இரத்தச் சர்க்கரைக் குறைவு
From Wikipedia, the free encyclopedia
இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்த இனிமக் குறை (Hypoglycemia) இயல்பான நிலையில் இருந்து இரத்தச் சர்க்கரை அளவு, குறிப்பாக 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் கீழாகக் குறையும் நிகழ்வாகும்.[1][3] இரத்தச் சர்க்கரைக் குறைவு நிகழ்வுகளைச் சரியாக இனங்கான விப்பிள் மும்மை பயன்படுத்தப்படுகிறது.[2] இந்நிகழ்வு, குருதி இனிமம் 70 மிகி/டெ. லி (3.9 மிமோல்/லி) அளவுக்கும் கீழாகக் குறைதலும் இரத்தச் சர்க்கரை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, இரத்தச் சர்க்கரைக் குறைவில் ஏற்படும் அறிகுறிகள் மறைதலும் என வரையறுக்கப்படுகிறது.[2] இரத்தச் சர்க்கரைக் குறைவின்போது தலைவலி, சோர்வு, பதற்றம், படபடப்பு, பேசவியலாமை, குழப்பம், இதயத் துடிப்பு வீதம் கூடல், வியர்த்தல், நடுக்கம், நரம்பயர்வு, பசி, உணர்விழப்பு, வலிப்புகள், அல்லது இறப்புங்கூட நேரலாம்h.[1][3][2] அறிகுறிகள் உடனடியாகத் தோன்றுகின்றன.[1]
இரத்தச் சர்க்கரைக் குறைவு Hypoglycemia | |
---|---|
ஒத்தசொற்கள் | இரத்தச் சர்க்கரைக் குறைவு , இரத்த இனிமத் தாழ்வு, தாழ் இரத்தச் சர்க்கரை |
இனிம அளவி | |
சிறப்பு | அகச்சுரப்பியல் |
அறிகுறிகள் | தலைவலி, மங்கிய பார்வை, நடுக்கம், மயக்கம், வலிவின்மை, சோர்வு, வியர்த்தல், அழுந்துணர்வு, இதயத் துடிப்பு வீதம் கூடல், நடுக்கந்தரும் இதயத்துடிப்பு, நரம்பயர்வு, பதற்றம், பசி, குமட்டல், குத்தல் உணர்வு, பேசவியலாமை, குழப்பம், உணர்விழப்பு, இயல்பற்ற நடத்தை, தலைக்குடைச்சல், வெளிர்தோல் நிறம், வலிப்பு, இறப்பு[1][2][3][4][5] |
வழமையான தொடக்கம் | வேகமானது[1] |
காரணங்கள் | = நீரிழிவுத் தடுப்பு மருந்துகள், கணையநீர்(இன்சுலின்), கிளைனைடுகள், சல்போனில்யூரியாக்கள், சீழ்த்தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு, சில புற்று வகைகள், ஈரல் நோய்[1][6] |
நோயறிதல் | விப்பிள் மும்மை, இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள், இரத்த ஊனீர் மட்டம் தாழ்தலும்<70 mg/dL (3.9 mmol/L) இரத்த இனிமம் இயல்பானதும் அறிகுறிகள் மறைதல் [2] |
சிகிச்சை | சர்க்கரை மிகுந்த உணவு உட்கொள்ளல், டெக்சுட்டுரோசு, குளூக்ககான் மருந்துகள் உட்கொள்ளல்[1] |
நிகழும் வீதம் | முதல் வகைமை நீரிழிவில் வாரம் இருமுறை தளர்வான இரத்தச் சர்க்கரைக் குறைவும் ஆண்டுக்கு ஒருமுறை கடும் இரத்தச் சர்க்கரைக் குறைவும் ஏற்படும்.[3] |
இறப்புகள் | முதல் வகைமை நீரிழிவில் இரத்தச் சர்க்கரைக் குறைவால் 6-10% பேர் இறக்கின்றனர்.[3] |
இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான முதன்மையான காரணமாக, நீரிழிவு நோயைத் தணிக்க தரப்படும் மருந்துகளே அமைகின்றன. இவற்றில் இன்சுலின் (ஊசி போடல்), சல்போனில்யூரியாக்கள், பைகோனடுகள் போன்றவை உள்ளடங்கும்.[3][2][6] நோய் இடர், நீரிழிவு நோயாளிகளின் குறைவான உணவு, அண்மை உடற்பயிற்சி, குடிப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது.[1][3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான பிற காரணங்களாக கடுமையான நோய்நிலை, சீழ்த்தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு], கணைய நோய், இயக்குநீர்(இசைமக்) குறைபாடுகள், இன்சுலினோமா புற்றுகள், பி-உயிர்க்கலன் சாராத புற்று நோய்கள் , பிறவி வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பலநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளல், குடிப்பழக்கம் ஆகியன அமையலாம்.[1][3][2] சில மணி நேரத்துக்கு உணவு உட்கொள்ளாத, பிறந்தநிலையில் நோயேதும் இல்லாத குழந்தைகளிலும் இரத்த இனிமக் குறைவு ஏற்படலாம்.[7]
இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்க, சர்க்கரை மிகுந்த உணவையோ பருகுகளை, அதாவது, வெல்லம், இனிம மாத்திரைகள் அல்லது ஆப்பிள் சாறு, இனிப்புக் குழைவு போன்றவற்றை உட்கொள்ளலாம்.[1][3][2] இதற்கு நோயாளி உணவு விழுங்கி உட்கொள்ளும் அளவுக்கு நனவோடு இருத்தல் கட்டாயமாகும்.[1][3] மேலும், குறைந்தது, 70 மிகி/டெ.லி (3.9 மிமோல்/லி) எனும் சிறும இரத்த இனிம மட்டத்தை அடையும் வரை இரத்தச் சர்க்கரை மட்டத்தை உயர்த்த, 10 முதல் 20 கிராம் அளவுக்கு கார்போகைதிரேட்டு உட்கொள்ளலே இரத்தச் சர்க்கரைக் குறைத் தணிப்புக்கான இலக்காகக் கொள்ளப்படுகிறது.[3][2]ஓருவர் வாய்வழி உணவு கொள்ள முடியாத நிலையில் உள்ளபோது, குளூக்கானை ஊசிவழியாகச் செலுத்தலாம். மூக்குவழியாகவும் உணவைத் தரலாம்.[1][3][8] நீரிழிவு சாராத இரத்தச் சர்க்கரைக் குறைவை அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த நடவடிக்கை எடுத்து இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தணிக்கலாம்.[3][2]
நீரிழிவு நோயாளிகள் இந்நிலைமையை எதிர்கொள்ள அல்லது தவிர்க்க, இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கான நோய் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும்.[3][2] இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தவிர்க்க, இன்சுலின், சல்போனில்யூரியா, பைகோனைடு மருந்துகளை உட்கொள்ளும் அளவை மாற்றலாம்; அல்லது முற்றிலும் தவிர்த்துவிடலாம்.[3][2] மேலும், இதற்கு அடிக்கடியான தொடர் இரத்த இனிம ஓர்வுகள் செய்யவும் பரிந்துரை வழங்கப்படுகிறது.[1][3] சிலருக்கு இன்சுலின் ஏற்றிவழியாக தொடர்ந்து சர்க்கரையளவைக் கண்காணித்து, நீரிழிவு நோயாளிகளுக்கான இரத்தச் சர்க்கரைக் குறைவை மேற்பார்வையிட வேண்டியுள்ளது.[3]