From Wikipedia, the free encyclopedia
தாமசு மாண் (Thomas Mann) (6 சூன் 1875 – 12 ஆகத்து 1955) என்பவர் 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், சமூக விமர்சகர், நன்கொடையாளர், கட்டுரையாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறும் புதினங்களும் குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். அவை அறிவுக் கலைஞனின் உளக்கிடக்கைகளை உயிரோட்டமாக வெளிக்கொணரும் பண்புடையவை.
தாமசு மாண் Thomas Mann | |
---|---|
1937ஆம் ஆண்டில் தாமசு மாண் | |
பிறப்பு | பவுலோ தாமசு மாண் 6 சூன் 1875 லூபெக், செருமனி |
இறப்பு | 12 ஆகத்து 1955 80) சூரிக், சுவிட்சர்லாந்து | (அகவை
தொழில் | புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் படைப்பாளர் |
காலம் | 1896–1954 |
வகை | புதினம், குறும் புதினம், வளர்கைப் புதினம், வரலாற்றுப் புதினம், குறும்புப் புதினம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Buddenbrooks, The Magic Mountain, Death in Venice |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியப் படைப்புக்கான நோபல் பரிசு 1929 |
கையொப்பம் | |
தாமசு மாண் செருமானிய மற்றும் விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே, பிரீட்ரிக் நீட்சே, ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய மற்றும் செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார்.
தாமசு மாணின் மூத்த சகோதரர் ஹைன்ரிக் மாண் ஒரு புரட்சி எழுத்தாளர். தாமசு மாணின் ஆறு பிள்ளைகளுள் மூவர் (ஏரிக்கா மாண், க்ளாவுசு மாண், கோலோ மாண்) பெயர்பெற்ற செருமானிய எழுத்தாளர்களாகச் சிறப்படைந்தார்கள். அடோல்ஃப் ஹிட்லர் செருமனியில் பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த கட்டத்தில் தாமசு மாண் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். அங்கிருந்து 1952ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார்.
தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" (Exilliteratur) என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.
தாமசு மாண் செருமனி நாட்டில் லூபெக் நகரில் தாமசு யோஹான் ஹைன்ரிக் மாண் என்பவருக்கும் ஜூலியா தா சில்வா ப்ரூன்சு என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் "பவுல் தாமசு மாண்" என்பதாகும். அவருடைய தந்தை லூபெக் நகர ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும், தானிய வணிகராகவும் தொழில்புரிந்தார். அவருடைய தாய் ஜூலியா செருமானிய-பிரேசீலிய நாட்டுவழியினர். அவர் தமது ஏழாம் வயதில் பிரேசிலில் இருந்து செருமனிக்குப் புலம் பெயர்ந்தார். தாமசு மாணின் தாய் ஜூலியா உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர். தந்தை லூதரன் சபையினர். தாமசு மாணுக்கு லூதரன் சபையில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.
தாமசு மாணின் தந்தை 1891இல் இறந்ததைத் தொடர்ந்து அவருடைய வணிக நிறுவனம் மூடப்பட்டது. குடும்பமும் லூபெக்கை விட்டு மூனிச் நகருக்கு இடம் பெயர்ந்தது. மாண் லூபெக்கில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் மூனிச் நகரில் லூட்விக் மாக்சிமில்லியான் பல்கலைக்கழகத்திலும், மூனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலும் உயர் கல்வித் தேர்ச்சி பெற்றார்.[1] அங்கு, இதழ்த் துறையில் தேர்ச்சி பெறும் எண்ணத்துடன் அவர் வரலாறு, பொருளியல், கலை, இலக்கியம் ஆகிய பாடங்களைப் பயின்றார்.
1891-1933 கால கட்டத்தில் தாமசு மாண் மூனிச் நகரிலேயே வாழ்ந்தார். இடையே ஓர் ஆண்டு மட்டும் அவர் தம்முடைய மூத்த சகோதரரும் புதின எழுத்தாளருமாக இருந்த ஹைன்ரிக் மாணோடு இத்தாலி நாட்டு பாலெஸ்த்ரீனா நகரில் வாழ்ந்தார். தாமசு மாண் 1894-1895இல் "தெற்கு செருமனி தீப்பிடிப்புக் காப்பீட்டு நிறுவனத்தில்" பணியாற்றினார்.
தாமசு மாணின் எழுத்துப் பணி 1898இல் தொடங்கியது. அவர் ஆக்கிய முதல் படைப்பு "திருவாளர் ஃப்ரீடமாண் என்னும் சிறு மனிதர்" (Der Kleine Herr Friedemann) என்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறுகதை. அது அந்த ஆண்டில் வெளியானது.
1905ஆம் ஆண்டில் தாமசு மாண், காத்தியா ப்ரிங்ஸ்ஹைம் என்னும் பெண்மணியை மணந்துகொண்டார். அவர் சமயச்சார்பற்ற, செல்வம் படைத்த யூத குலத்தில் பிறந்தவர். அவர் வேதியியலில் தேர்ச்சி பெற்றவர். அவருடைய தந்தை புகழ்பெற்ற கணிதவியல் அறிஞர் ஆல்ஃப்ரட் ப்ரிங்ஸ்ஹைம் ஆவார். அவருடைய மற்றொரு உறவினரான ஹெட்விக் டோம் என்னும் பெண்மணி பெண்கள் உரிமைளுக்காகப் போராடியவர். திருமணத்திற்குப் பின் காத்தியா தம் கணவர் தாமசு மாணுடைய லூதரன் சபையில் சேர்ந்தார். மாண் தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.[2]
பெயர் | பிறப்பு | இறப்பு |
---|---|---|
ஏரிக்கா மாண் | 9 நவம்பர் 1905 | 27 ஆகத்து 1969 |
க்ளாவுசு மாண் | 18 நவம்பர் 1906 | 21 மே 1949 |
கோலோ மாண் | 29 மார்ச்சு 1909 | 7 ஏப்பிரல் 1994 |
மோனிக்கா மாண் | 7 சூன் 1910 | 17 மார்ச்சு 1992 |
எலிசபெத் மாண்-பொர்கேசே | 24 ஏப்பிரல் 1918 | 8 பெப்ருவரி 2002 |
மிக்கேல் மாண் | 21 ஏப்பிரல் 1919 | 1 சனவரி 1977 |
1929இல் தாமசு மாண் லித்துவானியா நாட்டில், மீன்பிடி நகராகியா நீடா என்னும் இடத்தில் ஒரு கோடை இல்லம் அமைத்தார். அந்நகரில் செருமானிய கலைக் குடியிருப்பு ஒன்று இருந்தது. அங்கு, தம் கோடை இல்லத்தில் 1930-32 கோடைக் காலத்தை மாண் கழித்தார். அவ்வமயம் "யோசேப்பும் அவருடைய சகோதரர்களும்" என்னும் புதினத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
இன்று, மாணின் கோடை இல்லம் அவருடைய பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார மையமாக விளங்குகிறது. அங்கு அவரது நினைவுக் காட்சியகம் உள்ளது.
1933இல் செருமனியில் அடோல்ஃப் ஹிட்லர் பதவியைக் கைப்பற்றினார். ஹிட்லரின் கொள்கையை எதிர்த்த மாண் சுவிட்சர்லாந்து சென்று, அங்கு சூரிக் நகருக்கு அருகே க்யுஸ்நாக்ட் என்னும் இடத்தில் குடியேறினார். ஆனால் அவருக்கு செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக் குடிமையுரிமையும் கடவுச் சீட்டும் 1936இல் கிடைத்தன. பின்னர் மாண் 1939இல் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்தார்.
1942இல் மாண் தம் குடும்பத்தோடு கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் "பசிபிக் பாலிசேட்சு" என்னும் இடத்தில் குடியேறினார். அங்கு அவர்கள் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை வாழ்ந்தனர். 1944ஆம் ஆண்டு சூன் 23ஆம் நாள் தாமசு மாண் ஐக்கிய அமெரிக்காவின் குடிமையுரிமை பெற்றார். 1952ஆம் ஆண்டில் மாண் ஐரோப்பாவுக்குத் திரும்பி, சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிக் நகருக்கு அருகே கில்க்பெர்க் என்னும் இடத்தில் வாழ்ந்தார்.
செருமனிக்கு அவ்வப்போது பயணமாகச் சென்றாரே ஒழிய, மாண் அந்நாட்டில் தங்கி வாழ விரும்பவில்லை. செருமனி நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி கூட அவருக்கு வாக்களிக்கப்பட்டது. ஆனால் மாண் செருமனியில் தங்கி வாழ இசையவில்லை.
1949ஆம் ஆண்டில் மாண் செருமனிக்கு ஒரு சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள, பயணமாகச் சென்றார். அந்த ஆண்டு செருமனியின் தலைசிறந்த படைப்பாளராகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தேயின் 200ஆம் பிறப்பு ஆண்டுக் கொண்டாட்டம் பிராங்க்ஃபுர்ட்டிலும் வைமாரிலும் நடந்தது. அதில் கலந்துகொண்டதால், செருமனியின் கலாச்சாரம் புதிதாக எழுந்த நாட்டு எல்லைகளைத் தாண்டியது என்னும் செய்தியை அவர் வெளிப்படையாகக் காட்டினார்.
1955ஆம் ஆண்டு ஆகத்து 12ஆம் நாள் தாமசு மாண் சூரிக் நகர மருத்துவமனை ஒன்றில் தமனித் தடிப்பு காரணமாகக் காலமானார். அவரது உடல் சூரிக் நகருக்கு அருகே கில்க்பெர்க் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக பல நிறுவனங்களுக்கு தாமசு மாண் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, புடாபெஸ்டு நகரில் அமைந்துள்ள "தாமசு மாண் மேநிலைப்பள்ளியை" (Thomas Mann Gymnasium) குறிப்பிடலாம்.
முதல் உலகப் போரின்போது தாமசு மாண் செருமானியப் பேரரசர் இரண்டாம் வில்கெல்ம் என்பவரின் தக்கவைப்புக் கொள்கையை (conservatism) ஆதரித்து, முற்போக்குக் கொள்கையை (liberalism) எதிர்த்தார். ஆயினும் செருமனி மன்னராட்சியிலிருந்து குடியரசு ஆட்சிக்கு மாறிச்சென்ற 1923ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் குடியரசு ஆட்சிக்கு (Weimar Republic) ஆதரவு அளிக்குமாறு மாண் அறிஞர்களைக் கேட்டுக்கொண்டார். 1922இல் பெர்லின் நகரில் வழங்கிய ஒரு சொற்பொழிவின்போது செருமனி குடியாட்சிக்கு மாறுவதே முறை என்று வாதாடினார்.[3]
அதிலிருந்து மாண் இடதுசாரி முற்போக்குக் கருத்துகளுக்கும் குடியரசு கருத்துகளுக்கும் ஆதரவு அளித்தார்.
1929இல் தாமசு மாணுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1930இல் "பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்" (An Appeal to Reason) என்ற தலைப்பில் அமைந்த பேருரை ஆற்றியபோது, ஹிட்லரின் நாசிக் கொள்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று மாண் கடுமையாக விமரிசித்ததோடு, பாட்டாளி மக்கள் நாசிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல சொற்பொழிவுகள் வழியாகவும் கட்டுரைகள் வழியாகவும் மாண் நாசி இயக்கத்தையும் அதன் கொள்கையையும் எதிர்த்தார். அதே சமயத்தில் அவர் சோசலிச அணுகுமுறையை ஆதரித்தார்.
1933இல் நாசிக் கட்சி பதவியைக் கைப்பற்றியபோது தாமசு மாண் தமது குடும்பத்தோடு சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருந்தார். செருமனிக்குத் திரும்பிச் சென்றால் நாசிகளின் சீற்றத்துக்கு ஆளாகவேண்டி இருக்கும் என்று தாமசு மாணின் மகன் க்ளாவுஸ் மாண் கருதினார். எனவே, அவர் தம் தந்தை செருமனிக்குத் திரும்பவேண்டாம் என்று அறிவுரை கூறினார்.
செருமனியில் நாசி அரசு 1933இல் தாமசு மாணின் சகோதரரும் தீவிர எழுத்தாளருமான ஹைன்ரிக் மாணின் நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. அதுபோலவே, எழுத்தாளராகிய தாமசு மாணின் மகன் க்ளாவுசின் நூல்களும் எரிக்கப்பட்டன. நாசி அரசு தாமசு மாணின் படைப்புகளைத் தீக்கு இரையாக்கவில்லை. நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க எழுத்தாளரின் படைப்புகளை எரிக்க வேண்டாம் என்று நாசி அரசு எண்ணியிருக்கலாம்.
ஆனால், 1936இல் செருமானிய் நாசி அரசு, தாமசு மாண் இனிமேல் செருமானியக் குடிமகன் அல்ல என்று அறிவித்தது. சில மாதங்களுக்குப் பிறகு மாண் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, அங்கு வேறு பல செருமானியர்கள் புகலிடம் தேடியிருந்த கலிபோர்னியா மாநிலத்தில் குடியேறினார்.
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த பொழுது, தாமசு மாண் நாசி அரசையும் கொள்கையையும் கண்டனம் செய்து, "செருமானியரே, கேளுங்கள்!" (Deutsche Hörer!) என்ற தலைப்பில் தொடர் வானொலிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அந்த உரைகள் ஐக்கிய அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டு ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து பிரித்தானிய ஒலிபரப்புக் குழுமம் (BBC) அவ்வுரைகளை செருமனி நோக்கிப் பரப்பியது.
தாமசு மாண் செருமானிய மொழியில் தம் படைப்புகளை ஆக்கினார். அவற்றை H.T. Lowe-Porter என்பவர் 1924 தொடங்கி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
1929இல் தாமசு மாணுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசு மாண் எழுதிய "புட்டன்ப்ரூக்சு" (Buddenbrooks, 1901) என்ற பெருங்காப்பிய முறையிலான புதினம், "மாய மலை" (The Magic Mountain - இடாய்ச்சு மொழி: Der Zauberberg, 1924) என்ற புதினம், மற்றும் எண்ணிறந்த சிறுகதைகளின் உயர்ந்த இலக்கியத் தரத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டது. எனினும், நோபல் பரிசுக் குழுவில் செல்வாக்கு கொண்டிருந்த ஓர் உறுப்பினரின் தனிக்கருத்தை ஏற்று, Buddenbrooks புதினம் மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது.[4]
மாணுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த Buddenbrooks என்னும் புதினம் அவருடைய குடும்பத்தின் கதையைக் கூறுகிறது. லூபெக் நகரில் வாழ்ந்த வணிகக் குடும்பம் ஒன்று எவ்வாறு மூன்று தலைமுறைகளாக வளர்ந்தது, தாழ்ந்தது என்னும் கதை அப்புதினத்தில் உள்ளது.
மாண் எழுதிய மாய மலை (The Magic Mountain - இடாய்ச்சு மொழி: Der Zauberberg, 1924) என்ற புதினம் ஒரு பொறியியல் மாணவனின் வாழ்க்கை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது. அவனுடைய உறவினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் காசநோய் மருத்துவ இல்லத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைச் சென்று சந்தித்து, மூன்று வாரங்கள் அவரோடு தங்கி இருக்க எண்ணி அந்தப் பொறியியல் மாணவன் செல்கிறான். ஒருசில காரணங்களை முன்னிட்டு அவன் திரும்பிச் செல்ல கால தாமதம் ஆகிறது. அக்கால கட்டத்தில் அவன் மருத்துவத்தின் மர்மங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறான். மருத்துவம் மனித உடலை எவ்வாறு பார்க்கிறது என்பதை வியப்புடன் நோக்குகிறான். மருத்துவத் துறையில் வருகின்ற பல கதாபாத்திரங்கள் பலவிதமான கருத்தியல்களின் பிரதிபலிப்பாக இருப்பதைக் காண்கின்றான். அக்கருத்தியல்கள் ஒன்றோடொன்று மோதுவதையும், அவை சமகால ஐரோப்பிய கலாச்சாரத்தின் உருவகங்களாகவும் வெளிப்பாடுகளாகவும் தோன்றுவதையும் அடையாளம் காண்கின்றான்.
தாமசு மாண் எழுதிய நூல்களில் நான்கு காண்டங்களாக அமைந்த தொகை யோசேப்பும் அவருடைய சகோதரர்களும் என்னும் விவிலிய அடிப்படை புதினம் ஆகும். இதை எழுதி முடிக்க மாண் 16 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அவரது படைப்புகளில் மிக நீண்டதும் சிறப்புடையதும் இத்தொகுப்பு ஆகும். இந்நூலுக்கு அடித்தளமாக உள்ள விவிலிய வரலாறு தொடக்க நூல் 27-50 அதிகாரங்களில் காணப்படுகின்றது.
மாண் எழுதிய நூல் தொகையின் நான்கு பகுதிகள் கீழ்வருமாறு:
மாண் 1947ல் எழுதிய Doktor Faustus என்னும் புதினம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் அப்போர் நடைபெற்ற வேளையிலும் செருமனியில் நிலவிய ஊழல்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
தாமசு மாண் எழுதிய வெனிசில் மரணம் (Death in Venice - இடாய்ச்சு மொழி: Der Tod in Venedig) என்னும் புதினம் அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் தாமசு மாண் தமக்கு ஓரினக் கவர்ச்சி இருந்ததைக் கதைப் பின்னணியில் விவரிக்கிறார். அதே கருத்து மாண் ஆக்கிய பிற பல படைப்புகளிலும் வெளிப்படுகிறது.[5][6]
தாமசு மாண் தமது படைப்புகளில் பிற எழுத்தாளர்கள் பற்றிய தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர்களின் தாக்கமும் மாணின் நூல்களில் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, சிக்மண்ட் பிராய்ட், பிரீட்ரிக் நீட்சே, பியோதர் தஸ்தயெவ்ஸ்கி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி பற்றிய கட்டுரையில் மாண் அந்த உருசிய எழுத்தாளருக்கும் பிரீட்ரிக் நீட்சே அனுபவித்த வேதனைகளுக்கும் இடையே ஒப்புமைகள் இருப்பதைச் சுட்டுகின்றார். மாண் கூறுகிறார்:
நீச்சேயின் தனிப்பட்ட உள்ளுணர்வுகள் குற்றம் புரிகின்ற ஒரு மனிதனின் உணர்வுகளுக்குள்ளே அவரைப் புகச் செய்கின்றன...படைப்பாளியின் தனித்தன்மை அதுதான். பிரஞ்சு கலைஞர் டேகாஸ் கூறுவதுபோல, ஒரு குற்றவாளி குற்றம் புரியச் செல்வதுபோல ஒரு கலைஞன் தான் உருவாக்கப்போகும் கலைப்படைப்பை அணுக வேண்டும்.[7]
கலைப்பொருளை உருவாக்கும் கலைஞன் ஒரு நோயாளிக்கு சமம் என்று நீச்சே கூறியதை மாண் ஏற்றுக்கொள்கின்றார். மேலும் மாண் கூறுகின்றார்:
நோய் என்பது முற்றிலுமே எதிர்மறையானது அல்ல. உடல் நோய் என்பதும் மன நோய் என்பதும் வலிப்பு என்பதும் படைப்புத் திறனற்ற மனிதனின் பண்புகளே தவிர, படைப்பாளிக்கு அத்தகைய நோய்கள் உண்மையாகவே இருந்தாலும் அவன் உலகுக்கு வழங்குகின்ற படைப்புகள் அவனுடைய நோயிலிருந்து தோன்றுகின்ற நல்விளைவுகளே என்றுதான் கூற வேண்டும். இதற்கு நீட்சே, பியோதர் தஸ்தயெவ்ஸ்கி போன்ற படைப்பாளிகளே சான்று.[8]
தாமசு மாண் எழுதிய சிறுகதைகளுள் ஒன்று இந்தியாவைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அக்கதையின் பெயர் "The Transposed Heads: A Legend of India" என்பதாகும். அதைத் தமிழில் தலைகள் மாறாட்டம்: ஓர் இந்தியக் கதை எனலாம்.
சீதை என்றொரு அழகிய பெண். அவளை இருவர் விரும்புகின்றனர். இருவரும் நண்பர்கள். ஒருவன் வணிகத்தில் ஈடுபட்டு, அறிவில் தேர்ச்சியுடையவன். மற்றவனோ ஆடுமாடுகள் மேய்த்து வாழ்கின்ற உடல் திறமை கொண்ட சாமானியன். சீதைக்கும் வணிகனுக்கும் திருமணம் ஆகிறது. ஆனால் சீதை அறிவுத் திறமை கொண்ட வணிகனைவிட உடல் திறமை கொண்ட சாமானியனை விரும்புகிறாள். இதை அறிந்ததும், நண்பனே சீதையை அடையட்டும் என்று வணிகன் தன் தலையைக் கொய்து சாகிறான். நண்பனின் சாவைக் கண்டு சாமானியன் தனது தலையை வெட்டிச் சாகின்றான். இருவரும் தனக்காகவே இறந்தார்கள் என்றறிந்த சீதை தூக்குப் போட்டுக் கொள்ள முயல்கின்றாள். ஆனால், காளி அவளுக்குத் தோன்றி, துண்டுபட்டுக் கிடந்த தலைகளை மீண்டும் உடல்களில் பொருத்தினால் வணிகனும் சாமானியனும் உயிர் திரும்புவர் என்றுரைக்கிறாள். சீதையோ தவறுதலாக சாமானியனின் தலையை வணிகனின் உடலிலும் வணிகனின் தலையை சாமானியனின் உடலிலும் பொருத்திவிடுகிறாள்.
ஆக, இனி சீதையின் கணவன் யார்? அறிவுத் திறமை கொண்ட வணிகனின் தலை இளமையும் உடல் திறனும் கொண்ட சாமானியனின் உடலைச் சேர்ந்ததால் என்ன விளைவு? சராசரி அறிவே கொண்ட சாமானியனின் பரந்த மகிழ்ச்சியான தலை நோஞ்சானாகிய வணிகனின் உடலைச் சேர்ந்ததால் என்ன விளைவு?
இக்கேள்விகளை மாண் எழுப்பி தத்துவ ரீதியான ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். அடிப்படையான கேள்வி: "மனிதனை ஆள்வது உளமா, உடலா?" இக்கேள்விக்கு பதில்தான் உள்ளதா??
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.