From Wikipedia, the free encyclopedia
ஆளவந்தார் கொலை வழக்கு 1952-53 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு.[1][2][3][4]
சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனா வர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை என அவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் கோ நிறுவனர்) காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந்திய-சிலோன் விரைவுத் தொடருந்தின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் தலையற்ற உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இரயில் மானாமதுரை சந்திப்பருகில் சென்று கொண்டிருக்கையில் இருக்கைக்கு கீழே இருந்த பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பயணிகள் புகார் அளித்தனர். புகாரை விசாரிக்க அங்கு வந்த காவல் துறையினர் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் தலையற்ற உடலும், வெட்டப்பட்ட கை, கால்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மானாமதுரையில் நடந்த பிரேதப் பரிசோதனையிலும் காவல் துறை விசாரணையின் இறுதியில் அவ்வுடல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு முசுலிமுடையதாக இருக்கலாம் என அறிக்கை தரப்பட்டது. (விருத்தசேதனம் செய்யப்பட்ட உடலாகையால் அத்தகு தவறான முடிவு எடுக்கப்பட்டது).
இதுநடந்த சில நாட்களுக்குள் சென்னை ராயபுரம் கடற்கரைப் பகுதியில் ஒரு மனிதத் தலை காவல் துறையினரால் கண்டெடுக்கபப்ட்டது. ஒரு சட்டையில் சுற்றி கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த அத்தலை கடலலைகளால் தொண்டியெடுக்கபபட்டு கரையோரமாக ஒதுங்கியிருந்தது. தடயவியல் சோதனைக்காக அது சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மானாமதுரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பகுதிகளும் அங்கு அனுப்பப்பட்டன. அவற்றை சோதித்த மருத்தவர் சி. பி. கோபாலகிருஷ்ணா அவை 42 வயது மதிக்கத் தக்க ஒரே நபருடையன என்று முடிவு செய்தார். உடலைப் பார்வையிட்ட ஆளவந்தாரின் மனைவி அது தன் கணவர் தான் என்று அடையாளம் காட்டினார். ஆளவந்தார் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணியாற்றியவராகையால் அங்கிருந்த ஆவணங்களிலிருந்து அவரது கை ரேகை விவரங்கள் கொண்டு வரப்பட்டு உடலின் கைரேகையோடு ஒப்பிடப்பட்டன. இதன் மூலம் கிடைத்த உடலும் தலையும் ஆளவந்தாருடையன என்பது உறுதியானது.
ஆளவந்தார் கொலையினை காவல் துறையினர் விசாரித்த போது அவரது கொலைக்கான காரணங்கள் வெளியாகின. ஆளவந்தார் சென்னை பாரி முனை சைனா பசாரில் பேனா கடை வைந்திருந்தார். அதுமட்டுமன்றி தவணை முறையில் சேலைகளையும் விற்று வந்தார். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுள் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த தேவகி மேனன். 1951 இல் ஆளவந்தாருடன் தொடர்பு வைத்திருந்த தேவகி பின் அவரை விட்டு விலகி பி. பிரபாக்கர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆளவந்தார் திருமணத்துக்குப் பின்பும் தேவகியை தொடர்ந்து தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்தார். இதனால் தேவகி தன் கணவர் பிரபாக்கரிடம் ஆளவந்தாரால் தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைச் சொல்லி முறையிட்டார். தேவகியும் பிரபாக்கரும் இணைந்து ஆளவந்தாரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். திட்டமிட்டபடி தேவகி ஆளவந்தாரை தனது 62, கல்லறை சாலை இல்லத்துக்கு வரவழைத்தார். ஆகஸ்ட் 28, 1952 நன்பகல் தேவகியின் வீட்டுக்குச் சென்ற ஆளவந்தாரை தேவகியும், பிரபாக்கரும் சேர்ந்து கொலை செய்தனர். பின் அவரது உடலைப் பல பகுதிகளாக வெட்டி தலையை இராயபுரம் கடற்கரையில் புதைத்தனர். உடலை ஒரு பழைய பயணப் பெட்டியில் அடைத்து இந்திய-சிலோன் தொடருந்தில் ஏற்றிவிட்டனர். பின் சென்னையிலிருந்து மும்பை நகருக்குச் சென்று விட்டனர். இவ்விவரங்கள் அனைத்தும் காவல்துறை விசாரணையில் வெளியாகின. மும்பையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.
1953 இல் அவர்கள் மீதான கொலை வழக்கு ஆரம்பமானது. அவர்கள் சார்பாக பி. டி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் வாதாடினார். நீதிபதி ஏயைஸ். பஞ்சாபகேச ஐயர் தலைமையில் நடைபெற்ற அவ்வழக்கு பொதுமக்களால் ஆன நடுவர் குழுவத்தால் ஆராயப்பட்டது (நடுவர் குழாம் வழக்கம் இவ்வழக்கு நடந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்டது). ஆளவந்தாரின் தொடர் தொந்திரவால் வேறு வழியின்றி குற்றவாளிகள் அவர் உயிரைப் பறித்தனர் என்றும் நடந்த நிகழ்வு கொலையாகாது, மரணம் விளைவித்தல் (homicide) என்றும் அவர்களது வழக்கறிஞர் வாதிட்டார். (சட்டப்படி மரணம் விளைவித்தல், கொலையை விட கடுமை குறைவான குற்றம்). இவ்வழக்கு சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு நடந்த நீதிமன்றத்தில் கட்டுக்கடங்காத பார்வையாளர் கூட்டம் கூடியது. நடுவர் குழாம் தேவகி மற்றும் பிரபாக்கர் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தது. நீதிபதி ஐயர் தண்டனை வழங்கையில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் ஆளவந்தாரை தண்டிக்கவே அவரைக் கொலை செய்தனர் என்றும் கருத்து தெரிவித்தார். எனவே குறைவான தண்டனையே வழங்கினார். பிரபாக்கருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தேவகிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கினார்.
பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு தடயவியல் துறையில் முக்கிய வழக்காகக் கருதப்பட்டது. இது குறித்து ஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டன. மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இது குறிப்பிடப்பட்டது.[5][6]
ஆளவந்தார் கொலை வழக்கு என்ற பெயரிலான நாடகம் ஒன்று சென்னைத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) ஒளிபரப்பப்பட்டது.
ஆளவந்தார் கொலை வழக்கு சிந்து எனும் கொலைச்சிந்து குஜிலி பாடல் மிகப் பிரபலமாக வெளியிடப்பட்டது. [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.