From Wikipedia, the free encyclopedia
ஆம்பன் புயல் (Cyclone Amphan, /ˈɑːmpʌn/, ஆம்பன் அல்லது உம்பன்) என்பது வங்கக் கடலில் உருவாகிய மிகவும் சக்திவாய்ந்த புயல் ஆகும். இது 2020 ஆம் ஆண்டு வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப்பெரிய முதல் வெப்பமண்டல புயலாகும். தமிழ் மொழியில், இதன் உச்சரிப்பு உம்பன் என்று அழைக்கப்படுகிறது.[1] வங்கக் கடலில் உருவான இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்தபோது, 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, 20 மே 2020 அன்று, மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டது. 1999 ஒடிசா புயலுக்கு பின்னர், வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட முதல் சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.[2][3] கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், மே 21 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மைய இயக்குனர் கூறினார்.
Super cyclonic storm (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 5 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
மே 18 அன்று வங்காள விரிகுடாவில் மிகவும் வலுப்பெற்ற நிலையில் உள்ள ஆம்பன் புயல் | |
தொடக்கம் | 16 மே 2020 |
மறைவு | 21 மே 2020 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 240 கிமீ/ம (150 mph) 1-நிமிட நீடிப்பு: 260 கிமீ/ம (160 mph) |
தாழ் அமுக்கம் | 925 hPa (பார்); 27.32 inHg |
இறப்புகள் | 103 மொத்தம் |
சேதம் | >$149.3 million (2020 USD) $ |
பாதிப்புப் பகுதிகள் | இலங்கை, அந்தமான் தீவுகள், மேற்கு வங்காளம், ஒடிசா, வங்காளதேசம் |
2020 வட இந்தியப் பெருங்கடல் புயல் பருவம்-இன் ஒரு பகுதி |
மே 13 ஆம் தேதி, இந்தியாவின், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கு பகுதியில், 1020 கிமீ (635 மைல்) தொலைவில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது.[4][5] இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டது. அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறிய இந்த ஆம்பன் புயல், 19 மே, 2020 அன்று சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. ஆம்பன் புயல், வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் மிகவும் சக்திவாய்ந்த புயலாக மாறும் எனவும், அப்போது, மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மே 20 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயாவில் மே 21 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் அதிக சேதம் ஏற்பட வாய்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
மே 19 காலை 8:30 மணி நிலவரப்படி, ஆம்பன் புயல் 16.0 ° N 86.8 ° E இன் 20 கடல் மைல்களுக்குள் அமைந்துள்ளது. ஒடிசாவின் பரதீப்பிற்கு தெற்கே சுமார் 281 கடல் மைல்களுக்கும் (323 மைல்; 520 கி.மீ), திகாவின் தென்மேற்கே 362 கடல் மைல்களுக்கும் (416 மைல்; 670 கி.மீ), மேற்கு வங்கத்தின் தென்மேற்கே மற்றும் வங்காளதேசத்தின் கெபுபராவுக்கு தென்மேற்கே 432 கடல் மைல்களுக்கு (497 மைல்; 800 கி.மீ) அப்பால், இந்த புயல் மையம் கொண்டிருந்தது.
ஆம்பன் புயலால் ஏற்படக்கூடும் நிலைமையை சமாளிக்க, தொடர்புடைய மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/முகமைகள் ஆகியவற்றின் தயார் நிலையை, பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்தார். இந்திய அரசின் மூத்த அதிகாரிகள், இந்திய வானிலைத் துறை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் நிவாரணப் படையின் அதிகாரிகளோடு மத்திய உள்துறை அமைச்சரான அமித் சாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.[6] புயலின் வழியில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை முழுவதுமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை தேவையான அளவில் பராமரிக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறும், அவற்றின் தயார்நிலையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சேவைகளை விரைவில் தொடர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொடர்புடைய அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.
நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடலோரக் காவல் படையும், கடற்படையும், கப்பல்களையும், உலங்கு வானூர்திகளையும் தயார்படுத்தின. இந்த மாநிலங்களில் உள்ள இராணுவம் மற்றும் விமானப் படை அலகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.[7]
ஒடிசாவுக்கும், மேற்கு வங்காளத்திற்கும் 25 குழுக்களை தேசியப் பேரிடர் நிவாரணப் படையை அனுப்பியது. கூடுதலாக 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட தேவைப்படும் பொருள்கள் இந்தக் குழுக்களுக்குத் தரப்பட்டன.[8]
தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கும் தொடர் அறிக்கைகளை சமீபத்திய முன்னறிவுப்புகளோடு இந்திய வானிலை ஆய்வுத் துறை வழங்கி வருகிறது. மாநில அரசோடு, மத்திய உள்துறை அமைச்சகமும் தொடர்ந்து தொடர்பில் இருந்தது.
மே 20, 2020 அன்று பிற்பகல் முதல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி, வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் ஆம்பன் புயல் கரையை கடந்தது. மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தரவனக்காடுகள் அதிகம் கொண்ட பகுதியாகும். ஆம்பன் புயல் கரையை கடந்தபோது, கொல்கத்தாவில் கடும் புயல் காற்று வீசியது. மேற்கு வங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.[9] காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருந்தது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. கூக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதமும், பலத்த மழையும் பெய்தது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.[10]
ஆம்பன் புயல் வலுப்பெற்றதால், இலங்கையில் பலத்த மழை மற்றும் காற்று வீசியது. மே 16 அன்று கேகாலையில் 24 மணி நேரத்தில், மொத்தம் மழைப்பொழிவு 214 மிமீ (8.4 அங்குலம்) பதிவாகியது. கடுமையான மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் பலியாயினர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.[11] 500க்கும் மேற்பட்ட வீடுகள், பொலன்னறுவையில் 145 வீடுகள் உட்பட பலத்த காற்றால் சேதமடைந்தன.[12][13]
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.[14] இராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் காற்று வீசியதால் சுமார் 100 மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.[15]
புதுச்சேரியை ஒட்டியுள்ள பொம்மையார்பாளையத்தில் கடற்கரையோரம் இருந்த 2 வீடுகள் சேதமடைந்தன. ஆம்பன் புயல் எதிரொளியால் கடல் சீற்றமாகவும், வழக்கத்துக்கு மாறாக பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லாததால் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.