சிலாவிய மொழி From Wikipedia, the free encyclopedia
உருசிய மொழி (Russian language, ру́сский язы́к, russkij jazyk, உச்சரிப்பு [ˈruskʲɪj jɪˈzɨk]) என்பது உருசியக் கூட்டமைப்பு, பெலாருசு, உக்ரைன், கசக்சுதான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும். மோல்டோவா, லத்வியா, லிதுவேனியா, எசுதோனியா ஆகிய நாடுகளில் இது அதிகாரபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், முன்னைய சோவியத் ஒன்றிய நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சிறியளவில் பேசப்படுகிறது.[15][16] உருசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். மேலும், இது இன்று காணப்படும் மூன்று கிழக்கு சிலாவிய மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. பண்டைய கிழக்கு சிலாவிய மொழியின் எழுத்துச் சான்றுகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன.
உருசிய மொழி | |
---|---|
русский язык (ருஸ்க்கி இசிக்) | |
உச்சரிப்பு | [ˈruskʲɪi̯ jɪˈzɨk] |
நாடு(கள்) | உருசியா, முன்னாள் சோவியத் நாடுகள், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் உருசியர்கள், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், செருமனி, இசுரேல், கனடா, ஆத்திரேலியா. |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 144 மில்லியன் (2002) இரண்டாம் மொழி: 114 மில்லியன் (2006)[1] |
Indo-European
| |
சிரில்லிக் (உருசிய எழுத்துகள்)) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | உருசியா (நாடு)[2] பெலருஸ் (அதிகாரபூர்வம்)[3]
அமைப்புகள்:
CIS |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழி கட்டுப்பாடு | உருசிய மொழிகள் நிறுவனம் [14] உருசிய அறிவியல் கழகத்தில் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ru |
ISO 639-2 | rus |
ISO 639-3 | rus |
Linguasphere | 53-AAA-ea < 53-AAA-e (varieties: 53-AAA-eaa to 53-AAA-eat) |
உருசிய மொழி, யூரேசியப் பிரதேசத்திலேயே பாரிய புவியியற் பரம்பலைக் கொண்ட மொழியும், சிலாவிய மொழிகளிலேயே பரந்தளவில் பேசப்படும் மொழியுமாகும். மேலும், உருசியா, உக்ரேன் மற்றும் பெலாரசு ஆகிய நாடுகளிலுள்ள 144 மில்லியன் மக்களை உள்ளடக்கி, ஐரோப்பாவின் பெரிய சுதேச மொழியாகவும் விளங்குகின்றது. சுதேச மொழியாகப் பேசப்படும் மொழிகளில் இது 8ம் இடத்திலும், மொத்த மக்கள்தொகை அடிப்படையில் 5ம் இடத்திலும் காணப்படுகிறது.[17] உருசிய மொழி ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
உருசிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலுள்ள சிலாவிய மொழியாகும். இது கீவிய ருசில் பேசப்பட்ட மொழியின் நேரடி வழித்தோன்றலாகும். பேச்சு மொழி என்ற ரீதியில் சிலாவியப் பிரிவிலுள்ள ஏனைய இரு மொழிகளான உக்ரேனிய மற்றும் பெலாருசிய மொழிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனின் சில பகுதிகளிலும், பெலாரசிலும் இம்மொழிகள் தமக்குள் பிரதியீட்டு மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சில பகுதிகளில் மரபியல் ரீதியில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை காரணமாக மொழிக்கலப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு உக்ரேனிலுள்ள சுர்சிக் மற்றும் பெலாரசிலுள்ள திராசியாங்கா போன்ற பகுதிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். 15ம் அல்லது 16ம் நூற்றாண்டில் அழிவடைந்த மொழியாகக் கருதப்படும் கிழக்கு சிலாவிய பண்டைய நோவ்கோகிரட் மொழிவழக்கு, நவீன உருசிய மொழியின் உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் சிலாவோனிய தேவாலயத்தின் தாக்கம் மற்றும் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக, உருசியமொழி பல்கேரிய மொழியுடன் சொல்லியல் ரீதியிலான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பல்கேரிய இலக்கணம் உருசிய இலக்கணத்திலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.[18] 19ம் நூற்றாண்டில், பெலாருசிய மொழியிலிருந்து வேறுபடுத்தி அறியும் வகையில் இது "பெரிய உருசிய மொழி" என அழைக்கப்பட்டது. பின்னர் இது "வெள்ளை உருசிய மொழி" எனவும், "சிறிய உருசிய மொழி" எனவும் அழைக்கப்பட்டது.
உருசிய மொழியின் சொல்வளம் (பெரும்பாலும் சுருக்கச் சொற்கள் மற்றும் இலக்கியச் சொற்கள்), சொல்லுருவாக்க அடிப்படைகள் போன்றன தேவாலய சிலாவோனிய மொழியின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. இது உருசிய மரபுவழித் தேவாலயத்தினால் பயன்படுத்தப்பட்ட தென் சிலாவிய பண்டைய தேவாலய சிலாவோனிய மொழியின் உருசிய மொழித் தாக்கம் பெற்ற வடிவமாகும். மேலும், உச்சரிப்பு மற்றும் மொழிநடை ஆகியனவும் ஓரளவு இதன் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கிழக்குச் சிலாவிய வடிவங்கள் தற்காலத்தில் வழக்கொழிந்து செல்லும் பல்வேறு மொழி வழக்குகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.சில சந்தர்ப்பங்களில், கிழக்குச் சிலாவிய மற்றும் தேவாலய சிலாவோனிய வடிவங்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டாலும், அவை வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டுள்ளன.
பல நூற்றாண்டுகளாக, உருசிய மொழியின் சொல்வளமும், மொழிநடையும் கிரேக்கம், லத்தீன், போலிசு, டச்சு, செருமன், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் போன்ற மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்துக்குட்பட்டுள்ளது.[19] மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மொழிகளான, யூரல்லிக், துருக்கிய மொழி, பாரசீக மொழி, அரபு மொழி போன்றனவும் சிறிதளவு தாக்கம் செலுத்தியுள்ளன.
கலிபோர்னியாவின் மொன்டரேயில் அமைந்துள்ள பாதுகாப்பு மொழிகள் நிறுவனம், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர் கற்பதற்குச் சிரமப்படும் மொழிகளில் உருசிய மொழியை மூன்றாம் நிலையில் வகைப்படுத்தியுள்ளது. மேலும், உருசிய மொழியில் ஓரளவு புலமை பெற 780 மணித்தியால கற்றல் நடவடிக்கை தேவை எனவும் கணித்துள்ளது. ஆங்கில மொழிப் பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் அமெரிக்காவின் அஉருசியல் கொள்கைகள் காரணமாக, ஐக்கிய அமெரிக்க உளவுச் சமூகம் இம்மொழியை கடின இலக்குடைய மொழியாகக் குறிப்பிடுகிறது.
சோவியத் காலப்பகுதியில், பல்வேறு இனக்குழுக்களின் மொழிகள் பற்றிய கொள்கை தளம்பலடைந்தே காணப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்குட்பட்ட ஒவ்வொரு குடியரசும், தனக்கேயுரிய உத்தியோகபூர்வ மொழியைக் கொண்டிருந்தாலும், ஒன்றிணைக்கும் பண்பும் உயர் நிலையும் உருசிய மொழிக்கே வழங்கப்பட்டது. எனினும், 1990ம் ஆண்டிலேயே உருசிய மொழி உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது.[20] 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின், சுதந்திர நாடுகள் அவற்றின் தாய்மொழியை ஊக்குவித்தன. இதனால் உருசிய மொழியின் சிறப்பு நிலை மாறியது. எனினும், இவ் வலயத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கான மொழியாக உருசிய மொழியே தொடர்ந்தது.
லத்வியாவில் இம்மொழியின் உத்தியோகபூர்வ நிலையும், கல்வி மொழியாகப் பயன்படும் நிலையும் வாதத்துக்குரியதாக உள்ளது. லத்விய மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகமானோர் உருசிய மொழி பேசுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், எசுத்தோனியாவில், உருசிய மக்கள் மொத்த மக்கள் தொகையில் 25.5% வீதமாக உள்ளதோடு[21] 58.6% வீதமான எசுத்தோனியர் உருசிய மொழியைப் பேச வல்லோராவர்.[22] மொத்தமாக 67.8% வீதமான எசுத்தோனிய நாட்டினர் உருசிய மொழி பேச வல்லோராவர்.[22] எவ்வாறாயினும் எசுத்தோனிய இளைஞர்களிடம் உருசிய மொழிச் செல்வாக்கு வேகமாகக் குறைந்து வருகிறது. (தற்போது ஆங்கில மொழிப் பாவனை அதிகரித்து வருகிறது.) உதாரணமாக, 15-19வயதுக்கிடைப்பட்ட எசுத்தோனியரில் 53%மானோர் உருசிய மொழி பேசக்கூடியோராக விளங்குகையில், 10-14வயதுக்கிடைப்பட்ட எசுத்தோனியரில் 19%மானோரே உருசிய மொழி பேசவல்லோராக உள்ளனர். (இத்தொகை இதே வயதுப் பிரிவினரில் ஆங்கில மொழி பேச வல்லோராயுள்ள தொகையினரின் மூன்றிலொரு பங்காகும்.)[22]
கசாக்குசுத்தானிலும் கிர்கிசுத்தானிலும், முறையே கசாக்கு மொழி மற்றும் கிர்கிசு மொழியுடன் இணைந்த உத்தியோகபூர்வ மொழியாக விளங்குகிறது. பாரிய உருசிய மொழிபேசும் சமூகம் வடக்கு கசாக்குசுத்தானில் தற்போதும் காணப்படுவதோடு, கசாக்குசுத்தானின் மொத்த மக்கள் தொகையில் 25.6%மானோர் உருசியர்களாவர்.[23]
லிதுவேனிய மக்கள்தொகையில் அண்ணளவாக 60%மானோர் உருசிய மொழியைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். மேலும், பால்டிக் நாடுகளின் மக்கள் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் உருசிய மொழியை வெளிநாட்டு மொழியாகவோ அல்லது தாய்மொழியாகவோ பேசுகின்றனர்.[22][24][25] 1809இலிருந்து 1918 வரை பின்லாந்து பெரும் டச்சி உருசியப் பேரரசின் பாகமாக இருந்ததோடு, உருசிய மொழி பேசுவோர் குறிப்பிடத்தக்களவில் பின்லாந்தில் காணப்பட்டனர். உருசிய மொழி பேசும் பின்னியர் எண்ணிக்கை 33,400ஆகக் காணப்படுவதோடு, மொத்த மக்கள்தொகையில் 0.6%மாக உள்ளனர். இவர்களில் ஐயாயிரம் பேர் (0.1%) 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டில் குடியேறியோர் அல்லது அவர்களது வழிவந்தோராவர். ஏனையோர்1990கள் மற்றும் பிற்பகுதியில் குடியேறியோராவர்.[சான்று தேவை]
20ம் நூற்றாண்டில், வார்சோ ஒப்பந்த நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துக்குட்பட்ட நாடுகளின் பாடசாலைகளில் உருசிய மொழி பரந்தளவில் கற்பிக்கப்பட்டது. இவற்றுள், போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, சிலோவாக்கியா, அங்கேரி, அல்பேனியா, முன்னாள் கிழக்கு செருமனி மற்றும் கியூபா என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும், தற்போது உருசிய மொழி இந்நாட்டுப் பாடசாலைகளில் கட்டாயப் பாடமாக இல்லாததால், இளைஞர்கள் மத்தியில் இம்மொழித் தேர்ச்சி குறைவாக உள்ளது. யூரோபரோமீற்றர் 2005 கணக்கெடுப்பின் படி,[26] சில நாடுகளில் உருசியமொழித் தேர்ச்சி சிறிது உயர்வாகக் (20–40%) காணப்பட்டாலும், சிலாவிய மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடுகளிலேயே உருசிய மொழிப் பயன்பாடு அதிகமாக உள்ளது (போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா மற்றும் பல்கேரியா என்பன அந்நாடுகளாகும்.2005ல், மங்கோலியாவில் வெளிநாட்டு மொழியாக அதிகளவில் போதிக்கப்பட்ட மொழியாக உருசிய மொழி விளங்கியதோடு,[27] 2006ல், 7ம் தரத்திலிருந்து இரண்டாம் வெளிநாட்டு மொழி எனும் வகையில் கட்டாய பாடமாக்கப்பட்டது.[28]
முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இசுரேலில் வசிக்கும் சுமார் 750,000 யூதர்கள் உருசிய மொழியைப் பேசுகின்றனர் (1999 கணக்கெடுப்பு). இசுரேலிய ஊடகங்களும் இணையத் தளங்களும் உருசிய மொழியிலான வெளியீடுகளை சீராக வெளியிடுகின்றன.[சான்று தேவை] ஆப்கானிசுத்தானில் சிறுதொகையினர் உருசிய மொழியை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். (அவ்தே மற்றும் சர்வான், 2003).
1700களில் உருசிய கடலோடிகள் அலாசுகாவை அடைந்து அதனை உருசியாவின் உரிமையாக்கியபோது உருசிய மொழி முதன்முதலில் வட அமெரிக்காவில் அறிமுகமானது. 1867ல், ஐக்கிய அமெரிக்கா இதனை வாங்கிய பின் பெரும்பாலான குடியேற்றக்காரர்கள் வெளியேறிவிட்டாலும் கூட, குறிப்பிடத்தக்க தொகையினர் இப்பிரதேசத்திலேயே தங்கி உருசிய மொழியைப் பாதுகாத்து வந்தனர். இன்று ஒரு சில முதியோர் மாத்திரமே இம்மொழியைப் பேசுகின்றனர்.[29] ர்சிய மொழி பேசும் சமூகம் குறிப்பிடத்தக்களவில் வட அமெரிக்காவெங்கிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மற்றும் கனடிய நகர்ப்பகுதிகளான நியூ யோர்க், பிலதெல்பியா, பொசுத்தன், லொசு ஏஞ்சல்சு, நாசுவில், சான் பிரான்சிசுக்கோ, சியாட்டில், இசுபோகனே, டொரன்றோ, பால்டிமோர், மியாமி, சிகாகோ, டென்வர் மற்றும் கிளீவ்லாந்து போன்ற இடங்களில் காணப்படுகின்றது. சில இடங்களில் இவர்கள் தங்களுக்கான பத்திரிகைகளை வெளியிடுவதோடு, சமூகக் குழுப்பகுதிகளில் வாழ்கின்றனர் (குறிப்பாக அறுபதுகளின் ஆரம்ப காலத்தில் குடியேறியோரின் வழித்தோன்றல்களாவர்). எனினும், அவர்களில் பூர்வீக உருசியர்கள் காற்பங்கினர் மாத்திரமே. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு முன்னர், வட அமெரிக்காவில் உருசிய மொழி பேசும் பெரும்பான்மையினராக இருந்தோர் யூதர்களாவர். பின்னர், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் மக்களது உள்வருகையினால் இந்நிலை மாற்றமுற்றது. இதன்போது பூர்வீக உருசியர்கள் மற்றும் உக்ரேனியர்கள் குடியேறியதோடு, சிறியளவில் உருசிய யூதர்களும் குடியேறினர்.[vague] ஐக்கிய அமெரிக்க சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி, 2007ல் ஐக்கிய அமெரிக்காவில் 850,000க்கும் அதிகமானோர் உருசிய மொழியை முதன்மை மொழியாகப் பேசுகின்றனர்.[30]
குறிப்பிடத்தக்க உருசிய மொழி பேசும் குழுக்கள் மேற்கைரோப்பாவில் காணப்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து வந்த குடியேறிகளே இவர்களது முன்னோர்களாவர். ஐக்கிய இராச்சியம், இசுப்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, பெல்சியம், கிரேக்கம், பிரேசில், நோர்வே மற்றும் ஒசுத்திரியா எனும் நாடுகளில் குறிப்பிடத்தக்க உருசிய மொழி பேசும் சமூகங்கள் ன. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தவிர்ந்த அதிக உருசிய மொழி பேசுவோரைக் கொண்ட நாடு செருமனியாகும். இங்கு கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உருசிய மொழி பேசுவோராவர்.[31] இவர்கள் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இறங்குவரிசையில், உருசிய மொழி பேசும் பூர்வீக செருமானியர், பூர்வீக உருசியர் மற்றும் யூதர்கள் என்போராவர். அவுசுத்திரேலிய நரங்களான மெல்போர்ன் மற்றும் சிட்னியில் உருசிய மொழி பேசுவோர் உள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் தென்கிழக்கு மெல்போர்னில் வாழ்வதோடு, குறிப்பாக புறநகர்ப் பகுதிகளான கார்னகீ மற்றும் கோல்பீல்ட் ஆகியவற்றில் உள்ளனர். இவர்களுள் மூன்றில் இரு பகுதியினர் உருசிய மொழி பேசும் செருமானியர், கிரேக்கர், யூதர், அசர்பைசானியர், ஆர்மீனியர் மற்றும் உக்ரேனியர் ஆகியோரின் வழிவந்தோராவர். இவர்கள் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின் தமது தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். ஒரு சிலர் தற்காலிக வேலை நிமித்தம் சென்றுள்ளனர்.[சான்று தேவை]
2011 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, அயர்லாந்தில் 21,639 பேர் உருசிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எனினும், இவர்களில் 13%மானோர் மாத்திரமே உருசிய நாட்டினராவர். 20%மானோர் ஐரியக் குடியுரிமையைக் கொண்டுள்ளதோடு, மேலும் 27%மானோர் லத்வியக் கடவுச்சீட்டையும், 14%மானோர் லிதுவேனியக் கடவுச்சீட்டையும் கொண்டுள்ளனர்.[32] மேலும் சிலர் லத்வியா மற்றும் லிதுவேனியாவிலிருந்து வந்த உருசிய மொழி பேசுவோராவர். இவர்கள் லத்விய அல்லது லிதுவேனியக் குடியுரிமை பெற முடியாதோராக உள்ளனர். 2011 கணக்கெடுப்பின் படி சைப்பிரசில் 20,984 உருசிய மொழி பேசுவோர் உள்ளதோடு சனத்தொகையில் 2.50%மாகக் காணப்படுகின்றனர்.[33]
சீனாவிலுள்ள உருசியர்கள் சீனாவினால் அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களுள் ஒருவராவர்.
மூலம் | தாய்மொழிப் பேச்சாளர்கள் | பட்டியல் நிலை | மொத்தப் பேச்சாளர்கள் | பட்டியல் நிலை |
---|---|---|---|---|
G. Weber, "Top Languages", Language Monthly, 3: 12–18, 1997, ISSN 1369-9733 | 160,000,000 | 8 | 285,000,000 | 5 |
World Almanac (1999) | 145,000,000 | 8 (2005) | 275,000,000 | 5 |
SIL (2000 WCD) | 145,000,000 | 8 | 255,000,000 | 5–6 (அரபு மொழியுடன் சமநிலை வகிக்கிறது) |
CIA World Factbook (2005) | 160,000,000 | 8 |
2006ல் வெளியிடப்பட்ட "டெமோசுகோப் வீக்லி" எனும் சஞ்சிகையின் தரவுகளுக்கு அமைய உருசிய கல்வி மற்றும் விஞ்ஞான அமைச்சின் சமூகவியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளரான A. L அரேபீபா,[34] உலக அரங்கிலும், உருசியாவிலும் உருசிய மொழி தனது நிலையை இழந்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.[35][36][37][38] 2012ல், "20ம் 21ம் நூற்றாண்டுப் பகுதியில் உருசிய மொழி" எனும் புதிய ஆராய்ச்சிக்கட்டுரையை வெளியிட்ட A. L. அரேபீபா, உலகின் எல்லாப் பாகங்களிலும் உருசிய மொழி மேலும் நலிவடைந்து வருவதாகக் குறிப்பிட்டு தனது கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.[39] முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் உருசிய மொழி நலிவடைந்து சுதேச மொழிகள் முதன்மை பெற்றுள்ளதோடு,[40] உருசிய சனத்தொகை வீழ்ச்சி மற்றும் உருசிய மொழி பேசும் மக்கள்தொகை வீழ்ச்சி என்பன காரணமாக உலகளவில் உருசிய மொழிச் செல்வாக்கு குறைவடைந்துள்ளது.[38][41]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.