From Wikipedia, the free encyclopedia
தோகோன் தெமுர் (மொங்கோலியம்: Тогоонтөмөр, டோகூன் டோமோர், 25 மே 1320– 23 மே 1370), வடக்கு யுவான் வம்சத்தால் மங்கோலியாவில் கொடுக்கப்பட்ட பேரரசர் ஹுயிசோங் (சீனம்: 惠宗) என்கிற கோயில் பெயராலும் அழைக்கப்படுகிற இவர் யுவான் வம்சப் பேரரசர் குசாலாவின் மகன் ஆவார். இவர் இறப்பிற்குப் பிறகு சீனாவின் மிங் வம்ச பேரரசர் ஹோங்வுவால் கொடுக்கப்பட்ட சண்டி (சீனம்: 順帝) என்கிற பெயராலும் அழைக்கப்படுகிறார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலியப் பேரரசின் கடைசி ககான் ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.[2][3][4]
தோகோன் தெமுர் யுவானின் பேரரசர் ஹுயிசோங் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 15வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 11 வது பேரரசர் சீனாவின் பேரரசர் வடக்கு யுவான் வம்சத்தின் கான் | |||||||||||||||||||||
தோகோன் தெமுரின் உருவப்படம் | |||||||||||||||||||||
யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 19 சூலை 1333 – 23 மே 1370 | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | 19 சூலை 1333 | ||||||||||||||||||||
முன்னையவர் | ரிஞ்சின்பால் கான் | ||||||||||||||||||||
பின்னையவர் | பிலிக்டு கான் | ||||||||||||||||||||
பிறப்பு | 25 மே 1320 | ||||||||||||||||||||
இறப்பு | 23 மே 1370 (அகவை 49–50) இங்சங் | ||||||||||||||||||||
மனைவி | தனசிறி, பயன் குடுக், பேரரசி கி | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | குதுக்து கான் | ||||||||||||||||||||
தாய் | கரலகு இனத்தைச் சேர்ந்த மைலைதி | ||||||||||||||||||||
மதம் | திபெத்திய பௌத்தம், பதவியேற்கும்போது தாவோயிசத்திற்கு மாறினார் |
இவரது ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், மங்கோலியா மங்கோலியர்கள் வசமே இருந்தபோதிலும் யுவான் ஆட்சியானது சிவப்பு டர்பன் கலகத்தால் தூக்கியெறியப்பட்டு மிங் வம்ச ஆட்சி தொடங்கியது. பேரரசர் ஹுயிசோங் கர்மபாக்களின் (திபெத்திய புத்த மதத்தின் கர்மா கியாகு பள்ளியின் தலைவர்கள்) புத்த மாணவராவார், மற்றும் தை சிதுபாக்களின் முந்தைய அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் குறிப்பிடத்தக்க வகையில் ஜோனாங் அறிஞர் டொல்போபா ஷெரப் கியல்ட்சனை தனக்குக் கற்பிப்பதற்காக அழைத்தார், ஆனால் மறுக்கப்பட்டார்.[5]
தோகோன் தெமுர், குசாலா (குதுக்து கான் அல்லது பேரரசர் மிங்சோங்) மத்திய ஆசியாவுக்கு நாடுகடத்தப்பட்டு இருந்தபோது அவருக்குப் பிறந்தார். தோகோன் தெமுரின் தாயார் கரலகுகளின் தலைவரான அரசலானின் வழித்தோன்றலான மைலைதி ஆவார்.
1328 ஆம் ஆண்டில் யெசுன் தெமுர் (பேரரசர் டைடிங்) இறந்த பிறகு ஏற்பட்ட இரு தலைநகரங்களின் போர் என அறியப்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, தோகோன் தெமுர் அவரது தந்தையைச் சந்தித்தார். பின் மங்கோலியாவிலிருந்து சங்டுவுக்குள் நுழைந்தார். எனினும், குசாலா இறந்தபின் அவரது தம்பி துக் தெமுர் (பேரரசர் வென்சோங்) மன்னனானார். தோகோன் தெமுர் அரசவைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இவர் முதலில் கொர்யியோவிற்கும் (தற்கால கொரியா), பின்னர் தென் சீனாவிலுள்ள குவாங்சிக்கும் நாடுகடத்தப்பட்டார். இவர் நாடுகடத்தப்பட்ட சமயத்தில், இவரது மாற்றாந்தாய் பாபுசா கொல்லப்பட்டார்.
வென்சோங் பேரரசர் 1332 இல் இறந்தபோது, அவரது விதவை, பேரரசி தோவகர் பூதசிறி மன்னரது விருப்பத்தை மதித்து, வென்சோங்கின் சொந்த மகன் எல் தெகுசுக்குப் பதிலாக குசாலாவின் மகனை மன்னனாக்க முடிவு செய்தார். எனினும், குசாலாவின் மகன் மன்னனான இரண்டே மாதங்களில் இறந்தார். அதிகாரபூர்வமான ஆட்சியாளர், எல் தெமுர், எல் தெகுசை பேரரசராக நிறுவ முயற்சித்தார், ஆனால் பேரரசி பூதசிறியால் தடுக்கப்பட்டார். இதன் விளைவாக, தோகோன் தெமுர் குவாங்சியில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டார். தோகோன் தெமுர், ரிஞ்சின்பாலைப் போல் அல்லாமல் வயது முதிர்ந்தவராக இருந்தார். என்வே அவரை கைப்பாவையாகப் பயன்படுத்த முடியாது என்று எல் தெமுர் உணர்ந்தார். மேலும் தோகோன் தெமுரின் தந்தையார் குசாலாவின் கொலைக்கு எல் தெமுர் தான் காரணம் என பலரால் சந்தேகிக்கப்பட்டார். இதன் காரணமாக தோகோன் தெமுர் தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தலாம் என எல் தெமுர் அஞ்சினார். தோகோன் தெமுரின் பதவிப் பிரமாணமானது 1333ல் எல் தெமுர் இறக்கும்வரை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
1333 ஆம் ஆண்டில், தோகோன் தெமுர் முதன்முதலில் கி என்ற கொரியப் பெண்ணைச் சந்தித்தார்.[6] மங்கோலியப் படையெடுப்பிற்குப் பிறகு கொர்யியோ மன்னர்கள், இளம் பெண்களை யுவானுக்கு அனுப்பிவைக்க வேண்டியிருந்தது. கோரியோவின் மன்னர்களால் 1320களின் பிற்பகுதியில், சீனாவிற்கு "மனிதக் காணிக்கையாக" கி அனுப்பப்பட்டார்.[7]
புதிய பேரரசர் தனது உறவினரான எல் தெகுசை பட்டத்து இளவரசராக நியமித்தார். ஆனால் எல் தெமுர் இறந்த பின்னரும் கூட இவர் போர்ப்பிரபுக்களால் கட்டுப்படுத்தப்பட்டார். போர்ப்பிரபுக்களின் மத்தியில், மெர்கிட் இனத்தைச் சேர்ந்த பயன் எல் தெமுரைப் போல் சக்திவாய்ந்தவராக உருவெடுத்தார். பயன் செயலகத்தின் அமைச்சராகப் பணியாற்றினார். எல் தெமுரின் மகன் டங் கி-சே மூலம் ஏற்பட்ட ஒரு கலகத்தை பயன் நசுக்கினார். தோகோன் தெமுரின் சர்வாதிகார ஆட்சியின்போது, அவர் பல ஒழித்துக்கட்டல்களைச் செய்தார்; மேலும் ஏகாதிபத்தியத் தேர்வுமுறையை நிறுத்தினார். தோகோன் தெமுர் இரண்டாம் மனைவிக்கான அந்தஸ்துக்கு லேடி கியை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் மங்கோலிய வம்சங்களில் இருந்து இரண்டாம் மனைவியை எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. கொரிய பெண்மணிக்கு பதவி உயர்வு கொடுத்தது நடைமுறைக்கு முரணாக இருந்தது. இது அரசவையில் எதிர்ப்பை உருவாக்கியது. இதனால் தோகோன் தெமுர் தனது முடிவில் இருந்து பின்வாங்க நேர்ந்தது. [8] 1339 ஆம் ஆண்டில், கி ஒரு மகனைப் பெற்றெடுத்தபோது, அவரை பேரரசனாக்க தோகோன் தெமுர் முடிவு செய்தார், இறுதியில் அவர் 1340 ஆம் ஆண்டில் கியை தன்னுடைய இரண்டாம் மனைவியாகப் பெயரிட முடிந்தது.[9]
தோகோன் தெமுருக்கு நாட்கள் ஆக ஆக பயனின் சர்வாதிகார ஆட்சி மேல் வெறுப்பு வந்தது. 1340 ஆம் ஆண்டில் தோகோன் தெமுர் பயனின் உறவினர் தோகதோவாவுடன் இணைந்தார். இவருக்கும் பயனுக்கும் இடையில் பகைமை இருந்தது. பயன் நாடுகடத்தப்பட்டார். இவர் எல் தெகுசு மற்றும் பேரரசி பூதசிறி ஆகியோரை அரசவையிலிருந்து அகற்றினார். இவர் தோகதோவாவின் உதவியுடன், நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய அதிகாரிகளை அகற்றினார்.
பயன் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன், தோகதோவா முற்றிலுமாக அரசவையின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இவரது முதல் நிர்வாகம் தெளிவாக புதிய தொடக்கத்தை வெளிப்படுத்தியது. இந்த இளைய தலைவர் சீக்கிரமே தனது ஆட்சியை பயனின் ஆட்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டினார். ஒரு புதிய சீன சகாப்தப் பெயர், சிசங் (சீனம்: 至正), இதை வெளிப்படுத்த சூட்டப்பட்டது. பயனால் செய்யப்பட்ட பதவிநீக்கங்கள் நிறுத்தப்பட்டன. பெரிய சீன எழுத்தாளர்கள் பலர் ஓய்விலிருந்து அல்லது நிர்வாக ஒதுக்குதலிலிருந்து தலைநகரத்திற்குத் திரும்பினர், ஏகாதிபத்தியத் தேர்வு முறையும் திரும்ப ஆரம்பிக்கப்பட்டது.
தோகதோவாவின் கீழ் மத்திய அரசாங்கம் ஒரு புதிய மற்றும் நேர்மறையான திசையில் செல்வதற்கான சில ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. அவரது வெற்றிகரமான திட்டங்களில் ஒன்று நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த அதிகாரப்பூர்வ லியோவோ, ஜின் மற்றும் சாங் வம்ச வரலாறுகள் இறுதியில் 1345 இல் முடிக்கப்பட்டன.
தோகதோவா தனது பணியை டிசம்பர் 1344 இல் தோகோன் தெமுரின் ஒப்புதலுடன் ராஜினாமா செய்தார். இது அவருடைய முதல் நிர்வாகத்தின் முடிவாக இருந்தது. 1344 மற்றும் 1349 இல் இருந்து வந்த குறுகிய கால நிர்வாகங்கள் தோகதோவாவின் நிர்வாகத்திலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கும். 1347ல் பேரரசர், குசாலா மற்றும் யெசுன் தெமுரின் முன்னாள் அதிகாரிகள் உதவியுடன் தோகதோவாவை கன்சுவுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பினார்.
1349 ஆம் ஆண்டில் தோகோன் தெமுர் தோகதோவாவை திரும்ப அழைத்தார். இதன் மூலம் தோகதோவாவின் இரண்டாவது மற்றும் மிகவும் வேறுபட்ட நிர்வாகம் தொடங்கப்பட்டது.
1340களின் பிற்பகுதி முதல், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அடிக்கடி இயற்கை பேரழிவுகள், வறட்சி, வெள்ளங்கள் மற்றும் தொடர் பஞ்சங்களுக்கு ஆளாயினர். பயனுள்ள அரசாங்க கொள்கை இல்லாததால் அரசு மக்களிடமிருந்து ஆதரவை இழக்க ஆரம்பித்தது. அரசாங்கத்தின் உப்பு ஏகபோகத்தால் பாதிக்கப்படாத சட்டவிரோத உப்பு விற்பனையாளர்கள் 1348ல் ஒரு கிளர்ச்சி எழுப்பினர். இது பேரரசு முழுவதும் மேலும் பல கிளர்ச்சிகளைத் தூண்டியது. இதில் சிவப்பு டர்பன் கலகமும் ஒன்றாகும். இது 1351 ஆம் ஆண்டில் துவங்கி நாடு தழுவிய கொந்தளிப்பாக வளர்ந்தது.
1354 ஆம் ஆண்டில், சிவப்பு டர்பன் கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்கு தோகதோவா ஒரு பெரிய இராணுவத்தை வழிநடத்தி சென்றபோது, தோகோன் தெமுர் திடீரென்று காட்டிக்கொடுப்புக்கு பயந்து அவரைப் பதவிநீக்கம் செய்தார். இதன் விளைவாக தோகோன் தெமுரின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஆனால் இது மத்திய அரசாங்கத்தை விரைவாக பலவீனப்படுத்தியது. இதனால் அவர் உள்ளூர் போர்ப்பிரபுக்களின் படைகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
தோகோன் தெமுர் படிப்படியாக அரசியலில் ஆர்வத்தை இழந்து அரசியல் போராட்டங்களில் தலையிடுவதை நிறுத்திவிட்டார். இவரது மகன் பிலிக்டு கான் 1353 ஆம் ஆண்டில் இளவரசர் ஆனார்; அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றார். தோகோன் தெமுரைவிட அவரது உதவியாளர்கள் அரசியலில் அதிக ஆதிக்கம் செலுத்தினர். இதனால் பிலிக்டு கானுக்கும் தோகோன் தெமுரின் உதவியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அரசி கி அரசியலில் அதிக அதிகாரம் செலுத்தினார்.[10] அவர் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வரிகளை சுமத்துவதற்கு என்றே ஒரு பிரத்யேக அலுவலகத்தை வைத்திருந்தார். அவர் ஊழல் மற்றும், அரண்மனைகள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்காகச் செய்த செலவுகள் ஆகியவற்றிற்காக புகழ்பெறத் தொடங்கினார். இதன் காரணமாக அவர் மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்டார்.[11] கொரியாவிலும், அரசி கி குடும்பத்தினர், அவரது செல்வாக்கின் காரணமாக அதிகாரம் வாய்ந்த பதவிகள் அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களும் அவர்களது ஊழல் காரணமாக அரசி “கி”க்குச் சமமாக வெறுக்கப்பட்டனர்.[12] தலைமைப் பேரரசி கி மற்றும் அவரது மந்திரி ஆகியோர் பிலிக்டு கானை தோகோன் தெமுரைத் தூக்கியெறியுமாறு அறிவுறுத்தினார். தோகோன் தெமுரால் இந்த மோதலை சமரசம் செய்ய முடியவில்லை, ஆனால் மந்திரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1364 ஆம் ஆண்டில் ஷங்சியைத் தளமாகக் கொண்ட போர்ப்பிரபு போலத் தெமுர் கன்பலிக்கை ஆக்கிரமித்து, குளிர்காலத் தளத்திலிருந்து பட்டத்து இளவரசரை வெளியேற்றினார். ஹெனானைத் தளமாகக் கொண்ட போர்ப்பிரப்பு கோகே தெமுருடன் கூட்டணி சேர்ந்து, பிலிக்டு கான் அடுத்த ஆண்டு போலத் தெமுரைத் தோற்கடித்தார். இந்த உள்நாட்டுப் போராட்டம் மத்திய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது. 1365 ஆம் ஆண்டில், தோகோன் தெமுர் அவரது விருப்பமான அரசி “கி”க்கு முதல் பேரரசியாக பதவி உயர்வு அளித்தார். மேலும் அவருடைய மகன் அடுத்த மன்னனுக்கான வரிசையில் முதல்வராக இருப்பார் என்றும் அறிவித்தார்.[13]
யுவான் வம்சத்தின் போது, கன்பூசியசு சந்ததியினரில் ஒருவரும், டியூக் யங்செங் காங் குவானின் 孔浣 மகன்களில் ஒருவருமான, காங் சாவோ 孔紹, கொர்யியோ சகாப்தக் கொரியாவுக்கு சீனாவிலிருந்து குடிபெயர்ந்தார். தோகோன் தெமுரின் ஆட்சியின்போது ஒரு கொரியப் பெண்ணைத் (ஜோ ஜின்-கியியோங்கின் 曹晉慶 மகள்) திருமணம் செய்து குடும்பத்தைத் தொடங்கினார்.[14][15][16][17][18][19]
போப் ஜான் XXII மற்றும் போப் பெனடிக்ட் XII ஆகியோர் வெற்றிகரமாக 1317 முதல் 1343 ஆம் ஆண்டுவரை கிரிமியாவிலிருந்து கொரியா வரை மங்கோலியப் பேரரசு முழுவதும் கத்தோலிக்கத் தேவாலயங்களின் அமைப்பை ஏற்படுத்தினர். கன்பலிக்கின் பேராயர், ஜான் ஆஃப் மான்டேகார்வினோ 1328ல் இறந்தார். தோகோன் தெமுரின் ஆதரவுடன், 1336ல் போப் பெனடிக்ட் XII க்கு புதிய மெட்ரோபொலிட்டன் கேட்டு ஆலன்கள் எழுதினர். 1338 ஆம் ஆண்டில், போப் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பெய்ஜிங்கில் தங்கியிருந்த ஜியோவானி டி’ 'மரிக்னொல்லி தலைமையில் தூதர்களைத் திருப்பி அனுப்பினார். சிறந்த ஐரோப்பிய குதிரைகளை உள்ளடக்கிய பரிசுகளை தோகோன் தெமுருக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.
கொரியாவில் வேவு பார்த்ததாக ஜப்பான் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டபோது, கொர்யியோ நீதிமன்றம், அதை, யுவான் பேரரசர் தோகோன் தெமுருக்கு அனுப்பியது. இவர் மீனவர்களை ஜப்பானுக்கு திருப்பி அனுப்பினார். பதிலுக்கு, அசிககா சோகுனேடு அதன் நன்றியை வெளிப்படுத்த ஒரு துறவி தலைமையிலான தூதர்களை அனுப்பியது.
தெற்கு சீனாவில் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றுபடுத்தி, மிங் வம்சத்தை ஸ்தாபித்த யுவான்சங் - கோங்வு பேரரசராக முடிசூடினார் - வட சீனாவுக்கு இராணுவப் படையெடுப்புகளை நடத்தி யுவான் இராணுவத்தை 1368ல் தோற்கடித்தார். கோகே தெமுர் மிங் ஜெனரல் சு டாவுக்கு எதிரான போரில் தோல்வியடைந்த போது மற்றும் மிங் துருப்புக்கள் கீபேயை அணுகிய போது, தோகோன் தெமுர் கன்பலிக்கை கைவிட்டு, அவரது கோடைத் தளமான சங்டுவிற்கு ஓடினார்.
1369 ஆம் ஆண்டில் சங்டுவும் மிங் ஆக்கிரமிப்பின் கீழ் விழுந்தபோது, தோகோன் தெமுர் வடக்கில் இருந்த இங்சங்குக்கு ஓடினார், அது இன்றைய உள் மங்கோலியாவில் அமைந்துள்ளது. 1370 இல் அங்கு இவர் இறந்தார்; இவரது மகன் பிலிக்டு கான் ஆயுசிறிதரா அடுத்த மன்னனானார். அதே ஆண்டில் புதிய மன்னர் கரகோரத்திற்குத் திரும்பினார். யுவான் வம்சத்தில் எஞ்சியவர்கள் மங்கோலியாவை ஆட்சி செய்தனர். மேலும் சீனப் பேரரசர் என்ற தலைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினர். இந்நேரத்திலிருந்து அவர்கள் வடக்கு யுவான் வம்சத்தினர் என அழைக்கப்பட்டனர். குப்லாய் கானுக்குப் பின்னர் தோகோன் தெமுரே நீண்டகாலமாக வாழ்ந்த யுவான் சீனாவின் மங்கோலிய பேரரசராக இருந்தார்.
மங்கோலியாவைச் சேர்ந்த சாம்ராஜ்யம் இவரது மரணத்தின் போது, அதன் செல்வாக்கை பராமரித்து, கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து அல்டாய் மலைகள் வரை நீண்டிருந்தது. மேலும் யுவான் சார்பு, மிங் எதிர்ப்புப் படைகள் யுன்னான் மற்றும் குயிசோவில் இருந்தன. மிங் வம்சம் சீனா மீது அதன் கட்டுப்பாட்டை இன்னும் உறுதியாகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், யுவான் கன்பலிக்கைக் கைவிட்டபோது யுவானை ஆண்டவன் கைவிட்டுவிட்டதாகக் கருதியது. யுவான் ஆட்சி 1368ல் அகற்றப்பட்டது. 1368க்குப் பிறகு மிங் தோகோன் தெமுர் மற்றும் அவரது வெற்றியாளர் ஆயுசிறிதர் ஆகியோரைச் சட்டப்பூர்வமான பேரரசர்களாகக் கருதவில்லை.
மிங் வம்சம் தோகோன் தெமுரின் இறப்பிற்குப் பிறகு அவருக்கு "சண்டி" (順帝) எனும் பெயரைக் கொடுத்தது. இதன் அர்த்தமானது ஆண்டவன் கட்டளைப்படி அவர் தனது சாம்ராஜ்யத்தை மிங் வம்சத்திற்குக் கொடுத்துவிட்டார் என்பதாகும். ஆனால் வடக்கு யுவான் வம்சத்தினர் அவருக்கு சுவனரன் பு சியாவோ குவங்தி (宣仁 普 孝 皇帝) மற்றும் கோயில் பெயரான குயிசோங் (惠 宗) ஆகியவற்றை வழங்கினார்.
தோகோன் தெமுருக்குப் பின்னரும், தெற்கில் மிங் படையினருக்கு யுவான் ஆதரவுப் படையின் எதிர்ப்பு இருந்தது. தென்மேற்கு சீனாவில், தன்னைத்தானே லியாங்கின் இளவரசன் என்று அழைத்துக் கொண்ட பசலவரமி, யுன்னான் மற்றும் குயிசோவில் யுவானுக்கு ஆதரவாக 1381 வரை போராடினார்.
எர்டனின் தோப்சி போன்ற மங்கோலிய நூல்கள் தோகோன் தெமுரின் புலம்பல் என அறியப்படும் கவிதையைக் கொண்டுள்ளன. கன்பலிக்கின் இழப்புக்குப் பிறகு அவரது துயரத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.