பிலைசு பாஸ்கல் (Blaise Pascal, blɛːz paskal, (ஜூன் 19, 1623 - ஆகஸ்டு 19, 1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் சமயமெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.
ஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது; ஐயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர்.[1]
அவசியம் என்பது மனிதனின் பலவீனத்திற்கு அடைக்கலமும் மன்னிப்புமாகும்: அது சட்டங்கள் அனைத்தையும் ஊடுருவி: சென்றுவிடும். வேறு வழியின்றி, அவசியத்தால் ஒருவன் பிழைசெய்தால், அவன் குற்றவாளியாகான்.[2]
ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும்.[3]
அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.[4]
கிளியோபாட்ரா ராணியின் மூக்கு சற்றுக் குட்டையாக அமைந்திருந்தால், அது உலகத்தின் சரித்திரத்தை வேறு விதமாக மாற்றியிருக்கும்.[5]
அதிகாரமில்லாத நீதி திறமையற்றது. நீதியில்லாத அதிகாரம் கொடுமையாகும். ஆதலால், நீதியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும்படி செய்யவேண்டும். அதன் மூலம் நீதியானது எதுவும் வலிமை பெற்றிருக்கவேண்டும். வலிமையுள்ளது எதுவும் நீதியாயிருக்க வேண்டும். [6]
இயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன.[7]
உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம்.[8]
இயற்கையான உரைநடையைக் கண்டால் ஆச்சரியமும் ஆநந்தமும் உண்டாகின்றன. அதற்குக் காரணம் அதில் எதிர்பார்க்கும் வண்ணம் ஆசிரியன் ஒருவனைக் காணாமல் மனிதன் ஒருவனைக் காண்பதே யாகும்.[9]
கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.[10]
மிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும் முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும்.[11]
ஐக்கியப்பட்டு வேலை செய்யும்படி இணைக்கப்பெறாத ஜனக் கூட்டம் வெறும் குழப்பமாகும். ஜனக்கூட்டத்தை ஆதாரமாய்க் கொள்ளாத ஐக்கியம் கொடுங்கோன்மையாகும். [12]
நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை.[13]
தன்னைப் பற்றிப் புறங்கூறுவது ஒவ்வொருவனுக்கும் தெரியுமானால், அதன்பின் உலகில் நான்கு நண்பர்களைக் கூடக் காண முடியாது.[14]
எல்லா மக்களும், தாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உலகிலே நான்கு, நண்பர்கள்கூடச் சேர்ந்திருக்க மாட்டார்கள்.[15]