருந்தும் தருவிக்க இயலும். எனவே பெயரிடல் கனிம ஆக்சோ அமிலங்களுக்கும் அவற்றுடன் தொடர்புடைய எசுத்தர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. பாசுபாரிக் அமிலம் மற்றும் பாசுப்பேட்டு எசுத்தர்கள், கந்தக அமிலம், சல்பேட்டு எசுத்தர்கள், நைட்ரிக் அமிலம், நைட்ரேட்டு எசுத்தர்கள், போரிக் அமிலம் மற்றும் போரேட்டுகள் போன்றவற்றுக்கும் பெயரிடல் நீட்டிக்கப்பட்டது. உதாரணமாக டிரைபீனைல் பாசுப்பேட்டு என்பது பாசுப்பாரிக் அமிலம் மற்றும் பீனாலில் இருந்து தருவிக்கப்பட்ட எசுத்தராகும். கார்பானிக் அமிலத்தில் இருந்து கரிம கார்பனேட்டுகள் தருவிக்கப்படுகின்றன. உதாரணமாக எத்திலீன்கார்பனேட்டு கார்பானிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலில் இருந்து தருவிக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.