From Wikipedia, the free encyclopedia
உதட்டுச்சாயம் (lipstick ) என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும். உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில், வகைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் தங்களின் அன்றாட ஒப்பனையில் சில வேளைகளில் இந்த உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பண்டைய காலம் முதலே, அதாவது, கி. மு. 3300–கி. மு. 1300ஆம் ஆண்டுகளிலேயே உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியா, மெசொப்பொத்தேமியா, எகிப்து, அரேபியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் உலகெங்கிலும் உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
உலகிலேயே முதன் முதலில் உதட்டுச்சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாவர். பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தியவர்கள். சிந்துவெளி நாகரிகத்தில் சிந்து சமவெளிப் பிரதேசம் என்பது இன்றைய பாகித்தானின் பெரும்பான்மையான பகுதிகளையும் இந்தியாவின் குசராத், இராச்சசுத்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர்.[1] இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும்.
பின்னர் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வணிகர்களின் வாயிலாக உதட்டுச் சாயம்பற்றிய செய்திகள் மெசொப்பொத்தேமியா வரை பரவியது. மெசொப்பொத்தேமிய மக்கள் கி. மு. 1500களில் விலையுயர்ந்த நகைகளைப் பொடியாக்கி உதட்டில் சாயமாகப் பூசினர்.[2] பின்னர் வண்ணத்துப்பூச்சிகளின் உடலிலுள்ள நிறத்தையும் இன்னும் சிலர் மயிலின் இறகிலுள்ள நிறத்தையும் கொண்டு தங்களது உதட்டை அலங்கரித்துக் கொண்டார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
பண்டைய எகிப்திய நாகரிக மக்களும் உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு வகைக் கள்ளிச் செடியின் நிறமியைக் கொண்டு உதடுகளுக்கு நிறம் பூசிக்கொண்டனர். இதில் 0.001 விழுக்காடு அயோடின் மற்றும் சில புரோமின் பொருட்களும் இருந்ததால் பயன்படுத்தியோருக்குத் தீராத நோய்கள் ஏற்பட்டன. கிளியோபாட்ரா கருஞ்சிவப்பு நிறத்தில் எறும்புகள் மற்றும் வண்டுகளிலிருந்து கிடைக்கும் நிறமிகளைக் கொண்டு தனது உதடுகளை ஒப்பனை செய்து கொண்டார். பளபளப்பைத் தருவதற்காக மீன்களின் செதில்களும் பயன்படுத்தப்பட்டன.[3]
கி. பி. பதினாறாம் நூற்றாண்டு வரை பொதுமக்களிடையே உதட்டுச் சாயம் உபயோகிப்பதில் மிகப்பெரும் தயக்கம் இருந்தது. ஆரம்ப காலகட்டங்களில் அரேபியர்கள், உதட்டுச்சாயம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கிடைக்காத சமயத்தில் ஒருவகை வானவில் நிறமுள்ள பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகளைக் கொண்டு தங்கள் உதடுகளை ஒப்பனை செய்துகொண்டனர். ஆனால், நாளடைவில் இதனைப் பயன்படுத்திய பெண்களைச் சில கொடிய நோய்கள் தாக்க ஆரம்பித்தன.
பின்னர் அபு அல் காசிம் (Abu al-Qasim al-Zahrawi;கி. பி. 936–கி. பி. 1013) என்ற இசுலாமிய மேதை, தேன்மெழுகு, மெழுகு, ஆமணக்கு எண்ணெய் மற்றும் நிறப்பசைகள் கொண்டு முதன்முதலாகத் திண்ம வடிவிலான (Solid-Lipstick) உதட்டுச்சாயம் உருவாக்கும் தொழிற்நுட்பத்தைக் கண்டறிந்தார். அது வரை உதட்டுச்சாயம் திரவ வடிவில் தான் தயாரிக்கப்பட்டது. அரேபியர்களின் அச்சம் காரணமாகப் பின்விளைவுகளை ஏற்படுத்தாத உதட்டுச்சாயத்தை அபு அல் காசிம் கண்டறிந்த போதும் அதனை உபயோகிப்பதில் மக்களிடையே அச்சம் நிலவியது.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து இராணி எலிசபெத் தான் உதட்டுச்சாயத்தை முதலில் பயன்படுத்திய புகழ்பெற்ற நபராவர். வெள்ளை நிற உடல் கொண்ட அவர், அடர் சிவப்பு நிற உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தியது மிகவும் எடுப்பாகக் காட்சியளித்தது. அது முதல் உதட்டுச்சாயம் புகழ்பெறத் துவங்கியது.[4] இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக இதனை உபயோகிப்பதில் தொடர்ந்து தயக்கம் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பெரும்பாலும் பாலியல் தொழில் செய்பவர்களும், நடிகர்களும் நடிகைகளும் மட்டுமே உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்தி வந்தனர்.[5][6] 1880ஆம் ஆண்டு வாக்கில் சாரா பெர்னார்டு (Sarah Bernhardt – கி.பி.1844–1923) என்ற புகழ் பெற்ற நடிகை பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் உதட்டுச் சாயத்தைப் பயன்படுத்தத் துவங்கினார்.[7] அதைத் தொடர்ந்து பொதுமக்களில் சிலரிடையே புகைப்படங்கள் எடுக்கும் போது மட்டும் உதட்டுச்சாயம் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது.[8][9] உதட்டுச்சாயம் பயன்படுத்துவதை உலகம் முழுவதும் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றவர்கள் ஐரோப்பியர்கள் ஆவர். ஆயினும் திருச்சபையினரால் உதட்டுச்சாயம் பயன்படுத்துவது சாத்தானின் செயல் என தடை செய்யப்பட்டது.[10]
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உதட்டுச்சாயம் தயாரிக்கும் தொழிலானது ஆங்காங்கு குடிசைத்தொழில் போல நடைபெற்று வந்தது.[11] 1884-ஆம் ஆண்டு குர்லைன் (Guerlain) என்ற பிரெஞ்சு நிறுவனம் வணிக நோக்கில் மிகப்பெரிய அளவில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்து சந்தைப்படுத்தியது. தேன், ஆமணக்கு எண்ணெய், மான் மற்றும் மாடுகளின் கொழுப்புகளைக் கொண்டு வணிக நோக்கிலான உதட்டுச்சாயத்தை அந்நிறுவனம் தயாரித்தது. துவக்கத்தில் உதட்டுச்சாயம் பட்டுத்துணிகள் மற்றும் பாத்திரங்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது, ஆகையால் இதனைத் தூரிகைகள் கொண்டு உதடுகளில் பூசிக்கொண்டனர்.[1]
1912-ஆம் ஆண்டு மாரிஸ் லெவி என்பவர் இன்று நாம் பயன்படுத்தும் உதட்டுச்சாயங்கள் அடைத்து விற்கப் பயன்படும் உருளைக் குப்பிகளை உலோகத்தில் தயாரித்து அறிமுகப்படுத்தினார். இதில் சில குறைபாடுகள் இருந்தது, அதனைக் களைந்து 1923-ல் திருகினால் உதட்டுச்சாயம் இருக்கும் தகடு மேலே வரும் வகையிலான உலோக உருளையை ஜேம்ஸ் புரூஸ் பேசன் என்பவர் கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் நெகிழியிலான உருளைக் குப்பிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.[12]
1930-ஆம் ஆண்டு எலிசபெத் ஆர்டன் என்ற அழகுக்கலை நிபுணர் பல்வேறு உதட்டுச் சாயத்திற்கு நிறங்களைத் தரும் பல்வேறு வகையான நிறமிகளைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.[13][14] அதன் பின்னர்தான் பல்வேறு வகையான வண்னங்களில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வரத்தொடங்கியது
காலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வொன்று உதட்டுச் சாயத்தில் ஒன்பது வகையான உலோகங்கள் காணப்படுவதாகக் தெரிவிக்கிறது. அவ்வுலோகங்கள் காரீயம், காட்மியம், கோபால்ட், அலுமினியம், டைட்டானியம், செம்பு, மாங்கனீசு, குறோமியம் மற்றும் நிக்கலாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.