நர்வா
From Wikipedia, the free encyclopedia
நர்வா ( எசுத்தானிய உச்சரிப்பு: [ˈnɑrʋɑ] , உருசிய மொழி : Нарва ) என்பது எசுத்தோனிய நாட்டின் நகரம் ஆகும். எசுத்தோனியாவின் கிழக்கில் உருசிய எல்லையில் அமைந்துள்ளது. இந்த நகரம் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும்.
புவியியல்
நர்வா எசுத்தோனியாவில் கிழக்கு மட்டுமீறிய புள்ளியில் தலைநகரம் தாலினிலிருந்து கிழக்கே 200 கிமீ (124 மைல்) தொலைவிலும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கே 130 கிமீ (81 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நர்வா நீர்த்தேக்கத்தின் எசுத்தோனிய பகுதி பெரும்பாலும் நகர மையத்தின் தென்மேற்கே நர்வாவின் எல்லைக்குள் உள்ளது.
நர்வா நகராட்சி 84.54 சதுர கிலோமீற்றர் (32.64 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் நகரம் 62 சதுர கிலோமீட்டர் (24 சதுர மைல்) (நீர்த்தேக்கத்தைத் தவிர்த்து) ஆக்கிரமித்துள்ளது. குத்ருகலா மற்றும் ஓல்கினா ஆகிய இரண்டு தனி மாவட்டங்களும் முறையே 5.6 கி.மீ. 2 (2.16 சதுர மைல்) மற்றும் 0.58 கிமீ 2 (0.22 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன.[1] குத்ருகலா நர்வாவின் டச்சா பகுதிகளில் மிகப் பெரியதாகும்.
காலநிலை
நர்வா சூடான-கோடை ஈரப்பதமான கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. (கோப்பன் காலநிலை வகைப்பாடு Dfb)
சனத்தொகை
2013 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று நர்வாவின் மக்கட் தொகை 59,888 ஆக இருந்தது. இந்த நகரம் ஒரு வருடத்திற்கு முன்னர் 60,454 மக்கட் தொகையை கொண்டிருந்தது.[2] 1992 ஆம் ஆண்டில் சனத் தொகை 83,000 ஆக இருந்தது. நர்வாவின் சனத்தொகையில் 95.7% வீதமானோர் உருசிய மொழி பேசுபவர்கள் ஆவார்கள்.[3] இங்கு வசிப்பவர்களில் 87,7% வீதமானோர் உருசிய இனத்தவர்கள்.[4] மொத்த மக்கள் தொகையில் 5.2% வீதமானோர் எசுத்தோனிய இனத்தவர்கள். இரண்டாம் உலகப் போரின்போது நகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது.
நகரவாசிகளில் 46.7% வீதமானோர் எசுத்தோனிய குடியுரிமையையும், 36.3% உருசிய கூட்டமைப்பின் குடியுரிமையையும், அதே நேரத்தில் 15.3% வீதமான மக்கள் வரையறுக்கப்படாத குடியுரிமையையும் கொண்டுள்ளனர்.[5]
2012 ஆம் ஆண்டில் எசுத்தோனிய மக்கட்தொகையில் 1.2% எச். ஐ. வி தொற்றுக்கு இலக்கானார்கள்.[6] 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 1,600 க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி நோயாளிகள் நர்வாவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எஸ்தோனியாவில் எச்.ஐ.வி தொற்று விகிதம் 2014 இல் குறைந்தது.[7]
முக்கிய இடங்கள்
நர்வாவில் 15 ஆம் நூற்றாண்டின் 51 மீட்டர் உயரமுள்ள லாங் ஹெர்மன் கோபுரம் மிக முக்கியமான அடையாளமாக திகழ்கின்றது. அழகிய நீர்வீழ்ச்சியின் அருகாமையில் அமைந்துள்ள கிரீன்ஹோம் உற்பத்தி வளாகம் 19 ஆம் நூற்றாண்டின் வடக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நெசவு ஆலைகளில் ஒன்றாகும். மற்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் 17 ஆம் நூற்றாண்டின் சுவீடிய மாளிகைகள், பரோக் டவுன் ஹால் (1668–71) மற்றும் எரிக் டால்பெர்க்கின் கோட்டைகளின் எச்சங்கள் என்பன அடங்கும்.
நர்வா ஆற்றின் குறுக்கே உருசிய இவான்கோரோட் கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை 1492 ஆம் ஆண்டில் மாஸ்கோவியின் கிராண்ட் பிரின்ஸ் இவான் III என்பவரால் நிறுவப்பட்டது.
போக்குவரத்து
எசுத்தோனியாவிற்கும் உருசியாவிற்கும் இடையிலான சர்வதேச தொடருந்து பாதையில் நர்வா அமைந்துள்ளது. இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு தினசரி சர்வதேச பயணிகள் தொடருந்து சேவை உள்ளது. நகரிற்கு அருகில் விமான நிலையமொன்று அமைந்துள்ளது.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.