உயிரணு ஆற்றல் பரிமாற்றம்
கலச்சுவாசம் / From Wikipedia, the free encyclopedia
உயிரணு ஆற்றல் பரிமாற்றம் (Cellular Respiration) அல்லது கலச் சுவாசம் அல்லது உயிரணுச் சுவாசம் என்பது உயிரினங்களில் இருக்கும் உயிரணுக்களில் நிகழும் ஒரு தொகுப்பு வளர்சிதைமாற்றத் தாக்கங்களும், செயல்முறைகளுமாகும். இந்த செயல்முறைகள் மூலம் ஊட்டச்சத்தில், உயிரினத்திற்கு ஆற்றல் தரக் கூடிய அடினோசின் முப்பொஸ்ஃபேட் (ATP) உருவாக்கப்படுவதுடன் கழிவுகளும் உருவாகும்[1]. இங்கு நிகழும் தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளில் இருக்கும் கூடிய ஆற்றலுள்ள பிணைப்புக்களை உடைத்து, அவற்றை சிறிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன்போது உயிரின் வாழ்வுக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் சிதைமாற்ற (Catabolism) தாக்கங்களாகும்.
குருதிச் சுற்றோட்டத்தொகுதி உள்ள விலங்குகளில், அவற்றின் உடலில் உள்ள உறுப்புக்களில் இருக்கும் உயிரணுக்களில், குருதியில் இருந்து பெறப்படும் ஆக்சிசன் பயன்படுத்தப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் வளர்சிதைமாற்றத்திற்குட்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் காபனீரொட்சைட்டு கழிவாக பெறப்படும். இவ்வகையில் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் அவசியமான ஆற்றல் அல்லது சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது குருதி மூலம் உடல் உறுப்புக்கள் அல்லது இழையங்கள் அல்லது உயிரணுக்களுக்கு கொண்டு வரப்படும் ஆக்சிசனானது, ஊட்டச்சத்துக்களில் இருக்கும் உயிர் வேதியியல் ஆற்றலை, உடலால் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய Adenosine triphosphate (ATP) சக்தியாக மாற்றும் நிகழ்வாகும். உயிரினங்கள் மூன்று வகையான கலச்சுவாசங்களை மேற்கொள்ள முடியும்:
- காற்றிற் சுவாசம்: ஆக்சிசனைப் பயன்படுத்தும் கலச்சுவாசம். மனிதன் உட்பட அனேகமான யூக்கரியோட்டாக்களால் பயன்படுத்தப்படும் முறை. இறுதி இலத்திரன் வாங்கியாக ஆக்சிசன் உள்ளது.
- நொதித்தல்: ஆக்சிசனைப் பயன்படுத்தாத கலச்சுவாச முறை. இறுதி இலத்திரன் வாங்கியாக பைருவேற், அசெட்டல்டிகைட் போன்ற சேதனச் சேர்வைகள்.
- காற்றின்றிய சுவாசம்: இறுதி இலத்திரன் வாங்கியாக சல்பேற்று அல்லது நைத்திரேட்டு. சில பாக்டீரியாக்களால் பயன்படுத்தப்படுகின்றது.