From Wikipedia, the free encyclopedia
தன்வரலாறு அல்லது சுயசரிதை (autobiography)[1] என்பது ஒரு நபர் தானே எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு ஆகும்.
Autobiography என்ற ஆங்கில மொழிச் சொல்லை முதலில் "மந்த்லி ரிவியூ" என்ற இதழில் 1797 ஆம் ஆண்டில் வில்லியம் டெய்லர் என்பவர் பயன்படுத்தினார். அவர் அதனை இன்றைய பொருளில் பயன்படுத்தவில்லை. அடுத்து இராபர்ட் சௌதி என்பவர் 1809 ஆம் ஆண்டில் இச்சொல்லை இன்றைய பொருளில் பயன்படுத்தினார்.[2] பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இதற்குப் பெயரிடப்பட்டாலும், தானே தன் வரலாற்றை எழுதுவது மிகப் பழங்காலத்திலேயே தொடங்கியது. ராய் பாசுக்கல் என்பவர் தன்வரலாறு என்பதைக் காலத்துக்குக் காலம் எழுதப்படும் சொந்த நினைவுக் குறிப்புக்களில் இருந்தும், நாட்குறிப்புக்களில் இருந்தும் வேறுபடுத்துகிறார். "தன்வரலாறு என்பது, குறிப்பிட்ட ஒரு தருணத்தில் இருந்து கடந்தகால வாழ்க்கையை மீளாய்வு செய்வது என்றும், நாட்குறிப்பு தொடர்ச்சியான பல தருணங்களில் எழுதப்பட்ட நினைவுகள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்".[3] எனவே சுயசரிதை, அது எழுதப்படும் காலத்தில் இருந்துகொண்டு எழுதுபவரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறது. வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் பொதுவாக பலவிதமான ஆவணங்கள் மற்றும் கண்ணோட்டங்களில் தங்கியிருக்கும்போது, சுயசரிதை முற்றிலும் எழுத்தாளரின் நினைவின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். "நினைவுக் குறிப்பு" வடிவம் தன்வரலாற்றோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளபோதும், பாசுக்கல் குறிப்பிடுவது போல் நினைவுக் குறிப்பை எழுதுபவரின் வாழ்க்கையைப் பற்றிய மீளாய்வில் அவரைப் பற்றிக் குறைவாகவும், மற்றவர்களைப் பற்றிக் கூடுதலாகவும் காணப்படும்.[3]
அமெரிக்க சுயசரிதை பற்றிய ஒரு கட்டுரையில் ஜேம்ஸ் எம். காக்ஸ் என்பவர் சுயசரிதை என்பதற்குப் "பொதுவான ஒரு" வரையறையை அளித்தார் அக்கூற்றின்படி "தன்னைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நபரின் கதையே சுயசரிதை" என்று அவர் கூறுகிறார்.
சுயசரிதைப் படைப்புகள் இயல்பாகவே தன்னுணர்வு சார்ந்தவை. துல்லியமாக நினைவுகளை மீட்டுக் கொண்டுவருவதற்கு இயலாமை அல்லது விருப்பமின்மை காரணமாகச் சுயசரிதைகளில் பிழையாக வழிநடத்துகின்ற அல்லது பிழையான தகவல்கள் தரப்படுகின்றன. சில சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும், சுயசரிதை அதை எழுதுபவர்களுக்கு வரலாற்றைத் திருப்பி எழுதுவதற்கான வல்லமையை வழங்குகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆன்மீக சுயசரிதை என்பது அதை எழுதியவரின் கடவுளை நோக்கிய பயணம் அல்லது போராட்டத்தினதும், தொடர்ந்த மாற்றம், அதாவது பெரும்பாலும் பின்னடைவுத் தருணங்களுடன் கூடிய மத மாற்றம் ஆகியவற்றினது விபரிப்பு ஆகும். தெய்வீகத்துடனான சந்திப்புக்களின் ஊடான தெய்வீக விருப்பத்தின் வெளிப்பாடாகத் தனது வாழ்க்கையை ஆன்மீகச் சுயசரிதை ஆசிரியர் மீளமைப்புச் செய்கிறார். ஆன்மீக சுயசரிதையின் மிகப் பழைய எடுத்துக்காட்டு ஆகஸ்டீனின் "ஒப்புதல்கள்" (Confessions) ஆகும். எனினும் மற்ற மத மரபுகளைச் சேர்ந்த சாகித் ரொகாரியின் "ஆன் ஸ்டோபோகிராபி" மற்றும் "பிளாக் எலெக் ஸ்பீக்ஸ்" போன்ற படைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் நமது மரபுகள் விரிவாக்கம் பெற்றுள்ளன. ஆன்மீக சுயசரிதை அதை எழுதியவரின் மதத்துக்கான அவரது அங்கீகாரமாகச் செயற்படுகிறது.
நினைவுக் குறிப்பு, சுயசரிதையிலும் சற்று வேறுபட்ட இயல்பைக் கொண்டது. ஒரு சுயசரிதை பொதுவாக எழுத்தாளருடைய "வாழ்க்கையிலும் காலத்திலும்" கவனம் செலுத்தும் போது, நினைவுக் குறிப்பு, அவரது நினைவுகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மீது குறுகிய, மேலும் நெருக்கமான கவனத்தைச் செலுத்துகின்றது. தமது பொதுச் சாதனைகளைப் பதிவு செய்வதற்கும் வெளியிடுவதற்குமான ஒரு வழியாக அரசியல்வாதிகளும் இராணுவத் தலைவர்களும் நினைவுக் குறிப்புகளை எழுதினர். ஜூலியஸ் சீசரின் "காலிக் போர்களின் வர்ணனைகள்" இதற்கான ஒரு ஆரம்ப எடுத்துக்காட்டு ஆகும். இந்த ஆக்கத்தில், காலிக் போர்களில் அவர் உள்ளூர்ப் படைகளுடன் சண்டையில் ஈடுபட்டிருந்த ஒன்பது ஆண்டுகளில் இடம்பெற்ற சண்டைகளை விபரிக்கிறார். அவரது இரண்டாவது நினைவுக் குறிப்பு, "உள்நாட்டுப் போரின் வர்ணனைகள்" என்பது. இது கினேயசு பொம்பியசுவுக்கும், ஆட்சிக்குழுவுக்கும் எதிராக கிமு 48க்கும் 49க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் நிகழ்வுகளை விபரிக்கிறது.
லியனோர் லோபஸ் டி கோர்டோபா (1362-1420) எசுப்பானிய மொழியின் முதல் சுயசரிதையை எழுதினார். ஆங்கிலேய உள்நாட்டுப் போர் (1642-1651) இவ்வகையான பல ஆக்கங்கள் உருவாவதற்குத் தூண்டியது. சர் எட்மண்ட் லுட்லோ, சர் ஜான் ரிரெஸ்பி ஆகியோரின் படைப்புகள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். அதே காலப்பகுதியைச் சேர்ந்த பிரெஞ்சு எடுத்துக்காட்டுகளுள் கார்டினல் டி ரெட்ஸ் (1614-1679), டுக் டி செயிண்ட்-சைமன் ஆகியோர் எழுதிய நினைவுக் குறிப்புக்கள் அடங்கும்.
"கற்பனைச் சுயசரிதை" என்ற சொல், கற்பனைக் கதாபாத்திரம் ஒன்று தன் சுயசரிதையை எழுதுவது போல் எழுதப்பட்ட ஒரு கற்பனைப் புதினம் ஆகும். இதில் குறித்த கதாபாத்திரம் தன்மையில் கதை சொல்வதுடன், அது பாத்திரத்தின் உள் அனுபவத்தையும், வெளி அனுபவத்தையும் எடுத்துச் சொல்கிறது. டேனியல் டெபோவின் மோல் ப்ளாண்டர்ஸ் (Moll Flanders) இதற்கு ஒரு தொடக்ககால எடுத்துக்காட்டு. சார்லஸ் டிக்கன்சின் டேவிட் காப்பர்ஃபீல்ட் இன்னொன்று. ஜே.டி.சலின்கரின் தி கச்சர் இன் தி ரய் (The Catcher in the Rye) என்பது நன்கு அறியப்பட்ட தற்கால கற்பனைச் சுயசரிதை. அசல் பதிப்பின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டபடி, சார்லோட் ப்ரோண்டேயின் ஜேன் ஐர் கற்பனைச் சுயசரிதையின் இன்னொரு எடுத்துக்காட்டு. உண்மையான பாத்திரங்களின் சுயசரிதைகளாக இருப்பதாக கூறப்படும் புனைகதைப் படைப்புக்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும், எ.கா., ராபர்ட் நேய்சின் நினைவுக் குறிப்பான லார்ட் பைரோன்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.