மல்லிப் பேரினம் (தாவர வகைப்பாட்டியல்:Jasminum, ஆங்கிலம்:Jasmines) என்பது பூக்கும் தாவரங்களிலுள்ள ஓர் பேரினமாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[5], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[6] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இக்குடும்பமானது மல்லி இனக்குழுவின் குடும்பங்களில் ஒன்றாகும்.[4] இந்த இனக்குழுவானது புதினா வரிசையின் தொகுதியிலும் வருகிறது. தொடக்கத்தில் இந்தப் பேரினத்தை கார்ல் லின்னேயசு 1753 ஆம் ஆண்டு கண்டறிந்தார். ஐரோவாசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற வெப்பமண்டல, மிதவெப்பமண்டல நாடுகளில்[7][8][9] குறிப்பாக, தென்கிழக்கு ஆசியா, தென்னாசியா நாடுகளில் இதன் பல்வேறுபட்ட இனங்கள் காணப்படுகின்றன.[10]இதன் இனங்களை அதிக அளவு நுறுமணத்திற்காகவும், குறைந்த அளவு மூலிகையாகவும்[11] பயன்படுத்துகின்றனர்.

விரைவான உண்மைகள் மல்லிப் பேரினம், உயிரியல் வகைப்பாடு ...
மல்லிப் பேரினம்
Thumb
Jasminum officinale,
பொதுவாக அழைக்கப்படும் மல்லிகையினம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
மாதிரி இனம்
Jasminum officinale
இனம்

மல்லிகை இனங்களின் பட்டியல்
எண்ணிக்கை → <200[1][2][3]

வேறு பெயர்கள் [4]
  • Mogorium Juss.
  • Noldeanthus Knobl.
  • Nyctanthos St.-Lag.
மூடு

வளரியல்புகள்

மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. மல்லிப்பேரினத்தின் இலைகள் இலையுதிர்/கூதிர் காலத்தில் உதிரும் இயல்புடையதாகவோ (deciduous), எப்பொழுதும் உதிராமல் பச்சை நிறத்தோடோ (evergreen) இருக்கும் வளரியல்புடன் கொண்டது. இதன் தண்டு நிமிர்ந்தோ, பரவலாக புதர் போன்றோ, படரும் கொடி போன்றோ வேறுபட்டு காணப்படும். இலைகளின் அமைப்பு எதிர் இலைகளாகவோ, எதிரெதிர் அமைப்போடு அமைந்திருக்கும். மேலும், இலைகள் எளியமையாகவோ, மூவிதல்களாகவோ (trifoliate), இலை நுனி குவிந்து ஊசி போலவோ(pinnate) காணப்படுகின்றன. இப்பேரினப் பூக்களின் விட்டம் ஏறத்தாழ 2.5 செ. மீ. இருக்கும். பெரும்பான்மையான பூக்கள் வெந்நிறமாக இருந்தாலும், வெந்நிறத்தோடு இளஞ்சிவப்பு நிறம் கலந்தும், சில பூக்கள் இளஞ்சிவப்பு கலந்தும், மஞ்சள் நிறமாகவும் காணப்படுகின்றன.

பயிரிடல்

வணிகத்திற்காக பூப்பண்ணைகளிலும், அழகுக்காவும் பணியிடங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. திருமண, மதச் சடங்குகளிலும், பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவும் பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இதனை குண்டு மல்லி எனவும், ஆந்திர மாநிலத்தில் குண்டு மல்லே எனவும் அழைக்கின்றனர். பிற நாடுகளில் இதனை அரபு மல்லி (Arabian jasmine) என்றும் அழைக்கின்றனர்.

சொற்பிறப்பியல்

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். [12] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெய்க்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரெஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரெஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது. [13]

இந்தியப் பெயர்கள்

இந்தியாவில் மல்லிகை மலரை, அதன் இன வகையைப் பொறுத்து, பல மொழிகளிலும், சில இடங்களில் ஒரு பெயராகவும், பிறவற்றில் வேறு பெயர்களிலுமாக பல பெயர்களில் வழங்குகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு:

  • தெலுங்கு மொழியில் மல்லே என அழைக்கின்றனர்.
  • சமிஸ்கிருத மொழியில் "மாலதி " அல்லது "மல்லிகா " என்பர். "மோத்தி " என்னும் சொல், (சமிஸ்கிருத மொழியில் "முக்தா " அல்லது "முக்தாமணி " அல்லது "மௌடிகா " எனப்படுகிறது. (முக்தா என்பதற்கு சுதந்திரமான, தளைகளற்ற என்னும் ஒரு பொருளும் உண்டு).
  • இந்தி மொழியில் "சமேலி ", "ஜூஹி ", அல்லது "மோத்தியா " என அழைக்கின்றனர். இம்மொழியில் "முத்து " எனப் பொருள்படும். இந்த மலர் வெண் நிறம் கொண்டு, வட்ட வடிவமாக, அழகு மிகுந்து பார்வையிலும் அழகிலும் முத்துக்களை ஒத்திருப்பதால் "மோத்தியா " என்னும் பெயர் பெற்றது.
  • மராத்தி மொழியில், "ஜாயீ ", "ஜூயீ ", "சாயாலீ ", "சமேலி " அல்லது "மொகாரா " என இதனை வழங்குகின்றனர்.
  • வங்காள மொழியில் "ஜூயி " என்கின்றனர்.

தாவர வகைப்பாடு

பிரிவுகள்

இப்பேரினம் ஐந்து[14] தாவரவியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. Alternifolia - மாற்றிலை : இரண்டு இலத்தீனிய சொற்களால்(alternus, folium) இப்பெயர் உருவாகியுள்ளது.[15]
  2. Jasminum - பிரெஞ்சு சொல்லான jasmin என்பதிலிருந்து உருவாகியுள்ளது.[16]
  3. Primulina - இலத்தீன்:primus என்பதிலிருந்து உருவாகியுள்ளது. இதன் பூக்கும் திறன் மற்ற இனங்களை விட விரைந்து காணப்படும்.[17]
  4. Trifoliolata - மூவிதழ் இலையமைவு
  5. Unifoliolata - சீரான இலையமைவு

இனங்கள்

தாவரவியல் வகைப்பாட்டியல் படி. 200-க்கும் மேற்பட்ட மல்லி இனங்கள் பன்னாட்டு அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.[18]

  • மல்லிகை இனங்களின் பட்டியல்
  • "மல்லி" என்பதன் பொருள் பருத்தது; உருண்டது; தடித்தது ஆகியனவாகும். இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படுவது, ஒரு வகை காட்டு மல்லிகை என்பர். இன்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பல கிராமங்களில் முல்லை என்றே விற்கப்படுகிறது. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி, இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை, பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[19]

கலாச்சாரப் பயன்பாடுகள்

பல்வேறு நாடுகளில் அன்றாட வாழ்விலும், கலாச்சாரத்திலும், சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு;—

குறியீட்டியம்

Thumb
12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாவோ சாங்க் என்னும் சீனக் கலைஞர் மசி, நிறங்கள் கொண்டு பட்டுத்துணியில் வரைந்த வெண்ணிற மல்லிகைக் கொடி

பல நாடுகளிலும், மாநிலங்களிலும் மல்லிப் பேரின மலர்கள் தேசிய சின்னமாகவும், திருமண நிகழ்வுகளிலும், நீத்தார் சடங்குகளிலும் முக்கிய குறியீட்டியமாகப்(symbolism) பின்பற்றப்படுகிறது. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • இந்திய பெண்கள் தங்கள் தலையிலும், இறைவனுக்கும் மல்லிச் சரங்களைச் சாத்துவர்.
  • சிரியா:திமிஷ்கு என்ற நகருக்கு மல்லி நகர் என்றழைப்பர்.[20]
  • ஹவாய்: இருள்நாறி ("pikake) என்ற மலரை 'லெய்'(lei (garland)) என்ற மாலையாகவும், பல நாட்டு பாடல்களுடனும் தொடர்புடையது. "பிரேசிலியன் மல்லிகை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[21]
  • இந்தோனேசியா: இருள்நாறி தேசிய மலராகும். 1990 ஆம் ஆண்டு முதல் பேணப்படுகிறது. [22] சாவகம் (தீவு)களின் திருமண சடங்குகளில் இம்மலர்களைக் ("melati putih") கொண்டாடுகின்றனர்.
  • பாக்கித்தான்: மௌவல்(chambeli or yasmin) என்ற மலரானது தேசிய மலராகும். "சம்பேலி " அல்லது "யாஸ்மின் " என அழைப்பர் [23]
  • பிலிப்பீன்சு: 1935 இல் அறிமுகம் செய்யப்பட்ட இருள்நாறி என்ற மலர், இந்நாட்டின் தேசிய மலராகும். சமப்கியுட்டா ("sampaguita" ) என்றழைக்கப்படும் இத்தாவரம், மதச்சடங்கு மாலைகளில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. [24]
  • தாய்லாந்து: நாட்டில், இம்மலர் தாய்மையாகவே எண்ணப்படுகிறது. [25]
  • தூனிசியா நாட்டின் தேசிய மலராகும். 2010 ஆம் ஆண்டு அந்நாட்டில் நிகழ்ந்த புரட்சியின் நினைவாகக் கருதப்படுகிறது.
  • ஜப்பான் நாட்டின் ஓகினாவாவில், மல்லிகைத் தேநீர் சன்பின் ச்சா (さんぴん茶) மதிக்கப்படுகிறது.

இந்தியா

  • இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் (ரோஜா மற்றும் இதர மலர்களைப் போல பிரபலமாக) இல்லத்து பூசைகளிலும், (இல்லத்துப் பெண்களும் சிறுமிகளும்) தலையில் சூடிக் கொள்ள வீட்டுத் தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றிலும் பானைச் செடியாகவும் வளர்க்கின்றனர். மேற்கூறிய அனைத்துப் பயன்பாடுகள் மற்றும் (வாசனைத் திரவியத் தொழில் போன்ற) இதரப் பயன்பாடுகளுக்காக விவசாய நிலங்களில் விற்பனைக்காகவும் பயிராகிறது.
  • மகாராட்டிரம் மாநிலத்தின் மும்பை தொடங்கி தெற்காக இந்தியாவின் பல இடங்களிலும் மல்லிகை மலரை விற்போர், நகர வீதிகள், கோயில் சுற்றுப்புறங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பெரும் வணிகவிடங்கள் போன்றவற்றில் அதனை ஆயத்த மாலைகள் என்றாகவோ அல்லது மோத்தியா அல்லது மொகாரா என்னும் அதன் அடர் வகையின் மலர்க் கொத்துக்களை அவற்றின் எடையின் அடிப்படையிலோ விற்பதைக் காணலாம். இது கொல்கொத்தாவிலும் அன்னியமான காட்சியல்ல. வடமாநிலப் பெண்களும் சிறுமிகளும் பொதுவாக கூந்தலில் மலர்களைச் சூடுவதில்லை என்பதால், தெருவோர விற்பனைகள் அங்கு குறைவாகவே காணப்படும்.
  • மல்லிகை மலரை தென்னிந்திய பெண்டிர், அதன் மணம் மற்றும் அழகுக்காகவே தம் கூந்தலில் சூடுகின்றனர். மேலும், இது திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் மலர் அலங்காரங்களுக்கும் பயன்படுகிறது.
  • இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பங்களா பகுதியில் பயிராகும் மல்லிகை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.[மேற்கோள் தேவை]
  • மல்லிப்பேரினத்தில் மலரும் பூக்களை விற்கும் பூவியாபாரிகள் மாலைகளாகவும், உதிரிப்பூக்களாகவும், பூச்சரமாகவும் கட்டி விற்கின்றனர்.[26] இவை கடவுள் வழிபாட்டுத் தலங்களிலும்,[27] பெண்கள் தலையில் சூடவும், நீத்தார் சடங்குகளிலும் இம்மலர்கள் பயன்படுத்தப் படுகின்றன.
  • இந்திய மத வழிபாடுகளிலும், இசுலாமிய நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.[28]
  • பூவியாபாரம் இந்தியாவெங்கும் நடைபெறுகிறது.உலர்ந்த இவ்வகை மலர்களும் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன. மல்லிதேநீர் விற்பனையும் சில இடங்களில் நடைபெறுகின்றன.[29]
  • தமிழ்நாட்டின் நடு மாவட்டங்களான சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் சிற்றூர்களான ஆத்தூர், வ. களத்தூர் போன்ற சிற்றூர்களில் வயிற்றுப்போக்கு, பேறுகாலத்தில் சுரக்கும் தாய்ப்பால் கட்டுபாடு தேவைப்படும் சூழ்நிலைகளில் மல்லிகைப் பூவினை(மார்பங்களில் சரமாக வைத்துக் கொள்வதால் அதிகமாக உள்ள தாய்ப்பால் சுரப்பு, குறைவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.) பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இத்தகைய பயன்பாடுகள் மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி செய்தல் நல்லது.[30][31]

மல்லிகை இனிப்புக் கூழ்

ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக்கூழ் புகழ் பெற்றது.[சான்று தேவை] பெரும்பாலும், மல்லிகை மலர்ச் சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக்கூழ்[32] சிறுரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது.

மல்லிகைச் சார எண்ணெய்

மல்லிகைச் சார எண்ணெய் பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணெய்க்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணெயில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச்சார எண்ணெய் தயாரிக்கும் நாடுகளாக இந்தியா, எகிப்து, சீனா, மொரோக்கோ நாடுகளைக் கூறலாம்.[33]

திட, திரவ நறுமணப் பொருட்களில் பயன்பாடு

இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல், சிகேடோல் ஆகியன மல்லிகையின் சிறப்பான நறுமணத் தருவதாக உள்ளது. ஆகவே இது திட, திரவ நறுமணப் பொருட்கள் உருவாக்க அதிகம் பயன்படுகிறது.

வேறுபடும் பேரின மல்லிகள்

தாவரவியல் வகைப்பாட்டின்படி வேறுபட்டு இருக்கும் சில தாவர இனங்களின் பெயர்கள், இப்பேரினப் பெயர்களைப் போன்றே, பொது மக்கள் அழைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • பிரேசில் மல்லி - Mandevilla sanderi
  • குமரி மல்லி் - Gardenia
  • கரோலினா மல்லி - Gelsemium sempervirens
  • நந்தியாவட்டை - Tabernaemontana divaricata
  • சிலியன் மல்லி - Mandevilla laxa
  • மல்லியரிசி, நீளமான அரிசி இனம்
  • மடகசுகார் மல்லி - Stephanotis floribunda
  • நியூசிலாந்து மல்லி - Parsonsia capsularis
  • இரவு மல்லி - Cestrum nocturnum
  • பவழமல்லி - Nyctanthes arbor-tristis
  • வெங்காரை - Murraya paniculata
  • ஈழத்தலரி - Plumeria rubra
  • விண்மீன் மல்லி - Trachelospermum jasminoides
  • மரமல்லி - Radermachera ignea, Millingtonia hortensis, ...

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.