From Wikipedia, the free encyclopedia
பாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace) ஐதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும். இது ஐதராபாத்தைச் சேர்ந்த பைகா குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது, பின்னர் இதை அவர்களிடமிருந்து ஐதராபாத் நிசாம் வாங்கினார்.[1] 32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த அரண்மனை சார்மினாரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கட்டியவர் நவாப் விகார்-உல்-உம்ரா ஆவார். இவர் ஆறாவது நிசாமின் மாமாவும் நவாப் மிர் மஹபூப் அலி கான் பஹதூரின் சொந்தமும் ஆவார். [2]
பாலாக்ணுமா என்பதற்கு “வானத்தைப் போல” அல்லது “ஆகாயத்தின் பிம்பம்” என்று உருது மொழியில் பொருள்படும்.
ஒரு ஆங்கில கட்டிட வல்லுநரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இதற்கான அடிக்கல் சர் விகார் அவர்களால் 1884 ஆம் ஆண்டு, மார்ச் 3 ஆம் நாள் நடப்பட்டது. இவர் குட்டாஸ் அவர்களின் பேரன் ஆவார். (குட்டாஸ் சர் சார்லஸ் டார்வினின் நண்பர்). கோல் பங்களா மற்றும் ஜெனானா மஹால் முழுவதும் பளிங்கு கற்களால் செய்யப்பட்டவை. இதன் மொத்த பரப்பளவு, 93,971 சதுர மீட்டர்.
இந்த அரண்மனை ஒரு தேளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு கொடுக்குகள் போல வடக்குப்புறம் நீண்டுள்ளது. அரண்மனையின் நடுப்பகுதி முக்கிய கட்டிடம் மற்றும் சமையலறை, கோல் பங்களா, ஜெனானா மஹால் மற்றும் அந்தப்புரத்தினைக் கொண்டுள்ளது. ஒரு சீரிய பயணியான நவாப்பின் தாக்கங்கள் இந்த கட்டிடங்களில் காட்டப்பட்டுள்ளன. பாலாக்ணுமா பேலஸ் இத்தாலியன் மற்றும் டியூடர் கட்டிடக்கலையுடன் கூடிய அரிய கட்டிடம் ஆகும். இதன் கண்ணாடி ஜன்னல்கள் வெவ்வேறு நிறங்களை அறைகளுக்கு வழங்கக்கூடியது.
ஐதராபாத் இராச்சியத்தின் முதன்மை அமைச்சராக 1893 முதல் 1901 வரை பணியாற்றிய சர் விகார், இந்த அரண்மனையினை நிசாமிடம் ஒப்படைக்கும் வரை தனது தனிமையான இருப்பிடமாகவே பயன்படுத்தி வந்தார். அதன் பின்பு 1897 – 1898 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத்தின் ஆறாவது நிசாமிடம் ஒப்படைத்தார். இவர் மூன்றாம் நிசாமான நவாப் சிகந்தர் ஜாஹ் அலி கானுடைய தாய்வழி பேரன் ஆவார். ஆறாவது நிசாமான நவாப் மிர் மஹபூப் அலி கானுடைய மூத்த சகோதரியான இளவரசி ஜஹந்தருன்னிசா பேஹம் சஹிபாவினை இவர் திருமணம் செய்துகொண்டார். இவரின் மனைவியின் பெயர் பெண் விகார் உல்-உமர் என கட்டிடங்கள் மற்றும் மரப்பொருட்கள் எங்கும் பொறிக்கப்பட்டுள்ளது. சர் விகார் ஐதராபாத்திற்கு பிரதமராக இருந்ததுடன் பைகாவின் அமீராகவும் இருந்தார்.
பாலாக்ணுமா அரண்மனையினைக் கட்டி முடிக்க எதிர்பார்க்கப்பட்ட செலவினை விட அதிகமாகச் செலவானதால், மற்றவர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. அவரது புத்திசாலி மனைவி இதற்கு ஒரு முடிவினை தரும் வகையில், மஹபூப் அலி பாஷா ஆறாம் நிசாமினை அரண்மனைக்கு அழைக்கக் கூறினார். அரண்மனையின் அழகில் மெய்மறந்த ஆறாம் நிசாம் கூடுதல் நாட்கள் அங்கு தங்கினார். மேலும் விகரின் பணப்பிரச்சனைகளையும் குறைத்தார். 1897 ஆம் ஆண்டில் ஆறாம் நிசாம் இந்த அரண்மனையினை சிறந்த விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு, நிசாம் வெளியேறிய பின்னர், இந்த அரண்மனை செயல்படாமல் போனது. இந்த மாளிகையில் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2017 நவம்பர் மாதம் விருந்து அளித்திருத்தார்.[3] [4] இதற்கு முன் இதன் இறுதி விருந்தினராக இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் (1951) இருந்துள்ளார். இந்த அரண்மனையில் தங்கிய குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு, ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், இராணி மேரி ஆகியோரும் அடங்குவர். [5]
இந்த அரண்மனை இத்தாலிய மற்றும் டியூடர் கட்டிடக்கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது. மேலும் இதன் உச்சவரம்பு சிதை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சாப்பாட்டு அறையைக் கொண்டுள்ளது. இதில் ரோஸ்வுட்டால் செய்யப்பட்ட நாற்காலிகள் உள்ளன. தற்போது, இது தாஜ் விடுதிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
நிசாம் இளவரசன் முக்காராம் ஜாஹ் பஹதூர் அவர்களால் தாஜ் ஹோட்டலுக்கு முப்பது ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுக்கும் வரை அரண்மனை மூடியே இருந்தது. இந்த குத்தகையின் மூலம் நிசாமிற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 25 லட்சம் வருமானம் கிடைத்தது. இது அதன் மொத்த வருமானத்தில் பாதியளவாகும்.
2000 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல், அரண்மனையினைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. [6] புதுப்பிக்கப்பட்ட ஹோட்டலாக நவம்பர் 2010 ல் திறக்கப்பட்டது. இங்குள்ள ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், மரப்பொருட்கள் என அனைத்தும் சீரமைக்கப்பட்டிருந்தன. உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறையாக 101 இருக்கைகளைக் கொண்ட உணவருந்தும் அறை இங்குள்ளது.
ஐதராபாத்தில் இஞ்சின் பவுலி எனும் இடத்திற்கு அருகிலுள்ளது.[7]
இந்த அரண்மனைக்கு அருகில் உள்ள கண்கவர் இடங்கள்:
இவை தவிர அங்கு தங்கியிருக்கும் போது, சார்மினார், தரமடி பரதாரி மற்றும் சாலர் ஜங்க் அருங்காட்சியகம் போன்றவற்றிற்கு எளிதில் சென்றுவர இயலும். அருகிலுள்ள போக்குவரத்து வசதிகள்: செகந்திரபாத் தொடருந்து நிலையத்திலிருந்து தொலைவு – சுமார் 15 கிலோ மீட்டர்
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் – சுமார் 17 கிலோ மீட்டர்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.