From Wikipedia, the free encyclopedia
இருகண் நோக்கி (Binoculars) அல்லது அரிய இருவிழியன் என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ள பறவைகளும் பிறவும் மிக அருகில் இருப்பது போல இருக்கும்.
இக்கருவியில், நாம் காணும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள், இரண்டு குழல்கள் வழியாக நுழைந்து, தனித்தனியாக நம் இரு கண்களையும் வந்து அடைகின்றன. இதனால் இப்படி இரு கண்பார்வை ஒருசேர நேர்வதால், காட்சி நேரில் பார்ப்பதுபோலவே முத்திரட்சி (முப்பரிமாணம்) உடையதாக உள்ளது. ஒளிக்கதிர்கள் இக்கருவியில் இரு குழல்களின் முன்பக்கத்திலும் உள்ள உருப்பெருக்கி வில்லைகள் (பொருளருகு வில்லைகள்) வழியாக நுழைகின்றன. பிறகு அவை குழல்களுக்குப் பின்னே உள்ளிருக்கும் கண்ணாடிப் பட்டகங்களால் (prism) எதிரொளிக்கப்பட்டு, கண்ணுக்கு அருகே உள்ள வில்லைகள் (கண்ணருகு வில்லைகள்) வழியாக வந்து நம் கண்களை அடைகின்றன. அப்படி ஒளிக்கதிர்கள் வந்து சேரும் பொழுது தொலைவில் காணப்படும் பொருளின் ஒளியுரு (image) உருப்பெருக்கம் அடைந்து மிக அருகில் இருப்பது போல காட்சி தருகின்றது.
இக் கருவிகள் பொதுவாக ஒருவர் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு பார்க்க ஏதுவாய் கையடக்கமாக இருக்கும். இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி மாந்தர்களில் ஒருவருக்கு ஒருவர் சிறிது வேறுபடும், ஆகையால், அந்த இரு குழல்களையும் ஒருவரின் கண்கள் அமைந்துள்ள விலகலுக்கு ஏற்றவாறு நெருக்கமாகவோ விலக்கியோ மாற்றிப் பிடித்துக்கொள்ள வசதி படைத்ததாக இருக்கும். அதே போல காணும் காட்சியின் தொலைவைப் பொறுத்தும், காட்சி துல்லியமாக (நறுக்கென்று) தெரியுமாறு குவியப்படுத்த, குழல்கள் சற்று நீளும் தன்மை உடையதாக இருக்கும். இதனால் பொருளருகு வில்லையில் இருந்து கண்ணருகு வில்லை வரையிலான தொலைவு மாறுபடும். இப்படிக் இரண்டு குழல்களின் குவியத் தொலைவுகளையும், ஒரே நேரத்தில் மாற்ற, கட்டைவிரலால் சுழற்றி நகர்த்தக்கூடிய, சிறுசக்கரம் இருக்கும்.
17 ஆவது நூற்றாண்டில் தொலைநோக்கி கண்டு பிடித்த உடனேயே இருகண்களாலும் பார்க்கவல்ல இரு குழல்களால் ஆன இருகண்ணோக்கிகள் பயனுடையதாக இருக்கும் என்ற அறிந்திருந்தனர். [1]. தொடக்ககாலத்தில் உருவாக்கிய இருகண்நோக்கிகள் பெரும்பாலும் கல்லீலிய தொலைநோக்கிகளின் வகையில் உள்ளவாறே வில்லைகளும் ஒளிப்பாதையும் இருந்தன. அவை குவிவில்லைகளை பொருளருகு வில்லைக்ளாகவும், குழிவில்லைகளைக் கண்ணருகு வில்லைகளாகவும் கொண்டிருந்தன. இவ்வமைப்பின் நன்மை என்னவென்றால் காணும் ஒளியுரு (image), நேராக இருக்கும், ஆனால் குறைபாடு என்னவென்றால், அதிக உருப்பெருக்கம் இருக்காது, காணக்கூடிய காட்சியின் பரப்பு அல்லது கோணமும் சிறியதாக இருக்கும். இன்றும் இவ்வகை இருகண்ணோக்கிகள் விலை மலிவான கருவிகளாகவும், நாடகம், ஓப்பரா போன்ற திரையரங்கு காட்சிகளைப் பார்க்கப் பயன்படும் கருவிகளாகவும் உள்ளன. இவற்றை ஓப்பராக் கண்ணாடிகள் (opera glasses) என்று அழைக்கிறார்கள்.
இருகண்ணோக்கிகளில் பொருளருகு வில்லை வழியாக வந்து உருவாகும் ஒளியுரு தலைகீழாக இருக்கும். இதனை நேராக்க இவ்வொளியுரு, இரண்டு செங்கோண பட்டகங்கள் வழியாக செல்லுமாறு ஒளிப்பாதை அமைந்திருக்கும். இந்த இரண்டு செங்கோண பட்டகங்கள் Z வடிவில் இருப்பதுபோல் இருக்கும். இப்படி ஒளியுருவை நேராக்கும் முறையை இகுனாசியோ போரோ (Ignazio Porro) என்னும் இத்தாலிய ஒளிக்கருவியாளர் 1854இல் கண்டுபிடித்து காப்புரிமம் பெற்றிருக்கிறார். இதனால் இந்த இரட்டைப் பட்டகத்தை போரோ பட்டகம் (Porro Prism) என்று அழைப்பர். அவருடைய கண்டுபிடிப்பை மேலும் 1890களில் [1] மேம்படுத்தி கார்ல் இசைசு (Carl Zeiss) போன்ற ஒளிக்கருவித் தொழிலகங்கள் பயன்படுத்துகின்றன. இப்படி இரட்டைப் பட்டகங்கள் Z வடிவில் ஒவ்வொரு குழலிலிலும் அமைந்து இருப்பதால், வில்லைகள் பெரியதாக்வும் குழல்கள் இரண்டும் அதிக இடைவெளியுடன் விலகி இருக்குமாறும் அமைக்க இயலுகின்றது. இந்த போரோ இரட்டைப் பட்டகங்கள் இருப்பதால், ஒளிப்பாதை மடிந்து (மடக்கப்பட்டு) அமைவதால் நீளமான ஒளிப்பாதை குறுகலான இடத்தில் அமைந்து கருவி சிறியதாக இருக்கின்றது. அதாவது இருகண்ணோக்கியின் நீளம் குவியத்தொலைவை விட சிறியதாக இருக்கின்றது. குழல்கள் விலகி இருப்பதால் பார்க்கும் காட்சியின் ஆழம் அல்லது முத்திரட்சித் தன்மை அதிகம் இருப்பதாக உணர முடிகின்றது. பொருளருகு வில்லைகள் பெரியதாக இருக்க முடியும் (இரண்டு குழல்களும் இடித்துக்கொண்டு இல்லாமல் இருக்குமாறு) என்பதால் அதிக ஒளியும் வில்லைகள் வழியாகப் பாய்ந்து பார்க்கும் காட்சி வெளிச்சம் மிக்கதாய் இருக்கும்.
இருகண்ணோக்கிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படுகின்றன. எனவே பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இவை வெவ்வேறு பண்புகள் கொண்டிருக்குமாறு அமையும். அவற்றுள் சில பண்புகள் கருவியின் மீது தெளிவாக குறிக்கப் பெற்றிருக்கும். பொதுவாக இரண்டு எண்களும் அவற்றுக்கு நடுவே ஒரு பெருக்கல் குறியும் குறிக்கப் பெற்றிருக்கும், எடுத்துக்காட்டாக 7X 50 என்று இருக்கும். இதில் 7Xஎன்னும் குறியீடு எத்தனை மடங்கு பெரிதாக்கிக் காட்டும் (பெருக்கம் அல்லது மிகைப்பு) என்பதைக் சுட்டும். அடுத்து உள்ள 50 என்ற எண், பொருளருகு வில்லையின் விட்டத்தின் அளவை மில்லிமீட்டரில் சுட்டும் (இங்கு 50 மில்லிமீட்டர்). இந்த பொருளருகு வில்லையின் விட்டத்தின் அளவு, எவ்வளவு ஒளியை பற்ற வல்லது என்பதைக் காட்டும் திறன் எண். ஒரு குறிப்பிட்ட பெருக்கம் உடைய ஒரு நோக்கியில் பொருளருகு வில்லையின் விட்டம் பெரிதாக இருந்தால், அதிக ஒளி புகும் ஆகையால் காட்சி வெளிச்சமாகத் தெரியும். குறைந்த ஒளி இருந்தாலும் காணவல்லது. பெருக்கம் அல்லது மிகைப்பு என்பது கண்ணருகு வில்லையின் குவியத்தொலைவு, பொருளருகு வில்லையின் குவியத்தொலைவு ஆகியவற்றின் விகிதம் ஆகும்.
காட்சிப் புலம் (Field of view) என்பது ஒரு குறிப்பிட்ட தொலைவில் (எ,கா 1000 மீட்டர்), எவ்வளவு அகலமான பகுதியை (100 மீட்டர்) காண முடியும் என்பதாகும். அதாவது எவ்வளவு கோணத்தில் (பாகை) விழும் காட்சியைக் காண முடியும் என்பதாகும்.
வெளித் திறப்பு (exit pupil) என்னும் அளவுரு (parameter) இருகண் நோக்கியின் பொருளருகு வில்லையின் விட்டத்தை பெருக்கத்தால் (மிகைப்பு எண்ணால்) வகுத்தால் வரும் விட்டம். இது கண் விழியின் பாவை அளவு இருந்தால் நம் கண்ணுக்குள் புகும் ஒளி குன்றாது இருக்கும். பொதுவாக இது ஏறத்தாழ 7 மிமீ இருக்கும்.
இருகண் நோக்கிகளில் வில்லைகள் வழியாக ஒளி புகுந்து செல்லும்பொழுது ஓரளவுக்கு ஒளிச்சிதறல் (எதிரொளிப்பு) நிகழும். இதனைக்குறைக்க எதிரொளித் தடுப்புப் பூச்சுகள் இடுவதுண்டு. இருகண் நோக்கிகளில் ஏறத்தாழ 16 காற்று-கண்ணாடி இடைமுகங்கள் இருக்கலாம். எனவே வெவ்வேறு பொருட்களின் ஒளிவிலகல் எண்களால் (refractive indices) எதிரொளிப்பால் சிதறும் ஒளியின் விகிதம் அதிகமாக இருக்கும். ஏறத்தாழ 5% ஒளி, கண்ணாடி வில்லை வழி உள்ளே புகாமல் எதிரொளியாக திரும்பும். இவற்றைக் குறைக்க, 1% அல்லது 0.25% என்னும் விகிதமாக குறைக்க, கண்ணாடி வில்லைகள் மீது மிக மெல்லிய எதிரொளித் தடுப்புப் பூச்சுகள் இடுவார்கள். எடுத்துக்காட்டாக எதிரொளிப் பூச்சு பெற்ற 8x40 இருகண் நோக்கிகளின் காட்சி, எதிரொளி பூச்சுப் பெறாத 8x50 ஐ விட வெளிச்சமாக இருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.