திருத்தந்தை புனித இருபத்திமூன்றாம் யோவான் அல்லது இருபத்திமூன்றாம் அருளப்பர் (Pope John XXIII) (இலத்தீன்: Ioannes PP. XXIII; இத்தாலியம்: Giovanni XXIII) கத்தோலிக்க திருச்சபையின் 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர்.[1]

விரைவான உண்மைகள் புனித இருபத்திமூன்றாம் யோவான்St. John XXIII, ஆட்சி துவக்கம் ...
புனித இருபத்திமூன்றாம் யோவான்
St. John XXIII
261ஆம் திருத்தந்தை
Thumb
Thumb
ஆட்சி துவக்கம்28 அக்டோபர் 1958
ஆட்சி முடிவு3 சூன் 1963
(4 ஆண்டுகள், 218 நாட்கள்)
முன்னிருந்தவர்பன்னிரண்டாம் பயஸ்
பின்வந்தவர்ஆறாம் பவுல்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு10 ஆகத்து 1904
ஜூசேப்பே செப்பெத்தெல்லி-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு19 மார்ச் 1925
ஜோவான்னி தாச்சி போர்ச்செல்லி-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது12 சனவரி 1953
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி
பிறப்பு(1881-11-25)25 நவம்பர் 1881
சோத்தோ இல் மோந்தே, இத்தாலியா
இறப்பு3 சூன் 1963(1963-06-03) (அகவை 81)
வத்திக்கான் நகரம்
குறிக்கோளுரைகீழ்ப்படிதலும் அமைதியும்
Oboedientia et Pax
புனிதர் பட்டமளிப்பு
முத்திப்பேறு3 செப்டம்பர் 2000
இரண்டாம் யோவான் பவுல்-ஆல்
புனிதர் பட்டம்27 ஏப்ரல் 2014
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
யோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்
மூடு

இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அக்குறுகிய ஆட்சிக்காலத்தில் இவர் 20ஆம் நூற்றாண்டுத் திருச்சபையில் நடந்த மிக முக்கிய நிகழ்வாகிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (1962-1965) கூட்டினார். ஆனால் அச்சங்கம் நிறைவுறுவதற்கு முன்னரே, 1963ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் நாள் இறந்தார்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கும் திருத்தந்தை ஒன்பதாம் பயசுக்கும் 2000ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் அளித்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலோடு இவருக்கும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் புனிதர்பட்டமளிக்கப்பட்டது.

இளமைப் பருவம்

ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்த லொம்பார்டி மாநிலத்தில் பெர்கமோ என்னும் பகுதியைச் சார்ந்த சோத்தோ இல் மோந்தே (Sotto il Monte) என்னும் சிற்றூரில் பிறந்தார். அவருடைய தந்தை ஜோவான்னி பத்தீஸ்தா ரொங்கால்லி (1854-1935), தாயார் மரியான்னா ஜூலியா (1854-1939). அவர்களுக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளுள் ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி நான்காமவர். அவருடைய உடன்பிறப்புகள்:

  • அல்ஃப்ரேடோ (பிறப்பு: 1889)
  • மரியா கத்தரீனா (1877-1883)
  • தெரேசா (1879-1954)
  • அன்சீல்லா (1880-1953)
  • தொமேனிக்கோ ஜூசேப்பே (பெப்ருவரி 22, 1888 - மார்ச் 14, 1888)
  • பிரான்செஸ்கோ சவேரியோ (1883-1976)
  • மரியா எலீசா (1884-1955)
  • அஸ்ஸூந்தா கசீல்தா (பிறப்பு: 1886)
  • ஜோவான்னி பிரான்செஸ்கோ (1891-1956)
  • என்றீக்கா (1893-1918)
  • ஜூசேப்பே லூயிஜி (பிறப்பு: 1894)
  • லூயிஜி (1896-1898).

ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த ஊரிலிருந்த பெரும்பான்மையான மக்களைப் போலவே அவரது குடும்பத்தினரும் குத்தகை நிலத்தில் வேலை செய்தனர்.[2] [3][4]

சிறுவயதிலேயே குருவாகப் பணிபுரிய ஆர்வம் கொண்ட ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லி, தம் உறவினர் ஒருவர் அளித்த நிதி உதவியோடு பெர்கமோ சிறு குருமடத்தில் கல்விபயின்றார். கல்வி உதவித் தொகை பெற்று உரோமையில் புனித அப்போல்லினார் குருமடத்தில் (இன்றைய "உரோமைத் திருத்தந்தை பெரிய குருமடம்") கல்விகற்றார். இறையியல் படிப்பை முடித்து, 1904ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3ஆம் நாள் குருப்பட்டம் பெற்றார். உரோமை நகரில் "மோந்தே சாந்தோ அன்னை மரியா" கோவிலில் குருப்பட்டம் நிகழ்ந்தது.

ரொங்கால்லி சிறுவயதிலிருந்தே அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மிலான் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்பெர்சாகோ என்னும் ஊரில் அமைந்திருந்த அன்னை மரியா திருத்தலத்துக்கு அவர் பல முறை திருப்பயணமாகச் சென்றுவந்தார்.

1901ஆம் ஆண்டு லொம்பார்டி பட்டாளத்தில் கட்டாய இராணுவ சேவை செய்தார்.

திருச்சபையில் பணிபுரிதல்

பெர்கமோ மறைமாவட்டத்தின் ஆயர் ஜாக்கொமோ ரதீனி-தெதேஸ்கி என்பவர் தம் செயலராக ஆஞ்செலோ ஜூசேப்பே ரொங்கால்லியை 1905இல் நியமித்தார். அப்பணியை மிக்க விசுவாசத்தோடும் திறமையோடும் ஆற்றினார். 1914, ஆகத்து 22ஆம் நாள் ஆயர் ரதீன்-தெதேஸ்கி இறந்தார். அதுவரையிலும் ரொங்கால்லி தம் ஆயரின் செயலராகப் பணிபுரிந்தார். அதே சமயம் பெர்கமோ குருமடத்தில் திருச்சபை வரலாறு கற்பித்தார்.

முதலாம் உலகப் போர் தொடங்கியபோது ரொங்கால்லி இத்தாலிய இராணுவத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றினார். அவருக்கு இராணுவ ஆன்ம ஆலோசகர் என்னும் பதவியும் வழங்கப்பட்டது.

1921ஆம் ஆண்டு, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் ரொங்கால்லிக்கு மொன்சிஞ்ஞோர் பட்டம் கொடுத்து, அவரை இத்தாலியின் நற்செய்தி அறிவிப்புப் பணி தேசிய அமைப்புக்கும் தலைவராக நியமித்தார். அக்காலத்தில் ரொங்கால்லி திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வெளியிட்ட மறையறிவிப்புப் பணி மடலாகிய "Romanum Pontificum" என்பதை உருவாக்குவதில் ஒத்துழைத்தார்.

புனிதர் பட்டம் அளிக்கப்படுதல்

திருத்தந்தை பிரான்சிசு 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு "புனிதர்" பட்டம் வழங்கினார். புனிதர் பட்டம் அளித்த அதே சடங்கின்போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கும் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் கலந்துகொண்டார்.[5]

திருச்சபையின் 2000 ஆண்டு வரலாற்றில் இரண்டு திருத்தந்தையர் ஒரே நேரத்தில் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் திருப்பலி நிறைவேற்றியது இதுவே முதல் தடவை ஆகும்.

புனிதர் பட்டம் வழங்கிய சடங்கில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்டனர். மிகப்பலர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பிறந்த நாடாகிய போலந்திலிருந்து திருப்பயணிகளாக வந்திருந்தனர். வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் திருப்பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. அங்கிருந்து டைபர் நதியின் பாலங்களுக்கு அப்பால் கூட மக்கள் கூடியிருந்தனர். பலர் மிகப்பெரிய திரைகளில் நிகழ்ச்சியைக் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இருபத்திமூன்றாம் யோவான் 1958இலிருந்து 1963 வரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகப் பணியாற்றினார். அவர்தான் 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்றொரு உலகளாவிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். அவருடைய ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மறுமலர்ச்சியைக் கொணர்வதற்கு வழிகோலிற்று.

இருபத்திமூன்றாம் யோவான் உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அமைதி பற்றி அவர் எழுதிய "அவனியில் அமைதி" (Pacem in Terris) என்ற சுற்றுமடல் பன்னாட்டு சமூகத்தில் ஆழ்ந்த தாக்கம் கொணர்ந்தது. மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய "பனிப்போர்" 1963இல் அணு ஆயுதப் போராக உருவெடுக்கும் பேராபத்து எழுந்தபோது திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் அமெரிக்க அதிபர் ஜாண் எஃப். கென்னடியையும் அந்நாளைய சோவியத் யூனியனின் அதிபர் குருஷோவையும் தொடர்புகொண்டு போர் எண்ணங்களைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். அணு ஆயுதப் போர் தவிர்க்கப்பட்டது.

திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 2000ஆம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறிக்கப்பட்டவர் இரு புதுமைகளை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது ஒழுங்குமுறை. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானை நோக்கி வேண்டிக்கொண்டதால் அதிசயமான விதத்தில் ஒருவர் குணமார் என்பதை வத்திக்கான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆயினும் புனிதர் பட்டம் கொடுப்பதற்கு மேலும் இரண்டாவது ஒரு புதுமை தேவைப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்கு புனிதர் பட்டம் அளிக்க இரண்டாவது புதுமை தேவையில்லை என திருத்தந்தை பிரான்சிசு தீர்மானித்து, சட்டத்திற்கு விதிவிலக்கு கொடுத்தார்.

புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்கள்

இரு திருத்தந்தையர்களைப் புனிதர்கள் என்று திருத்தந்தை பிரான்சிசு அறிக்கையிடுகையில், ஓய்வுபெற்ற திருத்தந்தையான பெனடிக்டும் உடனிருந்தார். இது வரலாற்றில் இவ்வகையில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு நிகழ்ச்சி.

அரசர்கள், அரசிகள், அதிபர்கள், பிரதம அமைச்சர்கள் போன்ற பல தலைவர்கள் பல நாடுகளிலிருந்து வந்து மேற்கூறிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 90க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா, இசுரயேல், அர்ஜென்டீனா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்து சுமர் 20 யூத தலைவர்களும் வந்திருந்தார்கள்.

ஆதாரங்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.